இணைய இதழ் 101கட்டுரைகள்

பாப்கார்ன்கள் தீருவதில்லை – கிருத்திகா தாஸ்

கட்டுரை | வாசகசாலை

“உண்மை நல்லது பண்ணும். பொய் எப்படி இருந்தாலும் என்னைக்காவது ஒருநாள் கெட்டது செஞ்சு விட்ரும்..”

அட பார்ரா அப்படியா.. யார் சொன்னது?”

பக்கத்து டேபிள்ல பேசிக்கிட்டாங்க..”

நிஜம்தானே? உண்மை நல்லது செய்யும். பொய் கெட்டது செய்யும்… அப்படித்தானே..

ஆனா, எந்த அளவுகோல்களில்?

உண்மை கொடூரமானது; பொய் அழகானது என்று சொல்லப்படுகிறது இல்லையா? ஒப்பனைகளைக் கலைத்து விட்டுப் பார்த்தால்தானே உண்மை தெரியும்.. ம்ம்.. பொய்யும் அப்போதுதானே தெரியும்?

முன்பொரு நாளில் நேர்ந்துவிட்ட உண்மைகள் பல கதைகள் சொல்லும். அந்தக் கதைகளை நாம் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் வித்தியாசங்களை உருவாக்கும். இவை மிகப் பல பொழுதுகளில் ஏமாற்றங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கும்.

நடந்துவிட்ட கதைகளால் உருவாக்கப்படும் கிளைக் கதைகள் வேறு வேறு திசைகளுக்கு ஆழமாகப் பயணித்து, தொடக்கக் கதையின் வேர்களை பரப்பிக் கொண்டே இருக்கும்.

நேர்ந்துவிட்ட உண்மைகளுக்குக் கண்கள் உண்டு. ஆனால், அவை பார்ப்பதில்லை. பார்க்க வேண்டிய அவசியங்கள் அவற்றுக்கு இல்லை.

அவற்றைப் பற்றி நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதும் அல்லது வேறு யாருடனும் பேசிக் கொண்டு இருக்கும் போதும் அவை தன் வேலைகள் ஏதும் மீதமில்லாத நிலையில் ஓய்வு மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கின்றன. நம்மைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று ஆர்வமாய் உற்று நோக்குவதில்லை.

அந்த உண்மைகளுக்கு உருவம் இருப்பின் பேசும் கண்களுக்கும் கேட்கும் கண்களுக்கும் அவை வேறு வேறாய்த் தெரிந்து விடும்.. அவை அடுக்கி வைக்க இடமின்றித் தேங்கி விடுகின்றன. தேவையற்றதாய்த் தெரியத் தொடங்கியவை கொஞ்ச நாளில் உருக்குலைந்து போக ஆரம்பித்து விடுகின்றன. அதற்குப் பின்வரும் காலங்களில் அவை மறைக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், அவை அழிவதே இல்லை. அவற்றுக்கு அழிவும் இல்லை.

 தொடக்கக் கதை முடிவுக்கு வரும். கிளைக் கதைகள் முடிவதே இல்லை.

கிளைக் கதைகள் பல நிறங்களாலும் பல குரல்களாலும் பல வடிவங்களாலும் உருவானவை. சில சமயங்களில் கட்டாயங்களாலும் உருவாக்கப்படுபவை. அவை சொல்லப்பட்ட கொஞ்ச காலத்தில் கேட்கப்பட்ட கொஞ்ச காலத்தில்.. வேறு ஏதோ ஒரு கிளைக்கதை முளைக்கும் நாளில் முந்தைய கதை மறந்து போய் விடுகிறது. முந்தைய கிளைக் கதைக்கும் புது கிளைக் கதைக்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருக்கக்கூடும். மிகச் சில சமயங்களில் இரண்டுக்கும் தொடர்பு இருந்து விடவும் கூடும்.

முந்தைய கதையின் செயல் விளைவாய் உருவான கதையாய்க் கூட இருக்கலாம் அடுத்த கதை.. அந்தச் செயல் விளைவுகள் கவனிக்கப்பட்டாலும் பெரிதளவில் பொருட்படுத்தப்படுவதில்லை..

முந்தைய கதையும் அதன் விளைவால் உருவான மற்றொரு கிளைக் கதையும் கொஞ்சம் தூரத்துக்குச் சேர்ந்தே பயணிக்கின்றன.. பின் சில காலம் கழித்து கைகுலுக்கி விடை பெற்று அதன் அதன் திசையில் பயணிக்கத் தொடங்குகின்றன.பின் மீண்டும் ஒரு நாளில் மிக அரிதாக ஒன்றை ஒன்று சந்தித்து நலம் விசாரித்துக் கொள்கின்றன. கிளைக் கதைகளுக்கு நிரந்தரமான தங்கும் இடம் என்று ஏதும் இல்லை. உலகமே அதன் வீடு என்பதைப் போல் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

உண்மை என்பது ஒன்றுதான். உண்மை மாதிரிகள் என்பது பல உண்டு

இந்த உண்மை மாதிரிகள் எல்லாவற்றிலும் நிஜமான உண்மையின் மரபணு கொஞ்சம் உண்டு.

பல குரல்களையும் பல செவிகளையும் கடந்து தனக்கென்று ஓர் அழகிய வடிவத்தை உருவாக்கிக் கொள்கின்றன உண்மை மாதிரிகள். ஆனால், அவ்வடிவங்களை இறுதி வடிவங்கள் என்று சொல்லிவிட முடியாது.

உண்மை மாதிரிகள் தங்களை மேன்மேலும் அழகு படுத்திக் கொண்டே மெருகேற்றிக் கொண்டே இருப்பவை.

உண்மையான உண்மைக்கு இவ்விடத்தில் வேலைகள் ஏதும் இருக்காது என்பதால் அது ஏதேனும் ஒரு தெருவின் சுவரில் துணை இன்றி தன்னந்தனியாய் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அதற்கு பேசவும் எதுவும் இல்லை. கேட்கவும் ஏதுமில்லை. இதைப் பற்றி அக்கறை காட்டும் குரல்களும் செவிகளும் கூட குறைவே. ஆதலால் நிஜமான உண்மைக்கு அதிகம் வேலைகளும் இல்லை; கடமைகளும் இல்லை. அதற்கென்று கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையை அது உபயோகப்படுத்துவதே இல்லை.

உண்மை மாதிரிகள் ஒரே சாயலைக் கொண்டவை. அலங்காரங்களாலும் ரம்மியப் பூச்சுகளின் வாசனைகளாலும் அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு இருந்தாலும் ஒரே சாயலை அடிப்படையாகக் கொண்டு உலவிக் கொண்டிருப்பவை. குட்டிச்சுவரில் தன்னந்தனியாக அமர்ந்து கொண்டிருக்கும் உண்மையான உண்மையின் சாயலைக் கொண்டவை.

மறைத்து வைக்கப்பட்ட மிகைகள், கிளைக்கதைகளின் குறைகளை பிரதிபலிப்பவை..

மிகைத் தன்மையின் அளவுகோலை அத்தனை எளிதில் கண்டுபிடித்து விட இயலாது. அதனை மறைத்து வைத்தல் சுலபம். வெளிக்கொணர்வது கடினம். ஆனாலும் மிகைகளுக்குத் தன்னிடம் இருக்கும் குறைகள் நன்றாகவே தெரியும். ‘நீ மிகை தான். நீ மிகை தான். உன்னிடம் உண்மை இல்லை’ என்று சொல்லிக் கொண்டே இருக்கும் குரலை மிகையால் தவிர்க்க இயலாது. அது உயிர் கொண்டு உலவும் நாள் வரை அந்தக் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்த மிகையின் வடிவத்துக்குச் சிற்சில மாற்றங்களும் கொஞ்சம் அலங்காரங்களும் உருவாக்கப்படும் போது அந்த மிகை, தான் உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடுத்த கட்டத்திற்குச் சென்று விடுகிறது. அப்படி ஒரு நாளில் அது தன்னுள் மறைந்து இருக்கும் பொய்யினைப் பாதுகாக்கிறது. மறைத்து விடுகிறது. தன் அலங்காரங்களை உண்மைதான் என்று நம்பத் தொடங்கிவிடுகிறது.

மிகை என்றுமே தன்னை நேரடிப் பொய் என்று வகைமைக்குள் சேர்த்துக் கொள்ள விரும்புவதில்லை. ஏனென்றால் அது தொடங்கிய மிக முதல் புள்ளி ஒரு மிகச் சிறிய உண்மையே. அதனால் உண்மையின் மாற்று உருவாகவே தன்னை நினைத்துக் கொள்கிறது மிகை.

உண்மையை விடவும் மிகைப்படுத்தல் சற்றே அதிக சுவாரசியத்துடன் இருந்து விடுகிறது. உண்மைகளுக்கு அலங்காரங்கள் தேவைப்படுவதில்லை. ஆனால், மிகைகள் அலங்காரம் இல்லாமல் தன்னைத்தானே கூட ரசித்துக் கொள்வதில்லை. அந்த அலங்காரங்கள் புள்ளியற்றுப் போகும் நாளில் அந்த மிகையின் காலம் முடியத்தொடங்கும் புள்ளி ஆரம்பித்து விடுகிறது.

உண்மைக்குள் திடமான உண்மை, திடமற்ற உண்மை என்று இரண்டு வகைமைகள் உள்ளதா என யோசித்துப் பார்க்கும்போது பொய்களின் பயங்கள் பற்றிக் கொஞ்சம் யோசிக்கத் தோன்றுகின்றது. ஆரம்பித்த முதல் புள்ளியே பொய்யில் ஆரம்பித்த பொய்கள் நீண்ட நெடு நாட்கள் வரை அல்லது என்றென்றுமே உண்மை போலவே வாழ்ந்து கொண்டிருக்கும்.

உண்மையில் தொடங்கி, பின், செல்லும் வழியில் தேவைக்கேற்ப உருமாற்றம் அடையும் சில, ஒரு கட்டத்தில் பொய்கள் கலக்கப்பட்டு பின் உண்மைகள் நீக்கப்பட்டு, பின் பொய் மட்டுமே மிஞ்சி பின் அந்த பொய்யே உண்மை என்று பெயர் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும்.

உண்மைகளை முழுமையாக அறிந்திருந்தும் அதனை வெளிப்படுத்தாமல் மனத்திற்குள்ளாகவே வைத்து அழுத்தும்போது அவை அழுத்தம் தாங்காமல் உடைத்துவிட்டு வெளியே வர நேரம் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆனால், அந்த உண்மை யாருடைய மனதில் ஒளிந்துள்ளது என்பதைப் பொறுத்துதான், அது அந்தக் கட்டத்தைத் தாண்டி அடுத்த கட்டமான வெளிப்படுதல் நிலைக்குப் போவது அடங்கியுள்ளது.

இந்த உண்மையை இத்தோட மறந்து விடுவதுதான் நல்லது அப்படி என்று வெறுமனே அதை ஒரு குழி தோண்டிப் புதைத்து விட்ட மனங்களில் இருந்து அந்த உண்மை அழுத்தம் மட்டுமே கொடுத்துட்டு இருக்கும். ஆனாலும், உடைத்துவிட்டு வெளியே வர நேரம் பார்த்து காத்துக் கொண்டு இருக்காது.

“ஆமா, இப்போ என்ன அதுக்கு” என்ற மனநிலையும், “சும்மா சொல்லிப் பார்ப்போம் என்ன ஆகுதுன்னு.. ஏதோ நம்மால் முடிந்தது” இந்த மனநிலையும் நேரத்துக்காக மற்றும் சரியானதொரு காதுக்காகக் காத்துக் கொண்டிருக்கும்.

உண்மையைத் தெரிந்து கொள்ள ரொம்ப மெனக்கிடவே வேண்டியதில்லை. கொஞ்சம் அமைதியா உற்றுப் பார்த்தாலே போதும் அதுவே வெளிப்பட்டு விடும். ஆனால், பொய்யை கண்டுபிடிக்கத் திறமை வேண்டும்.

ரொம்பத் திறமையா பொய்யினைக் கண்டுபிடிச்சோமா அல்லது அமைதியா இருந்து உண்மையைப் புரிந்தோமா அல்லது அதீத சிந்தனை கொண்டு உண்மையைப் பொய் என்று முடிவு செய்தோமா அல்லது பொய்யை உண்மையென்று நினைத்து பெருமிதப்பட்டுக் கொண்டோமா என்று ஆராய்தல் நலம்..

பொய்க்கு அதை உண்மை என்று நிரூபிக்க நிறைய சாட்சிகள் வேண்டும். நிரூபிக்கப் பாடுபட வேண்டியிருக்கும். ஆனால், உண்மைக்கு ஏதும் தேவையில்லை அப்படி என்று நாம் எல்லாரும் நினைப்போம். ஆனால், கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாகப் பார்த்தோம் என்றால் பொய் ரொம்ப சுலபமா தன்னை உண்மை மாதிரி நிலை நிறுத்திவிடுகிறது. உண்மைதான் தன்னை நிரூபிக்கப் போராடுகிறது.

தோராயமாய் ஒத்துப் போற நிகழ்வுகளை உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியுமா?

நடக்கவே நடக்காத ஒரு கதை பொய்யாய்க் கூட ஆக முடியுமா?

இங்கே கொஞ்சம் கதை.. அங்கு உருவான கதை.. அப்படி இப்படி கேட்டறிந்த கதை யாவற்றையும் சேர்த்து சிலையாய் வடித்து அதற்கு உண்மை என்று பெயர் வைக்கப்படுகிறது.. அதுவும் உண்மையென்ற அடையாளத்தோடே உலவிக் கொண்டிருக்கிறது.

முழுக்கதை தெரியாதவர்களுக்கு மற்றும் ஆங்காங்கு மட்டும் தெரிந்தவர்களுக்கு முழுதாய் தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டாகும்.. முழுக்கதை பற்றி அக்கறை இல்லாதவர்களுக்கு மற்றும் ‘என்னவாயிருந்தா என்ன இப்போ அப்படியே விட்டுவிட்டு கடந்து போய் விடுவோம்’ அப்படி என்று நினைக்கிறவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

ஆனால், அந்த உண்மைகளைத் தன் இஷ்டத்திற்கு மாற்றுவதற்காகவே முழுக்கதையும் தெரிந்துகொள்ள நினைக்கும் மனங்கள் அந்தக் கதைகள் மீது அதீத ஆர்வம் காட்டும்.

நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.. காட்சிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். கதைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.. உண்மைகளுக்கும் உண்மை போன்று உருவாக்கப்பட்டவைகளுக்கும் உயிர் கொடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்..

இல்லவே இல்லாத ஒன்றை உண்மை என்றோ பொய் என்றோ நிரூபிக்க எத்தனை இல்லாதவைகளும் இருப்பவைகளும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இல்லவே இல்லாத ஒன்று பொய் என்று ஆவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன இருந்திட முடியும்.. நடக்கவே இல்லாத ஏதோ ஒன்று.. அதை பொய்யாய் மாற்றுவதற்கு அதை நகர்த்திச் செல்ல சில குரல்களும் கடந்து போக சில காதுகளும் இருந்தால் போதுமானது.

மிகைகளுக்குப் பின் மறைந்திருக்கும் வேடிக்கைகள் எவ்வளவு நாட்களுக்கு மறைந்தே இருந்து விடக் கூடும். எத்தனை காலத்துக்கு அதை மறைத்து வைக்க வேண்டும். மறைத்து வைத்தல் உறுத்தல் தந்து கொண்டே இருக்கிறது. மறைத்த இடத்திலிருந்து அதை வெளிப்படுத்தி விடுவோம். அதற்கு அது ஒரு விதமான விடுதலை அல்லவா..? கொடுத்து விடுவோம் விடுதலை.. மிகைப்படுத்தல் நடைமுறையாகி விட்டதாய் ஒரு தோற்றம் அவ்வப்போது மனதுள் எழுகிறது. நடைமுறைப்படுத்தல் என்பதே தத்தம் வசதிக்கேற்ப உருவாக்கப்படுவதுதானே. அது போலச் செய்தல் என்பது அந்தப் புள்ளிகள் சேர்த்து வரைந்த ஓவியத்தைப் போலவே அதே புள்ளிகளைக் கொண்டு இன்னொரு வடிவத்தை உருவாக்க முயல்வதே ஆகும்.

பொய்களும் உண்மை மாதிரிகளும் ஓரமாய் வரிசையில் நின்று பார்த்துக்கொண்டு இருக்கட்டும். உண்மைகள் மறைந்து இருக்கும் வரை மிகைகள் சுவாரசியமாய் இருக்கும்..

ஓரிடத்தில் நில்லாமல் நகர்ந்துகொண்டே இருக்கும் பொய்களையும் உண்மை மாதிரிகளையும் உருவான இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருக்கும் உண்மையினையும் புரியாத மொழியில் படம் பார்ப்பது போல் பார்க்கும் வேடிக்கை பார்க்கிற மூன்றாவது கண்..

சில நேரங்களில் இடையே என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க வசன வரிகள் கிடைப்பதுண்டு. பல நேரங்களில் வசன வரிகள் கிடைப்பதில்லை. வசன வரிகள் கிடைப்பதால் வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு விருந்து கொஞ்சம் அதிகமாகும். இப்போது என்ன நடக்கிறது என்பதோடு சேர்த்து முன் கதைச் சுருக்கமும் இடையிடையே வந்து விழுவதால் பின்விளைவுச் சுருக்கத்தைத் தோராயமாய் முடிவு செய்து கொள்கின்றன மூன்றாவது கண்கள்.

வசன வரிகளுக்காகக் காத்துக்கொண்டு இருக்கும் சில கண்கள். ஏதோ ஒரு நிஜமான அக்கறையில் அந்த ஒரு உண்மை வெளிவந்து விடக்கூடாது என்ற பதட்டத்தோடு பார்த்துக் கொண்டு இருக்கும் சில இதயங்கள், அந்த உண்மை தெரிந்த பிறகு என்ன என்ன நடக்க வாய்ப்புகள் கொண்ட சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். கண்கள் பலவிதம். அந்தக் கண்களில் உண்மைகள் பதியக்கூடிய விதங்களும் பலவிதம்.. சில நேரங்களில் வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு அந்த விவாதம் உண்மையில் இருந்து கிளம்பியதா? அல்லது பொய்யை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றதா என்ற விவரங்கள் துல்லியமாய்த் தெரியும்.. ஆயினும்

பாப்கார்ன்கள் தீருவதில்லை…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button