பின்பியல் வெளிப்பாட்டையம் (Abstract Expressionism); ஒரு கண்ணோட்டம் – ஆர்.சீனிவாசன்
கட்டுரை | வாசகசாலை
பின்பியல் என்ற வார்த்தை இப்போது பல துறைகளில் உபயோகிக்கப்படுகிறது. ஒரு துறையில் பின்பியலுக்கு கொடுக்கப்படும் விளக்கம் மற்றொன்றில் இருந்து வேறுபடுகிறது. பொதுவாக வெளிப்பார்வையில் புதிராக இருப்பினும் உள் நுணுக்கங்கள் உடையவை பின்பியல் படைப்புகள். பின்பியலைப் பற்றி பார்ப்பதற்கு முன் சில மறுதலிப்புகள். இக்கட்டுரையை பின்பியத்தின் பரந்த காணோட்டம் என கூற முடியாது. பின்பியலின் விளக்கம், வர்ணிப்பு என்பது கன்னி வெடி மைதானத்தில் நடப்பது போன்றது. பெரும்பாலோர் பின்பியல் வெளிப்பாட்டையத்தை ஓவியம் மற்றும் சிற்பத்தில் மட்டும் பார்த்திருக்க கூடும். பின்பியல் இந்த இரு துறைகளுக்கு மட்டும் சார்ந்தது என நினைத்து இக் கட்டுரையை படிக்க ஆரம்பித்தீர்கள் என்றல், அது தவறு. பின்பியல் வெளிப்பாட்டையம் என்பது ஓவியம், சிற்பம், எழுத்து, நடனம், நாடகம், இசை, கவிதை என பல கலைத் துறைகளில் வேரூன்றி இருப்பது. பின்பியல் படைப்பில் அர்த்தத்தை தேடினால் நிராசை அடைவீர்கள். அர்த்தத்தை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பின்பியல் படைப்புகள் கூறுவதில்லை. மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு உணர்ச்சிகளை, உளைச்சல்களை எற்படுத்தும் இப்படைப்புகள் வரம்புகளுக்கும், கோட்பாடுகளுக்கும் உள்ளடங்காது. சில துறைகள் “பின்பியல்” என்ற வார்த்தையை இரவல் வாங்கிக்கொண்டு அதற்க்கு தங்கள் துறையில் வேறு அர்த்தத்தையும் கொடுத்துள்ளன.
என்ன ? ஏன்? எதற்கு ? எங்கு ? எப்போது?
பின்பியல் வெளிப்பாட்டையத்தின் அடிப்படை விளக்கம் கடினமானது. கீழ்வரும் விளக்கங்களை ஓவியக்கலையை மனதில் கொண்டு முழுமையடையாத கூறுகளாக உங்கள் முன் வைக்கிறேன். பின்பியல் படைப்புகள்,
1. உருவவியலில் அடிப்படையற்றவை.
2. தெளிவான காட்சி அமைப்புகள் இல்லாதவை.
3.சிந்தையைவிட உள்ளுணர்வுக்கு தாக்கங்களை அதிகமாய் ஏற்படுத்துபவை.
4. பெரும்பாலும் தலைப்புகள் அற்றவை.
5. தனிப்பட்ட வெளிப்பாட்டையம்.
6. நிகழும் மரபிற்கு புறம்பானவை.
மேற்கண்ட கூறுகள் கண்டிப்பாக இருந்தால்தான் அது பின்பியல் வெளிப்பாட்டையம் எனக் கூற முடியாது. பின்பியலின் பரவலான பொது அம்சங்கள் இவை எனக் கூறலாம். இதில் முன்றாம் மற்றும் ஐந்தாம் விவரம் மிக முக்கியமானது. ஆழ்மனதில் ஏற்படும் உணர்ச்சிகளுக்கும், எண்ணங்களுக்கும் ஒரு ஓவியத்தின் மூலமாகவோ அல்லது வார்த்தைகளின் மூலமாகவோ வடிகால் தேட நினைத்து, உருவங்கள் வராமலும், வார்த்தைகள் வராமலும் நிராசை அடைந்த கலைஞர்கள் நிறைய பேர் உள்ளனர். சில உணர்ச்சிகளுக்கு வார்த்தை வெளிப்பாட்டையங்கள் இருப்பதில்லை அப்படி இருந்தாலும் அகராதியில் அந்த வார்த்தைக்கு உள்ள விளக்கங்களினால் வரையறைப்படுத்தப்படுகிறது. வார்த்தைக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பை சொற்பொருளியல் (Semantics) எனப்படும் துறை ஆய்கிறது.
இனம் தெரியாத ஓர் உணர்ச்சியையோ அல்லது எண்ணத்தையோ வெளிப்படுத்த தேடி அலையும் உள்ளுணர்வுக்கு பின்பியல் ஒரு வடிகாலாக அமைகிறது. கண்சிமிட்டாமல் காகிதத்தின் மீது பேனாவால் உள்ளுணர்வை கட்டுப்பாடின்றி மேய விட்டால் முடிவில் கிடைக்கும் படம் உருவயியலில் அடைப்படை அற்று இருந்தால் அதனை பின்பியல் முயற்சி எனக் குறிப்பிடலாம். முக்கியமானது பின்பியல் முயற்சிகளுக்கு படைப்பாளியின் முன்னே மாடல்களோ, நிலப்பரப்புகளோ இருப்பதற்கு தேவை இல்லை. பின்பியல் வெளிப்பாட்டையம், குறைந்தபட்சம் ஓவியக்கலையில், ஆழந்த சிந்தனையின் முடிவில் கிடைப்பதெனலாம். முக்கியமாக அழகியலின் கோட்பாடுகள், பார்வை கண்ணோட்டம், விகிதம், வடிவம் போன்றவற்றால் கட்டுப்படாமல் ஒரு தனிப்பட்ட நபரின் ஆழ்மன சிந்தனை எனவும் கூறலாம்.
ஓவியம்:
ஓவியக்கலையில் பின்பியல் வெளிப்பாட்டையம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் துவங்கியது எனக் கூறலாம். கீழே இருக்கும் சித்திரத்தைப் பாருங்கள்.
படம் 1: ” மழை, புகை, ஆற்றல்” (“Rain, Steam, Power, 1844, JMW Turner), எண்ணைச்சாய நிறம் கித்தான் மீது, 36 ” x 48 “, தேசிய கலைக்கூடம், லண்டன்.
ரயில் வண்டி ஒன்று அதிவேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது, ரயில் இன்ஜினின் வடிவம் முழுமையடையாமல் மேல்தோற்றம் மட்டும் கருமையாக காண்கிறது. இடதுபுறத்தில் ஒரு படகு மற்றும் இனொரு வாராவதி தெரிகிறது. சித்திரத்தின் பெரும்பாலான பகுதி புகையிலும் மழைச் சாரலிலும் பரவி இருக்கிறது. இப்படத்தை வரைந்த ஆங்கில ஓவியரான டர்னர் ஒரு சிறந்த நிலப்பரப்பு ஓவியர். ஆனால், இப்படத்தில் வேகத்தை, ஆற்றலை வெளிப்படுத்த அவர் கையாண்ட யுக்தி அக்காலத்தில் புதுமையானது. படத்தின் பரப்பில் பெரும்பகுதியை புகைக்கும் மழைக்கும் கொடுத்து ஒரு வித காட்சிப் பிழையின் மூலம் வேகத்தையும், ஆற்றலையும் நேயர்களுக்கு காணபித்துள்ளார். ஓவியக்கலையில் பின்பியலின் துவக்கம் இத்தகைய முயற்சிகளிலிருந்து ஆரம்பமானது எனக் கூறலாம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவில் உருவவியலில் அடிப்படையில்லாத வரைபடங்களை வஸிலி கண்டினிஸ்கி (Wassily Kandinsky), பியட் மொன்றியான் (Piet Mondrian) போன்றவர்கள் பறைசாற்றினார். பின்பியலை “தூய கலை” என்றனர்.
ஐரோப்பிய பின்பியல் இயக்கம் சர்ரியலிச (Surrealism) இயக்கத்துடன் மிக நெருக்கமான தொடர்புடன் இருந்தது. இரண்டும் கண்களைவிட மனதளவில் தாக்கங்களை எற்படுத்த உருவாக்கப்பட்ட இயக்கங்கள். இவை இரண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், சர்ரியலிசம் உருவவியலில் வேறுண்டு இருந்தது. ஆனால், பின்பியல் உருவவியலை முற்றிலும் அல்லது பெரும்பாலும் துறந்தது. ஓவியக்கலையில் பின்பியல் பல்வேறு உட்பிரிவுகளாக வகைப்படுத்தப் படுகிறது. லய பின்பியல் (Lyrical Abstracts), வடிவியல் பின்பியல் (Geometrical Abstracts) போன்ற உட்பிரிவுகள் உள்ளன. லய பின்பியல் நிறங்களுக்கும், நிறங்களின் சேர்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. வடிவியல் பின்பியல் கணித வடிவங்களின் மூலம் சிந்தை நிறைவைத் தேட முயன்றது.
படம் 2 : லய பின்பியல்
படம் 3 : வடிவியல் பின்பியல்
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பின்பியல் வெளிப்பாட்டையம் அமெரிக்காவில் ஜாக்ஸன் பொலாக் (Jackson Pollack), வில்ஹம் டே கூனிங் (Willheim De Kooning) போன்றவர்களால் வளர்க்கப்பட்டது. இந்தியாவில் வாசுதேவ் கைடோண்டே (Vasudeo Gaitonde), ராம்குமார் (Ramkumar) போன்றவர்கள் இதன் முன்னோடிகள்.
இசை:
இசையில் பின்பியல் வெளிப்பாட்டையம் இயற்கையாகவே இருக்கிறது. இசையை வார்தைகளாலோ, வடிவங்களாலோ வரையறைப்படுத்த முடியாததாலும், இசை கண்களுக்கு அப்பாற்பட்டதாலும், இசைக்கு உள்ளுணர்வோடு நேரடியாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. கடற்கரையில் அயராத அலையோசை, காலைப் பறவைகளின் சப்தங்கள், மழையின் ஓசை போன்ற இயற்கை ஒலிகள் ஆழ்மனதில் அமைதியையும் நிறைவையும் எற்படுத்துகிறது. இத்தகைய உணர்ச்சிகளுக்கு பரிணாம வளர்ச்சியில் விடைகள் இருக்கலாம். மனிதனால் படைக்கப்பட்ட இசைக்கு லயம், ஸ்தாயி, ஸ்வரங்கள் போன்ற அம்சங்கள் பல காலங்களாக உள்ளது. இசையில் பின்பியல் வெளிப்பாட்டையம் சப்தங்களின் சேர்க்கையால் உருவாக்கப்படுகிறது. இந்திய செவ்வியல் இசையில் ராகம் மற்றும் தாளம் அடிவாரமாக இருக்கும் போது, பின்பியல் இசையில் இத்தகைய அடிப்படைகள் இருப்பதில்லை. அலையோசையிலும், புயல் காற்றிலும் ராகங்கள் இருப்பதில்லை. இதனால் இவை இயற்கை பின்பியல் இசைகள் என கூறலாம்.
இசை கலைஞர்களில் ஜான் கேஜ் (John Cage) என்ற அமெரிக்கரின் முயற்சிகள் குறிப்பிடத்தக்கது. அவரது அடிப்படைக் கேள்வி, தற்ச்செயலால் இசையை உருவாக்க முடியுமா? இதற்காக அவர் சீன குறி சொல்லும் முறையான இ-சிங் (I – Ching) என்ற ஜோதிடக் கலையைத் தேர்ந்தெடுத்தார். இ-சிங் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம். சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக குறி சொல்வதற்கு உபயோகிக்கப்படும் இம் முறை, அறுபத்தி நாலு அறுகோணங்களை (Hexagon) உபயோகிக்கிறது. ஜான் கேஜ் இந்த அறுகோணங்களுக்கு அறுபத்தி நான்கு சிறு இசை குறிப்புகளுடன் சம்பந்தித்தார். ஒவ்வொரு முறை தற்செயலின் மூலம் ஒரு அறுகோணம் தேர்ந்தெடுக்கும் போது ஒரு சிறு இசை ஒலிக்கும். முழுக்க முழுக்க தற்செயலின் மூலம் உருவாக்கப்பட்ட இசைத் தொகுப்பு என்பதால் லயம், தாளம் போன்ற அம்சங்களின்றி சிதைந்த நடையுடன் கேட்கிறது இந்த முயற்சி. ஒரே தலைப்பில் ஒரு முயற்சிக்கு இன்னொன்று வித்யாசமாக இருந்தது.
கேஜ்ஜின் மிக புதிரான படைப்பான 4 ‘ 33 ” இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் தலைப்பு (4 ‘ 33 “) இப்படைப்பின் நான்கு நிமிடம் முப்பத்தி மூன்று வினாடிகள் நீடிப்பைக் குறிக்கிறது. மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த இசையின் முக்கியமான விஷயம் இதன் செய்முறை. ஒரு இசை கலைஞர் பியானோ முன்னால் வந்து உட்கார்வார். கையின் மூலம் செய்கை காட்டிவிட்டு பியானோ வாசிக்காமல் நிசப்தமாய் உட்கார்ந்திருப்பார். இதையே மூன்று பகுதிகளுக்கும் மூன்று முறை செய்வார். கேட்பவர்கள் இசை எதுவும் கேட்காமல் குழப்பத்தில் பேசும் கிசுகிசுப்பும், திகைப்பும்தான் இசை. இதை பின்பியல் இசை முயற்சி என்பதை விட ஒரு பின்பியல் நாடகம் எனக் கூறலாம்.
மேற்கத்திய செவ்வியல் இசையில் பிரபலமான பாணிகளான வால்ட்ஸ் (Waltz), மார்ச் (March), ஃயூக் (Fugue), ரேக்விம் (Requiem) போன்றவை ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காகப் படைக்கப்பட்டவை. உதாரணத்திற்கு வால்ட்ஸ் என்பது நடனத்திற்காகவும், மார்ச் என்பது ராணுவ படை முன் செல்வதற்காகவும், ரேக்விம் என்பது ஒருவரின் நினைவு அஞ்சலிக்காகவும் அமைக்கப்பட்டது. செவ்வியல் இசை பெரும்பாலும் தாள நயங்கள் சீராக அல்லது கீழ் வரிசையில் ஆரம்பித்து உச்சிக்குப் போவதுபோல அமையும். பின்பியல் இசையில் இத்தகைய அம்சங்கள் இருப்பதில்லை. சப்தங்கள் சப்தங்களுக்காக (music for music’s sake) உருவாக்கப்பட்டது பின்பியல் இசை. சப்தங்களின் தாக்கத்தினால் மட்டும் கேட்பவர்களின் கவனத்தை ஈர்க்க படைக்கப்பட்டது. இந்த வகையில் பௌதத்தில் “பீஜ மந்த்ரா” என்ற வழக்கத்தில், ஒரு சொல் அல்லது எழுத்து குறிப்பிட்ட முறையில் ஒலிக்கப்படும். சிந்தையைத் தீண்டும் இந்த ஓசை ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. ஜெர்மனிய இசை அமைப்பாளரான யோஹன் செபாஸ்டின் பாக் (Johan Sebastian Bach) எழுதிய சில இசை கீர்த்தனைகள் கணிதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது என்பது பரவலான வாதம்.
நாடகம்:
நாடகக் காலையில் பின்பியல் வெளிப்பாட்டையம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொடங்கியது. நாடகவியல் பின்பியம் மரபு நாடகங்களில் காணப்படும் தொடர்ச்சி, காட்சி அமைப்பு, வசனம், கதை, இசை, உச்சக்கட்டம் போன்ற அம்சங்கள் இன்றி, மரபு நிலைப்பாடுகளை கழித்து, தொடர்ச்சியின்றி, பாத்திரங்களின் பகிரங்க நடிப்பால் சில கருத்துக்களை முன்வைக்கிறது. பின்பியல் நாடகங்களில் கதை அம்சங்கள் அதிகம் இருப்பதில்லை. கற்பனை வசனங்களின் மூலமும், நடிகர்கள் நேயர்களுடன் நேரடியாக உரையாடுவதன் மூலமும் சிந்தனைத் தீண்டலை எற்படுத்துபவை. இத்தருணத்தில் கலையின் புது பிரிவான செய்முறைக் கலை
(Performance Art) என்ற புதிய பிரிவு குறிப்பிடத்தக்கது.
செய்முறை கலைக்கும் பின்பியல் நாடகங்களுக்கும் உள்ள வித்தியாசம் பாத்திரங்களின் எண்ணிக்கை, காட்சி அமைப்பு, வசனம் போன்றவற்றில் உள்ளது. செய்முறைக் காலையில் கலைஞர் மட்டும் பங்கேற்பதோடு சில உதாரணங்களில் தன் உடலையும் ஒரு காட்சிப் பொருளாக உபயோகிப்பது மரபு. மேலும் செய்முறைக் கலையில் வசனங்களோ, பிரத்யேக காட்சி அமைப்புகளோ அதிகம் தேவையிருப்பதில்லை. திடுக்கிடும் முறையில் பெரும்பாலும் திறந்தவெளியில் காட்சியிடப்படும் இந்த முறை, தனிப்பட்ட எதிர்ப்பையும், புரட்சி சிந்தனையையும் வெளிப்படுத்த கலைஞர்களுக்கு இருக்கும் சிறந்த முறையில் ஒன்று. ஜோசப் பீஸ் (Joseph Beuys), மரியா அப்ரஹோமோவிக் (Maria Abrahamovic) போன்றவர்கள் செய்முறைக் கலையின் முன்னோடிகள். இந்தியாவிலும் செய்முறைக் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
படம் 4 : ஈவ் க்ளைன் – “வெறுமைக்குள் தாவல்” (Yves Klein – Leap Into the void)
பின்பியல் நாடகங்களில் அபத்தவாதம் (Absurdism) மேலோங்கி இருப்பதில் திகைக்க எதுவும் இல்லை. அபத்தவாதம் நையாண்டித்தனத்தையும், நகைச்சுவையையும் வெளிப்படுத்த சிறந்த முறை. பின்பியல் அபத்தவாத நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் திரையிடப்பட்டன. ட்ரிஸ்டன் சாரா (Tristan Tzara) என்பவர் எழுதித் தயாரித்த “வாயு இருதயம்” (The Gas Heart, 1921) குறிப்பிடத்தக்கது. முக உறுப்புகளான கழுத்து, கண், இமை, மூக்கு, காது தங்களுக்குள் உரையாடுவதைப் போல காட்சி அமைந்திருக்கிறது. உறுப்புகளுக்குள் பொறாமை, பிடிவாதம், அன்பு, நிராசை போன்ற உணர்ச்சிகள் எழுகின்றன. வசனங்கள் புரியும் வண்ணம் இல்லாமல் வார்த்தை ஜாலங்களாக அமைகின்றன. கதைசொல்லி பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார் என்று சொல்வதைவிட கட்டுப்படுத்துகிறார் என்றே சொல்லலாம். மூளை அங்கங்களை கட்டுப்படுத்துவது போல, கதைசொல்லி பாத்திரங்களின் வருகையையும் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறார். வசனங்கள் இருந்தும் அவை எந்தவிதத்திலும் கதையையோ கருத்தையோ சொல்வதில்லை, மாறாக சிந்தையில் ஒரு வித தேடலை துவக்குகிறது. முடிவில் ஒரு காதல் தோல்வியைப் போல முடியும் இந்த நாடகம் அபத்தவியல் நாடகங்களில் மிக பிரபலமானது. “கடோட்டிற்காக காத்திருப்பு” (“Waiting for Gadot “, 1952, சாமுவேல் பெக்கெட்) என்ற ஃப்ரெஞ்சு மொழி நாடகம் இதே பிரிவில் இன்னொரு உதாரணம். இரண்டு பாத்திரங்கள் கடோட் என்பருக்காக காத்திருக்கிறார்கள். கடைசி வரையில் கடோட் வருவதில்லை. கடோட் என்பவரே ஒரு கற்பனையா என்று கூடத் தோன்றுகிறது. சில வசனங்கள் திரும்ப திரும்ப வருகின்றன. அபத்தவாதம் மற்றும் பின்பியலின் மூலம் இருப்பியல் கேள்விகளை எழுப்புகிறது இந்த நாடகம்.
சிற்பம்:
சிற்பக்கலையில் பின்பியல் வெளிப்பாட்டையம் மிக பழமையானது. கட்டடக் கலையின் மூலம் சமசீர் வடிவங்களை சிருஷ்டித்து அதன் மூலம் உணர்வுகளையும், சிந்தையையும் தீண்டும் படைப்புகளை மனிதன் பண்டைய காலத்திலிருந்து படைத்திருக்கிறான். வளைவுகள், குவி மாடம், பிரமிடுகள் போன்றவை வடிவியல் பின்பிய வெளிப்பாட்டையம் எனக் கருதலாம். 1916-இல் ரோமானிய சிற்பி கான்ஸ்டான்டின் ப்ரங்குஷ் (Constantin Brâncuși) வடிவமைத்த “முடிவில்லா தூண்” (“Endless Column”) என்ற சிற்பம் முதலாம் உலகப் போரில் ரோமானிய சிப்பாய்களின் சாகசத்திற்கும், தியாகத்திற்கும் நினைவாஞ்சலியாக நிறுவப்பட்டது. சமசீரான பதினாறு முக்கோண வடிவங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கிறது. தரையிலிருந்து பதினாறு படிகள் முடிந்தாலும் அதற்கு மேலும் தொடர்வதாக ஐதீகம். பொதுவாக ராணுவ நினைவிடத்தில் காணப்படும் சின்னங்களை போல இல்லாமல் முழுவதும் வடிவியல் பின்பியமாக காட்சியளிக்கும் இந்த சிற்பம் உலக கலாச்சார பொக்கிஷங்களில் ஒன்று.
படம் 5 : ” முடிவில்லா தூண்” (“Endless Column “, Constantin Brâncuși, Târgu Jiu, Romania)
ப்ரங்குஷ்ஷின் இனொரு படைப்பான “வெறுமையில் ஒரு பறவை” (“Bird in space “, 1928) பின்பியல் வெளிப்பாட்டையத்தின் ஆரம்பகால உதாரணம். இறக்கையைப் போல காட்சியளிக்கும் வடிவம் அழகியல் பின்பியத்தின் ஒரு உத்தம உதாரணம். ப்ரங்குஷ் பறவையின் சித்தரிப்பை ஒரு வகை காட்சி உவமையாக வடிவமைத்துள்ளார். நவீன சிற்பக்கலையில் ஒரு பெரும் பகுதி பின்பியல் வெளிப்பாட்டையங்களாகவே உள்ளன. ஹென்றி மூர் (Henry Moore) படைத்த இப்படைப்பின் பெயர் “ஓவல் வித் பொய்ண்ட்ஸ்” (1968).
படம் 6 : “Oval with points ” (Hertfordshire, England)
ஆங்கிலேய சிற்பி அனிஷ் கபூர்ரின் பிரம்மாண்டமான திறந்தவெளி படைப்பான “மேகக் கதவு” (Cloud Gate, 2006) பார்ப்பவர்களை பரவசம் அடையச் செய்கிறது.
படம் 7 : “மேகக் கதவு” (Cloud Gate, Anish Kapoor, Chicago)
சிபிற்பக்கலையில் பின்பியல் வெளிப்பாட்டையத்தின் விளக்கம் பெரும்பாலும் நவீன சிற்பக்கலையின் விளக்கத்துடன் சேர்ந்துவிட்டது.
நடனம்:
சிற்பம், ஓவியத்துடன் தொடர்புடையது போல நடனம், நாடகக் கலையுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. நாடகத்தின் ஒரு அங்கமாகவே விளங்கும் நடனம் பின்பியலில் பின்தங்கவில்லை. பின்பியல் நடனம் பாரம்பர்ய நடனத்தின் நடையைத் தவிர்த்து உடல் அசைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பின்பியல் நடனம் பெரும்பாலும் ஒற்றை நபர் செய்முறையாகவும், பல நடனக் கலைகளின் கலவையாகவும் காண்கிறது. மெர்ஸ்சி கன்னிங்ஹம் (Merce Cunningham) பின்பியல் நடனத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். இசை கலைஞர் ஜான் கேஜ்ஜின் துணைவரான இவர், கேஜ்ஜுடன் சேர்ந்து பல நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். செவ்வியல் நடனங்களில் காணப்படும் கை செய்கைகள், முக பாவனைகள், நடன முத்திரைகள், இசைக்கு ஒத்துப் போகும் நடை போன்ற அம்சங்கள் யாவதுமின்றி அசைவுகளை மட்டுமே உபயோகித்து சிந்தனையை தூண்டும் நடனத்தை மெர்ஸ்சி வடிவமைத்துள்ளார்.
நடனம், இசையைப் போல, இயற்கையாகவே உள்ளுணர்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. மனம் குதூகலம் அடையும்போதும், ஏகாந்தத்தில் அமைதியாக இருக்கும் போதும் உடல் அசைவுகள் தானாகவே வருவது இயல்பு. மரபு நடனத்தின் எழில், நயம் போன்றவை பின்பியல் நடனங்களில் இல்லாமல் இருப்பதை போல இருப்பதற்கு கரணம், மரபு நடனங்கள் நேயர்களை மையமாகக் கொண்டவை. ஆனால், பின்பியல் நடனங்கள் கலைஞரின் சொந்த வெளிப்பாட்டையம் என்பதால் இருக்கலாம்.
இலக்கியம், கணிதம், ஃபேஷன் :
பின்பியலின் தாக்கங்கள் கலைத்துறைக்கு மட்டுமின்றி இலக்கியம், கணிதம், ஃபேஷன் போன்ற துறைகளிலும் காணப்படுகிறது. இலக்கியத்தில் பின் நவீனவியல் (Post Modern) கவிதைகளில் பின்பியலின் தாக்கங்கள் தெரிகின்றன. செய்யுளைவிட பின்பியலின் தாக்கம் கவிதைகளில்தான் அதிகம் காணப்படுகிறது என்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆழ்மனதோடு தொடர்புடைய கவிதைகளில் பின்பியலின் பிரதிபலிப்பு தோன்றுவது இயல்புதான். கவிதையில் பொதுவாக உருவகம், உவமை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது பின்பியல் கவிதைகள் சொற்களின் உச்சரிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது.
கணிதத்தில் பின்பியல் என்பது இரவல் சொல். கணிதத்தில் பின்பியலின் விளக்கம், ஒரு சமன்பாட்டின் உள் விளக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு இருபடி சமன்பாட்டிற்கு (Quadratic Equation) மூலங்கள் (roots) கண்டுபிடிக்க சூத்திரம் உண்டு. அதே ஐந்தாம் சமன்பாட்டிற்க்கு (Quintic equations ) மூலங்கள் கண்டுபிடிக்க சூத்திரங்கள் இல்லை. இந்த கோட்டபாட்டை கண்டறிந்த ஃபிரெஞ்சு கணிதவியலாளர் எவரிஸ் களுவா (Everste Galois) கொடுத்த ஆதாரம் அப்போதிருந்த கணிதவியல் சமன்பாடுகளிலிருந்து அனுமானத்தால் நிரூபிக்கப் படாமல், பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டின் (polynomials) உள் இயல்புகளிலிருந்து எடுக்கப்பட்டது. இப்போது கணிதவியலில் முதுகலை நிலையில் பயில்விக்கப்படும் பின்பியல் அல்ஜீப்ராவின் ஒரு பிரிவாக களுவா கோட்பாடு கற்பிக்கப்படுகிறது. கணிதத்தில் பல முறை சம்மந்தமே இல்லாத இரு கிளைகளுக்கிடையில் உறவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாகத் தெரியும் சில சம்பாடுகள், கோட்பாடுகள் உள்ளூர முற்றிலும் வேறுபட்ட உறவுகளை கொடுக்கக்கூடியவை.
ஃபேஷன் துறையில் நிறங்கள், அவற்றின் சேர்க்கை, வடிவியல் போன்ற அம்சங்களில் பின்பியல் பிரதிபலிக்கிறது. அன்றாடம் உபயோகிக்கும் உடைகளில் இப்போது பின்பியல் வெளிப்பாட்டையத்தின் படைப்புகள் சகஜமாகிவிட்டன. இது மட்டுமின்றி லாந்தர்கள், மேஜைகள், கம்பளங்கள் என பல பொருட்களில் பின்பியலின் தாக்கம் தெரிகிறது.
முடிவுரை :
ஆரம்பத்தில் பின்பியல் வெளிப்பாட்டைய படைப்புகளை திகைப்புடன் பார்த்த காலங்கள் போய் வெகுஜனத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது பின்பியல் வெளிப்பாட்டையம். தெரிதலை சீண்டும் பின்பியல் படைப்புக்களை புரிந்து கொள்ள முயலுவதை விட, அவற்றை கேள்விகளின்றி அணுகுவது என்பது தெரிதலின் வரம்புகளை நீட்டிக்கும்.
(All photos are from Wikipedia Website)