
கட்டணம்
10 வருடங்களாக உழைத்த மஸ்டா கார். பட்டென்று நின்றுவிட்டது நடுவழியில். ஜோன்சனுக்கு எரிச்சலாக வந்தது. ஒருபோதும் சர்விஸ் தவறியதில்லை. காருக்குச் செலவு செய்கையில் கணக்கே பார்த்ததில்லை. ஆனால், முக்கிய வேளையில் இப்படி நிர்கதியாய் நிற்கவிடும் என்று ஜோன்சன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. வழக்கம்போல, வாகனம் நடுவழியில் நின்றதைப் பார்த்து யாராவது வருவார்களா என்று காத்திருந்தார்.
உலகின் எந்த மூலையில் வாகனங்கள் பழுதடைந்தாலும் கடவுள் அங்கே ஓர் ஆள் அனுப்புவார் என்பது ஐதீகம். அப்படி யாராவது வந்தால் கடவுள் மாதிரி இருக்கும். மெக்கானிக் வந்தால் கடவுளே வந்த மாதிரி இருக்கும். ஜோன்சனுக்கும் ஏதோ ஒரு மதத்தின் கடவுள் வந்தார். அரைமணி நேரத்திற்குள் அந்தக் காரைச் சரிசெய்து கொடுத்தார்.
வந்தவர் எந்தக் கட்டணமும் கேட்காதது ஜோன்சனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அதனால், அவரே 50 ரிங்கிட்டை எடுத்து, வந்தவர் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல வலுக்கட்டாயமாக அவர் கையில் திணித்து அனுப்பினார். ஒருவழியாகப் பணம் கட்டிவிட்ட திருப்தியில் அவர் காருக்குள் ஏறிவிட்டார். கார் மெல்ல நகரத் துவங்கியது. இவ்வளவு நேரம் பதற்றத்தில் இருந்த அவரது மூளை சற்று ஆசுவாசமானதும், “அவனுக்கு 50 ரிங்கிட் கொடுத்திருக்கக் கூடாதோ?” என்று கேள்வி எழுப்பியது.
********
ஒற்றன்
நெடுமாறன் தனது கைப்பேசியில் “டேய்.. எவ்வளவு நாள்தாண்டா நாம தாய்லாந்து போற பிளானைத் தள்ளிப்போடறது? சுரேஷ் வேற கல்யாணம் பண்ணிட்டான்.. அடுத்து எவனும் கல்யாணம் பண்றதுக்குள்ள வாங்கடா எங்கேயாவது போயிட்டு வருவோம்,” என்றான்.
தனது காதலி தீபிகாவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே நண்பர்களுடன் கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்ததால், அவர்கள் அமர்ந்திருந்த உணவகத்திலேயே தகராறு தொடங்கியது. “என்னைக்காவது எனக்குக் கொஞ்சமாச்சும் அட்டென்ஷன் கொடுத்திருக்கியா?” என்று தொடங்கிய சச்சரவு, “நாம இதுக்கு மேல சந்திக்கவே வேண்டாம்,” என்று முடிந்தது. தீபிகா உணவகத்திலிருந்து வெளியேறினாள்.
உணவகத்தில் வாடிக்கையாளர்கள் இல்லாததால், இப்பிரச்சனையைப் பார்க்க வேடிக்கையாளர்களும் இல்லை. தனியாக இருந்தவன் சற்று நேரத்தில் கடுப்பிலும் விரக்தியிலும் பணம் கட்டும் இடத்திற்கு வந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் மணியை அடித்தான். உள்ளே இருந்து ஒரு மலாய்க்காரர் வந்து சாப்பிட்டதைக் கணக்கெடுத்துக் கட்டணத்தை வாங்கிக் கொண்டார்.
வெளியே மோட்டாரில் அமர்ந்து சிறிது நேரம் கைப்பேசியைத் துழாவிக் கொண்டிருந்தவனது சமூக வலைத்தளங்களில் மலிவான சுற்றுலாத் தலங்களின் விளம்பரங்கள் ஆங்காங்கே வரத் தொடங்கின. தன் நண்பர்கள் அனுப்பிய மீம்ஸ்களைப் பார்த்துக்கொண்டிருந்த நெடுமாறன் இவ்விளம்பரங்களைச் சரியாகக் கவனிக்கவில்லை.
குவோராவில் “How To Deal With Attention Seeking Girlfriend” மற்றும் “How to cope up with a fresh break-up” என்று ஆங்கிலத்தில் இரண்டு கட்டுரைகள் அவனது வலைத்தளத்தில் பதிவாகியிருந்தன. அப்போதுதான் நெடுமாறனுக்கு உறைத்தது. “ஆமா.. நான் வெளியில பேசறதும் எனக்கு நடக்குறதெல்லாம் எப்படி இங்க விளம்பரமா வருது?” என எண்ணினான் நெடுமாறன். “டிங்!” தங்கை ஏதோ ஒரு யூடியூப் வீடியோவை வாட்சாப்பில் அனுப்பியிருந்தாள்.
அதைப் பார்க்க யூடியூப்பைத் திறந்தவுடன் “உங்கள் கைப்பேசிக்குள் யாரோ ஒட்டுக்கேட்பதுபோல் தோன்றுகிறதா? நீங்கள் பேசுவதெல்லாம் உங்களுக்கே விளம்பரமாக வருகிறதா? கவலை வேண்டாம்! SUPREME AD-BLOCKஐப் பதிவிறக்கம் செய்யுங்கள். உங்கள் கைப்பேசியின் உள்ளே இருக்கும் ஒற்றனை நாங்கள் ஒழித்துவிடுகிறோம்,” என்று ஒரு விளம்பரம் வந்தது.
******