
இறகு
எப்போதும் போலத்தான் இந்த பார்க்கில் ஒற்றைக் குரங்காய் ஆகாயத்தையும்,பூமியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுற்றிலும் மனிதர்கள்தான் ஆன போதிலும் யாருடனாவது இரண்டு வார்த்தைகள் பேசலாம் என்ற எண்ணம் இதுவரை எனக்கும் வந்ததில்லை; என்னைப் பார்க்கும் எவருக்கும் வந்ததில்லை…
ஹா, மயிரா போச்சு என உதாசீனம் செய்துவிட்டு மறுபடியும் மாறி மாறி.
யோசிக்கையில் மயிரையும் இப்படித்தான் ஒரு காலத்தில் உதாசீனம் செய்தேன், அதனாலோ என்னவோ மயிரும் போய்விட்டது சீக்கிரம். அந்த மயிர் இல்லாத மண்டையில் சூரியனின் கண் படவே மரத்தடி நிழலுக்குச் சென்று விட்டேன். நல்ல நிழல், இதமான காற்று, என்னை லேசாக உறக்காட்டியது. உறங்கிப் போனேன். என் உறக்கத்திற்கு நடுவே எத்தனை பேர் என்னை திட்டிச் சென்றிருப்பார்கள் என்று தெரியாது. ஏன் சிலர் என் மீது எச்சிலையும் உமிழ்ந்திருக்கலாம். ‘நல்ல மரத்தடி; இந்த இடத்தைப் புடிச்சிட்டானே.. ச்சே!’ என்ற கோபம் அவர்களுக்கு இருந்திருக்கும்.
எழுந்து பார்க்கையில் என் கையில் பட்டும் படாமலும் தெறித்திருந்தது ஒரு பறவையின் எச்சம். நிச்சயமாகச் சொல்வேன் அது பறவையின் எச்சம்தான்…
எழுந்து அதை துடைத்துக் கொண்டேன் நான் எழுந்த இடத்தில் அப்பறவையின் இறகு ஒன்று கிடந்தது. நானும் இந்த இறகை போலத்தான்; என் சிறகும் என்னை இப்படித்தான் பிரித்து விட்டிருந்தது. அதை கை உயரத் தூக்கி வீசினேன் காற்றில் மிதந்து சென்றது. ஏனோ அதை பின் தொடர வேண்டும் போலிருக்க, தொடர்ந்தேன்.
அதுவும் என்னைப் போலத்தான் எங்கு போவதெனத் தெரியாமல் ஆகாயத்திற்கும் பூமிக்கும் மாறி மாறி பறந்து அந்த பார்க் முழுவதும் அலைந்தது. சட்டென வீசிய ஒரு பெருங்காற்று காம்பவுண்ட் சுவரையும் மீறிக் கொண்டு போய் அதை வெளியே தள்ளியது. என்னை அக்காற்றால் அப்படித் தள்ள முடியவில்லை. அதனால் நான் அந்த மரத்திற்கே திரும்பினேன். அந்த மரத்தை ஓர் குடும்பம் பிடித்திருந்தது.
இங்கே தனித்தனியே இல்லை ஜோடியாய்தான் அதிகம் பேர் இருப்பார்கள். நீண்ட தினங்களுக்கு பிறகு இப்படி ஓர் குடும்பத்தை பார்க்கிறேன். அம்மர நிழல் மொத்த குடும்பத்தையும் வாரி அனைத்ததைப் போல் இருந்தது. அதில் என் வயதையொத்த ஒருவர் தன் பேரனின் காதில் ஓர் இறகால் “புறு புறு” காட்டிக் கொண்டிருந்தார். அவன் சிரித்துச் சிரித்து விழுந்தான். நான் அக்குடும்பத்தையே பார்த்துக் கொண்டு நின்றேன். ஒரு நிமிடம் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. சட்டென நினைவு வந்து முழிக்க அவர் என் அருகில், நான் கையில் வைத்திருந்த தட்டில் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டார். போட்டுவிட்டு மறுபடியும் சென்று தன் சிறகில் இணைந்து கொண்டார்.
நான் புரிந்து கொண்டேன் அது (அவர்) வேறொரு இறகு, இன்னும் சிறகிலிருந்து பிரியாத (பிரிக்கப்படாத) இறகு…!
பிழைப்பு
எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை இங்கு கேட்பார் யாருமில்லை. நான் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். என் உடலில் இருக்கும் ஆற்றல் போனால் ஒழிய நான் நிற்பேனே தவிர வேறு எப்போதும் நிற்பதற்க்கில்லை. அப்படிப்பட்ட என்னையே இவர்கள் தன் வழிக்கு ஆட்டி வைக்கிறார்கள். என்னைக் கேட்டு விட்டு அல்லவா இந்த காரியத்தை அவர்கள் செய்திருக்க வேண்டும்? என்னைக் கேட்டாலும் மாட்டேன் என்றுதான் மறுத்திருப்பேன். நான் மறுப்பதையும் எப்படியும் அவர்கள் பொருட்படுத்தப் போவதில்லைதான், இருந்தாலும்…
யார் கண்களுக்கும் தெரியாமல் போயிருந்தால் கூட என் நேரம் என நினைத்து ஓடிக்கொண்டே இருப்பேன் வெற்றுப் புலம்பல்களுடன். ஆனால், யார் கண்களுக்கும் தெரியாமல் ஒன்றும் இல்லை; என்னை ஐம்பது ஜோடி கண்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, அது கணக்கே அல்ல. நான் இங்கு வந்ததில் இருந்தே இப்படித்தான். ஆனால், இந்த ஐம்பது ஜோடி கண்களுக்குத் தெரியும் அல்லவா எத்தனை நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக, இந்த அநீதி எனக்கு இழைக்கப்படுகிறது என்று? தெரிந்தும் எப்படி பேசாமல் இருக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை…
எனக்காக குரல் கொடுக்க ஒருவர் கூட அங்கு இல்லை என்பதுதான் என் பெருத்த வேதனை. இத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொண்டேதான் ஓடுகிறேன் நிற்க முடியாமல், அந்த ஐம்பது ஜோடி கண் கொண்டவர்கள் முன்னால். என் விதி நானும் அவர்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல என் ஆயுள் முழுவதும்…
அந்த ஐம்பது ஜோடி கண் கொண்டவர்களையும் பார்த்து தினமும் நான் ஒரே கேள்விதான் கேட்பேன். என்னிடமிருந்து என் அனுமதி இல்லாமல் என் பத்து நிமிடங்களை பிடுங்கிக் கொள்கிறார்களே சிலர். அது என்னிடம் மட்டும்தான் பிடுங்கிக் கொள்கிறார்களா? அது எனக்கு மட்டும்தான் இழைக்கப்படும் அநீதியா?
பதில் வராது.
அவர்களது பத்து நிமிடங்களை சிலரின் லாபத்திற்கு திராணியற்று கொடுத்து விட்டு அந்நாளின் வேலைகளை முடித்துக் கொண்டு அந்த ஐம்பது ஜோடி கண்களும் என்னை முறைத்துக் கொண்டே நகரும் ஏதோ நான்தான் அவர்களுக்கு இந்த அநீதியை இழைப்பது போல.
என் பெயர் கூட தெரியாமல் என் புலம்பல்களை செவிமடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள்…
என் பெயர் கடிகாரம்..!
-nithvisnotebook@gmail.com