
உச்சி வெயிலில் குச்சி ஐஸ் உருகுவது போல உடம்பெங்கும் வியர்வை சொட்ட தகிக்கும் தார்ரோட்டில் வழிந்தோடிய கானல்நீரைக் கடந்தும், அனல் காற்றில் வெந்தும் நடந்து போய் கொண்டிருந்தான் முகம்மது தீன். ஆங்காங்கே மரத்தடியில் ஆடுகளும் மாடுகளும் வெக்கை தங்காமல் நாக்கை வெளியே தள்ளியபடி மூச்சிரைத்துப் படுத்துக் கிடந்தன. பறவைகள் கிளையில் வாயைப் பிளந்து தொண்டைத் துடிக்க தவியாய்த் தவித்தன. தீன் மரத்தடியில் இளைப்பாறுவதும் வண்டிச் சத்தம் கேட்டதும் ரோட்டுக்கு வந்து உதவி கேட்பதுமென அலைந்து திரிந்து ரொம்ப களைத்துப் போனான்; வெறுத்துப்போனான்.
சிறிய இளைப்பாறலுக்குப் பிறகு மீண்டும் நடக்கத் தொடங்கியவன். காலுக்கடியில் கண்ணாடி விரியன் கிடந்தாலும் கண்டுகொள்ளாமல் காதலியை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் காதலனைப் போல் வண்டிச் சத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினான். தீனுக்கு சிறுநீர் சுடுநீராகப் போனது. வியர்வை வடிந்து வடிந்து உடல் சோர்வாகிப் போனது. ‘இன்ஷா அல்லாஹ்’ இதென்ன சோதனையென்று கால்களின் முட்டியைப் பிடித்து கவிழ்ந்தபடி நின்றான். கவிழ்ந்து நின்றவனின் கவட்டையை உரசியபடி வந்து ‘பம் பம்’ என்று ஒலியெழுப்பி நின்ற பைக்கைப் பார்த்து பாம்பைக் கண்டவன் போல் பதறியடித்து ரோட்டைவிட்டு கீழே குதித்தான்.
கீழே விழுந்தவனைக் கண்டு சிரித்தான் பைக்கில் வந்தவன். தலைக்கவசத்துக்குள் இளித்த பல்லை உடைக்க தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கையில், இடித்த பைக்கைப் பார்த்து தலைக்கவசத்தைக் கழற்றாமலேயே ஆள் யாரென்று தெரிந்துவிட்டது தீனுக்கு.
“லேய் மாதவா.. கையக் குடுல மாப்ள” என்றான் தீன். தீனின் கையப் பிடித்து ரோட்டு மேலே தூக்கிவிட்டு, “என்ன மாப்ள பயந்துட்டியா?” என்று அவனின் உடையில் ஒட்டிய மண்ணைத் துடைத்தபடி கேட்டான் மாதவன்.
“பின்ன கவுட்டையிலக் கொண்டு வண்டிய வுட்டா எவந்தான் பயப்படாம இருப்பான்? கொஞ்ச நேரத்தில குடும்பக் கட்டுப்பாடு பண்ணிவுட பாத்தீயல பரதேசி” என இறுக்கமாய் முகத்தை வைத்து பேசிய தீனைப் பார்த்து எருக்கம் பூவாய் சிரித்தான் மாதவன்.
“மாப்ள.. மூஞ்சப் பாக்காமலேயே நாந்தான்னு குனிஞ்சிருக்குபோது எப்படில கண்டுபுடிச்ச?” கேட்டுவிட்டு மாதவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் தீன்.
“அது ரொம்ப ஈஸி தீன்பாய். இந்த ஒலகத்துலயே பெல்ட்ட இடுப்புல போடாம நடு வயித்துலப் போடுறது, ஒண்ணு.. நம்ம நைன்த் படிக்கும்போது நமக்கு இங்கிலிஸ் கிளாசயெடுத்த புருசோத்தமன் சார். இன்னொன்னு நீ. நீங்க ரெண்டுபேரும் எவ்வளவு தூரத்துல இருந்தாலும் கரைட்டா கண்டுபுடிச்சிடலாம். அதான் துணிஞ்சி வண்டியவுட்டேன்.”
“அடையாளம் சொல்றான் பாரேன் அடையாளம். நல்ல ஆளுடே நீ.”- நமட்டுச் சிரிப்பு சிரித்தான் தீன்.
“மாப்ள எங்கப் போயிட்டு வார இந்த வெயிலுக்குள்ள?”- உச்சிவெயிலின் உஷ்ணம் தாங்காமல் உச்சந்தலையில் கைவைத்தபடி கேட்டான் மாதவன்.
“மேலப்பாளையத்துல ஒரு கல்யாணம் மாப்ள. அதுக்குப் போயிட்டு நம்ம பி.டி பஸூல வந்துட்டுருந்தேன். கருப்புக்கட்டியத் தாண்டவும் பஸு பஞ்சராகிப் போச்சு. அதான் நடந்து போய்க்கிட்டுயிருக்கேன்.”
“என்ன.. தீன்பாய்! எனக்கொரு போன் பண்ண வேண்டியததுதானே?”
“ஒனக்கு போன் பண்ணலாம்ன்னு போன எடுத்தா போனு சுச்சாப்பு. இன்னைக்கி நாம வெயிலுல வேகணும்ன்னு இருக்கும்போது ஒன்னும் செய்ய முடியாது மாப்ள. ஆமா, நீ எங்க போயிட்டு வார? “- வியர்வையில் ஊறிய கைக்குட்டையைப் பிழிந்தபடி கேட்டான் தீன்.
“நான் தாய செங்கொளத்துலக் கொண்டு உட்டுட்டு வாறேன்.”
“தங்கச்சி, தங்கச்சிப் பயளுவளாம் நல்லாருக்காணுவளா!”
“நல்லாருக்காணுவ. கையில என்ன கவருல? மொய் பணத்த மொத்தமா ஆட்டயப் போட்டுட்டியா பாய்?“
“அடப்பாவி! ஒன்னமாறி நெனச்சியா என்ன. மெனக்கெட்டு திருனவேலிப்போயி ஒனக்கு புக்கு வாங்கிட்டு வந்தேன் பாரு. நீ இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ. “
“புக்கா..! ஐய்யய்யோ அவசரப்பட்டு ஓன் உயிர் நண்பனையே சந்தகேப்பட்டுட்டியடா மாதவா” என்று மாதவன் தன் கன்னத்தில் தானே அடித்துவிட்டு தீன் கன்னத்தில் நறுக்கென்று கடித்தான்.
அந்த நேரம் சைக்கிளில் ரோட்டில் சென்ற பெரியவர். இருவரையும் கக்கூஸில் கரப்பான் பூச்சியைப் பார்த்தது போல, “கலிகாலம்! ஆம்பளையும் ஆம்பளையும் கா… த்தூ” என்று காறித் துப்பிவிட்டுப் போனார்.
மாதவனுக்கு சிரித்து சிரித்து புரையேறிவிட்டது. தீனுக்கு சிரித்து சிரித்து வயிறு வலித்துவிட்டது. மொட்ட வெயிலிலயே ரோட்டோரமாய் பட்டறையைப் போட்டுவிட்டனர்.
“முகம்மது தீன் அவர்களே! இந்தப் பங்குனி வெயிலிலும் உங்கள் கன்னம் பலாச் சுளையாய் இனிக்கிறதே. எப்படி?”சிரிப்பை அடக்கியபடி கேட்டான் மாதவன்.
“மூத்திரச் சந்துமாறி வெயிலுக்கு மூஞ்சல்லாம் உப்பு படிஞ்சிக் கெடக்குது. ஒனக்கு பலாச் சுளையா இனிக்குதா…! புக்குனாப் போதும, ஒனக்கு எல்லாம் இனிச்சித்தான் கெடக்கும். இந்தா இது ஒங்க ஊருக்குப் பக்கத்துரூ.. பத்தினிப் பாறைக்காரர் பிரான்சிஸ் கிருபா எழுதுன ‘மல்லிகைக் கிழமைகள்’. இது எங்க சொந்தக்காரரு டைரட்டர் தாமிரா எழுதிய ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்’ “என்று தான் வாங்கி வந்த புத்தகங்களை தீன், மாதவனிடம் கொடுத்த மறுநொடி, மாதவன் மல்லிகையாய் முகம் மலர்ந்து, “என்ன பாய் சொல்ற…? பத்தினிப் பாறைக்கு ஸ்கூல் படிக்கும்போது எத்தன தடவ கிரிக்கெட் வெளயாடப் போயிருக்கேன். ஒருநாளும் இவர நா பாக்கலயே பாய்”புத்தகத்தைப் புரட்டியடி கேட்டான் மாதவன்.
“மாப்ள அவரு கிரிக்கெட்டர் இல்ல, கவிஞர். களத்துமேட்டுலயோ, கெணத்துக் காட்டுலயோ ஒக்காந்து கவித எழுதிட்டு இருந்துருப்பாரு. ஒன்னமாறி சோம்பேறியா? சோம்பேறி வெளயாட்டு வெளயாட.”
“யாரப்பாத்து சோம்பேறின்னு சொன்ன பாய். அந்த ஊருல தான் பத்து ரன்னு அடிச்சேன் தெரியுமா!”
மாதவன் சொன்னதும், குத்த வைக்கும்போது குண்டிக்கு நேராய் வேட்டி கிழிவது போல மண்திட்டில் குத்த வைத்து தீன் குலுங்கி குலுங்கிச் சிரித்துவிட்டு, “என்ன மாப்ள, பத்தினிப்பாறக்கூட பத்து ரன்னு அடிச்சத, என்னமோ பாகிஸ்தாங்கூட செஞ்சுரியடிச்ச மாறி சொல்ற?”
“சிரிக்காத தீன் பாய். மேச் ஜெயிக்க பத்து ரன்னு தேவ. கடேசி ஓவர்; கடேசி ரெண்டு பால்; கடேசி விக்கெட்டா எறங்கி, ஸ்டைட்டுல சேவாக்கு மாறி ஒரு மின்னல் ஃபோரு. லெக்குல யுவராஜ் சிங் மாறி முட்டிப்போட்டு ஒரு தூக்கு! பந்து லைனத் தாண்டி கொளத்தாங்கரையிலப் போயி வுழுந்துச்சி. “
“நீயா மாப்ள அடிச்ச? நம்பமுடியலய.” – தீனுக்கு நமத்துப் போன அப்பளம் போல முகம் மாறியது.
“ஓன்மேல சத்தியம் மாப்ள. வேணும்னா சொள்ளமுத்துக்கிட்ட கேட்டுப்பாரு.” என்று தீனின் தலையில் ஓங்கியடித்தான் மாதவன்.
“நீ சிக்ஸு ஃபோரு அடிச்சியோ இல்லையோ. ஆனா, அடுத்தவன் மண்ட ஓடு மண்ணு ஓடா நொறுங்குறமாறி சத்தியம் நல்லா அடிக்கிற மாப்ள“- வலித்த மண்டைய அழுத்தித் தேய்த்தபடி மாதவனின் பைக் டேங்க் கவரில் புத்தகங்களை வைத்துவிட்டு, “மொதல்ல எதாவது ஒரு கடையில வண்டிய நிப்பாட்டு. தண்ணித் தாகம் உயிரயெடுக்குது!” என்று பைக்கிலேறி அமர்ந்தான் தீன்.
இருவரும் அனல்காற்றில் அடைமழையாய் விடாது பேசிக் கொண்டே உள்வாய் சாத்தான்குளத்தின் ரோட்டோரப் பெட்டிக்கடையில் வண்டியை நிறுத்தினார்கள். “தாத்தா ஒரு லிட்டரு தண்ணி பாட்டுலு ஒண்ணு தாங்க” தீன் கேட்டான். மைசூர்பாகு மிட்டாய் இருந்த டப்பாவிற்கு மேல் தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்த கடைக்கார முதியவர், அவர்கள் கேட்காமலேயே கண் மார்க் ஊறுகாயையும் இரண்டு பிளாஸ்டிக் கிளாஸ்களையும் எடுத்து வைத்தார். “தாத்தா, தண்ணி பாட்டுலு வாங்குனா, இந்த ரெண்டும் ஃப்ரீயா?” என்று மாதவன் கேட்டதும், கடைக்கார முதியவர், “கிளாசும் ஊறுகாயும் இல்லாம எப்படி டே தண்ணியடிப்பிய? ஓசியிலக் குடுத்தா நா கடைய மூடிட்டு கைலாசம் போக வேண்டியதுதான்” – சொல்லிவிட்டு சொட்ட மண்டையச் சொறிந்துகொண்டு சிரித்தார். “நாங்க குடிக்கிறதுக்குதான் தண்ணி வாங்கினோம். அடிக்கிறதுக்கு இல்ல!” என்று சிரித்தவரைப் பார்த்து முறைத்தான் மாதவன். முறைத்துப் பார்த்த நண்பனின் முகத்தைத் திருப்பி, “நம்ம கவர்மெண்ட்டே பள்ளிக்கூடம், பஸ்டாண்டு பக்கமெல்லாம் கடையத் தொறந்து வச்சுக்கிட்டு படிக்கிறவனையும் ஒழைக்கிறவனையும் உருப்பட உடாமப் பண்ணுது. நாடு இந்த லெட்சணத்துல இருக்கப்ப நம்ம பெரியவர்க்கிட்ட கோவப்பட்டு என்ன பிரயோஜனம்?’” என்றான் தீன்.
“தாத்தா கோவப்பட்டதுக்கு மன்னிச்சிக்காங்க.“
“பரவாயில்லடே! நீங்க சொன்ன மாதிரி கோரானா டைமுல மொடாக் குடிகாரங்கூட ஒருவாரம் வாங்கி வச்சததான் குடிச்சான். மறுவாரம் சரக்குக் கெடைக்காம மண்டையப் பிச்சிக்கிட்டு அலஞ்சான். அதுக்கெடுத்த வாரம் இனிமே கண்டிப்பா கெடைக்காதுன்னு தெரிஞ்சதும் சோத்தத் தின்னுட்டு வீட்ல கவுந்தடிச்சி கம்முன்னுதான் கெடந்தான். இந்தப் பாழாப்போன கவர்மென்ட்டு அப்புமே அடியோட ஒயின்சாப்ப மூடியிருந்தா பெரிய புண்ணியமாப் போயிருக்கும்! “
“தள்ளாடுற குடிமகங்களாலதான் நம்ம அரசாங்கத்தோட கஜானாவே ஸ்டெடியா இருக்குது. அப்புறமெப்படி தாத்தா மூடுவாங்க?”என்றான் தீன்.
கடைக்கார முதியவர் கடைச் சாமான்களை எலி உருட்டுவதுபோல கடவாய் பல் தெரிய விழுந்து விழுந்துச் சிரித்துவிட்டு, “குடிச்சவன் பேச்சக் கேட்டு கேட்டு அடைச்சிப்போனக் காது. படிச்சவன் ஒங்கப் பேச்சக்கேட்டு இன்னைக்குத்தான்டே தொறந்துருக்கு! ஆமா, ஒங்களுக்கு எந்த ஊரு பா?” என்றார்.
“தாத்தா இவனுக்கு இந்தா தெக்கருக்குற தேவனாப்பேரி. எனக்கு மூலைக்கரைப்பட்டி.”
“மூலைக்கரைப்பட்டியா? ஒனக்கு மூலைக்கரைப்பட்டியில பள்ளிவாசல் தெருவா? இல்ல பெரிய பள்ளிக்கூடத்துப் பக்கத்துலருக்குற ரஹ்மத்து நகரா டே ?” கனியாத வாழைத்தாரை விலக்கி தன் கனிந்த முகத்தை வெளியே நீட்டிக் கேட்டார் கடைக்கார முதியவர்.
“பள்ளிவாசல் தெரு. அப்பா பேரு சாகுல் ஹமீது. நாங்குநேரி யூனியன் ஆபீஸ்ல கிளர்க்கா இருக்காங்க.”- தீன் சொன்னதும் படக்கென்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு, “அட சாவுல் மருமவன் பையனா நீ? அப்பா நல்லாருக்குறா டே?” என்று மகிழ்ச்சியில் தீனை கட்டியணைத்துக் கொண்டார்.
“ஒங்கப்பா எனக்கு நல்ல பழக்கம் டே. தங்கமான மனுசன் லா. யூனியன் ஆபீசுக்கு ஏதாவது சோலியாப் போனம்ன்னா, ‘ வாங்க மாமா வாங்க’ன்னு வாரியணைச்சுக்கிவாரு. வேலய சட்டுபுட்டுன்னு முடிச்சிக் குடுத்துட்டு.. ஆபீசுக்குப் பக்கத்துல ஓலப்பெரப் போட்ட டீக்கடை ஒண்ணுருந்துச்சி. அந்தக் கடப்பேரே ‘ஓலப்பெர டீக்கடை’ தான். அந்த டீக்கடையில வடையும் காப்பியும் வாங்கித் தருவாரு. வாங்கித் தந்துட்டு ‘சீக்கிரம் போரும். அந்தக் காட்டுக்குள்ள அக்கா ஒண்டியா இருக்கும்’ன்னு பஸுல ஏத்திவுட்டுதான் போவாரு. இப்பும்லா இந்த ஊருல வீடு பெருகிப்போச்சி. அப்பலாம் ஒரே காடுதான். ஒங்கப்பா ரொம்ப கை சுத்தமானவரு டே. யாருட்டயும் நயா பைசா வாங்கமாட்டாரு. ஒன்னியலாம் சின்னப்புள்ளயளப் பாத்தது. குட்டக் கத்திரிக்கா மாதிரி இருந்துக்கிட்டு ஒங்கப்பா பின்னால குடுகுடுன்னு ஓடி வருவ. இப்பன்னன்னா நெட்டப் பனைமரம் மாதிரி நெடுநெடுன்னு வளந்துட்டிய டே!” என்று தீனின் முதுகில் செல்லமாய் ஒரு தட்டுத் தட்டினார்.
“தம்பி தேவனாப்பேரியில ஒங்களுக்கு வீடங்க?” மாதவனைப் பார்த்துக் கேட்டார் கடைக்காரர்.
“எனக்கு பள்ளிக்கூடத்துக்குப் பின்னாடிதான் வீடு. அப்பா பேரு முருகேசன். போர் போடுறதுக்கு தண்ணிலாம் பாத்து சொல்வாரு”
“சரியாப்போச்சி, முருகேசன் தம்பி மவனா நீ? ஒங்கப்பா இந்தச் சுத்துப்பட்டுல ரொம்ப பேமஸ்லா டே. அவன் பாத்துச் சொன்ன எடத்துல தண்ணி இல்லாம இருந்ததே கெடையாத. நல்ல கைராசிக்காரம்லா! எங்க தெருல அடிபம்பு போடுறதுக்கு ஒங்கப்பன்தானடே தண்ணிப் பாத்து சொன்னான். அம்பது அடியிலயே தண்ணி பால் மாதிரி பொங்கிச்சி; தேங்காத் தண்ணி மாதிரிலா இனிச்சுச்சி.” மாதவனின் கைகளைப் பற்றிக் கொண்டு, “என்னடே! ரெண்டுபேரும் எனக்குத் தெரிஞ்சவங்கப் புள்ளயளா இருக்கீங்க. ஆனா, ஒங்கள ஒருநாளும் நம்ம கடப்பக்கம் வந்ததா நாவல்லையே…வெளியூர்ல எதும் இருக்கீயலா” என்றார்.
“ஆமா தாத்தா, நான் நார்கோயில்ல ஆஸ்டல் தங்கி இந்து காலேஜ்ல படிக்கிறேன். இவன் திருனவேலியில சதக்கதுல்லா அப்பா காலேஜிலப் படிக்கிறான்.” என்று சொல்லிவிட்டு, “தாத்தா, இந்தாங்க தண்ணி பாட்டுலுக்கு காசு” என்றான் மாதவன்.
“ஏ, காச சேப்புல வைப்பா. ஒங்கள இன்னைக்கிப் பாத்ததே நெறைய சம்பாரிச்ச மாறி சந்தோசமா இருக்கு” என்று இருவரின் தோள்களிலும் கை போட்டுக்கொண்டார்.
“சரிங்க தாத்தா. அப்பும் நாங்க வரட்டுமா?“- இருவரும் பைக்கிலேறி கையசைத்தனர்.
“வண்டிய வெரட்டாம பையப் போங்க. மறக்காம ரெண்டுபேரும் ஒங்க அப்பாவ நா கேட்டாதச் சொல்லுங்கடே” என்று கடைக்கார முதியவர் இருவரையும் கையசைத்து வழியனுப்பினார்.
முத்து பெருமாள் வாத்தியார் கிணற்றை நெருங்குகையில், “மாப்ள வண்டியக் கொஞ்சம் நிப்பாட்டு. வயித்தக் கலக்குது! வாழைக்கி கொஞ்சம் ஒரம் வச்சிட்டு வாரேன் “என்றான் தீன். “என்ன வுட்டுட்டு ஒத்தில பிரியாணித் தின்னல. நல்ல வயித்தக் கலக்கட்டும்.” வண்டியை வேகமாய் முறுக்கினான் மாதவன்.
“மாப்ள நிப்பாட்டு. அப்பறம் ஒன் வண்டிய நாறடிச்சிருவன் பாத்துக்கோ!“- தீன் சொன்னதும் சிரித்தபடி தார்சாலையிலிருந்து வாத்தியார் கிணற்றுக்குச் செல்லும் டிராக்டர் தடத்தில் வண்டியை விட்டான் மாதவன். கிணற்று மோட்டார் ரூம் பக்கம் வேகம் குறைத்து வண்டியை நிறுத்துவதற்குள் பின்னாலிருந்த தீன் வண்டியிலிருந்து தாவி, அடிவயிற்றுப் பையில் குட்டியை வைத்துக்கொண்டு குதித்தோடும் கங்காருவைப் போல் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு வாழைத்தோப்புக்குள் ஓடிப்போய் குத்தவைத்தான்.
மாதவன் வெயிலுக்கு இதமாய் கிணற்றுத் தொட்டியில் கிடந்த தண்ணீரில் முகத்தினைக் கழுவிவிட்டு வயிறு முட்டத் தண்ணீரையும் அள்ளிக் குடித்துவிட்டு நெல்லி மரத்தடியில் வந்து அமர்ந்தான். நெல்லி மரக்கிளையில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன அணில்கள். அணில்களின் ஆட்டத்தில் அவுட்டாகி மாதவனின் தலையில் விழுந்தன கனிந்த கனிகள். கனிகளை எடுத்து வாயில் ஒதுக்கியபடி அணில்களின் ஆனந்தத் தாண்டவத்தை அண்ணாந்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது அதே கிணற்றுக்கு கபடி விளையாடிவிட்டு தாகம் தீர்க்க இரண்டு இளைஞர்களும் பனிரெண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் புல்லட்டில் வந்து இறங்கினர். இளைஞர்கள் இருவரும் தொட்டியில் கிடந்த காதறுந்தத் தூக்குவாளியில் தண்ணீர்க்கோரிக் குடித்துவிட்டு சாரத்தால் முகத்தைத் துடைத்து மோட்டார் ரூம் திண்ணையில் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்தனர். நெல்லி மரத்திற்கு நேரெதிராக நின்ற மாமரத்தின் மறைவில் போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்த சிறுவனை கொத்துக் கொத்தாய் தொங்கிக் கொண்டிருந்த நெல்லிக்கனிகள் கோந்து பசைபோல இழுத்தன. மரத்தின் பக்கம் சென்று கனிகளைப் பறிக்கப் போனவனுக்கு அங்கே மாதவனைப் பார்த்ததும் மதயானையைப் போல் உச்சி முதல் உள்ளங்கால் வரை வெறியேறியது. மண்தரையில் ஊர்ந்துபோய்க் கொண்டிருந்த ரயில் பூச்சிகள், சிறு வண்டுகள், கட்டறும்புகள், சிற்றறும்புகளெல்லாம் நிலமதிர அவன் ஓடிய ஓட்டத்தில் உயிரைப் பிடித்துக்கொண்டு பொந்துக்குள் ஓடி மறைந்தன.
ஓடிவந்தவன் சொன்னதைக் கேட்டு திண்ணையில் சாய்ந்திருந்தவர்கள் நிமிர்ந்து நின்றார்கள். “எல ந..ல்லா பாத்துச் சொல்லு! ஆளு இவந்தானா?“ என்று சிறுவனிடம் கேட்டனர் இளைஞர்கள். சிறுவனோ, “இந்தக் கூயிமவந்தான் மச்சான்” என்றான். “இல்ல மாப்ள, இவனப் பாத்தா கஞ்சிக்கு வழியத்தவன் மாதிரி தெர்லயே. நல்ல கலரா பண்ணையாரு வீட்டுப் பையன்மாதிரிலா இருக்கான். அதான் கேட்டேன்” என்றான் இளைஞர்களிலொருவன். சிறுவன் உடனே, “இவன் ஆத்தாக்காரி பண்ணையாரு வீட்ல வேலப் பாத்துருப்பா! அதான் தாயொளி மவன் இந்தக் கலருல இருக்கான்.” என்று சொன்னதும்.. இளைஞர்கள் இருவரும் எக்காளமாய் சிரித்தபடி, சாரத்தை தூக்கிக் கட்டிக்கொண்டு மாதவனை நோக்கி சீறும் பாம்பைப்போல் சென்றார்கள். அண்ணாந்துப் பார்த்துக் கொண்டிருந்த மாதவன் அவர்களின் காலடிச் சத்தம்கேட்டுத் திரும்பிப் பார்த்ததும், இளைஞர்களில் ஒருவன், “தேவடியாயுள்ள! ஒங்கப்பன பேரு சொல்லிக் கூப்புடாம. ஐயா சாமின்னு கூப்படனும்மோ நாங்க” என்று அடிவயிற்றில் ஒரு மிதி மிதித்தான். மாதவன் மரத்தடியில் மல்லாக்க விழுந்து ‘அம்மா’வென அலறி மண்ணில் உருண்டான். இன்னொருவன் அவனின் உச்சிமுடியைப் பிடித்திழுத்து, “ங்கொத்தாளப் போட்டு ஓக்க! கொஞ்சம் படிச்சதுக்கே.. எங்கள எதுத்துக் கேள்விக் கேக்குறன்னா. நீயெல்லாம் நெறையப் படிச்சா எங்களுக்கு முன்ன நெஞ்ச நிமுத்துக்கிட்டு அலைவ. ஒன்னல்லாம் உசுரோடவே உடக்கூடாது. ஒன்னிய வெளுக்குற வெளுப்புல இனும ஓன் ஊர்லருந்து ஒரு பய எங்கக்கிட்ட வாலாட்டக்கூடாது”- நெல்லிமர மூட்டில் தள்ளி நெஞ்சிலே மிதித்தான். மாதவன் தலை வெட்டிய சேவலாய் தரையில் துடிதுடித்தான். “சாவுல சேரி நாய” என மாதவன் முகத்திலொரு குத்துவிட்டு, முகத்தில் எச்சில்கூட்டி காறித் துப்பினான் சிறுவன். வயிற்றிலடிப்பட்ட சினைமாடாய் வலியில் கதறிய மாதவனின் கதறலைக் கேட்டு கிணற்றிலிருந்து காட்டுப் புறாக்கள் பயந்து சிறகடித்தோடின. குதித்தாடிய அணில்கள் குலை நடுங்கிப்போய் உச்சிக்கொப்பில் பம்மிக்கொண்டன.
வாழைக்குப் பாய்ந்த வாய்க்கால் தண்ணீரில் கால் கழுவிவிட்டு வரப்பில் நடந்து வந்துகொண்டிருந்த தீனைப் பார்த்த சிறுவன், “மச்சான், ஆள் வருது. வாங்க போயிரலாம்” என்றதும் இளைஞர்கள் சிறுவனை புல்லட் இருக்கையின் நடுவில் உட்கார வைத்துக்கொண்டு புயல் வேகத்தில் புறப்பட்டுச் சென்றனர். காடதிரக் கிளம்பிச் சென்ற புல்லட்டும் கிணற்றுக்கு மேல் வட்டமடித்தக் காட்டுப்புறாக்கள் கூட்டமும் தீனுக்கு அச்சத்தை ஏற்படுத்தின. கிணற்றைப் பார்த்து வரப்பில் விழுந்தடித்து ஓடிவந்தான். நெல்லி மரத்தடியில் சுள்ளிபோல நொடிந்து கிடந்த மாதவனைக் கண்டதும், “மாப்ள, என்னாச்சி? யாருல ஒன்ன இப்படிப் பண்ணது? சொல்லு மாப்ள.. கண்ணத் தொறந்து என்னப் பாரு மாப்ள! “ என்று கண்ணியில் மாட்டிய கருவாலியாய் பதறினான். மாதவனின் உடல் நடு நடுங்கியது. கீழுதடு கிழிந்து தொங்கியது; முகமெல்லாம் மண்ணும் கல்லும் ஒட்டியும் குத்தியுமிருந்தது; அதற்குமேல் ரத்தமும் கண்ணீரும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
ஓடிப்போய் தொட்டியில் தண்ணீர் கோரி வந்து முகத்தைக் கழுவிய தீனிடம் ‘தண்ணி தண்ணி’யென்று சைகையில் கேட்டான் மாதவன். தீன் தன் கைக்குட்டையை எடுத்து முகத்திலும் உதட்டிலும் வழிந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டு மாதவனை மடியில் போட்டுக்கொண்டு கண்ணீர் வடித்தபடி வாயில் தண்ணீர் ஊற்றினான். சிறிது நேரங்கழித்து நடுங்கிய மாதவனின் உடல் அலையில்லா நடுக்கடலைப்போல் அமைதியானது. மூச்சு வாங்குதல் ஓரளவு சீரானது. பேச்சு மட்டும் கொஞ்சம் குழறியது. மெதுவாக கைகளைத் தரையில் ஊன்றி எழ முயற்சித்தவனைத் தாங்கிப் பிடித்து நெல்லி மரத்தடியில் சாய்த்து வைத்துவிட்டு, “எதுக்கு மாப்ள ஒன்ன அடிச்சானுவ? எந்த ஊருல இவனுவளுக்கு? சொல்லு மாப்ள “ என்றான் தீன்.
மாதவன் உதட்டில் வழிந்த இரத்தத்தை விரல்களால் ஒத்தியெடுத்து மரத்து மூட்டில் தேய்த்துவிட்டு, “போன வாரம் நாயித்துக்கெழம சாயந்தரம் ஒரு மூணு மூன்றமணியிருக்கும். நீ தந்த ‘கருக்கு’ நாவலைப் படிச்சிட்டுருக்கும் போது.. கதவத் தட்டுறச் சத்தம் கேட்டது. நா போயி கதவத் தொறந்ததும் இப்பும் என்ன அடிச்சிட்டு புல்லட்டுல ஒரு சின்னப் பையன் போனாம் பாத்தீயா?“ என்றான் தீனிடம் மாதவன்.
“ஆமா! ரெண்டுபேருக்கு எடயில மஞ்சக்கலரு டீ சட்டுப் போட்டுக்கிட்டு ஒரு சின்னப்பையன் உக்காந்துருந்தான்.”
“அந்தப் பையந்தான் மாப்ள அன்னைக்கி எங்க வீட்டு வாசலுல நின்னுக்கிட்டுருந்தான். அவங்கிட்ட என்ன தம்பி யாரு வேணும்னு நா கேட்டதுக்கு, அவன் எடுத்த எடுப்பிலேயே ‘முருகேசன் இருக்குறானா?’ன்னு கேட்டதும், எனக்கு மண்டச் சூடாயிட்டு. வந்தக் கோவத்துக்கு சென்னி வாக்குல ஒண்ணு வைக்கணும் போல இருந்தது. கோவத்தக் கட்டுப்படுத்திக்கிட்டு, ஒருவேள அவனுக்குத் தெரிஞ்சப் பயலத் தேடி தெரு கிரு மாறி வந்துருப்பான்னு மறுபடியும் ‘எந்த முருகேசன்’ன்னு கேட்டன். அதுக்கு அவன் ‘தண்ணிப் பாப்பாம்லா முருகேசன்’ன்னு எங்கப்பா பேரச் சொல்லிட்டு வாசல்ல திமுரா நின்னுக்கிட்டுருந்தான். நான் உடனே ‘தம்பி, ஒனக்கு வயசு என்ன? எங்க அப்பாக்கு வயசு என்ன? வயசுல பெரியவங்கள, ஒங்கப்பாவ, சொந்தக்காரங்கள எல்லாத்தையும் இப்படித்தான் மரியாதயில்லாமப் பேசுவீயோ? பள்ளிக்கூடம் போறீயா இல்லியா?’ன்னு நான் கேட்ட கேள்விக்குப் பதிலேதும் சொல்லாம முறைத்தபடி படியைவிட்டு கீழிறங்கி பைக்கிலேறி உட்கார்ந்துகிட்டு, ‘என்னைக்காவது ஒருநாளு தனியா மாட்டுவ. அன்னைக்கி ஒன்னப் பாத்துக்குறேன்’ன்னு முனங்கினான். அதுக்கு நான் “பாக்குறன்னைக்குப் பாத்துக்குலாம்! இப்பும் கெளம்பு’ன்னு சத்தமா சொன்னேன். என் சத்ததக் கேட்டுத் திண்ணையல ஒக்காந்துப் பேசிக்கொண்டிருந்த சித்தப்பா, மாமா எல்லாரும் ஓடிவந்ததும் பைக்கயெடுத்துட்டு பறந்துட்டான் தீன் பாய்” என்று தரையில் ஒரு கையை ஊன்றி எழ முயற்சி செய்த மாதவனை கை கொடுத்து தூக்கிவிட்டு, “பக்கத்தூருதான..? ஆளத் தெரியும்ல.. வா, போயிட்டு போலீசுக்கிட்டச் சொல்லி சொட்டய மொறிக்கச் சொல்லலாம்” என்றான் தீன்.
“போலீசுலாம் வேண்டாம் பாய். அவுங்க சாதி என்னன்னு தெரிஞ்சதும், மீதி என்ன நடந்துச்சுன்னு கேக்க மாட்டாங்க. அடிச்சவன அசால்ட்டா உட்டுட்டு, அடிவாங்குவனங்கிட்ட ‘அவனுவளப் பத்திதான் ஒனக்கு நல்லாத் தெரியும்ல? அப்பறமெதுக்கு அவனுவ இருக்குற எடத்துக்குப் போற? படிச்சப் பையந்தான.. கொஞ்சம் ஒதுங்கிப்போனா இப்படி நடந்துருக்குமா?’ன்னு ரொம்ப அக்கரையாவும் அன்பாவும் அடங்கிப் போவச் சொல்வாங்க. இவுங்க சொல்றமாதிரி ஒதுங்கி ஒதுங்கிப் போனா, நா போவ வேண்டிய எடத்து என்னக்கிப் போயிச் சேர்றது?” மாதவன் கண்களில் மழைக்காலங்களில் விரிசலுற்ற மண்சுவற்றில் தண்ணீர் கசிவது போல கண்ணீர் கசிந்தது.
“அழாத மாப்ள! எனக்கும் அழுகையா வருது. இவனுவலாம் திருந்தவே மாட்டானுவளாடா?” கலங்கிய கண்களை கைகளால் துடைத்தபடி கேட்டான் தீன்.
“தீன் பாய், இவன் எங்கப்பாவ பேர் சொல்லி கூப்புடுறான். இவன் அப்பாவ இன்னொருத்தன் பேர் சொல்லி கூப்புடுறான். ஆனாலும், நம்ம அப்பாவ ஒருத்தன் பேர் சொல்லி கூப்புடுறான்னு இவனுவளுக்குத் துளிகூட கோவம் வரமாட்டங்கிது. ஏந் தெரியுமா?”
“ஏன்? “
“ஏன்னா.. நம்மள ஒருத்தன் மேலருந்து மிதிக்கிறானேங்கிற வலிய விட, நம்ம காலென்ன தரையிலா இருக்கு.. இன்னோருத்தன் தலையிலதான இருக்குங்கிற சந்தோசந்தான்! இவனுவளுக்கு நம்மலாம் ஒண்ணா வாழ்ந்த வரலாறும் தெரியாது. நம்மள வகவகயாய்ப் பிரிச்சி நம்ம ஒத்துமய ஒடச்சவனோட வரலாறும் தெரியாது. எந்த வரலாறும் தெரியாத இவனுவங்கிட்ட என்ன தாலியப் பேசுறது…? ஆனா, ஒண்ணு மட்டும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ! என் பாட்டன், தாத்தன், எங்கப்பன் எல்லாத்தையும் ‘பேர்’ சொல்லி கூப்பிட்டவனையெல்லாம், கண்டிப்பா ஒருநாளு என்ன ‘சார்’ன்னு கூப்பிட வைக்காம, நா சாவமாட்டேன் பாய்! “ என்று மாதவன் சொன்னதும், தகப்பன் தன் பிள்ளையைத் தோளுக்கு மேல் தூக்கிக் கொஞ்சுவதுபோல் மகிழ்ச்சியில் தன் நண்பன் மாதவனைத் தூக்கி ஒரு உலுப்பு உலுக்கி, “சூப்பர்ல மாப்ள. ஸாரி மாப்ள சார்!” என்றான் தீன். மாதவன் கிழிந்த உதட்டில் கனிந்த கள்ளிப்பழம்போல் சிரித்தான். உச்சானிக் கொப்பில் பம்மியிருந்த அணில்கள் உற்சாகமாய் தாவி விளையாட ஆரம்பித்தன. பொந்துகளுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் ஓடி ஒளிந்தவைகள் ஒவ்வொன்றாய் வெளிவரத் தொடங்கின. வானத்தில் வட்டமடித்தப் புறாக்கள் வானூர்தி தரையிரங்குவது போல் கிணற்றுக்குளிறங்கி கூடடைந்தன.
சரிந்து கிடந்த பைக்கினைத் தூக்கி நிமிர்த்தி ஸ்டார்ட் செய்து, “பாத்து உக்காரு மாப்ள!” தீன் சொன்னான். விழுந்து கிடந்த புத்தகங்களை தூசி தட்டி எடுத்துக்கொண்டு பைக்கில் மெல்ல ஏறியமர்ந்தான் மாதவன். கிணற்றுப் பாதையைக் கடந்து தார்ரோட்டினை அடைந்ததும், ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்’ புத்தகத்தினை புரட்டத் தொடங்கினான். ‘உங்கள் கைகளில் எனக்கெதிரான ஆயுதங்கள்; மரணத்தின் கைகளில் எனக்கான கருணை.’ என்ற வரிகளைப் படித்துவிட்டு, பின்னட்டையில் சிரித்தபடியிருந்த தாமிராவை அழுதபடி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, செவிலித்தாய் ஈன்ற தாயிடம் கிடத்தியதும் மார்புக் காம்புகளைக் கவ்விக்கொள்ளும் பிறந்த குழந்தையைப் போல, பின்னாலிருந்து கட்டிப்பிடித்து தீனின் முதுகில் சாய்ந்துகொண்டான் மாதவன். இடது கையால் அடிவயிற்றில் இறுகப் பற்றிய மாதவனின் இரு கைகளைப் பற்றிக்கொண்டும், வலது கையினால் வேகம் குறைத்து பைக்கை மெதுவாக ஓட்டினான் தீன்.
அனல் காற்று தணிந்து அந்திக் காற்று வீசத்தொடங்கியது.