
டாலியின் மீசை
என் அறையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது
முன்பு ஒருநாள் இரவில் வந்து சென்ற
மையிருட்டுப் பூனையின் கவிச்சை
அதற்கு ஒரு ஜோடி மீசைகள் இருந்தன
டாலியின் மீசையைப் போலவே.
****
அழிக்கப்பட்ட ஏரி
தன்னுள் மிச்சம் வைத்திருந்தது
இருபதாண்டுகள் பழமையான தூண்டிலை.
அழிபாடுகளின் நினைவடுக்கில்
இன்னும் அத்தூண்டில்
காலத்தைத் தக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறது
இருபதாண்டுகள் சிறுவனாக இருந்தவனின்
ஆசை மீனுக்காக.
****
அமைதியாக மெல்ல நடந்து கடந்து செல்கிறது
பகல் நேரத்தின் வெய்யில்
அமைதியாகக் கரைந்து ஒழுகிக் கொண்டிருந்தது
அன்றைய நாளின் பொழுதுகள்
ஒரு சீற்றம் போல எழுந்து கொண்டிருந்தது
வானிலிருந்து
இருளின் பேரலை.
*****