
விரலிடை மணற்துகள்
தத்தித் தாவி
தவழ்ந்த பொழுதுகளில்
திக்கித் திருத்தி
பேசிய பச்சிளம் பருவத்தில்
விளையாடச் சென்ற
விரிந்த வயல் நிலத்தில்
சிக்கியும் சிக்காமலும்
நழுவியது நீராய்
விரலிடை மணற்துகள்
தொலைவில் இருக்கும் கனவுகளையும்
எஞ்சி இருக்கும் நினைவுகளையும்
நினைத்துக்கொண்டே
கடத்தியதில் உணரவில்லை
விரலிடையில் நழுவியது
மணற்துகள்கள் மட்டுமல்ல
மணித்துளிகளும் தானென்று
கட்டிப்பிடித்து உறங்கினாலும்
களவுபோய் விடுகின்றன
இந்த நொடிகள்
நொடிக்கு நொடி
சேர்த்து வைத்த
இன்பங்கள் மட்டுமே
மனதில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன
விரலிடையில் சில
ஈர மணற்துகள்களாய்.
****
உள்ளிழுக்கப்படுகிறேன்
ஊறிய உச்சந்தலை
சொட்டச் சொட்ட
கரைகிறேன்
வருவதும் போவதுமாய்
அள்ளிக்கொள்கின்றன அலைகள்
நெஞ்சத்தில் தேங்கிய
கிளர்ச்சியின் இழுப்பில் உள்ளிழுக்கப்படுகிறேன்
தூரத்தில் ஒரு குரல் மட்டும் தடுத்துக்கொண்டே இருக்கிறது
யாருமற்ற வேளையில்
தடுப்பது யாரோ
நிலவொளி காய்ச்சலால்
இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சமென
கொதித்தபடி நான்
கொந்தளித்தபடி அலைகள்
அமைதியிழந்தது ஆழ்கடல்
பேரமைதியுடன் என்னை கரைக்குத்
தள்ளிய பின்னரும்.
*******