இணைய இதழ்இணைய இதழ் 90கவிதைகள்

சுபி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அதற்கென்றே ஒதுக்கப்பட்ட நாளின் சோம்பலில்
புகார்ப்பெட்டிகள்
திசைமாறி உருக்குலைந்த மேகமென‌
நகர்ந்து போகின்றன
ஆடை விழுந்த தேநீரில்
அதை மட்டும் தூக்கி எறிந்துவிட்டு
ருசிப்பதாக
யதார்த்தத்தின் முதுகில் ஏறிப்
பயணிக்கிறது அந்நாள்
வரிசையில் நிற்கும் அடுத்தடுத்த
புகார்க் காகிதங்களின் ஜொலிப்புகள்
முன் முதல் ஒன்று தேங்கியே கிடக்கிறது‌ முடை நாற்றத்தோடு
எதற்குமே நேரமில்லை
என்றான பிறகு ஒரு காயத்திற்கும்
இன்னொரு காயத்திற்கும்
குறைந்தபட்சம் இடைவெளியேனும்
இருக்க வேண்டும்.

****

பேரிடர் காலத்து மழையில்
அடித்துச் செல்பவற்றை சலனமற்றுப்
பார்த்துக் கொண்டிருந்த சிறுமி
தனது காகிதக் கப்பலும் போவதைக்
கண்ணுற்று விசும்புகிறாள்
புயல் கரை கடந்த காலையில்
தெருவெங்கும் கப்பலைத் தேடியழுகிறாள்‌
இரண்டு அடி வைத்து இழுத்துப் போகும் அம்மாவிடம்
என் கப்பலில்
எல்லாரும் ஏறிக்கொள்ளலாம்… ம்மா என்றவாறே
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வருகிறாள் தெருவை
வெள்ளத்தில் அடித்துச்சென்ற
பொருட்கள் கண்ணீர் சிந்தியபடி வேண்டுகின்றன
அவள் கப்பல் எப்படியாவது
கிடைத்துவிட வேண்டுமென்று.

****

எந்தக் கிளைகளை
வெட்டினாலும் எந்தச் சந்திலாவது
துளிர் விட இடமளிக்கிறது மரம்
பருவ மாறுதல்களைக் கையில்
ஏந்தியபடி பழுப்போ, பசுமையோ
வண்ணம் மாறி மாறிப் பிறப்பெடுக்கச்
சலிப்பதில்லை இலைகள்
நிலத்தடி நீரைச் சேமித்து
நனைந்து தன்னைக் காப்பாற்றிக்
கொள்கிறது தாக்குப்பிடிக்கும்
சூட்சமம் அறிந்த வேர்
இட்டுக்கொண்ட முகமூடிகள்
மரப்பட்டைகளாய் காய்ந்தபடி
எப்போதேனும் உரிந்து பிளந்து
விழுகின்றன தவிர்க்கவியலாது
மாதங்களுக்குள் அடைபடாது
தினசரி கிழிபடும் நாட்காட்டியின் தாள்களுக்கு
கிழியும் வழமையேந்திக் கேவலாகும்
அந்தக் கண்களைச்
சந்திக்கும் துணிவில்லை
இன்றென்பது இலையுதிர் காலம்.

****

நிலையான பிம்பங்களின்
சித்திரங்கள் அழுத்தங்களாலானவை
அதை நான் துவக்கி இருந்தாலும்
நீங்கள் துவக்கி இருந்தாலும்
அவர்கள் துவக்கி இருந்தாலும்
அழித்தழித்து மீண்டும் உருப்பெறும்
அவை அறைகூவல் விடுத்த வண்ணமிருக்கின்றன
நமது பார்வைகளுக்கு மிக அருகே
ஓர் அப்பழுக்கற்ற சித்திரத்தை
நான் எதிர்பார்க்கிற சித்திரத்தை
நீங்கள் எதிர்பார்க்கிற சித்திரத்தை
அவர்கள் எதிர்பார்க்கிற சித்திரத்தை
உருவாக்க இயலாத தோல்வியில்
நிதர்சனத் தூரிகைகள் ஆனதும், அற்றதுமான
தொங்கலாட்டங்களில்
எடையுற்றதாக மாறுகையில்
சிதறுகின்றன செங்குழம்புகளாக.

****

யாருமறியாது
எந்தத் தடயங்களுமற்று
விளக்கங்களுக்குச் செவி மடுக்காது
நின்று நிதானித்து குளிர்காய்ந்தபடி
மேலெழுந்து கேள்வி எழுப்பாவண்ணம்
சொற்களால் கூறிட்டுத் துண்டு துண்டாக்கி
ஒரு மர்மக்கொலை நிகழ்த்திவிட்டு
மீண்டும் உயிர்ப்பித்து எதுவுமே நடவாததாக
திண்ணமாய் வாழ
ஆணையிட வேண்டும்
முன்னொரு நாளில் யாரோ யாரையோ செய்தது போல.

****

எத்தனையோ இருந்தது
பகிர்வதற்கான பொடிச் சங்கதிகள்
சொற்களைத் தேடி அலைந்து
சலிப்புற்றபோது
மௌனம் தனது கோப்பையில்
நிரப்பியிருந்தது நமக்கான சொல்லை
எக்கணமும் நிரப்பித் ததும்பி
விழத் தயாராகும் அச்சொல்லைக்
காப்பதன் வலியொரு பேரின்பம்
நம்மிடையே ஓர் அணைப்பாக
ஓர் அண்மையாக
ஒரு முத்தமாக
ஒரு ஸ்பரிசமாக
எல்லாமுமாக இருந்தது
ஒரு மௌனம்.

******

subisenthur82@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button