
அநேகமாய் வாழ்கையில் மீண்டும் அவளைச் சந்திப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. நிறைய கவலை ரேகைகளை கண்களில் பார்க்க முடித்தது. கருத்திருந்தாள். படிமங்கள் தொலைத்த கவிதை ஒன்று தனியே அலைவது மாதிரித் தோன்றியது.
இந்த இருபது வருடங்களில் தினமும் எதோ ஒரு நிமிடம் அவளை ஞாபகப்படுத்தாமல் இருந்ததில்லை. மற்றவர்களுக்கு உதவி செய்கிற மனிதர்கள், தெற்றுபல் சிரிப்பு, காட்டன் சாரியில் எளிமை, நிறுத்தாமல் பேசுகிற இயல்பு, அருவியென இசைக்கிற தமிழ், இப்படி எதோ ஒரு நிகழ்வு என்னுடன் அவளை வசிக்கச் செய்தது.
எங்கேயாவது பார்க்க முடியாத தூரத்தில் அரண்மனை வீட்டில் ராணி மாதிரி வாழ்ந்து கொண்டிருப்பாள் என நினைத்திருத்த நம்பிக்கையை வேரோடு பெயர்த்தெடுத்து இப்படி ஹௌசிங் போர்டு குடியிருப்பில் சந்திக்க காலம் ஏற்பாடு செய்திருந்தது.
தொலைவிலேயே பார்த்து விட்டேன். அவளாக இருக்கக் கூடாதென எல்லா கடவுளிடமும் வேண்டி கொண்டேன். எப்போதும் போல் கடவுள் ஏமாற்றி விட்டார்.
அவள் என்னைப் பார்க்கவில்லை என நினைக்கிறேன். முடி கொட்டிப் போன முன் மண்டையும் சற்றே அதிகமாக எட்டிப் பார்க்கிற தொந்தியையும் மீறி அடையாளம் கண்டு கொள்ள சில நிமிடங்கள் தேவைப்படலாம். இந்த நிலையில் என்னைப் பார்த்தால் ஒரு வேளை என்னைப் போலவே அவளும் வருத்தப்படலாம் என்பதால் சட்டென அவளைக் கடந்து விட்டேன்.
நினைவுகளின் ஆற்றல். இமைக்கிற நொடியில் இருபது வருடங்களை பின்னிழுத்துக் கொண்டது.
எப்போதும் புன்னகையையும் உற்சாகத்தையும் முகத்தில் அணிந்து வலம் வருவாள். அமைதியான சிநேகிக்கத் தூண்டுகிற அழகு. வார்த்தைகளில் நிதானம் கோர்த்து யாரும் காயம்பட்டு விடக் கூடாது என மிக ஜாக்கிரதையாய் பேசுவாள்.
அப்படித்தான் அந்த கவியரங்கில் அவளுக்கு முதல் இடம், எனக்கு இரண்டாமிடம் என்று அறிவித்த போது முதலில் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. சிநேகமாய் சிரித்து கொண்டே அருகில் வந்த அவள், “என்னை ஞாபகம் இருக்கா?” என்றாள்.
சத்தியமாக இல்லை என்றாலும் கொஞ்சம் யோசிக்கிற மாதிரி பாவனை செய்தேன்.
“சரி சரி ரொம்ப யோசிக்காதிங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு டைம் நான் பஸ்சுல இருந்து கீழ விழப் போனப்ப நீங்கதான் காப்பாத்துனீங்க”
இப்போது நினைவிற்கு வந்தது. “ஓ. முகம் மறந்து போச்சு” என்றேன்.
“அது பரவயில்லிங்க பர்ஸ்ட் இயர்னு எனக்கு பரிசு கொடுத்திருப்பாங்க உங்க கவிதைதான் நல்லா இருந்தது” என நட்பு கரம் நீட்டினாள்.
தொடர்ந்து கல்லூரி சார்பாக இருவரும் கலந்து கொண்ட தமிழ் மன்ற போட்டிகளில் எல்லாம் விடாமல் கோப்பைகள் வாங்கி குவித்தோம்.
இப்போது நினைவுக்குள் ஏனோ அவளோடு உரையாடுவது போன்றே தோன்றியது!
ஒருநாள் எதிர்பாராமல் நீயாகவே உன் வீட்டிற்கு கூட்டி கொண்டு போனாய். வசதியான வீடு. உனக்கென தனி அறை. வேலைகாரர்கள். மிடில் கிளாசில் பிறந்த எனக்கு இது பிரமிப்பாக இருந்தது.
அப்பா பெரிய பிசினஸ் மாக்னெட். உன் நல்ல மனது எங்கே இருந்து வந்தது என்று அவரைப் பார்த்தவுடன் புரிந்தது. வித்தியாசம் இல்லாமல் பழகினார். தமிழை முதன்மை பாடமாக எடுத்ததற்கு பாராட்டுவார்.
அவருக்குத் தெரிந்து இருக்க நியாயமில்லை. என் பிளஸ் டூ மார்க்கிற்கு வேறெந்த குரூப்பிலும் இடம் கிடைதிருக்காது என்று. ஆனால், நீ முதல் மார்க் எடுத்திருந்தும் தமிழ்தான்வேண்டும் என்று விரும்பி சேர்த்திருந்தாய்.
இலக்கியத்தில் சாதிக்க வேண்டும் என்பாய். கவிதையோடு நின்று இருந்த எனக்கு வண்ணதாசனையும் பாலகுமாரனையும் அறிமுகப்படுத்தியது நீதான். இலக்கியங்களை எல்லா வடிவங்களிலும் ரசிக்கக் கற்றுத் தந்தாய்.
என் வீட்டுக்கு நீயாகவே ஒரு நாள் வந்து நின்றாய். எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இன்னும் நினைவு இருக்கிறது. என் அப்பா உன்னை யாரென்று கேட்டபோது நான் திரு திருவென முழித்தது. உன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது என் அப்பா அதை பெரிதாக ரசிக்கவில்லை. அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.
“இந்த காலத்து பொண்ணுங்க எங்க வீட்டுக்கு அடங்கறாங்க.. படிக்கறத மட்டும் பாரும்மா.” என்றார் நாட்டமை சரத்குமார் மாதிரி. ஆனால், அம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடித்துப் போனது.
“அந்த பொண்ணு தேவதைடா.. உன் சிநேகிதியா? அவ எந்த வீட்டுக்கு போக கொடுத்து வச்சிருக்கோ.. நல்லா இருக்கனும்” என்று சொல்லி சொல்லி மாய்ந்து போனாள். என் அப்பாவின் அலட்சியம் உன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது எனக்கு ஆச்சர்யம்.
“நம்ம நல்லதுக்குதான் சொல்லுவாங்க. நம்ம கெடனும்னு பெத்தவங்க நெனைக்க மாட்டங்க. உன் பிரெண்ட்ங்கற அக்கறையில சொல்லி இருக்கலாம்” என்று எளிமையாய் விளக்கம் கொடுத்தாய். உன் பிறந்த நாளுக்கு வகுப்பில் அனைவரையும் அழைத்து இருந்தாய். எல்லாரும் போன பின்பும் உன் அப்பா வரும் வரை என்னை இருக்கச் சொன்னாய்.
அன்று முழுவதும் நாம் இருவர் மட்டும் நிறைய பேசினோம். முதன் முதலில் என் கைகளை நம்பிகையுடன் அழுத்தமாய் பற்றிக் கொண்டாய். மனதிற்குள் மெதுவாய் கொஞ்சம் பூக்கள் பூத்தது.
சரியாக ஒரு வாரம் கழித்து என் அக்காவை பெண் பார்க்க வருகிறார்கள் என்று ன்ற உன்னிடம் சொன்ன போது யோசிக்காமல் கையில் காதில் கழுத்தில் இருந்ததை உடனே கழற்றிக் கொடுத்தாய். வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் நீ கேட்கவில்லை. அதுதான் நம் கடைசி சந்திப்பு.
அன்று இரவு நான் டெல்லி தமிழ் சங்கத்திற்கு கல்லூரியின் சார்பாக கிளம்ப வேண்டி இருந்தது. அதுவும் நீ எனக்காய் அந்த வாய்பை விட்டுக் கொடுத்ததால்தான் என்று பிறகு தெரிந்து கொண்டேன். வழி அனுப்ப நீ வரவில்லை. எந்த தகவலுமில்லை. ஒரு வாரம் கழித்து பரிசு எதுவம் இல்லாமல் வெறும் கையோடு வந்த போதுதான் புரிந்தது காலம் நம் வாழ்க்கையை புரட்டி போட்டு இருந்தது.
உன் அப்பாவின் விபத்து. உன்னைச் சந்திக்க பல முறை முயற்சி செய்தேன். உன் வீட்டிற்குப் போனேன்.. ஆனால், அங்கு யாருமே இல்லை. உன்னைத் தேடி தேடி சோர்ந்து போனேன். என்னைத் தேடி நீயும் வரவில்லை படிப்பு முடித்து வாழ்க்கை மாறிப்போனது.
நினைவில் அவளோடு உரையாடியபடியே வீடு வந்து சேர்த்தேன்.
“என்ன ஆந்திரா டூட்டியா?” என்றாள் வெளியிலேயே நின்றிருந்த என் பொண்டாட்டி.
“ஆமா. முதலாளி முதல்ல ஒரு நாள்னாரு. பார்ட்டி மூணு நாள் இழுத்துருச்சு. தூக்கமே இல்ல” என்றேன் சலிப்பாய்.
“சரி, குளிச்சுட்டு வா. கொழம்பு இருக்கு. ஒரு வாய் தின்னுட்டு படுத்து தூங்கு” என்றாள்.
எதிர் வீட்டுக் கதவு திறந்து இருந்தது. ”புதுசா ஆள் குடிவந்துருக்குது” என்றாள்.
‘சாப்பிட அமர்ந்தேன். “எதிர் வீட்டு அக்கா ரொம்ப நல்ல மாதிரி. அவங்க கதையக் கேட்டா ரொம்ப பாவமா இருக்குங்க” என்றாள் மனைவி.
“ம் ம் என்றேன் அசுவாரஸ்யமாய்” அவள் நிறுத்தவில்லை. முடிவு செய்து விட்டாள். இனி வேறு வழி இல்லை. கதை கேட்டுத்தான் ஆக வேண்டும்.
“ரொம்ப வசதியா வாழ்ந்தவங்க அந்த அக்கா. பாவம் அப்பா ஒரு ஆக்சிடெண்ட்ல செத்துட்டாராம். அப்பா கூட வியாபாரம் பண்ணவங்க ஏமாத்தி நஷ்டம்னு சொல்லி கடனுக்கு எல்லாத்தயும் இருந்த வீட்டையும் கூட எழுதி வாங்கிட்டாங்க, இந்த அக்காக்குன்னு கேக்க யாருமே இல்ல”.
“வேற வழி இல்லாம இவுங்க அவங்களோட அத்தை கிராமத்துக்கு போனா அவங்களோட குடிகார பையன் இவங்களை கல்யாணம் பண்ணிட்டான். தினமும் குடி உதை”
”நானா இருந்தா இழுத்துவெச்சு ரெண்டு சாத்து சாத்தி இருப்பேன். அவங்க பாவம் பேசாம எல்லாத்தையும் பொறுத்து போய் இருக்காங்க” என்றாள்.
கேள்விகளுக்கு விடை கிடைத்தவுடன் மனதின் ரணங்களில் இருந்து ரத்தம் வடியத் தொடங்கியது. மௌனமாய் அழுக ஆரம்பித்தேன்.
“நல்ல வேளை சாமி இருக்குது. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கொரோனால அந்த ராட்சசன் போய் சேந்துட்டான். இவங்க இப்ப வவுத்து பொழப்புக்கு டீச்சர் வேலை செயறாங்க. ரொம்ப பாவம்” என்றாள்.
“குழந்தைங்க இல்லியா?”
“ஏன் இல்லாம. ஒரு பையன். நல்லா படிக்க வைப்பங்களாம். அதுக்கு போதாத காலம் இங்க வந்து கஷ்டப்படுது”
“நேத்துக்கு நம்ம வூட்டுக்கு வந்தது. நம்ம கல்யாண போட்டோவ பாத்துட்டு நீங்க கவிதை எழுதுவீங்களான்னு கேட்டுச்சு. அப்படினா என்னன்னு கேட்டேன். பதிலே சொல்லல. நல்லா பேசிகிட்டு இருந்த அக்கா சட்டுன்னு கெளம்பி போய்டுச்சு”
“அதெல்லாம் கூட பரவயில்லைங்க. ஒரு சிநேதிதக்காரனை நம்பி கைமாத்தா இருபது பவுன் நகையக் கொடுத்து இருக்கு. கேக்க போனப்ப அந்த பேமாளி வீட்ல இல்லை. அவன் அப்பன்காரன் நீ யாருன்னு சொல்லி விரட்டி அடிச்சுட்டானாம். கட்டையில போறவன் நல்லா இருப்பானா?” என்ற போது முகம் சிவந்து விட்டது
“சரி சரி வண்டி ஒட்டி முடியாம இருப்பிங்க. கொஞ்ச நேரம் படுத்துக்குங்க”
என் தூக்கம் போய் விட்டது. ‘அட அப்பா! கடன்காரா, உன்னிடம் கேட்டேனேடா. அந்த பொண்ணு வந்து வாங்கிட்டு போய்டுச்சுன்னு கூசாம பொய் சொல்லி அவங்க அப்பனை கொன்னுட்ட. அதான் கடைசி காலத்துல கை கால் விளங்காம கழுவறதுக்கு கூட நாதி இல்லாம நாறிப்போய் அரசாங்க ஆஸ்பத்திரியில செத்துப் போன. ஒரு வேளை நீ செஞ்ச பாவத்துலதான் படிச்ச தமிழுக்கு வேலையே கிடைக்காம நாய் மாதிரி சுத்தி கடைசியில கால் டாக்ஸி டிரைவரா சுத்தறேனோ’- என்னவோ யோசித்துக் கொண்டிருக்கையில் முதலாளியிடம் இருந்து போன். அவசரமாய் எழுந்தேன்.
அடுத்த சவாரி. ஊட்டி. மூன்று நாட்கள் விடாமல் வண்டி ஒட்டியதில் அடித்துப் போட்ட மாதிரி இருந்தது. விடியற்காலை 6 மணிக்கு வீட்டிற்கு ந்தேன். எப்படியாவது அவளிடம் பேசி உண்மையைச் சொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டேன். எதிர் வீடு பூட்டி இருந்தது.
“என்னடி வீடு பூட்டி இருக்கு. ஆள் வந்தாங்கன்னு சொன்ன”
“என்ன வந்ததும் வராததுமா எதிர் வீட்டை நோட்டம் போடறீங்க” என்றாள்.
“அதுவா அன்னிக்கு ரொம்ப கஷ்டபட்றங்கான்னு சொன்னியே அதான்” என இழுத்தேன்.
“அதுக்கு. நீங்க என்ன பண்ண முடியும்?” என்று கேட்டவள், “அவங்க திடீர்னு சொல்லாம கொள்ளாம காலி பண்ணிட்டு போய்ட்டாங்க. ஒருவேளை நம்ம முஞ்சிய பாக்க புடிக்கலையோ என்னவோ” என்றாள்
அதுதான் உண்மையாய் இருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றவில்லை.
********
பாதி வரை நாம் கதைப் படிக்கிறோமா அல்லது கவிதை வாசிக்கிறோமா எனும் ஐயம் கொள்ளுமளவிற்கு எழுத்துகளில் அவ்வளவு ரசமும் ரசனைகளும் விரவிக் கிடந்தன. இறுதியில் மனதை அழுத்தும் ஒரு காதல் குறும்படம் போல அதன் தாக்கம் யாழ் தந்திகளை போல மீட்ட மீட்ட மெலிதாய் அதிர்ந்துக் கொண்டேயிருக்கிறது. கனத்தை லயித்தேன்.