பானஸ்வாடியிலிருந்து பானஸ்வாடிக்கு
வெள்ளியன்று பானஸ்வாடியில்
என் ரயில் பாண்டிச்சேரி செல்ல காத்திருந்தது
என் ரயிலேற இன்னொரு ரயிலில் போன கதையிது
புறப்படும் போது நல்லமழை
ஆகவே குடையோடு பயணப்பட்டேன்
நான் ஏறிய ரயில் சென்றது நின்றது நின்றது
என் ரயில் ஏறமுடியுமா என்றென்னை ஏங்கவிட்டது
ரயிலே ரயிலே வேகமாய் போவாயா
என் ரயில் பானஸ்வாடியில் எனக்காக காத்திருக்காது
அதன் வழியில் போய்விடும்
ரயில் சொன்னது
உன் ரயில் மட்டுமல்ல
உன் குடைக்காக
அங்கே மழையும்
ஒரு கைக்குழந்தையும் அம்மாவும்
காத்திருக்கின்றார்கள் பொறுமையாய் இரு
பானஸ்வாடியில் இறங்கும் போது மழையில்லை
என்னை இறக்கிவிட்ட ரயிலே
ஏமாற்றிவிட்டாய் தானே
என் ரயில் வர நேரம் இருந்தது
மழையும் வந்தது
வியான் ப்ரான்சிஸ் அம்மா தயக்கத்தோடு வந்து
“குழந்தை தலையில் துணியை போட்டால் தூக்கி எறிகிறான்
குடையை பகிரலாமா” என்றாள்
ரயில் எப்போதும் பொய் சொல்வதில்லை
***
வீட்டிலிருந்து கிளம்பும் போது
மழை அவ்வளவு வேகமாய் ஏன் வரவேண்டும்?
வியான் அம்மா சொன்னாள்
“நீங்கள் எங்களுக்காகவே
குடை கொண்டு வந்தீர்கள் போலும்
வியான் முக்காட்டை வெறுப்பவன்”
நான் நினைத்தேன்
ஆமாம்
உங்களுக்காகவே நான் கிளம்பும் போது
என் முற்றத்தில்
மழை பொழிந்தது போலும்
***
சனிக்கிழமையன்று
பாண்டிச்சேரியிலிருந்து பானஸ்வாடிக்கு ரயிலேறினேன்
மனம் நிறைய நினைவுகள்
வயிறு நிறைய திருமண வரவேற்பு விருந்துணவு
தளும்பிக் கொண்டிருந்தேன்
ரயில் ஆனந்தமாய் வரவேற்றது
நீ நாளை
புது பெங்களூரை காண்பாய்
என்றது ரயில்
ரயில்கள் பொயுரைப்பதில்லை
ஞாயிறு காலை பானஸ்வாடியிலிருந்து
வீட்டுக்கு வரும் வழியில்
உறங்கும் குழந்தையின் கேசம் கோதுவது போல
சாலையில் தூய்மை தேவதைகள்
பெருங்கொன்றை மலர்களை கோதி சேகரித்துக் கொண்டிருந்தார்கள்
எப்போது முரண்டு பிடித்து தாய்க்கு பின் ஒளியும் குழந்தை
கைவிரித்து ஓடிவந்து அணைத்துக் கொள்வதென
ஹோப் ஃபார்ம் சிக்னல் காத்திருக்கவே தேவையின்றி
செல் என்ற பச்சை நிறத்தோடு ஒளிர்ந்தது
ஆமாம் என்றுமே காணாத
பெங்களூர் அது
***
பானஸ்வாடி <–
–> வொயிட் ஃபிலிட்
வெள்ளி மாலை 2.30 மணித்துளிகள் நெருக்கடியில்
ஞாயிறு காலை 35 நிமிடம் உற்சாகத் துள்ளலில்
போனது ரயிலில்
வந்தது மூன்று சக்கரவாகனத்தில்
அன்று மழை
சாலை மதம்பிடித்த களிறு
இன்று இளம்வெயில்
சாலை குதூகலமான ஆட்டுக்குட்டி
***
வீடு வந்து சேர்ந்ததும்
வியான் ப்ரான்ஸிஸ் பிடி நேரம் பிடித்திருந்த குடைக்கம்பு
அந்த நினைவுகளை மீட்டி சிலிர்ந்துக் கொண்டது
அவன் கைக்குள்ளிருந்த அந்த ஐந்தே நிமிடங்கள்
அதன் பிறப்பின் அர்த்தம் புரிந்தது என்றது
அவன் என் கைபிடியை விலக்கி
தன் அம்மாவை மட்டும் பிடிக்க சொன்ன போது
எப்படி உணர்ந்தாய் என்று கேட்டேன்
உன்னை போலவே நானும் வியந்தேன்
மெல்ல நகைத்தேன்
பின்னர் மலழை பிடிக்கு ஏங்கி
உன்னை போலவே வருந்தினேன்
*பானஸ்வாடி – பெங்களூர் நகரில் இருக்கும் ஒரு ரயில் நிலையம்
*ஹோப் ஃபார்ம் – பெங்களூர் வெயிட் ஃபீல்ட் அருகே இருக்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாற்சாலை சந்திப்பு
******