
எலுமிச்சம் பழங்களுக்கு வயதாவதில்லை
1.
எலுமிச்சம் பழமொன்றைக் கையில் எடுத்தேன்
நான் சின்னஞ்சிறு வயதில் பார்த்து வியந்தது போலவே
சீரான உருண்டை வடிவத்தில் இருந்தது
சாறு பிழியும் முன்னர் மெல்ல உருட்டினேன்
பால்யத்தில் நான் கண்ட அதே மினுமினுப்புடன்
என் முன்னே கண் சிமிட்டியது
இரக்கமின்றி இரண்டாய் வகுந்தேன்
பதின் வயதில் ரசித்த அதே மணத்தை விரித்தது
அதே ஆறு பிரிவான அறைகள்
மிக மென்மையாக உள்சதை அல்லிகள்
எல்லாமே எல்லாமே அப்படியே இருந்தன
முதல் சாறு பிழிய மென்மையாய் அதக்கினேன்
அப்போது வடியும் சாற்றின் நிறம்
என் முதல் தூமையின் தினத்தில்
பிழியப்பட்ட சாற்றின் வண்ணத்தைப் பிரதிபலித்தது
கசப்பு கலக்காமல் சாற்றைப் பிழிந்தெடுக்க
அரைவட்டத் துண்டங்களை மெல்லத் திருப்பி
அல்லிகளை உடைத்துடைத்து சாற்றை ஒட்டப் பிழிந்தேன்
கன்னிப் பருவத்தில் வெள்ளிக்கிழமை துர்க்கை முன் ஏற்றி வைத்த
எலுமிச்சை அகல்களாய் இருந்தன இவ்விரு கிண்ணங்கள்
எத்தனை முயன்றாலும் அவை
கன்னி பருவத்திற்கு மேல் வளர்வதேயில்லை.
***
என் பதின் வயத்தில்
சாறு முற்றிலும் பிழிந்த பின்னர்
அம்மாவிடம் நான் சொல்வேன்
“எலுமிச்சைத் தோலை முகத்தில் தேய்க்கிறேன்
முகப்பரு குறையுமாம்
முகம் பளபளக்குமாம்”
அம்மா அர்த்தத்தோடு புன்னகைப்பாள்
இப்போதும் எலுமிச்சை சாறு பிழிந்த பின்னர்
எலுமிச்சைப் பழத்தோல் அன்று இருந்தது போலவே இருக்கிறது
அம்மா அவள் வீட்டில் இருக்கிறார்
நான் என் வீட்டில்
அம்மாவுக்கு வயதாகி விட்டது
ஆனால் எலுமிச்சைக்கு வயதே ஏறுவதில்லை.
***
எலுமிச்சைப் பழத்தை
உருட்டும்போது நெகிழ்கிறது
அரை வட்டமாய் அறுக்கும்போது
தன்னை முழுதாய்த் திறந்து கொள்கிறது
மெல்ல மெல்லப் பிழியும்போது மணக்கிறது
கவனம், தண்ணீர் கலக்காமலோ
உப்பு சேர்க்காமலோ அதைச் சுவைக்க முடியாது
அதிகம் அழுத்தும்போது
எலுமிச்சை என்னைப் போலல்லாமல்
தன் கசப்பைத் தயங்காமல் தருகிறது
என்னை விடப் புத்திசாலிகளாக இருப்பதாலோ என்னவோ
அவற்றுக்கு என்னைப் போல வயதாவதில்லை.
********
– lavanya.sundararajan@gmail.com –