
ஏன் எழுதுகிறாள்?
ஏன் எழுத வேண்டும்?
என்ன கிடைக்கிறது? – என்கிறார்கள்.
ஊர் கூடுமிடத்தில்
இருக்கும் ஒற்றைப்
புளியமரம் எனக்கது!
அதன்
வேர் பிடித்துத் துயில்வேன்,
கிளை எண்ணிச் சுகிப்பேன்,
ஏதேனுமொரு பொந்திடை
ஜீவன் ஒளித்துத் தேடுவேன்,
பறவையமர்த்தி அழகு பார்ப்பேன்,
ஞானம் பெற புத்தர்கள் வேண்டுவேன்.
வேறென்ன செய்ய நான்?!
***
உறங்கச் செல்ல
எப்போதும் போலவே
ஆயத்தமாகிறோம்.
ஆயினும் கிடந்ததும்,
எனை இழுத்துக்
கைக்குள் வைத்துக்கொள்ள
ஒரு நொடியேனும்
தாமதமாகி விடுகிறது
இன்று வரை!
என்னை
முழுதாய்க் காதலிக்கத்
தெரிவதே இல்லை
உனக்கு!
***
நீ
சொன்னபடியே
முதல் சந்திப்பின்
நகல் போல்
கை குலுக்கிப்
பிரிந்திருக்கலாம்
நீள் நினைவு
நெஞ்சரிக்கிறது!
********
மிகவும் கவனத்துடன் உள்ள கவிதை