
பிரகடனம்
நீர் வழிப்படூஉம் புணைபோல்
இத்தனை தூரம் கடந்து வந்தோம்
என்னென்னவோ செய்தோம்
மாளா அன்பு தீராக் காதல் காயக் காமம்
கிட்டியது சொற்பம்
வாட்டியது அனேகம்
இந்த இரண்டு மலைகளுக்கு இடையே
தெள் நீர் குட்டையாக
வான் அலங்கரிக்க
நின்று விட்டால் போதாதா
தேவைப்படுவோர்
என்னை இங்கே வந்து பார்க்கட்டுமே
ஆனால் வருபவரிடம் சொல்லிவை
தொலைவிலிருந்து பார்க்கலாம்
கையள்ளவோ கால் தூழவவோ நினைத்தால்
சக்தி எரிசாம்பலாக்கி அவரை
உமக்கு சூட்டி பித்தனாக்குவாள்
ஜாக்கிரதை
•
காதல் நீராட்டு
ஊரில் எல்லா கோபுரத்துக்கும் கும்பாபிஷேகம்
கோபுரமில்லா பஜனை மடத்திலோ
தோரண வாயிலில் வீற்றிருந்த
ருக்மணி சத்யபாமா சமேத கண்ணபிரானுக்கு புனித நீராட்டு
மடத்துக்கு எதிர் கட்டிடத்து மாடியில் நிற்கிறேன்
துளித் துளியாய் நீர் வார்க்கிறார்கள்
ருக்மணி சிலிர்க்கிறாள் சத்யபாமா வெட்கப்படுகிறாள்
கிருஷ்ணா நீயோ பரிமளமாய் எனக்கு உன்னைக் காட்டுகிறாய்
எனக்குள் அற்புதம் நிகிழ்கிறது மாதவா
உனக்கும் எனக்கும் இடையில்
காலமே தீராமல் விழுகிறது அந்த மஞ்சள் நீர்
நான் கோடியுகமாய் நீல வண்ணமாய் திளைக்கிறேன்
மெய் மறக்கிறேன்
பொய்யாய் நினைவுக்குள் திரும்புகிறேன்
பறந்து உன்னருகே வரத் துடிக்கிறேன்
ருக்மணி உன்னை மட்டுமே பார்க்கிறாள்
சத்யபாமா என்னை முறைக்கிறாள்
சொல்லி வை அவளிடம்
நீ எல்லோருக்குமானவன் என.
•