
புறக்கணிப்பு
நீங்கள் கழித்துக் கட்டும்படி
பக்கவாட்டினில்
என் ஆப்பிள்
அழுகித்தான் விட்டிருக்கிறதா?
•
ஒரு கனவு
அறுவைச் சிகிச்சையில்
ஒருவரின் வயிற்றிலிருந்து
மூன்று கிலோ எடை கொண்ட கட்டியை
எடுத்திருந்தது மருத்துவர் குழு.
அச்சமயம் நோயாளியின்
கால் விரல்களுக்கு அருகாமையில்
புற்கள் முளைத்திருந்தன.
புல்லை மேயத்தொடங்கிய ஒரு குதிரை
கனைத்து முன்னங்கால்களைத் தூக்கி
அவனது அடி வயிற்றை குறிபார்த்து
கீழிறக்கும் கணத்தின் அதிர்ச்சியில்
உயிர்ப்பெற்ற மூன்று கிலோ கட்டி
முயல் குட்டியாய் மாறி
டூப்ளிகேட் கீ செய்துத்தரப்படும் என்ற
விளம்பரப்பலகையைக் கடந்து ஓடுகிறது.
சாலையோர துணிக்கடைப்பெண்
சட்டைகள் சிலதை
பார்வைக்காக தொங்க விட்டுவிட்டு
வியாபாரம் செழிக்க
சாமிப்படம் முன்பாக சூடம் ஏற்றுகிறாள்.
நெளிந்த சாலையில்
ஓடும் முயலை
விரட்டிச்செல்கிறது
சட்டை ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த
மலைப்பாம்பு.
•
பின் முன்
இன்னும்
பின் தங்கு.
முன் செல்வதில்
இல்லை ஒன்றும்.
பின் தங்குதலிலும்.
•
உடையாத முட்டைகள்
சிறிய கைகலப்பு
மற்றும் தள்ளு முள்ளு.
கடைக்குச்சென்று திரும்பிய
ஒருவரது கையில்
பாலீத்தீன் கவரில் கட்டப்பட்ட
நான்கு முட்டைகளும்
ஒரு கொசுவர்த்திச்சுருளும்.
முட்டைகள்
உடையாது காப்பதிலேயே
அவரின் கவனம் இருந்தது
கொசுவர்த்தி கைவிடப்பட்டு
சுருள் உதிரிகளானது.
ஆசுவாசம்
சிறிது சமாதானம்
மன அமைதி
இதயத்துடிப்பினில் நிதானம்
இவை யாவும் ஏற்பட்ட பின்
உதிரிகளைப் பொறுக்கும்
அந்த ஒருவரது கையில்
வந்தமர்கின்றன
உலகின் நடுக்கங்கள் யாவும்.
•
நான்
நல்ல முட்டையே
கொள்வாரற்றச் சந்தையில்
ஊள முட்டை.
பறவைகளின் சுதந்திரத்தில்
குறுக்கிடும் கம்பிச்சட்டகம்.
அசையும் சொத்துப் போலவே
நடமாடும் தவறு.
தித்திப்பு நீங்கிய
வெல்லக்கட்டி.
ஈரப்பதம் நிறைந்த
தீப்பெட்டி.
தானியக்கிடங்கில்
தனிப்பறவை.