
அவள் புரண்டு படுக்கிறாள்
உடலெங்கும் மணல் மட்டுமே ஒட்டியிருக்கும்
அவள்
புரண்டு படுக்கிறாள்
இரவுண்ட உணவின் மிச்சம்
அடிவயிற்றை அடைந்த பின்னும்
அதே மேசையில் அமர்ந்து
உடல் குலுங்கச் சிரித்தபடி
அவள்
புரண்டு படுக்கிறாள்
மணல் திட்டில் கூடிக்களித்த
ஆண்களின் தீஞ்சுவை
அங்கும் இங்கும் எங்கும்
இனிக்க மணக்க
அவர்களின் கனம் தாங்காது
மெல்ல மூச்சுத் திணற
கடிபட்ட இடங்களில்
ஊரும் நண்டின் குறுகுறுப்பில்
குறுநகை பூக்கும் போதும்
விழிகளில் கண்ணீர் பெருக
வலிகள் மிகும்போது
போதையில் கிறங்கி
போதை தணியும்போது
வலிகளால் மயங்கி
அட்ரினலின் தாக்கம் அதிகரிக்கும்போது
அகிலம் அனைத்தையும்
அடிவயிற்றில் தாங்கும் வெறியோடு
பற்றி இழுத்த காற்றாணையும்
நனைத்து திணறடித்த நீராணையும்
அழுந்தப் புதைத்து அலற வைத்த நிலத்தாணையும்
சிகரெட் கங்கால் நெஞ்சைச் சுட்ட நெருப்பாணையும்
உச்சி கிறங்க உச்சம் கொடுத்த ஆகாயத்து ஆணையும்
கண்களால் கைகளால்
மூக்கால் காதால்
நாவால்
துழவித் துழவி
தேடியபடி
மணலின் திட்டில்
மயங்கித் தெளியும் அவள் மேல்
கதிரின் ஒளி பட்டு
கண்கள் கூசி
சிவந்தெரிய
ஆறாம் ஆணொருவன்
அவதரித்துக் காப்பான் என்றெண்ணி
ஓலமிட்டபடி
கடைசியாய் ஒருமுறை
கைப்பிடி மணலின் கைத்தலம் பற்றிக்
கருந்துளைக்குள் விழும் முன்னர்
அவள்
புரண்டு படுக்கிறாள்
•
எல்லார்க்கும் பெய்யும் மழை
கடுங்கோடையின் நண்பகலில்
டோலக்குகளை விற்கின்றனர்
நன்ஹே லாலும் மச்சானும்
மெலிந்த நன்ஹே லாலை நோக்கி
குறைக்கும் தெருநாய்
அவன் மிரளக் கண்டு விரட்ட
டோலக்குகளைச் சிதறவிட்டு
தெறித்து ஓடுகிறான்
நாயின்மேல் கல்லெறிந்து
நன்ஹே லாலைக் காப்பாற்றினான் வழிப்போக்கன்
நடுங்கி ஒடுங்கிய நன்ஹே லால்
திக்கற்று வெறிக்க
மச்சான் வசை பொழியும் நேரத்தில்
தொடங்கும் மழை
நிதானமான தாளகதியில்
வாசிக்கும் டோலக்குகளை
பொறுக்கித் தந்த சப்ளையரின்
பேக்கரிக்குள் ஒதுங்கி
மச்சான் ‘ச்சாயும் க்ரீம் பன்னும்’ வாங்கி
மாமன் நன்ஹே லாலுக்குத் தரும்போது
மழைக்கு ஒதுக்குகிறது
தாளம் தப்ப விரட்டிய நாய்
மாமன் முன்
வாலாட்டி நிற்கிறது
‘சாலா ஏ லோ’ என்று
பாதி ‘க்ரீம் பன்’னைப் பிய்த்து
எறிகிறான் மாமன்
மழை கனக்க
மாயவெளியில்
ஓயாதொலிக்கும் நூறாயிரம் டோலக்குகளின் முன்
பன்னின் சுவைக்கு மயங்கிக்
களிநடம் புரிகிறது
நாய்
•
இந்தக்காலக் கடவுள்கள்
வித்யாசமானவர்கள்
பக்தர்களுக்குப் படைத்துவிட்டு
காக்கைக்குக் கூட வைக்காமல்
அனைத்தையும் தாமே உண்பவர்கள்
இந்திர வேடமிட்டு
இந்த்ராணியைக் கூடும்
முனிவர்கள்
சீதையைத் தீயிலிறக்காமல்
காத்து
“மண்ணு தின்னப்போற ஒடம்ப
மனுசனுங் கொஞ்சித் தின்னுட்டுப் போறான்” என்று
வல்லவனுக்கு முன்னால் இடமளித்து
பின்னால் நின்றுண்ணும் வல்லவர்கள்
கண்ணகியை மாதவியாய்
மாதவியை பாஞ்சாலியாய்
பாஞ்சாலியை ஊர்வசியாய்
ஊர்வசியைக் கண்ணகியாய்
“ரோல் ப்ளே” பண்ணச் செய்யும்
கண்கட்டி வித்தைக்காரர்கள்
சிவனை வதம் செய்து
மகிஷாசுரனை மணப்பவர்கள்
பக்தர்களைச் சிலுவையிலறைந்து விட்டு
திராட்சைரசம் முழுவதையும்
தாமே அருந்திக் களிக்கும்
தேவமைந்தன்கள்
தாமே சாத்தானாகவும் அவதாரமெடுக்கத் தெரிந்த
இந்தக் காலக் கடவுள்கள்
வித்யாசமானவர்கள்
தானே
நிலவில் ஒழுகும் நிணம்
டூலிப் மலரி குனிகிறாள்
அவள் நெஞ்சில் இரு நிலாக்கள் உதிக்கின்றன
பௌர்ணமி நிலாக்கள்
காணுமென் கண்களிலோ
இரட்டைச் சூரியனின் தாகத்தகிதகிப்பு
திடுக்கிட்டு
வெளிக்கிட்டு
சாலையில் விரையும்போது
தொடுவானில்
செப்டம்பர் மாத முழுநிலா
அவள் முகமாகிறது
நெஞ்சாகிறது
அகமாகிறது
அகிலமாகி அணுவாகி
அண்டசராசரமுமாகி
சித்திரைப் பௌர்ணமியில்
மொட்டை மாடியில்
மோனங்கள் கலைத்த சிந்து
ஒருகணத்தில் குழந்தையாகிறாள்
மருகணத்தில் குமரியாகிறாள்
அடை என்கிறாள்
அடைக்கலம் கேட்கிறாள்
அடையாளம் மாறி மாறி
ஷோபாவாகிறாள்
மதியின் ஒளியை விளக்கொளி மறைக்கும் போது
கண்கள் எரிய
சொல்கிறேன்;
மயக்க மறு
மயக்கம் மரு
மயக்கம் அறு
கிறுக்கும் செருக்கும் மிக்க
அவளோ ஒற்றைக்காலில் நிற்க
மார்கழிப் பனியில்
போட்டிக் கோலம் போடுகிறாள் கார்த்திகா
என் கீச்செயினில் இருக்கும் மயில்
அவளது நினைவில் இருந்து
நரம்பில் ஊர்ந்து
விரல்களின் வழியே தோகை விரித்து
வீதியில் இறங்கிக்கொண்டிருக்கும் நள்ளிரவு வேளையில்
பனியும் பற்றிக்கொள்ளும் வண்ணம்
கோலமிடுந்தேரை
கணவன் காக்க
காவலன் காக்க
கோவலனும் காக்க
மாப்ளர் சுற்றிக்கொண்ட கிழவனும் காக்க
கடக்கும் நான் சொல்கிறேன்
“ஏரியாவிலேயே இசட் பிளஸ் செக்யூரிட்டியோட கோலம் போடுறது
நீங்க மட்டுந்தான்”
”புரியல” என்றவள் சிரிக்கிறாள்
மயிலின் கண்கள் ஒளிர
நினைவு தப்பிக் கனவில் விழுந்து
கனவு பிளந்து நினைவில் கலக்க
நாசியில் நிறைகிறது
டூலிப்பின் நறுமணம்
பெப்பர்மிண்ட்டின் குளிர்மணம்
கந்தர்வத்தின் மஸ்க் மணம்
நிலவில் ஒழுகும் நிணம்
நினைவில் ஒளிர