
சருகுகளுக்குள் மறைந்திருக்கும் காடு
பழுத்து உதிர்ந்த
பழங்களுக்குள்
புற்கள் அதிர சில புழுக்கள்
கூட்டுட்டன் மறைகிறது.
வெப்பம் தகித்து காய்ந்து
வெந்து கருத்து
கற்கரங்களில் அழுத்தமாகிறது.
தாகம் அச்சுறுத்த
நீருக்காய் ஏங்கி
கறுத்து உடல் சிறுத்து
வலுக்கிறது.
சருகு போர்வைக்குள்
நெருங்கி உறவாடி
பாளமான நிலத்தில்
சற்றே உறங்குகிறது.
காலம் உருண்டு
அளவிடற்கரியதாய்
தூரல்கள்
திரும்ப திரும்ப விழுந்து
மொத்த சருகும் நீர்மயமாகிறது.
நூறு அணுக்கள்
ஒன்றுகூடி
கற்களைப் பொடித்து
ஒரு அபூர்வம்
முளைக்கிறது.
தொடர்பற்று
மீண்டும் மீண்டும்
காடு வளர்ந்துக்கொண்டே
இருக்கிறது.
•
நாவில் உயிர்த்தெழும் இறந்தகாலம்
நுணுக்கமான சில சொற்பிறப்பில்
குளிர்சாதனத்தில் பதப்படுத்தியிருந்த
ஆழ்மனம்
சிறிது சிறிதாக உப்பு சேர்க்கப்பட்டு
அழுகத் தொடங்கும்.
கூளத்தின் புகைச்சல்
நமநமவென்று ஒரு குட்டி எரிமலையாகி
குப்பைமேட்டிற்குள்
இரு குட்டி குட்டி இதயங்களை
சாம்பலாக்குகிறது.
நா எல்லா விதமான
நரகத்தையும்
தனக்குள் அடக்கி வைத்திருக்கும்
ஒரு பிரத்யேக வாகனம்,
நமக்குள் ஒரு திறப்பும்
ஒரு மூடலும்
மாற்றி மாற்றி
Pull Push என்று எழுதப்பட்ட
கண்ணாடி கதவைப் போலவே
தவறான பக்கங்களை திறக்கிறது.
எல்லா கழித்தல் குறிகளும்
எல்லா சுழியங்களும்
எல்லா மாத்திரைகளும்
எல்லா மௌனங்களும்
எல்லா பேயோட்டும் குடிசாமியிடம்
தொலைந்து போன செருப்புக்காய்
தேடி அலைகிறது.
கெட்டகாலம் செருப்போடவே தொலையட்டும்
என்றார் பூசாரி.
நல்லவேளையாக என் கெட்டகாலம் தொலையாமல் ஒருநாள்
உன் நாவில் என் செருப்பு வந்து விழுந்தது.
•
இடைவேளைகளை அகற்றுதல்
தொடக்கத்தில் எல்லாம்
சமதளமற்று ஆனால் ஒன்றாய்
நெருங்கி நெருக்கமாய்,
பூச்சுகளும்
புல்தரையும்
பெரிய மலையும்
நீண்டகடலும்
அமீபாவும்
டைனோசர்களும்
ஆதாமும் ஏவாளும்
தொடக்கத்தில் எல்லாம்
இந்த நிலம் யாவும் ஒன்றாய்
நெருக்கமாய் இருந்திருந்தது.
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
ஊடலும் ஊடல் நிமித்தமும்
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
மாறி மாறி வந்து போனபோது சல்லிப்பாய் தோன்றியதால்,
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
நம்மை ஒரெயடியாய்
பிய்த்து எரிந்து விட்டது.
இப்போது
அலங்கரிக்கப்பட்ட மஞ்சள் நிற
இரும்பு வாகனம் மக்களை
ஏற்றி இறக்கி
இறக்கி ஏற்றி
இந்த
சங்கிலித்தொடர்
எதுவரை
நீ
ளு
ம்