
இந்தக் கவிதையில்
ஒரு நம்பிக்கையைப் பற்றி
பேசப் போகிறேன்
என்றா நினைத்தாய்
முறிந்த பிறகு
பேசி என்ன பயன்?
தன் நீள்வட்டத்தை விட்டு
விலகிய கோள் மறுபடி
தன் பாதையில் நடை போடுவது
சிறகு விரிக்கும்
பறவையைப் போல் இருக்கிறது…
எந்தக் குற்ற உணர்ச்சியுமில்லை
இனி இந்த
ஒற்றை வானம் எனக்கானது
எனக்கே எனக்கானது…
நான் ஒன்றை
உன்னிடத்தில் எதிர்பார்க்கிறேன்
நீ ஒன்றை
என்னிடத்தில் எதிர்பார்க்கிறாய்
இருவரின் எதிர்பார்ப்பின்
இடைவெளியில்
துயில் கொள்ளமுடியா பூனை
நடந்தபடி இருக்கிறது…
•
கவலைப்படுவதற்கு
என்ன இருக்கிறது?
நேற்று யாரோவொருவர்
இன்று நான்
நாளை யாரோவொருவர்
அவர்கள் ஒளிபெற
ஏதோவொரு திரி
கருகித்தான் ஆகவேண்டும்…
என்னவொன்று
அவற்றை எரிக்கிறார்கள்
என்பதை அது அறியாதவரை
அவர்களுக்கு நலம்…
•
முட்வேலியில் சிக்கிய
சிறகை
இலாவகமாய் மீட்டு
பறக்க விட்ட காலம்.
இப்போது
காவு கேட்கிறது
அதன் சுதந்திரத்தை.
காலத்தை
புரவி போல்
அடக்கி
பயணிக்க
எத்தனிக்கிறது
அவள் வளர்த்த சிறகு.
ஆனாலும்
காலத்தின் முகம்
ஒருபக்கம் கடவுளாய்
மறுபக்கம் சாத்தனாய்
காட்சியளிக்கிறது
எப்பக்கம் கடவுள்
எப்பக்கம் சாத்தான் என
அடையாளம் தெரிவில்லை
அவளுக்கு
தாயக்கட்டையை
உருட்டுகிறது
காலம்.
•
அவர்கள் வருகையில்
முகங்களில்
மென்மையான முயல்கள்
குதித்து விளையாடின.
சற்று நேரத்தில்,
அங்கும் இங்கும்
கள்ளப் பார்வையை வீசும்
பூனையும் மெல்ல
நுழைந்தது.
பூனைக்கும் முயலுக்குமிடையில்
இவர்கள் ஓடியோடி கழைக்கூத்தாடி போல விளையாடியதை பார்க்கப் பார்க்க வேடிக்கை.
கொம்பை விடாத
உயிரினமாய்
அவர்களுக்குள்ளிருக்கும்
பூனையை
வெளியில் விடவேயில்லை
ஆனால்
அவர்கள் வெளியேறுகையில்
நிச்சயமாக
குதித்தோடிப் போய்விடும்.
கூடுகையின் கதகதப்பை அறியாப் போலிகளே!
விடுதலை விடுதலை என்று
பூனையோடு
நானும் நடனமாடுவேன்.
•
கலக்கமுற்ற தினத்தில்
நோக்கமற்ற
நோக்கத்தில்
பார்வையை
விரவிச் செல்கையில்
காற்றில்
ஆடியசையும்
செடியைப் பார்க்கிறேன்
இளம் பச்சை
அடர் பச்சை
மஞ்சள் கலந்த பச்சை
வெளிறிய பச்சை
முழுதும் மஞ்சள்
பல வண்ணங்களை
வார்த்த இலைகளுக்கு
நடுவே
நானிருக்கிறேன்
அம்மாவின் சொல் போல
பூத்திருக்கிறது
ஒரு செந்நிற செம்பருத்தி…
அடர்ந்த கிளைகளுக்கிடையே
அணில் பிள்ளையென
ஓடி விளையாடும்
ஒளியில் தெரிகிறது
புதியபாதை
•
எல்லா கணக்கும்
சரியாகத்தான்
போடப்படுகிறது
எப்படி வருகிறது
பிழை?
எப்போது
புயல் வருமென
புலப்படுவதில்லை
காற்றுக்கு
உள்ளங்கையை விட
சிறிய மனம்
என்னசெய்யும்
அந்நாளில்
வெயிலின்
வெம்மையை
இறக்கி வைத்து
படம் வரையும்
நிழல்
ஒரு கண்ணீர்துளி