அதிகம்
இன்று ஒரு நட்சத்திரம் அதிகம்
உதிரவில்லை வானம்
இன்று ஒரு நெல்மணி அதிகம்
சீட்டை மாற்றி
எடுக்கவில்லை கிளி
இன்று ஒரு துளி அதிகம்
நின்று விடவில்லை ஓடை
இன்று கூலி ஒரு ரூபாய் அதிகம்
இரண்டாய்க் குதிக்கிறது மனம்.
கார்பன் மனசு
மையுறைந்த பேனாவின்
உணர்ச்சிகளையும்
கார்பன் பேப்பர்கள்
படம்பிடித்துக் காட்டிவிடுகிறது
நீ வாயால் சொல்ல மறுக்கும்
உன் உள்ளத்தை
என் மனம் எனக்கு
எடுத்துச்சொல்வது போல.
கதவடைக்கும் பொழுது
இரண்டு குவளைகளின்
ஆழம் இன்னும் உலரவில்லை
ஈரம் சுமந்த தேநீர்த்துளிகளில்
தேங்கிக் கிடக்கின்றது ஏக்கம்
அவர்கள் பேசிப்போன
வார்த்தைகளை
உதடுகள் வழியே
உறிஞ்சிக்கொண்டு
இன்னும் அதனைப்
பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றன
ஓவ்வொருமுறையும்
உதடுகள் அணைத்த வேளையில்
உள்வாங்கிய மூச்சுக்காற்றின் அனல்
உள்வட்டத்தில் இன்னும்
ஒட்டிச் சுழன்றுகொண்டிருக்கின்றது
இன்னொரு காதலைச்
சந்திக்கும் வரை
இப்படியே வாழ நினைக்கும்
கோப்பைகளைத்தான்
காலி என்கிறது
கடை சாற்றிக்
கதவடைக்கும் ஒரு பொழுது.
நிழல் வேகும் சாலை
விலை கூறிய நாவில்
ஈரம் வற்றிப்போனது
அனல்காற்று
சும்மாட்டின்மேல்
சுழல்கொண்டு கூடையில்
குவிந்துகொள்கின்றது
வெப்ப ரேகைகள்
நெற்றி மடிப்புகளில்
ஒளிந்துகொள்கின்றன
கனன்று திரியும் கதிர்கள்
கழுத்து வரிகளில்
உப்புக்கோட்டை உலர்த்துகின்றன
இடைப்பட்டிருக்கின்றது
கால் வயிறு
சுட்டெரிக்கும்
தீயொளியைத் தன்
சுருக்குப்பைக்குள்
சுருக்கிக்கொண்டு
நிழல் வேகும் சாலையில்
வெயிலை மிதித்து நடக்கின்றாள்.
அவர்கள் பறவைகள்
ஓடிப்போன பின்னாடி
இங்க யார் பேசுறதும்
நம்ம காதுல
விழப்போறதில்ல
வா போயிரலாம்
ஓடிப்போகணும்னு
முடிவெடுத்த பின்னாடி
மறு யோசனை செய்யக்கூடாது
புறப்பட்ட வேகத்துல போயிரணும்
முன்னாடி ஓடிப்போனவங்க கதி
என்னான்னு யோசனை செய்யக்கூடாது
ஏன்னா தோட்டத்துல பூக்குற
எல்லாப் பூவும்
ஒரே சந்தைக்குப் போறதில்ல
விடியுற வானம் நமக்கானது
வீசுற காத்து நமக்கானது
விரிக்கிற வலையும் நமக்கானதுன்னு
புரிஞ்சிக்கிட்டு
வலையில சிக்காமப் பறக்கலாம் வா
வாழ்ந்தது போதும் கூட்டுல.
***