விரலிடை மணற்துகள்கள்
தத்தித் தாவி
தவழ்ந்த பொழுதுகளில்
திக்கித் திருத்தி
பேசிய பச்சிளம் பருவத்தில்
விளையாடச் சென்ற விரிந்த வயல் நிலத்தில்
சிக்கியும் சிக்காமலும் நழுவின
விரலிடை மணற்துகள்கள்
தொலைவில் இருக்கும் கனவுகளையும்
எஞ்சி இருக்கும் நினைவுகளையும்
நினைத்துக்கொண்டே
கடத்தியதில் உணரவில்லை
விரலிடையில் நழுவியது
மணற்துகள்கள் மட்டுமல்ல
மணித்துளிகளும்தானென்று
கட்டிப்பிடித்து உறங்கினாலும்
களவு போய் விடுகின்றன நொடிகள்
நொடிக்கு நொடி
சேர்த்து வைத்த
இன்பங்கள் மட்டுமே
மனதில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன
விரலிடையில் சில
ஈர மணற்துகள்களாய்…
•
நினைவின் ஒளி
யாரும் யாருடனும்
பேசிக்கொள்ளாத இரவு
நிலவுகிறது ஒரு மௌனப் பிளவு
பெருமூச்சுகளே பெரிதும் கேட்கும்
அவ்வேளையின் நிசப்தத்தில்
நிழலாடுகிறது இறப்பின் கரிய ஒளி
சட்டென நினைவு வந்தவர்களாய்
மீந்த சோற்றில் தண்ணீர் ஊற்றவும்
குழந்தையின் அழுகைக்குப் பால் கலக்கவும்
கதவை அடைத்துத் தாழிடவுமாய்
ஆளுக்கொன்றாய் நகர்ந்த பின்னரும்
தேங்கியிருக்கிறது
நகர மறுக்கும் ஒரு நினைவு
அவரவர் மனதை
ஆங்காங்கே இறுக்கியபடி.
•
அவனது மேகங்கள்
சாத்தியமற்ற தருணங்களைக்
கடக்க முடியாதவன்
கழுத்தோடு கயிற்றை இறுக்குகிறான்
நடுங்கும் கைகளால்
நாடியை நறுக்குகிறான்
யாரும் காணாத தொலைவில்
யாரும் பார்க்காத மறைவில்
துயர் இழுத்துத் திரிகிறான்
இவ்வுலகம் எவ்வளவு விரிந்திருந்தும்
மன இடுக்கில்தான் புரள்கிறான்
இறுகிய அவன் கன்னத்தை
யாரோ கிள்ளி முத்தமிடுகிறார்கள்
இருக்க முடியாதவனாய்
நகர்ந்து துடைக்கிறான்
பெரும் பாறை உருண்டதான
கண்ணீர்த் தடம்
அவ்வப்போது வரும்
மேக நிழலில்
ஏறி அமர்கிறது
அவன் பெருமூச்சு
காலத்திற்குப் புறம்பாய்
என்ன செய்திட முடியும்?
இவன் வாழ்க்கையில்
எல்லாம் மேகங்களே.
•