சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 9 – யுவா
சதிகள் பலவிதம்
”கிளிக்குப் பிறந்தவள் நீயோ
கொண்டை தோகை மயிலோ
குயில் தோற்கும் குரலோ
கவிக்கு நீதான் தாயோ!’’
அரண்மனையின் தனது அறையில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு மெல்ல ஆடியவாறு சொல்லிக் கொண்டிருந்தார் சிங்கமுகன். அவர் கையில் ஒரு பட்டுத்துணியும் தூரிகையும் இருந்தது.
பாதாம் பால் கோப்பையுடன் உள்ளே நுழைந்தாள் மகாராணியின் ஆஸ்தான பணிப்பெண் செவ்வந்தி.
சிங்கமுகன் சட்டென அந்தப் பட்டுத்துணியை மறைக்க முற்பட்டு பிறகு, ‘’ஓ… நீயா? நான் கிளியோமித்ராதான் வருவதாக ஒரு நிமிடம் பதறிவிட்டேன்’’ என்றார்.
செவ்வந்தி காலடியிலே பின்தொடர்ந்த வெற்றி, ‘’மிய்…மிய்… மியாவ்’’ என்றது.
‘’என்ன சொல்கிறது உனது பூனை?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.
‘’மகாராணி வந்தால் நீங்கள் ஏன் பதற வேண்டும் என்று கேட்கிறான்?’’ என்றபடி அவரை நெருங்கினாள் செவ்வந்தி.
‘’நாளை மறுநாள் கிளியோவின் பிறந்தநாள் வருகிறதல்லவா? அவளுக்காக நான் ஒரு கவிதை படைத்துக்கொண்டு இருக்கிறேன். அது அன்று வரை ரகசியமாக இருக்க வேண்டுமல்லவா?’’ என்றார் சிங்கமுகன்.
செவ்வந்தி புன்னகைத்து, ‘’ஆஹா… அரசரே… கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றாள்.
‘’மிய்ய்யாவ்… மியாவ்’’ (கவிதையைக் கேட்க எப்படி இருக்குமோ?) என்றது வெற்றி.
‘’இப்போது உனது வெற்றி என்ன சொல்கிறான்?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.
‘’அ… அது… ஒன்றுமில்லை… இந்தாருங்கள்… பாதாம் பால் எடுத்துக்கொள்ளுங்கள் அரசே’’ என்று நீட்டினாள் செவ்வந்தி.
‘’நீ கூட நன்றாக கவிதைகள் எழுதுவாய் அல்லவா?’’
‘’அது… ஏதோ பொழுதுபோகாத சமயத்தில் கிறுக்குவேன்’’ என்று வெட்கத்துடன் சொன்னாள் செவ்வந்தி.
‘’ம்… அந்த உரைகல் ஓலைப் பத்திரிகையில் அவ்வப்போது வாசித்திருக்கிறேன். மிக அழகாகவே இருக்கும். அதிலும் காதல் கவிதைகளை அற்புதமாக எழுதுகிறாய்’’ என்றார் சிங்கமுகன்.
‘’நன்றி அரசே’’ என்று வெட்கம் விலகாமல் சொன்னாள் செவ்வந்தி.
‘’சரி… ராணி குறித்து நான் படைத்து இருக்கும் இந்தக் கவிதை எப்படி இருக்கிறது என்று வாசித்துப் பார்த்துs சொல்’’ என்று அவளிடம் நீட்டினார் சிங்கமுகன்.
‘’அ… அரசே… மகாராணிக்காக நீங்கள் எழுதியதை நா… நான் வாசிப்பது நன்றாக இருக்குமா?’’ என்று தயங்கினாள் செவ்வந்தி.
‘’அட… பிறந்தநாளில் எல்லோரின் முன்பும் வாசிக்கப் போகிற கவிதைதானே… பரவாயில்லை… படித்து கருத்து சொல். தேவைப்படும் இடங்களில் திருத்திக்கொள்ளலாம்’’ என்றார் சிங்கமுகன்.
செவ்வந்தி கையில் வாங்க… வெற்றி, ‘’மிய்யாவ்… மியாவ்” (ஐயையோ நான் வெளியே போய்டுறேன்) என்று நடையைக் கட்டியது.
”கிளிக்குப் பிறந்தவள் நீயோ
கொண்டை தோகை மயிலோ
குயில் தோற்கும் குரலோ
கவிக்கு நீதான் தாயோ…
அன்னம் போன்ற நடையோ
அன்பே நீதான் மானோ
ஆரண்ய அதிசய தேனோ
ஆகாயம் நீந்தும் மீனோ’’
செவ்வந்தி வாசிப்பதை நிறுத்தி சிங்கமுகனைப் பார்த்தாள். பாதாம் பால் குடித்தவாறு அவர் ஆவலுடன் ஏறிட்டார்.
‘’கற்றில்…’’ என்று நிறுத்தினாள் செவ்வந்தி.
‘’அது காற்றில் செவ்வந்தி.’’
‘’துணைக்கால் விட்டுவிட்டீர்கள் மன்னா!’’
‘’ஓ… மன்னிக்கவும். திருத்தி வாசி’’ என்றார் சிங்கமுகன்.
‘’காற்றில் தவழும் இசையோ
கார்முகில் தரும் மழையோ
கன்னம் தீண்டும் முத்தமோ
காதல் பேசும் சத்தமோ’’ என்று வாசித்து முடித்தாள் செவ்வந்தி.
‘’எப்படி இருக்கிறது செவ்வந்தி?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.
‘’ந… நன்றாக உள்ளது மன்னா’’ என்றாள்.
‘’உன் குரலில் தடுமாற்றத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே… எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகச் சொல்… கோபிக்க மாட்டேன்’’ என்றார்.
‘’அரசே… இது மிக மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒரு காதலன் எழுதுவது போலிருக்கிறது. இதனை மகாராணியின் பிறந்தநாள் விழாவில் அத்தனை பேருக்கு மத்தியில் நீங்கள் வாசித்தால் நன்றாக இருக்காது. விழாவுக்குப் பெரும் புலவர்கள் எல்லாம் வருவார்கள் அல்லவா? அவர்கள் எல்லாம் வெளியே போய் சிரிப்பார்கள்’’ என்றாள் செவ்வந்தி.
சிங்கமுகன் ஒரு நிமிடம் அவளையே பார்த்தார். பின்னர் புன்னகைத்து, ‘’ம்… வெளிப்படையாகச் சொன்னமைக்கு நன்றி செவ்வந்தி. நீ எனக்கு ஓர் உதவி செய்கிறாயா?’’ என்று கேட்டார்.
‘’ஆணையிடுங்கள் மன்னா’’ என்றாள் செவ்வந்தி.
‘’நீதான் அற்புதமாக காதல் கவிதைகளை எழுதுகிறாயே… மகாராணி பற்றி நான் எழுதியது போல ஒன்று எழுதிக் கொடு. இந்த விஷயம் நமக்குள் இருக்கட்டும்’’ என்றார் கசியக் குரலில்.
செவ்வந்தி தயக்கத்துடன் அவரை ஏறிட்டு, ‘’ம… மன்னா… எழுதித் தருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆ… ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது’’ என்றாள்.
‘’என்ன சிக்கல்?’’
‘’என் கவிதைகளை ராணியாரும் தவறாமல் வாசிப்பவர். என் கவிநடை அவருக்கு நன்றாகவே தெரியும். நான்தான் எழுதிக் கொடுத்தேன் என்று சுலபமாக கண்டுபிடித்துவிடுவார். பிறகு உங்களுக்குத்தான் அவமானம்’’ என்றாள் செவ்வந்தி.
சிங்கமுகன் தலையாட்டியவாறு, ‘’அதுவும் சரிதான்… வேறு என்ன செய்யலாம் செவ்வந்தி?’’ என்று கேட்டார்.
‘’சொன்னால் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் மன்னா. கவிதை கொடுத்துதான் ராணியாரின் அன்பைப் பெற வேண்டும் என்றில்லை. உங்கள் மீது ராணிக்கு ஏராளமான காதல் உண்டு. உங்களுக்கு எது இயல்பாக வருமோ அதையே செய்யுங்கள். அதுவே அவருக்கு அற்புதமான பிறந்தநாள் பரிசாக இருக்கும்’’ என்றாள் செவ்வந்தி.
சிங்கமுகன் புன்னகைத்தார்… ‘’சபாஷ் செவ்வந்தி… சரியாகச் சொன்னாய். வராத ஒன்றை முயலக் கூடாது. இதைக் கிழித்துப் போட்டுவிடுகிறேன். ஆனால், இந்தக் கவிதை விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். கிளியோவுக்குச் சொல்லிவிடாதே. பிறகு கேட்டு வாங்கிப் படித்துக் கேலி செய்துகொண்டே இருப்பாள்’’ என்றார் சிங்கமுகன்.
‘’சே… சே… சொல்ல மாட்டேன் மன்னா’’ என்றாள் செவ்வந்தி.
‘’முக்கியமாக உன் பூனைத் தோழன் வாயை பாலைக் கொடுத்து அடை. அந்தக் குசும்பன் சொல்லிவிடப் போகிறான்’’ என்றார் சிங்கமுகன்.
அப்போது அறை வாசலில் வந்து நின்றார் நிலாமதி சந்திரன்.
‘’அரசே… உள்ளே வரலாமா?’’
‘’வாருங்கள் மந்திரியாரே… அதிசயமாக இருக்கிறதே… காலையில் நேரத்துடன் தேடி வந்திருக்கிறீர்களே…’’
உள்ளே நுழைந்த மந்திரி வணங்கி, ‘’எல்லாம் விஷயமாகத்தான் அரசே… புதிய பாடசாலைகள் திறக்கிற ஆலோசனைக் குழு கூட்டத்தை இன்னும் சற்று நேரத்தில் நடத்தப் போகிறேன். அதைச் சொல்லிவிட்டுப் போகவே வந்தேன்’’ என்றார்.
‘’சபாஷ் மந்திரியாரே… சுறுசுறுப்பாகச் செயலில் இறங்கிவிட்டீர்… கூட்டம் எங்கே நடக்கிறது?’’
‘’பொன் மண்டபத்தில் மன்னா!’’
சிங்கமுகன் தலையை உயர்த்தினார்… ‘’ஏன் அவ்வளவு தொலைவில்? நம் அரண்மனையிலேயே ஒரு பக்கமாக வைத்துக்கொள்ளலாமே…’’
‘’எல்லாம் விஷயமாகத்தான் மன்னா… நம் அரண்மனைக்குள் நம் அருகிலேயே யாரோ சில புல்லுருவிகள் இருப்பதாகச் சந்தேகப்படுகிறேன். நாம் என்ன புதிய திட்டம் போட்டாலும் அது வெளியே கசிந்துவிடுகிறது. இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. அதை தவிர்க்கத்தான்’’ என்றவாறு ஓரக்கண்ணால் செவ்வந்தியைப் பார்த்துக்கொண்டார் மந்திரி.
‘’ஓ… அதுவும் சரிதான்… கூட்டத்தில் அந்தப் பெண் நட்சத்திராவும் சிறுவனும் பங்கேற்கிறார்கள்தானே?’’
‘’ஆம் மன்னா… நல்லான் மூலம் தகவல் அனுப்பிவிட்டேன்’’ என்று அழுத்திச் சொன்னார் நிலாமதிசந்திரன்.
‘’நல்லது… நீங்கள் கூட்டத்தை நடத்திவிட்டு வந்து விவரியுங்கள்’’ என்றார் சிங்கமுகன்.
‘’ஆகட்டும் மன்னா…’’ என்று சொல்லிவிட்டு மந்திரி திரும்பிச் செல்கையில் தன்னைப் பார்த்து மர்மமாகப் புன்னகைத்தது போல் செவ்வந்திக்குத் தோன்றியது.
*****
‘’சொன்னதெல்லாம் நினைவில் இருக்கிறதா?’’ என்று கேட்டான் கம்பீரன்.
அவனது மாளிகையில் அவனது அறையில் அவனுக்கு எதிரே இப்போது இருந்தவன் சுரங்கக் கொள்ளையன் சுகந்தன்.
‘’நன்றாக நினைவில் இருக்கிறது’’ என்றான் சுகந்தன்.
‘’பெண்தானே என்றோ சிறுவன் என்றோ அலட்சியமாகச் செயல்படாதீர்கள். அவர்களுக்குப் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பே கொடுக்காமல் ஒரே வீச்சில் தலைகளைச் சீவிவிட வேண்டும்’’ என்றான் கம்பீரன்.
‘’கவலையேபடாதீர்கள்… காரியத்தை கச்சிதமாக முடிக்கிறோம்.’’
‘’ஆலோசனைக் கூட்டத்துக்கு வரப்போகும் வேறு சிலரும் அந்தப் பாதை வழியாகத்தான் வருவார்கள். அவர்களிடம் அகப்பட்டு விடாதீர்கள். அதே சமயம் அவர்களில் யாரேனும் ஒருவர் கண்ணெதிரே சாட்சியாக இந்தச் சம்பவம் நிகழ வேண்டும் சுகந்தா’’ என்றான் கம்பீரன்.
‘’சரியாக நடக்கும் தளபதி’’ என்றான் சுகந்தன்.
‘’இந்த நிகழ்வு மூலம் பல தலைகளை உருட்டப் போகிறோம் சுகந்தா. இருவரையும் கொல்வதன் மூலம் நமக்கு நாளை தொந்தரவாக இருப்பார்கள் எனக் கருதும் பலரையும் அடக்கப் போகிறோம். உத்தமன் மற்றும் சூர்யனுக்கு இந்த இருவரின் மரணம் மனதால் மிகப்பெரிய அடியைக் கொடுக்கும். தங்கையை இழந்த சோகத்தில் சூர்யன் பைத்தியக்காரன் ஆகிவிடுவான். அந்த உத்தமன் இனி வரும் காலங்களில் ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று எதையும் எழுதாமல் இருப்பான்.’’
‘’ம்… புரிகிறது!’’
‘’உங்களுக்கு உளவு சொன்னவர்களாக அந்த அரண்மனை திமிர்க்காரி செவ்வந்தியைச் சந்தேகத்தில் கைது செய்வோம். கூடவே அப்பாவி பலி ஆடாக அந்த நல்லானையும் விசாரணையில் நிறுத்தி சிறையில் தள்ளப் போகிறோம். ஆக, ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தும் திட்டம் இது. எங்கும் தவறு நடந்துவிடக் கூடாது’’ என்றான் கம்பீரன்.
‘’எல்லாம் நடக்கும் தளபதி… நான் விசாரிக்கச் சொன்ன விஷயம் என்ன ஆயிற்று?’’ என்று கேட்டான் சுகந்தன்.
‘’அந்த மர்ம ஆசாமி விவகாரம்தானே?’’
‘’ஆமாம்… அவன் எங்கிருந்து வருகிறான். அவன் சிங்கமுகனைக் கொல்ல முயன்றுகொண்டிருக்கிறானா? எனில், அவன் நோக்கம் என்ன? ஓர் உறைக்குள் இரண்டு கத்தியாக இன்னொரு எதிரி இங்கே இருப்பது நாளை நமக்கு ஆபத்து தளபதி’’ என்றான் சுகந்தன்.
‘’நானும் இதை யோசிக்காமல் இருப்பேனா சுகந்தா? எனது விசுவாசமான வீரர்கள் சிலரை ரகசியமாக நாடு முழுவதும் கண்காணிக்கச் சொல்லியிருக்கிறேன். அவன் கையில் சிக்கட்டும். நமக்கு எதிரியா அரசனுக்கு எதிரியா என்று தெரிந்துவிடும். எப்படி இருந்தாலும் பிடிபட்ட இரவே அவன் தூக்கிலிடப்படுவான்’’ என்றான் கம்பீரன்.
‘’சரி… நான் புறப்படுகிறேன்’’ என்ற சுகந்தன், அறையின் தரைவிரிப்பை விலக்கினான்.
‘’வெற்றி செய்தி மட்டுமே என் செவிகளுக்கு வரவேண்டும்’’ என்ற கம்பீரன் குரலில் எச்சரிக்கை இருந்தது.
தரையின் கதவைத் திறந்து முதல் படியில் இறங்கிவிட்ட சுகந்தன் புன்னகையுடன் சொன்னான்… ‘’கொண்டாடுவதற்கு தயாராக இருங்கள் தளபதி!’’
******
‘’அப்றம்?’’ என்று புன்னகையுடன் கேட்டான் கிங்விங்சன்.
இடம்… அரிமாபுரிக்கும் அடுத்த நாடான வேங்கைபுரிக்கும் எல்லையாக இருக்கும் இடத்தில் உள்ள மாளிகை. அவனுக்கு எதிரே அந்த வீரன் நின்றிருந்தான். கம்பீரன் மாளிகையின் காவலாளிகளில் ஒருவனான முத்தரசன்.
‘’அந்தப் பெண்ணையும் சிறுவனையும் கொன்று பழியைச் சுரங்கக் கொள்ளையர்கள் ஏற்கப் போகிறார்கள். அதேநேரம் வழக்கம் போல அவர்கள் பிடிபட மாட்டார்கள். பிடிபடுவது போல இருந்தாலும் தளபதி அவர்களைத் தப்ப வைத்துவிடுவார். முடிவு… உளவுச் சொன்னவர்கள் என்கிற சந்தேகத்தில் இரண்டு அப்பாவிகள் உள்ளே செல்வார்கள்’’ என்றான் முத்தரசன்.
‘’ஹா… ஹா…’’ என்று சிரித்த கிங்விங்சன், ‘’உங்கள் தளபதியும் கொஞ்சம் மூளைக்காரன்தான். ஆனால், என்னோடு கம்பேர் பண்ணா ஸ்கூல் பாய்… ஸ்கூல் பாய்னா என்ன தெரியுமா முத்ரசா?’’ என்று கேட்டான்.
‘’தெரியலீங்களே’’ என்றான் முத்தரசன்.
சிரித்த கிங்விங்சன்… ‘’பாடசாலைப் பிள்ளை… ஹா… ஹா… அவன் பிளானைப் பயன்படுத்தி என்னோட பிளானையும் முடிக்றேன் பாரு’’ என்றான்.
‘’என்னமோ பண்ணுங்க. ஆனா, உங்க திட்டம் எல்லாம் முடிஞ்சதும் வாக்கு கொடுத்தபடி அந்த தங்கச் சுரங்கத்தில் என்னையும் ஒரு பங்குதாரர் ஆக்கணும்ங்க’’ என்று இளித்தான் முத்தரசன்.
கிங்விங்சன் எழுந்து முத்தரசனை நெருங்கி தோளில் கைபோட்டான்… ‘’நிச்யமா முத்ரசா… ஒரு சுரங்கமே உனக்குச் சொந்தம்’’ என்றான்.
முத்தரசன் குழப்பத்துடன், ‘’இருக்கிறதே ஒரு சுரங்கம்தானுங்களே’’ என்றான்.
‘’ஹா… ஹா… முட்டாள்… மூடப்பட்டிருக்கும் பல சுரங்கங்களிலும் இன்னமும் கோல்டு கிடைக்கும்’’ என்றான் கிங்விங்சன்.
ஆச்சர்யமான முத்தரசன், ‘’அப்புறம் ஏனுங்க பெரிய ராஜா காலத்திலேயே மூடிட்டாங்க?’’ என்று கேட்டான்.
‘’ஹா… ஹா… உன் பெரிய ராஜா ரொம்ப ரொம்ப மூளைக்காரன். ஆனால், பிழைக்கத் தெரியாதவன். அதுபற்றி டீடெய்லா சொன்னாலும் உனக்குப் புரியாது. உனக்கு தேவை சுரங்கம். அதோடு விடு’’ என்றான் கிங்விங்சன்.
‘’அதானே… எனக்கு எதுக்கு அதெல்லாம்? அப்போ புறப்படட்டுங்களா?’’
‘’போ… உன் தளபதியைக் கவனிச்சுட்டே இரு. இன்பர்மேசன்… தகவல்களைக் கொடுத்துட்டே இரு’’ என்றான் கிங்விங்சன்.
******
தூரத்தில் மலையடிவாரமும் அங்கே இருக்கும் சுரங்கத்தின் கட்டடமும் தெரிந்தது. அதற்கு முன்பாக இருக்கும் அந்தப் பொன் மண்டபமும் தெரிந்தது.
அதனை நோக்கி அந்த ஒற்றையடிப் பாதையில் சூறாவளி மீது வந்துகொண்டிருந்தார்கள் நட்சத்திராவும் குழலனும். புரவியின் முன்பக்கம் நட்சத்திரா இருக்க… பின்னால் குழலன் அமர்ந்திருந்தான்.
சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் தங்கக் கட்டிகள் அந்த மண்டபத்தின் நிலவறையில்தான் பாதுகாக்கப்படும். அயல் தேசங்களில் இருந்து வருகிற வியாபாரிகளுடன் அந்த மண்டபத்தில்தான் வியாபார பேச்சுவார்த்தை, உடன்படிக்கை நடக்கும். பின்னர், தங்கக் கட்டிகளுடனும் வீரர்கள் துணையுடனும் வியாபாரிகள் இந்த ஒற்றையடிப் பாதை வழியே அரிமாபுரிக்குள் நுழைந்து தங்கள் நாடுகளுக்குச் செல்வார்கள்.
அந்த ஒற்றையடிப் பாதையின் இரண்டு பக்கமும் பள்ளத்தாக்கு போல இருக்கும். காலை வைத்தாலோ, வண்டிகள் சற்று நகர்ந்தாலோ சரிந்து கீழே கீழே போகவேண்டியதான். மிகுந்த பயிற்சி இல்லாமல் கீழே இருந்து மேலே ஏறிவர வாய்ப்பே இல்லை.
அந்தப் பள்ளத்தாக்கில்தான் இப்போது சுகந்தனும் இன்னும் நான்கு பேரும் காத்திருந்தார்கள். தனது காதை இயற்கை உருவாக்கிய மண்சுவர் மீது அழுத்தமாக வைத்திருந்த சுகந்தன் நிமிர்ந்தான்.
‘’ஒற்றைப் புரவி வருகிறது. அவர்கள்தான்… தயாராக இருங்கள்!’’
தொடரும்…
- iamraj77@gmail.com