அதிகாலைப் பூந்தோட்டமாய்த்
திடீரென எல்லாம் நிறம் மாறுகிறது
அலகு நீண்ட நீலக்கழுத்துப் பறவையே…
எத்தனை மைல்களைக் கடந்து
புதுக்கண்மாயில் வந்திறங்கினாய்?
இது தட்பமா? வெப்பமா?
அமைதியாய் நின்ற படகின் கயிறை
அவிழ்த்தது யார்?
எறும்பு மொய்க்கிற அளவு
வியர்வை இனிப்பானதெப்படி?
எந்தப் பாதாளக் கரண்டியும் இல்லாமல்
உள்ளே அமிழ்ந்த வாளி
மேலே வந்தது எங்கனம்?
குப்பை எரிந்து காற்றில் படரும்
புகை ஓவியத்தில்
ஒரு நெடுந்தாடி வளர்கிறது
உண்மையைச் சொல்லுங்கள்
இங்கே என்ன நடக்கிறது?
ஏன் திடீரெனப் பரபரப்பாகிவிட்டது
தேநீர்க்கடை?
இந்தத் தெருக்கள் ஏன் இவ்வளவு பரிசுத்தமாகி
நேர்கோட்டில் பயணிக்கின்றன?
புரிந்துவிட்டது
ஹெட்போன்வழி சாத்தான் இறங்கும் நேரமிது
போக்குவரத்து ஐயன்மீர்…
அந்தப் பச்சைவிளக்கிற்கான
பொத்தானை உடனே அழுத்துங்கள்
ஒதுக்கப்பட்ட கூட்டத்திலிருந்து
தேவனும் எட்டிப் பார்க்கிறான்
தன் சுத்தீகரிக்கப்பட்ட காலத்தை.
*********
கோலிக்குண்டின் கண்கள் எப்போதும் பள்ளத்தையே நோக்கியே
தரையில் விழுந்து எம்பும்போது
எழும் சத்தத்தில்
பிசிறைக் கவனிக்கத் தவறுகிறோம்
இணையை மோதித் தழுவுதலைத்
தவற விடும் கணத்தில்
எரிந்து சாம்பலாகாத கோளெனத் தன்னை நம்புகிறது
குறி பார்க்கும் விரல்கள்
திசைகளை அடையாளம் காட்டுவதில்லை
ஒரு நீரோட்டம்
ஒரு பூ
கண்ணாடிக் குமிழாய்த் திரண்டபோதே
அளவிட முடியாதனவாய் மாறின
அதன் எதிரொளிப்புக் கோணங்கள்
ஒரு குட்டிச்சாத்தான் ஊதிய
கனமான சோப்புநுரைகளைத்தான்
இந்த வேகாத வெயிலில்
உருட்டி விளையாடுகிறார்கள்
என் பால்யகால சினேகிதர்கள்.
********
சிற்சில சொற்களால் புனையப்பட்டது
மயக்கம்
பென்சில் அல்லது சாக்பீஸ் குறியீடுகளாய்க் கருதி
அழிக்க முயலும்
கரங்களில் தவழ்கிறது குறுநதி
தவறிழைத்த முதுகில் விழுந்த
புளியமாறின் விளாசலாய்
மாறிமாறிப் படர்கிறது ஒளி
மயக்கத்தின் மீது
அருகில் மிக அருகில் நிகழும்
அசைவைக் கனவெனக் கருதித்
திரும்பிப் படுக்கும் மயக்கத்தின் மீதே பன்னெடுங்காலமாய்
மழையெனப் பொழிகிறது மௌனம்
எதிர்பாராத அடி
கூடுதலான மாத்திரைகள்
திடீர்க் கிலி
மூச்சுத் திணறல்களில்
தப்பித்தவனின் கோப்பையில்தான்
வழிய வழிய ஊற்றப்பட்டன
ஒரு போத்தல் சொற்கள்
பஞ்சாரப் பொழுதுகள், தரைச் சூடு
ஈரத்துண்டு, கழுத்துத் திருகலை நன்கறிந்தபோதிலும்
வேறென்னதான் செய்ய இயலும்
வளர்ப்புக் கோழிகளால்?
*********