இணைய இதழ்இணைய இதழ் 92குறுங்கதைகள்

குறுங்கதைகள் – அன்பு

குறுங்கதைகள் | வாசகசாலை

1. மரி

தவின் கண்ணாடித் துளை வழியே உற்றுப் பார்க்கின்றேன். மரணம் வாசற்கதவை தட்டிக் கொண்டிருந்தாள். அழைப்பொலி பொத்தானை அழுத்தி அழுத்திப் பார்த்தாள். அச்சமும், தயக்கமும் தணிந்த பின்னர், வேறெந்த முடிவும் எடுக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட‌ பின்னர், மரணத்தை உள்ளே அனுமதித்தேன்.‌ அமரச் சொல்லி விட்டு அடுக்களையில் நுழைந்தேன். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பீரெடுத்து, இரு குவளையில் நிரப்பினேன். இருவரும் அருந்தினோம். பேரமைதி நிலவியது. நிசப்தத்தை கிழிக்க விரும்பி, ‘மரணமற்ற அதாவது நீயற்ற வாழ்வு சலிப்பு என்று ஞானிகள் எழுதி வைத்திருக்கிறார்களே, நீ வாசித்ததுண்டா? என்ன எண்ணுகிறாய் நீ?’ என்று வினவினேன். நகைத்தாள். கல்வெட்டு பொறித்தும், நூலென்று எழுதிக் கிறுக்கியும், கருவிகளைக் கொண்டு பாடல் மீட்டியுமென எத்தனையோ பிரயத்தனங்களை புரிந்து தன்னை இப்பிரபஞ்சத்தில் நீங்கமுடியாதபடி நிலைநிறுத்தவே மனிதன்  விளைகிறான். அப்படி நிலைபெற்று நிற்பதினால் அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதை உணராதிருக்கிறான். அவன் பிரயத்தனம் அனைத்தும் வீணாகி, அத்தனையும் காலாவதியாகி விடுகிறது. இதன் பொருட்டும் அவனுக்கு ஒரு தீமையும் விளையவில்லை என்று பதிலளித்து விட்டு என் கழுத்தில் முத்தமிட்டாள். என் கண்கள் இமைகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. போதை கிறக்கம் உச்சந்தலையில் நுழைந்து விட்டது. மயக்க நிலையில் மரணத்தின் நெற்றியில் முத்தமிட்டேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு பேருயர பாலத்துக்கு அழைத்துச் சென்றாள். அதன் சுவற்றில் இருவரும் ஏறி நின்றோம். காற்று எங்கள் முடிகளைக் கோதி விளையாடியது. ‘குதிக்கட்டுமா?’ என்று பேரார்வத்தோடு அவளிடம் கேட்டேன். சிரித்தபடியே அருகில் வந்து, எக்கி என் நெற்றிப் பொட்டில் முத்தமிட்டாள். முத்தமிட்டுக் கொண்டிருக்கும்போதே மாயமாகிப்போனாள். இன்னும் நான் சுவரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறேன். குதித்தால் ஒருவேளை தேவதூதர்கள் தரையில் நான் விழாதபடி தாங்க ஓடி வரலாம்.

********** 

2. வானிங்கே, நீலமெங்கே?

திபேஸ் நாற்காலியில் அமர்ந்து கழுத்தை ஒருபுறம் சாய்த்து மூலையை வெறிக்கப் பார்த்திருந்தான். அவ்விடத்தில் தெரியும் காட்சி அவன் கண்களில் மாத்திரம்தான் விழுந்திருந்ததே தவிர எண்ணங்களில் இல்லை. சிந்தனையில் லயித்திருந்தான். மடியினில் ஏடு இருந்தது. பேனாவை கடித்துக் கொண்டே கவிதையென்று எதையோ எழுத பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். ஏதாகிலும் ஒரு பெண்ணை வசியம் செய்வதற்காகவோ, இல்லை எந்தப் பெண்ணின் அழகிலாவது மயங்கியதாலோ, இல்லை உணர்ச்சிகளைக் கீறி ஒருவனை எழுந்து ஓடச்செல்ல வேண்டும் எனும் முனைப்பிலோ, இல்லை அரசியலையோ, புரட்சியையோ எடுத்துச் சொல்வதாகவோ எழுத அவனுக்குத் தோன்றவில்லை. எதைப்பற்றி யோசிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவன் மனம் வெறுமையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

சற்று நேரம் கழிந்து, மூளை எதையோ உற்பத்தி செய்தது. முக்கிப் பார்க்கிறான். அது வெளிவரவில்லை. தலை தெரியவில்லை. வயிற்றை அறுக்கப் பார்க்கிறான். கத்தியைக் காணவில்லை. பிளேடினை கொண்டு மெதுமெதுவாகக் கீறினான். ஒற்றை வரியின் உருவம் தெரிந்தது.

“பாலைவனத்தில் பனிக்கட்டி திடப்பெருளாய் எவ்வளவு நேரமிருக்கும்?” என்று எழுதினான.


மூளை அலுவலகத்தில் இயங்கும் ஒரு நரம்பு, கை உயர்த்தி எதையோ சொல்ல முற்பட்டது. அத்தனை பேரையும் போல ஏன் வழக்கம்போல் திடப்பொருள் என்று எழுத வேண்டும். திடமென எழுதினால் சுருக்கமாய், அழகாய் இருக்குமே என்று தன் பரிந்துரையை‌ முன் வைத்தது. நேரமும் சாதாரணமாய் புழக்கத்தில் இருக்கும் வார்த்தையாகத்தானே இருக்கிறது. அவகாசம் என்று குறிப்பிட்டால் என்ன என்று இன்னொரு நரம்பு யோசனை வழங்கியது. புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை‌ உபயோகப்படுத்துவதில் என்ன மேன்மை? புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளை பிரயோகிப்பதில் என்ன சிக்கல் என்று ஒரு நரம்பு வாக்குவாதம் செய்யது. புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை கண்டுபிடித்து கொணர்ந்து எழுதுவதைத்தான் நீ கவிதை என்கிறாயா என இன்னொரு நரம்பு அதனோடு கூட்டுச் சேர்ந்தது.

பாலையில் வெயில் மட்டும்தானா இருக்கிறது. இரவிலும் சூரியன் வருவதுண்டோ என்று ஒரு புத்திசாலி நரம்பு ஒன்று, கேள்வி எழுப்பி அவனை புரட்டிப் போட்டது. அது சொல்வதும் சரிதானே என்று சிந்திக்கலானான் திபேஸ். இரவு வெப்பத்தில் பனிக்கட்டி‌ உருகாதா  என்ன என்று அவனை அவனே‌ சமாதானப்படுத்திக் கொண்டான். அதற்கு ஏன் பாலைவனமென குறிப்பிட வேண்டும், சோலைவனத்தில் கூட பனி உருகுமே என்று தன் கேள்விக்கணைகளை மேலும் ஏவியது அந்த புத்திசாலித்தனமான நரம்பு. திடுக்கிட்ட அவன்‌ முன்பெழுதியதை அழித்து விட்டு, அதன் கீழ் எழுதத் துவங்கினான். இம்முறை பாலை வனத்தை பாலையாகச் சுருக்கி விட்டான்.
“பாலை வெயிலில் பனிக்கட்டி திடமாய் எத்தனை அவகாசமிருக்கும்…!”

இதற்கொத்த இன்னும் ஓரிரு உவமைகளை இக்கவிப்பூவில் கோர்க்க அவன்‌‌ மனம் பாடுபட்டது.


“அங்க தனியா உக்காந்து என்ன எய்துற.. போயி கருவப்புல பறிச்சிட்டு வா, எண்ண காய்து” – அவன் அன்னையின் குரல். அவன் அன்னையின் ஏவலுக்கு அடிபணிந்து அவன் கால்கள் அனிச்சையாக எழுந்து வீட்டிற்கு பின்புறம் அவனை நகர்த்தியது.
அவன் மூளை அவனது கட்டுப்பாட்டிற்கிணங்கி அவனறிந்த உலக விசயங்களைத் துழாவி, அவன் தேடும் வார்த்தைகளை வழங்கி, திருப்திப்படுத்தும் முயற்சியில் ஆத்மார்த்தமாய் ஈடுபட்டது. கொழுந்து இலைகளை செடியிலிருந்து அவனது கைகைள் அதுவாகவே பிடுங்கியது. அவனது கட்டுப்பாடற்று, உள்ளிருந்த கார்பன்டை ஆக்ஸைடு இடித்துக் கொண்டு அவன் உடலை விட்டு பின்புறமாக விரைந்தோடியது. அச்சமயத்தில்தான் அந்த உண்மை அவனுக்குப் புலப்பட்டது. உண்மையில் நான்தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறேனா என்று தன்னைத்தானே கேள்வி கேட்டான். இலைகளை சமையலறையில் வைத்து விட்டு மீண்டும் எழுத்தில் மூழ்கினான். அனிச்சை செயல்கள் எவை எவையென பட்டியலிடத் துவங்கினான். மூச்சு விடுதல், இதயம் சுருங்கி விரிதல், உண்ட உணவைச் செரித்தல் என்று அவனது மூளை நரம்புகள் அடுக்கிக் கொண்டே சென்றது. குசு விடுதல் என்று குறிப்பிடுதல் அநாகரீகமாக இருக்கிறதே, நயம்பட எப்படி எடுத்துரைப்பது என்ற எண்ணம் அவனை கலவரப்படுத்தியது. ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு, ஆசனவாய் என்ற சொல் அவனை தட்டியெழுப்பி ஆசுவாசப்படுத்தியது. குண்டித் துளையினை வாயோடு உவமைப்படுத்தி எவ்வளவு அழகாக “ஆசனவாய்” என்ற சொல்லை உருவாக்கியிருக்கிறார்கள் என்று வியந்து கொண்டான்.


“ஆசனவாய் வாசனையோடு கொட்டாவி விடுகிறது..” என்று எழுதி வைத்தான்.

மூச்சு விடுவதைக் குறித்து எழுதுவதை விட்டு விட்டு, மூக்குப் பீ ஒழுகுவதை, அவன் மூளை எழுத்துக்களாக மொழி பெயர்த்துக் கொண்டிருந்தது. மூக்கு அவனுக்கு குகைகளாகப்பட்டது.

“நாசிக்குகைகளில் பச்சைப் பசை அருவி பொழிகிறது” என்று எழுதினான் ..”

“லே, வந்து ஆளோட உக்காந்து சாப்டு, பெறவு கெடந்து எழுது” – கதவுக்கருகில் வந்து நின்று அன்னை கட்டளையிட்டாள்.

“நான், நானாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நான்தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்று” என்பதைக் கடைசி வரியாகச் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். அதற்கு முன்பு இன்னும் இரண்டு வரிகளை இணைத்தால் நன்றெனத் தோன்றியது.

இனி மேலும் இவ்விதமே அமர்ந்திருந்தால், அன்னையின் சப்தம் வலுக்கும் என்பதனை உணர்ந்தவனாய், கைகளைக் கழுகிக் கொண்டு, வட்ட வடிவ குடும்பப் பந்தியில் அமர்ந்தான்.

ஆகாரத்தின் மீது கைகளை விரித்து, “போஜனத்தை அளித்த கர்த்தருக்கு நன்றி” என்று அவன் தந்தை முழங்கினார். கர்த்தர், உணவை அளிப்பதற்கு மாற்றாக, பசியை அழித்தால் என்ன என்ற கேள்வி அவனுள் எழுந்தது. மேலுமொரு கவிதை கண்விழிக்கத் துவங்கியது.

**********

arunanbusingh@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button