இணைய இதழ் 101சிறுகதைகள்

இவன் பெயர் சுதாமன் – மாலா மாதவன்

சிறுகதை | வாசகசாலை

பாரிஜாத மரங்கள் தங்கள் புஷ்பங்களை அர்ச்சனைப் பூக்களாய் வர்ஷிக்க மலர்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் போட்டி போட்டுக் கொண்டு மணம் பரப்பத் தெய்வீக தோற்றம் தரும் தேவலோகத்தில் ருக்மிணி சத்யபாமாவோடு அமர்ந்திருந்த   ஸ்ரீகிருஷ்ணருக்குச் சட்டென விக்கல் ஏற்பட்டது.

“ருக்மிணி! ஏன் இப்படி விக்கல்? யாரது நம் நாதனை நீங்காது நினைப்பது?”

“பாமா! அதுதான் எனக்கும் புரியவில்லை. நினைத்துக் கொண்டே இருக்கும் நாமிருவரும் உடன் இருக்க யாருடைய நினைப்பில் இவர் சுவாசமாய் ஜீவிக்கிறார் என்றுதான் தெரியவில்லை.”

“எல்லாம் அந்த கோகுலத்துக் கோபிகைகளாய் இருக்கும்!” சத்யபாமா கழுத்தை நொடித்துக் கொண்டாள்.

ருக்மிணியின் மலரை ஒத்த கை விரல்கள் மெல்ல கிருஷ்ணரின் கழுத்தைத் தடவிக் கொடுத்தன.

“எந்தப் பெண்ணாம் இப்போது?”

ருக்மிணி முடிவே செய்து விட்டாள். யாரோ ஒரு பெண்தான் தன் நாதனை விடாது நினைக்கிறாள் என்று.

கிருஷ்ணர் அவளையே குறும்பாகப் பார்த்தார்.

“ராதையோ இல்லை கோதையோ?”

இல்லையெனத் தலையசைத்தார்.

“பின் கோபியரோ?”

மீண்டும் தலையசைத்தார்.

“ஓ! சுதாமரோ?”

கிருஷ்ணர் புன்னகைத்த படி கூறினார்.

“இவன் பெயரும் சுதாமன்தான்!”

“அவலோடு வருவானோ?” சத்யபாமா கேட்டாள்.

“அவல் கூட இல்லை அவனிடம்!” கிருஷ்ணரின் கண்கள் கசிந்தன.

“பின்?”

“அவன் மனம் முழுக்க கிருஷ்ண பிரேமை இருக்கிறது. அது போதாதா?”

“யாரவன்? கொஞ்சம் சொல்லுங்களேன் நாதா!” ருக்மிணி சத்யபாமாவோடு கிருஷ்ணரின் காலருகில் அமர்ந்து கொண்டாள்.

“அதோ அவன்தான் சுதாமன்!” கிருஷ்ணர் காட்டிய திசையில் ஒரு குழந்தை கண்ணயர்ந்து படுத்திருந்தது.

“நாதா! அக்குழந்தைக்கு உற்றவர் பெற்றவர் யாருமில்லையா?”

“பெற்றவர் இல்லை. உற்றவர்? அதான் நாமிருக்கிறோமே சத்யபாமா!”

“பிக்ஷை எடுத்துப் பிழைக்கிறானா?” என இடையிட்டாள் ருக்மிணி.

“பவதி பிக்ஷாம் தேஹி! என நானும் தானே கூறி இருக்கிறேன்!”

“எதைக் கேட்டாலும் தங்களிடம் பதில் இருக்கிறது நாதா!”

“பதிலுக்குண்டான கேள்வி உன்னிடம் இருக்கிறதே ருக்மிணி!”

“அந்தக் குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறான்.”

“வயிற்றுவலி என்று உறங்குவது போல் கிடக்கிறான்!”

“ஏனோ?”

“பிள்ளைத் திருடர்கள் அவனைத் திருடி, என் பெயரால் அவனைப் பிக்ஷை எடுக்க வைக்கிறார்கள். ஒவ்வொரு முறை பிக்ஷை எடுக்கும் போதும் என் பெயரைச் சொல்கிறான். சுதாமனென்று அவனுக்கு அவர்களே பெயரும் வைத்து விட்டார்கள். இந்தப் பச்சைக் குழந்தைக்கு யாரந்த கிருஷ்ணனும் சுதாமனும் என்றே தெரியாது. இயக்குபவன் நானிருக்க எவரோ என் பெயர் கொண்டு அவனை இயக்குகிறார்கள். மொத்தத்தில் கிருஷ்ணப் பெயர் கொண்டு இயங்கும் சுதாமா இயந்திரம் இவன்.”

“நெளிவும் சுளிவும் பக்கம் கிடக்கும் அந்தப் பாத்திரத்தில் மட்டுமல்ல. இவன் வாழ்க்கைப் பாத்திரத்திலும்தான் என்று கூறுங்கள் நாதா!” என்றாள் சத்யபாமா. அவளின் தாய் மனம் நெகிழ்ந்து பிள்ளையின் மீது ஆதுரப் பார்வை இட்டது.

“தாங்கள்தான் கிருஷ்ணரென்று சென்று வெளிப்படுத்திக் கொள்ளுங்களேன் நாதா! எனக்கு அக்குழந்தையின் நிலைமை பொறுக்க முடியவில்லை.”

“செல்லலாம் சத்யபாமா! நாடக உலகத்தில் நானும் நாடகதாரியாகி விடுவேனே என சிந்தனை எழுகிறது.”

“கிருஷ்ண! கிருஷ்ண! என தங்களைத்தான் நாள்தோறும் ஸ்மரணம் செய்கிறார்களே. அதுவும் இந்த சுதாமன் மிகவும் அதிகமாய் உச்சரிக்கிறான். ஏன், நேரில் சென்று தரிசனம் தந்தால்தான் என்னவாம்?” ருக்மிணி செல்லமாய்க் கோபம் கொண்டாள்.

“செக்கு மாட்டுச் சிந்தனையோ எனக் கவலைப் படுகிறேன் நான்!” கிருஷ்ணர் உரைத்தார்.

‘இந்த சுதாமன் சின்னக் குழந்தை. அவனைப் போய்.. வாருங்கள்! போகலாம்!” கிளம்பி நின்றாள் சத்யபாமா.

“நீங்களுமா வருகிறீர்கள்? வேண்டாம்! வேண்டாம்! பூலோகம் பொல்லாதது. நான் மட்டும் சென்று அவனுக்குத் தரிசனம் அளித்து விட்டு வருகிறேன்.”

“தங்களை விட்டு நாங்கள் எவ்வாறு இருப்போம் சுவாமி! தங்களுக்குப் பாதபூஜை செய்யாது எங்கள் நாட்கள் விடியாதே!”

“இங்கிருந்தே அதனைச் செய்யுங்கள்! ஆனால், பூலோக நாடகதாரிகள் மத்தியில் உண்மையான கிருஷ்ணரை எவ்வாறு கண்டறிவீர்கள்?” வினவிய கிருஷ்ணர் சட்டென்று தன் பாத விரல்களைப் பெருக்கிக் கொண்டார்.

“நீல மேக ஸ்யாமளா! நித்தம் உன்னைத் துதிக்கும் அந்த சுதாமனின் அருகில் சென்று அவனை ஆற்றுப் படுத்துங்கள்! பகவான் நாமத்தின் மகிமையை அவன் அறிந்து கொள்ளட்டும்! சென்று வாருங்கள் நாதா! நாங்கள் இங்கிருந்தே உம்மைத் துதிக்கிறோம்.”

மாலையிட்ட ருக்மிணியும் சத்யபாமாவும் கிருஷ்ணரை வணங்கிக் கைகுவித்தனர்.

பூலோகத்தில் சரசரவென்று ஓடும் வாகனங்களின் இரைச்சல்களுக்கிடையே காட்டுக் கத்தலாய் காளியனின் குரல் ஓங்கி ஒலித்தது.

“டேய்! ரமேஷு! என்னடாயிது இன்னிக்கு கலெக்‌ஷன் உன் முகரக் கட்டை மாதிரி இருக்குது! ம்ம்! சைதாபேட்டை மார்க்கெட்டாண்ட எவனைடா அனுப்பினோம்? அங்கதான் காசு குறையுது.!”

“காளியா! அது வந்து.. அந்த ரூட்டுல அந்தப் பையன் சுதாமன்தான். அவனுக்குத்தான் வகுத்து வலியா இருக்குல்ல. ரூட்டு பாத்திருக்க மாட்டான்!”

“பார்த்தாண்டா! அவன் பார்த்தான்! தட்டை ஏந்திக்கிட்டு கிருஷ்ண கிருஷ்ணன்னு அவன் கூவுறதையும் பார்த்துகினேன். அவன் தட்டுல காசு விழுந்ததையும் கண்டுக்கினேன். அத்தனை காசும் எங்கடா போச்சு! பெக்காம பெயர் வச்ச எனக்கே இந்த ஆட்டம் காட்டறானா அவன்? தூக்குங்கடா அவன்!”

“அவனுக்கு வகுத்து வலி காளியா! மார்க்கெட் தெரு ஷட்டராண்ட தலகாணி போட்டு படுக்க வச்சுட்டு வந்துருக்கேன்.”

“யாருமில்லாத பய அவன்! அவன் மேல உனக்கென்னடா இம்புட்டு கரிசனம்? என்ன தத்துப் புள்ளையா அவன் உனக்கு? ரூட்ல ஏதும் கோல்மால் நடந்துதுன்னு வச்சுக்க.. கீசிப்பிடுவேன் கீசி! சரி! அவனை இட்டார வேணாம். குறைஞ்ச காசெல்லாம் எங்க போச்சுன்னு நீ சொல்லு! உனக்குத் தெரியாம இருக்காது.”

காளியன் சத்தம் போட்டான்.

“வந்து! வந்து!”

“சொல்லுடா! எங்க போச்சு அந்தப் பணம்? வீதி வீதியா கலெக்‌ஷன் பண்ணி நானா கோட்டை கட்டிக்கறேன். வீதி ஊராகி ஊர் நாடாகி.. இது ஒரு பெரிய வட்டம்டா. நீ எனக்கு கலெக்‌ஷனைக் கட்டற மாதிரி எனக்கு மேல இருக்கறவனுக்கு நான் கட்டணும்ல! அஙக என்ன என் கைக்காசைப் போட்டு கட்டச் சொல்றியா?” காளியன் விஷத்தைக் கக்கினான்.

“அது.. அது வந்து காளியா! சொன்னா அந்தப் பையன் சுதாமனை ஒண்ணும் செஞ்சற மாட்டியே? நீ கிருஷ்ண! கிருஷ்ண அப்படின்னு சொல்லி பிச்சை எடுக்கச் சொன்னியா? அந்த கிருஷ்ணன் யாருன்னு என்கிட்ட கேட்டானா? நான் என்ன நம்ம அடியாளு கிட்ணனையா காமிக்க முடியும். சின்னப் பயதானே.. அவனுக்குப் புரியறாப்ல மார்க்கெட்ல இருக்கற கிருஷ்ணன் கோவில காமிச்சேன் காளியா. சொன்னதுல இருந்து பய ரூட்டு பார்த்ததும் அந்தக் கோவிலே கதின்னு கிடக்கறான். சேர்ந்த கலெக்‌ஷனையும் அந்தக் கோவில் உண்டியல்ல சேர்த்துப்புடறான். அது எனக்கே நேத்து எதேச்சையா கண்ணால பார்த்தப்புறம் தான் தெரியும்.”

“என்ன கொழுப்புடா இவனுக்கு! வேலையும் கொடுத்து சோத்தையும் கொடுத்து வாழ வக்குறது நானு. துட்டு எவனுக்கோவா? அந்த உண்டியல் காச எவனோல்ல எடுத்துக்கறான். இன்னிக்கு விட மாட்டேண்டா அந்த சுதாமா பயல. கிளம்புடா பஜாருக்கு!” காளியன் செந்தீ ஜொலிக்கும் கண்களுடன் ஒரு சிறு பிள்ளையை நையப் புடைக்க ஆயுதங்களுடன் கிளம்பினான். பின்னாடியே பதறித் தடுத்த படி ரமேஷும்.

“ஏண்டா?”

“விட்டுடு காளியா! இனி அந்த கிருஷ்ணன் கோவிலுக்குப் பதிலா உன்னைய கிருஷ்ணனா அவனுக்குக் காமிச்சறேன். கரெக்டா உனக்கு கலெக்‌ஷன் காசு வந்துரும்!”

“அத்து!” என்றபடி அமர்ந்தான் காளியன்.

மார்க்கெட் தெரு அந்த நள்ளிரவிலும் பரபரவென்று செல்லும் வாகனங்களுடன் உறவாடிக் கொண்டிருந்தது. ஒருபக்கம் லாரி வந்து நின்று தங்கள் முதுகுச் சரக்கை முடிச்சவிழ்த்து பாதையில் நிரப்பிக் கொண்டிருக்க, மறுபுறம் அதை சிறு வியாபாரிகள் தங்கள் பங்கீடாய் சேமித்து மூட்டைக் கட்டிக் கொண்டிருக்க சுதாமன் படுத்திருந்த மதுரா விலாஸ் ஷட்டர் அருகே மட்டும் ஒருவித பரிமள சுகந்த மணம். சீதைக்காய் லட்மணன் கோடு இட்டாற்போல் அந்த இடம் அருகிலும் தெய்வீகக் கோடு ஒன்று இடப்பட்டிருந்தது யார் கண்ணுக்கும் தெரியவில்லை.

படுத்திருந்த குழந்தை சுதாமன் அந்த அரை குறை உறக்கத்திலும் தன் போக்கில் கிருஷ்ண! கிருஷ்ண! என உச்சரித்துக் கொண்டு கைகளை ஏந்தி ஏந்தி இறக்கினான். உச்சரிப்புக்கு உரியவன் தன் பக்கத்திலேயே அமர்ந்திருப்பதை அந்தக் குழந்தை மனம் அறிய வில்லை.

பட்டுப் பீதாம்பரத்தில் சர்வ அலங்கார பூஷிதராய் கழுத்தில் தன் மனைவியர் இட்ட மாலையுடன் சாட்சாத் கிருஷ்ண பரமாத்மா அந்தச் சிறுவனின் நிர்மலமான பக்தியைக் கண்டு மயங்கி அவனருகில் அமர்ந்து கண்மூடி அவன் கண்விழிக்கக் காத்திருந்தார். குழந்தை சுதாமனைத் தவிர யார் கண்ணுக்கும் அவர் புலப்படாது இருந்தார்.

எழுந்ததும் இவன் என்னைப் பார்த்து என்ன செய்வான்? பிரமிப்பானா? வணங்குவானா? அழுவானா? ‘கிருஷ்ணா நீ வந்துட்டியா? எனக்குப் பொன்னும் பொருளும் மாட மாளிகையும் தந்து என்னைப் பணக்காரனாக்கு’ என்பானா? ‘என்னை எல்லோரும் பயமுறுத்தி பிக்ஷை எடுக்க வைக்கிறாங்க.. அவங்களை அழிச்சுடு’ என்பானா? ‘அந்தக் கிருஷ்ணன் கோவில்ல இருக்கற கிருஷ்ணன் மாதிரியே இருக்கியே’ எனத் தடவிக் கொடுப்பானா? ‘என்னை விட்டுப் போகாத கிருஷ்ணா! என் கூடயே இருந்துறேன்’ என அடம் பிடிப்பானா?”

சிந்தனை வயப்பட்ட கிருஷ்ணர் உறங்கும் அவனையே பார்த்தபடி ஷட்டர் மேல் சாய்ந்திருந்தார்.

சரசரவென்று அவர் மேல் அர்ச்சனைப் பூக்கள் விழுந்தன. தேவலோகத்தில் தன் தேவியர் செய்த பூஜையின் பலாபலன்கள் பூக்களாய் தன் மேல் வர்ஷிக்கின்றன எனப் புரிந்து கொண்ட கிருஷ்ணர் மெல்லத் தன் ஆறாம் விரலை அசைத்தார்.

சுற்றும் காற்றில் சுகந்தம் வீதியெங்கும் பரவ அதன் மணம் தாங்காது கண்விழித்தான் சுதாமன்.

“ஆ! நேரமாயிடுச்சே! காளியன் திட்டுவானே!” எனக் கூறியபடி திரும்பியவன் அருகில் அமர்ந்திருந்த கிருஷ்ணரைப் பார்த்து விட்டு..

“அட! ரூட்டுக்குப் புதுசா? நானெல்லாம் ரொம்பச் சின்னப் பயலா இருக்கப்பவே இந்த ரூட்டுக்கு வந்துட்டேன். எனக்கு காளியாதான் சுதாமான்னு பேரு வச்சு தட்டேந்த விட்டான். உன்னைய வேஷமே கட்ட வச்சுட்டானா? வா! வா! இந்தா தட்டு! ரூட்டுக்குக் கிளம்பு! துட்டெல்லாம் அந்த கிருஷ்ணன் கோவில் உண்டியல் இல்ல.. அங்கதான் போடணும் தெரியும்ல! அவன்தான் நாம சொல்ற கிருஷ்ணனாம்! வா! வா!”

என்ற சுதாமன் பழக்க தோஷத்தில் ‘கிருஷ்ண! கிருஷ்ண!’ எனக் கூறிக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தான்.

கடவுளே அருகில் வந்தாலும் கண் தெரியா குருடர்கள் இந்த மனிதர்கள் எனப் புரிந்த கிருஷ்ணரும் தன் லோகத்தை நோக்கிச் சென்று விட்டார்.

ரமேஷ், சுதாமனைப் பார்த்து “டேய்! தப்பாச் சொல்லிட்டேண்டா! இந்தக் காளியாதான் கிருஷ்ணன். கலெக்‌ஷன் துட்டைக் கொண்டாந்து இங்கயே கொடுத்துடு” என்றான்.

கடவுளே வந்தாலும் இந்த நிலை மாறாது! காட்சியின் சாட்சியாய் கலிபுருஷன் சிரித்தான்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button