
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒத்த வீட்டில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்து விட்டதாக கேள்விப்பட்ட பொது மக்கள் கூட்டம், கூட்டமாக ஒத்த வீட்டின் முன்பாக குழுமியிருந்தனர். பார்க்கும் திசையெங்கும் பசுமையப்பிய திராட்சைத் தோட்டங்களுக்கு மத்தியில், கோடு கிழித்தாற் போல், ஓடும் ஒரு பாலோடையை ஒட்டித்தான் ராமுத்தாயி கிழவியின் வீடு. அவரது கணவர் பேய்காமனுக்கு, ஓடையை ஒட்டி, ஒரு 5 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் ஒரு பாதி தென்னையும், மற்ற இடங்களில், வாழையும், ஆங்காங்கே தரை வெள்ளாமைகளும் பயிரிடப்பட்டிருந்தன. ராமுத்தாயிக்கு, சிங்கமுத்து, கட்டையன் என இரண்டு மகன்களும், காமாட்சி என்ற ஒரு மகளும் உண்டு. மகன்கள் இருவருக்கும் அந்த பகுதியிலுள்ள வேறொரு நிலத்தை பங்கு பிரித்து கொடுத்து விட்ட பேய்க்காமன், மீதம் இருக்கும் நிலம் மனைவி ராமுத்தாயிக்குத்தான் சொந்தம் எனவும், அவள் இல்லாத காலத்தில், மகள் காமாட்சிக்கு பங்குண்டு என தன் வாழ்ந்த காலத்திலேயே உயில் எழுதி வைத்துவிட்டார். நீண்டநாளாய் உடல் உபாதையால் அவதிபட்டு வந்த பேய்க்காமன் மரித்த பின்பு ராமுத்தாயி மட்டும் ஒண்டிக்கட்டையாய் வாழ்ந்தாள்.
இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும், ஒரு பைக்கில், அவர்களை மறித்து சென்ற மாடுகளை ஹாரன் அடித்து நகர்த்திக் கொண்டே வந்தார்கள். அங்கே போலீஸ் வருவதைக் கூட யாரும் பொருட்படுத்தாமல், ஊர்மக்கள் தங்களுக்குள் நடந்த சம்பவத்தை பற்றி பொறணி பேசிக் கொண்டிருந்தனர். சுற்றி வேலி அமைக்கப்பட்ட அந்த ஓட்டு வீட்டுக்கு முன்பாக வண்டியை நிறுத்திய இன்ஸ்பெக்டர், வேலியின் வாசலின் அமர்ந்திருந்த கிழவியின் மகன்களைப் பார்த்தார். இருவரும் நாற்காலி போட்டு அமர்ந்து சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். இளைய மகளான காமாட்சி, கொட்டத்தில் கட்டி வைத்திருந்த மாடுகளுக்கு புண்ணாக்கு கரைத்தவாரே இன்ஸ்பெக்டரைப் பார்த்தார். இன்ஸ்பெக்டர் பார்த்த உடனே அது தன்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த, புளியங்கா காமாட்சிதான் எனத் தெரிந்துக் கொண்டார். அவள் இவரைப் பார்த்து புன்னகை செய்ய வேண்டுமென நினைத்தாலும், அந்த சூழல் பல்லைக் காட்ட தோதுவான இடமாகப் படவில்லை.
இன்ஸ்பெக்டர் முத்துசாமி, கான்ஸ்டபிளிடம் “யோவ்.. இவங்கள பூராம் பத்தி விடுயா..வந்துட்டாங்க.. எப்ப எவன் குடியக் கெடுக்கலாம்னு” என்றார்.
உடைந்திருந்த மரக்கதவின் தாழ்ப்பாளைப் பார்த்த முத்துசாமி, அதனை தன் போனில் படமெடுத்துக் கொண்டார். பின்னர் மெதுவாக உள்ளே செல்ல, இருள் நிறைந்த அந்த வீட்டில், பாத்திரங்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன. கிழவி கட்டிலுக்கு கீழே, பிணமாக கிடந்தாள். கயிற்றுக் கட்டிலின் ஒரு காலால், அவளது நெஞ்சை நசுக்கியிருக்கிறார்கள். மேலும், கிழவியின் கழுத்திலிருந்து ரத்தம் வழிந்து உறைந்திருந்தது. பீரோவிலிருந்து துணிகள் எல்லாம் சிதறிக் கிடந்தன. விறகடுப்பில் சோற்றுப் பருக்கைகள் சிதறிக் கிடக்க, அந்த பாத்திரம் நெளிந்திருந்தது. முத்துசாமி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் போனில் போட்டோ எடுத்துக் கொண்டார். பின்னர் கான்ஸ்டபிளிடம்,
“ஃபாரன்சிக்குக்கு சொல்லிட்டியா..?”
“அய்யா, வராங்கயா..”
“அப்டியே ஆம்புலன்ஸ்கும் சொல்லிரு…”
“சரியா”
முத்துசாமி வீட்டிற்கு பின்புறமாக இருந்த கிணற்றுப்பக்கமாக போனார். அங்கே அவரைச் செடிகள் பயிரடப்பட்ட பாத்தியில், நிறைய கால்தடங்கள் தென்பட்டன. குறிப்பாக கிழவியின் வீட்டை ஒட்டியிருந்த, அந்த ஒற்றைப் பாத்தியில் மட்டும் நிறைய கால்தடங்கள் இருந்தன. அப்போது அங்கு வந்த சிங்கமுத்து, தன் லுங்கியை இறக்கி விட்டு, முத்துசாமியை பார்த்து வணக்கம் வைத்தான். முத்துசாமி, தன் பாக்கெட்டிலிருந்த ஹான்ஸ் பாக்கெட்டை எடுத்து சிறிது உதட்டோரத்தில் வைத்துக் கொண்டான்.
“யாரு இத மொதல பாத்தா?”
“அய்யா.. நம்ம வீட்டுக்கு பால் கறக்க வர பயதான். எப்பவும் வந்து கத்துனா கிழவி வந்துரும். இன்னைக்கு வரலேயேனு அவனுக்கு ஒரு சந்தேகம். ஜன்னல் வழியா எட்டிப் பாத்திருக்கான் கிழவி பிணமா கிடக்கிண்ணுட்டு பதறிப் போய் எனக்கு போன் அடிச்சான். நானும், தம்பியும் ஓடனே ஓடியாந்து பாத்தம்யா.. எங்களுக்கு ஈரக்கொலையே நடுங்கிப் போச்சு” என்றவாறே தன் துண்டை எடுத்து நெஞ்சிலிருந்த ஈரத்தை துடைத்துக் கொண்டான்.
“உங்க ஆத்தாவ கடைசியா நீ எப்ப பாத்த..”
“நேத்து… சாயங்காலம், இங்கிட்டு வண்டியில போறப்ப, தேங்காய் இறக்கிறத பாத்துகிட்டு இருந்துச்சுய்யா.. நான் வண்டிய நிறுத்தி பேசுனேன். வீட்டுக்கு கொஞ்சம் தேங்காய் வேணும் எடுத்து வைய்யினு சொல்லிட்டு போனேன்யா.. ஆத்தாவும் ஆகட்டுமுணுச்சு.. அதேன் நான் கடைசியா பாத்தது.”
“சரி, நீ போ… உன் தங்கச்சிய வர சொல்லு…”
அப்போது அங்கு வந்த கான்ஸ்டபிள் “ஐயா.. ஃபாரன்ஸிக் வந்துடாங்கயா” என்ற சமயம் காமாட்சி அங்கு வந்தாள்.
“நீங்க கடைசியா.. உங்க ஆத்தாகிட்ட எப்ப பேசுனீக.?”
“நேத்து நைட்டுதான் போன்ல கூப்பிட்டுச்சு, தேங்காய் இறக்கிருக்கேன்… எண்ணைக்கு வேணா வந்து மருமகன எடுத்துக்கு போக சொல்லிச்சு.. நாந்தே எப்டியும் ஆடிக்கு வீட்டுக்கு வருவேன்ல அப்ப எடுத்துக்கிறேனு சொல்லிட்டேன்…” காமாட்சியின் தொண்டை அடைத்தது. அவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. சேலை முந்தானையால் மூக்குச்சளியை சிந்திக் கொண்டாள். “சரி போங்க” என முத்து சொன்னதும், அவனை தன் முட்டை கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
“யோவ்.. இது எவன் வேலையாய்யா இருக்கும்… சம்பவமே புதுசா இருக்கேய்யா.. கிழவி பீரோவுல சீல துணிய தவற ஒண்ணுமில்ல.. காதில தந்தட்டியும், விரல்ல ஒரு கல்லு மோதிரத்த தவிர ஒண்ணுமேயில்லயே.. இத அடிச்சுட்டு போகவா இவங்க வந்தாங்க.. அதுவும், காத கீத அக்காம.. நேக்கா தந்தட்டிய கழட்டிட்டு போயிருக்காங்களேய்யா.. வீட்டை ஒடச்சு உள்ள வந்திருக்காங்கன்னா வேற எதோ பெருசா அடிக்கத்தான்யா பிளான் போட்டிருக்காங்க”
“எனக்கு அப்படித்தான்யா தோணுச்சு.. ஒரு தந்தட்டிக்காக கிழவிய கொல்லுற குருப்பு நம்ம லிஸ்டிலயே இல்லையே..”
“சரி.. இரண்டாவது ஆளு கட்டையன கூப்புடு.”
“அவன் கிட்ட பேசுனா.. நமக்குத்தான்யா கிறுக்கு பிடிக்கும்.. சரியான திக்குவாய் அவனுக்கு.. அவன் என்ன பேசுறானே அவனுக்கும் புரியாது, நமக்கும் புரியாது.. இதுலே கஞ்சாவ அடிச்சுட்டானா ஆளு முழு ஊமை ஆகிருவான்”
இருவரும் பேசிக் கொண்டே வீட்டிற்கு முன்பாக வர, பாரன்சிக் ஆட்கள் தடயங்களைச் சேகரித்து கொண்டு வெளியே வந்தனர்.
“பெருசா பிங்கர் பிரிண்ட்ஸும் மாட்டல… ஆனா, வீட்டுக்குள்ள நிறைய சாணி நாத்தம் அடிக்கிது.. பிளட் சாம்பிள் எடுத்திருக்கோம். நாங்க செக் பண்ணிட்டு ரிப்போட் அனுப்புறோம்” என அவர்கள் கிளம்ப, அந்நேரம் பார்த்து ஆம்புலன்ஸும் வந்து சேர்ந்தது. பாடியை வெளியே எடுத்துக் கொண்டு வர, காமாட்சி தன் தாயை இமை மூடாமல் நிலைகுத்தி பார்த்த வண்ணமிருந்தாள். ஊரிலிருந்த சில கிழவிகள், தலையை விரித்து போட்டு, திடீரென ஒப்பாரி பாட ஆரம்பித்துவிட்டார்கள்.
இரண்டு நாட்களுக்கு பின்பு முத்துசாமியும், கான்ஸ்டபிளும் போலீஸ் ஸ்டேசனுக்கு அருகே உள்ள பெட்டிக் கடையில் பைக்கில் வந்து இறங்க, அப்போது கடைக்காரன் அவருக்கு வணக்கம் வைத்தான். அவர் கண்டுகொள்ளாதது போல், பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைக்கிறார். அப்போது கண்ணாடி ஜாடியிலிருந்து பிஸ்கெட்டை எடுத்த கான்ஸ்டபிளிடம், ‘அவர் ஏன் கோபமாக இருக்கிறார்?’ என கடைக்காரன் சைகையில் கேட்க,
“அதொண்ணுமில்லடா, ஒத்த வீட்ல கிழவி செத்துச்சுல.. அந்த கேசு விசயமாதான் கொஞ்சம் டென்சனா இருக்காரு.. சம்பவம் புதுசா இருக்கு.. யாரு இத பண்ணிருப்பாங்கனு கணிக்க முடியல”
கடைக்காரன் புன்னகையுடன் “என்னா சார்.. இருக்கவே இருக்காரு.. நம்ம ரைட்டர் கருப்பசாமி ஐயா.. அவருக்கு தெரியாத வரலாறா.. சம்பவம் எப்டி நடந்திருக்குனு அவருக்கு சொன்னிங்கனா.. ஆளு யாரா இருக்கும்னு அவரு கணுச்சு சொல்லிருவார்ல”
“அது யார்யா கருப்பசாமி”
“சார், நீங்க இந்த ஸ்டேசனுக்கு புதுசு. நம்ம ஸ்டேசன்ல, 20 வருசத்துக்கு மேல வேல பாத்த கருப்பசாமி இப்ப ரிட்டேர்ட் ஆகிட்டு, பொழுது போகாம ஒரு பெட்டி கடை வச்சு உக்காந்திருக்காரு.. எதாச்சும் திருட்டு கேசோ, கொலை கேசோ… அவர பிடிச்சும்னா ஆளு யாரா இருக்குமுனு யூகிச்சு சொல்லிருவாரு..”
முத்துசாமி உடனே சிகரெட்டை போட்டுவிட்டு, “அவர ஸ்டேசனுக்கு வரச் சொல்லு.” என கூறிக்கொண்டே பைக்கில் ஏற, டீக்கடைக்காரர், “சார், டூட்டியில இருக்க வரைக்கும்தான் அவர் நம்ம சொல்றத கேட்பாரு.. இப்ப அவரு சொல்றததான் நம்ம கேக்கணும்” எனச் சிரிக்க, முத்துசாமி புரிந்து கொண்டதைப் போல் தலையை ஆட்டிவிட்டு வண்டியை எடுத்தான்.
கருப்பசாமியின் பெட்டிக்கடை முன்பாக ஒரு ஈ காக்காய் கூட இல்லை. அக்கிராமத்து மக்கள் காலையில், வேலைக்குப் போனால் மாலைதான் வீடு வந்து சேருவார்கள். இந்த லட்சணத்தில் இவர் யாருக்காக நாள் முழுதும் கடையைத் திறந்து வைத்திருக்கிறார் என முத்துசாமிக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் இருவரும் கடையின் முன்னாடி நிற்க, கருப்பசாமி கான்ஸ்டபிளை அடையாளம் கண்டு கொண்டு,
“ராசாத்தி, கொஞ்சம் தண்ணி கொண்டாமா..” என்றவாறே தன் பழைய கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார். கருத்த உடலும், முழுக்க நரை ஏறிய பழுத்த தலையும், இரண்டு பக்க காதுகளிலும், அடர்ந்திருந்த நரை முடியும், உப்பிய வயிறும், தொங்கிய மார்பும்தான் அவரது அடையாளங்கள். கண்ணாடி வழியாக இன்ஸ்பெக்டரை உற்றுப் பார்த்த கருப்பசாமி கான்ஸ்டபிளிடம், “என்ன, நம்ம ஸ்டேசனுக்கு எப்பவும், வெளி மாவட்டத்துகாரனதே இன்ஸா போடுவாக.. இவர பாத்தா நம்ம ஊரூ மூஞ்சி மாதிரி தெரியுது”
“ஆமாங்கயா.. நான் அணைப்பட்டிகாரன்தான்.”
“சரி ரைட்டு, வந்த விவரத்த சொல்லுங்க”
கான்ஸ்டபிள் கேஸ் பைலை, ரைட்டரிடம் கொடுக்க, ரைட்டர் அதனை கொஞ்சம் நேரம் ஆழமாக வாசித்துக் கொண்டிருந்தார். இடை இடையே வரும் வாடிக்கையாளர்களுக்கு, மளிகை சாமான்களை கொடுத்தவாறே கேஸ் பைலை முழுவதுமாக வாசித்தார்.
“சம்பவ இடத்தில எடுத்த போட்டோ எதும் வச்சிருக்கீங்களா?” என்றதும்
முத்து, தன் போனிலிருக்கும் போட்டோக்களைக் காட்டுகிறான். அந்நேரம் பார்த்து, கருப்பசாமியின் மனைவி டீ கொண்டு வர, மூவரும் அமைதியாக டீ குடித்தார்கள்.
பின்னர் லேசான செருமலுடன், “இதுல போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் இல்ல.. ரிப்போர்ட் படி என்ன சொல்றாக”
“ஐயா.. கழுத்துல கட்டை விரல வச்சு அழுத்தி, சங்குல ஓட்டை போட்டிருகாங்க.. அதுக்கு முன்னுக்க கொஞ்சம் தள்ளுமுள்ளு நடந்ததுல, கிழவி உடம்புல அங்க அங்க கீறல் இருக்கு. மேற்கொண்டு, கட்டிலுக்கு கீழ போட்டு, கட்டிலு காலால நெஞ்ச அழுத்தி பிடிச்சுகிட்டுதே தந்தட்டிய கழட்டிருக்காங்க.. கல்லு மோதிரத்த, கழட்டும் போது கைவிரல உடைஞ்சிருக்காங்க”
டீ கிளாசை கீழே வைத்த அவர், கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொண்டு விரலை காற்றில் பரப்பினார்.
“நம்ம வட்டாரத்துல, திருட்ட தலைமுற, தலைமுறயா பண்ணுற பல குருப்புக இருக்கு.. இதுல முக்கியமாக இந்த ஊரைச் சுத்தி பார்த்தம்னா ஒரே குடும்பம்தான். மூக்கையா குடும்பம். மூக்கையா அந்த காலத்துல, நைட்டோட நைட்டா ஆட்ட களவாண்டுக்கு போய், கறியாக்கி, அந்த ஊருக்கே விக்கிற ஆளு. மந்தையில ஆட்ட தூக்கிறப்ப கத்துச்சுனா உடனே கழுத்த திருகி கொன்டு புடுவாங்க… யாரு வீட்டு ஆடு, யார் வீட்டு கறினு தெரியாம, ஒன்னுமொண்ணா கலந்து கறிகடைகாரனுக்கு வித்திருவாங்க.. அவன் தம்பி ஒருத்தன் இருக்கான்.. அவன் இந்த மோட்டாரு, பம்பு செட்டுக இதுகள களவாடுறதுல கில்லாடி. அவனுக்கு நைட்ட விட பகல்ல திருட்றதுதே ரொம்ப பிடிக்கும். மத்தியான நேரத்துல கயித்த கட்டி கிணத்துல இறங்கி அரவமில்லாம மோட்டார கழட்டி மேல ஏத்திருவான். பிறகு அத சாக்க சுத்தி சைக்கிள்ல கட்டி, எதோ புண்ணாக்கு மூடை கொண்டு போறாப்புல ஊருக்குள்ளயே போவான்”
இடையில் ஒரு சிறுமி வந்து மிட்டாய் கேட்டது. அதை எடுத்து கொடுத்துக் கொண்டே பேச்சை தொடர்ந்தார்.
“மூக்கையனுக்கு ரெண்டு ஆம்பள பயலுக, ஒருத்தன் மிலிட்ரிகாரன்.. இவங்க சாவகாசமே வேணாம்னுட்டு, தேனி பக்கமே வீட்ட கட்டி செட்டில் ஆகிட்டான். சின்னவன் இசக்கி ஒண்ணா நம்பர் களவாணி பய, ஊர சுத்தி ஒரு உண்டியல விட்டு வைக்கிறதில்ல.. கோயில் கதவ, கடப்பாறைய வச்சு பேத்து எடுத்துட்டு, அப்டியே உண்டியல தூக்கிட்டு எல்லாத்தையும் எடுத்துட்டு எதாச்சும் கிணத்துல, உண்டியலத் தூக்கி போட்டிருவான். ஆனா, இவங்க களவாடுறத யாராச்சும் பாத்துட்டா அவ்ளோதேன்.. ஒரு வாட்டி அப்டிதே.. பூசாரி ஒருத்தர் உண்டியல் அடிக்கிறத பாத்துட்டு கத்திருக்காரு… இழுத்து வச்சு நாக்க அறுத்துவிட்டான். அடிக்கடி மாட்டிகிட்டு ஜெயிலுக்கு வருவான். அப்பறம் ஒரு 6 மாசம் உள்ள இருந்துட்டு, இங்கயே நிறைய திருட்டுத்தனம் பண்ணுவான். ரிலீஸ் ஆகிட்டு போறப்ப. அவன் பாட்டுக்கு, லத்தி, போலீஸ் தொப்பினு என்னத்தையாவது களவாண்டுகிட்டு போயிருவான்.. அப்பறம் அவன தேடிப் பிடிச்சு மறுபடியும் வாங்கிட்டு வரணும்”
“இத்தனையும் எப்டியா நியாபகம் வச்சிருக்கீக?”
“என்னா தம்பி, 20 வருசம், எத்தனை கேச இந்த கைப்பட எழுதிருக்க மாட்டேன். அதுலயே ஊறி ஒவ்வோருத்தன் வரலாறும் மனசுல நச்சுனு பதிஞ்சு போச்சு. எனக்கு இந்த டீவி பாக்குற பழக்கமும் இல்ல. நியூஸ் பேப்பர்ல இருக்க ஒவ்வொரு செய்தியா நோண்டி நோண்டி வாசிப்பேன். வேற பொழுது போகணுமில”
“சரி, பாய்ண்டுக்கு வாங்க” என கான்ஸ்டபிள் பேச்சை திசை திருப்பினார்.
“இப்ப இவங்க வம்சாவளியில இருக்கிறவங்க, இசக்கி மகங்க இரட்டை பிறவி. ராமரு, லட்சுமணன். ரெண்டு பேரும் இங்கிலீஸ் படம் நிறைய பாக்குற ஆளுக, ரெட்டை பிறவினால ஒரே மாதிரிதே இருப்பாங்க.. இவன பிடிச்சா.. நான் பண்ணலம்பான். அவன பிடிச்சா நான் பண்ணலம்பான். இவங்க களவாணித்தனமெல்லா பெரிய லெவலாதான் இருக்கும். ஒருவாட்டி கூட்டுறவு பேங்குலயே கை வச்சுட்டாங்க.. அடிச்ச காச, ஒரு 6 மாசம் அந்த பேங்க்ல வேலை செய்ற ஒருத்தனுக்கே வட்டிக்கு குடுத்திருக்காங்க. அவன் சீரியல் நம்பர வச்சு ஆள புடிச்சுட்டான். அப்பறம் ஸ்டேசன்ல வச்சு அடி உரிச்சோம். இவன் மாட்டுனா.. இன்னொருந்தன்தேன்.. நான் பண்ணலம்பான்.. நானே பாவம் அப்டிங்கிற மாதிரி நடிப்பான். அவன அடிச்சா, எனக்கு தெரியாதும்பா.. இப்படி மாத்தி மாத்தி நம்மளயே சுத்தல்ல விடுவானுங்க”
“ஒருவேள இத கூட இவங்க பண்ணிருக்க வாய்ப்பிருக்கா”
“நிச்சயமா இல்ல.. ஸ்கெட்சு போட்டு களவாணித்தனம் பண்றவன் எவனும் கொலை செய்ய மாட்டான். இது எவனோ புதுசா இறங்கிருக்கான். தொழில் பழக்கமில்லாத ஆளு.. அவன் தாழ்பாள உடைச்சிருக்க விதத்துல தெரியல, கல்லெடுத்து அடிச்சு, படாத பாடு பட்டுத்தேன் உடைச்சிருக்கான். அப்டி உடைக்கிறப்பதா.. ஊருக்குள்ள இருந்து கிழவி வந்திருக்கு. இது ஒரு 7-8 மணி வாக்குல நடந்திருக்கலாம். கிழவி வெளிய போற நேரம் பாத்து இறங்கி அடிக்கணும்னு அவன் கவனுச்சிருக்கான். அப்ப நல்லா நோட்டம் விட்டுதே பண்ணிருக்காங்க. அவங்க நகையத் திருட வந்த கும்பல் மாதிரி தெரியல.. வேற எதோ பெருசா திட்டம் போட்டு வந்திருக்காங்க. அது என்னனு கண்டுபிடிங்க..அப்பறம் ஆள புடிச்சிரலாம்” என்றார்.
பின்னர் இவர்கள் இருவரும், கருப்பசாமியிடம் விடைபெற்றுக் கொண்டு பைக்கில் ஏறி அமர, ஏதோ யோசித்தவராய் அங்கு வந்த கருப்பசாமி, “தம்பி, எதுக்கும் குடும்பத்துக்குள்ள சொத்துப் பிரச்சனை எதும் இருக்கானு பாருங்க.. அந்த ஒத்த கிழவிக்கு அஞ்சு ஏக்கர் நிலமுனு சொல்லும் போதே எதோ இடிக்கிது.” என்றதும் முத்துசாமி ‘சரி’ என்பது போல் தலையை ஆட்டி விட்டு வண்டியை எடுத்தான்.
ஸ்டேசனில் கரண்ட் கட் ஆகியிருந்ததால், ஊழியர்கள் எல்லோரும், வெளியே நின்று அரட்டை அடித்த வண்ணமிருந்தனர். முத்துசாமியை பார்த்ததும், மற்றொரு கான்ஸ்டபிள், “சார்.. ஒத்த விட்டு கிழவியோட பசங்க ரெண்டு பேரும் வந்திருந்தாங்க.. கிழவிகிட்ட இருந்த நிலப்பத்தரம் எல்லாம் காணாமப் போயிருக்குனு புகார் குடுத்துட்டு போயிருக்காங்கய்யா”
அப்போதுதான் முத்துசாமிக்கு லேசாகப் பொறி தட்டியது. பத்திரத்தை திருடத்தான் ஆட்கள் வீட்டில் இறங்கியிருக்கிறார்கள் எனத் தெரிய வந்தது. ஆனால், அது கிழவியின் மகன்களுக்குத்தானே அவசியம். அதை ஏன் இவர்கள் திருடச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியதும், அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பின்னர் அவன் கிழவியின் தோப்பில் பண்ணைக்கு வேலை செய்யும் ஆட்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்தான். விசாரணையில், தற்போது கிழவிக்கு சொந்தமான நிலத்தில், ஒரு நல்ல ஊத்தெடுக்கும் கிணறு இருப்பதாகவும், அந்த கிணறு எல்லோருக்கும் பொதுவான கிணறு என்று உயிலில் எழுதப்பட்டுள்ளது என்றும், அதிலிருந்து தன் அண்ணன்கள் இருவரும், குழாய் போட்டு தங்கள் தோட்டத்திற்கு நீரை எடுத்து செல்வது, காமாட்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் காமாட்சிக்கும், கிழவிக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது என்பதும் தெரிய வந்தது. பேய்க்காமன் தான் இல்லாத காலத்தில் மகன்கள், வறண்ட நிலத்தில் நீரிலில்லாமல் சிரமப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அந்தக் கிணறை எல்லோருக்கும் பொதுவாக எழுதி வைத்திருக்கிறார். ஆனால், அந்த நிலத்திலுள்ள கிணறு தனக்கு மட்டும்தான் சொந்தம் எனவும், தன் அண்ணன்கள் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நீரை வேறு யாருக்காவது விற்றால், பெருத்த லாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அடிக்கடி காமாட்சி, தன் தாயுடன் சண்டையிட்டுள்ளது வந்துள்ளாள் என்பதும் தெரிய வந்துள்ளது.
பின்னர், காமாட்சியின் கணவர் சம்பவம் நடந்த அன்று தனது சொந்த வீட்டில் இல்லை எனவும், தோட்டத்தில் நீர் பாய்ச்ச சென்று விட்டதாகவும், கான்ஸ்டபிள் விசாரித்துவிட்டுக் கூற, உடனடியாக காமாட்சியின் கணவரது நிலத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கே பாத்தியில், நீர் பாய்ச்சியதற்கான ஈரப்பதமேயில்லை. உடனே சந்தேகத்தின் பேரில் கணவர், மனைவி இருவரையும், போலீஸ் ஸ்டேசனுக்கு வரச் சொன்ன முத்துசாமி அவர்களிடம், பொதுவாக விசாரிப்பதைப் போல் விசாரணையை தொடங்கினார்.
“அன்னைக்கு நீங்க கிழவியப் பாக்க வீட்டுக்கு போயிருக்கீங்க போல?”
உடனே காமாட்சி கோபமாக, “சார், அவர் நைட்டு எங்க தோட்டத்துக்குதான் போனாரு. ஏன் சார் இப்டி பைத்தியகாரத்தனமா எங்க மேல சந்தேகபட்றீங்க, கேச ஒழுங்கா விசாரிக்கத் துப்பில்லன்னா இஷ்டத்துக்குப் பழிய போடுவீங்களா” என்றாள்.
“ம்மா… இருமா… நீ ஏன் இவ்ளோ கோவப்படுற? தப்பு செஞ்சவரே கம்முனு கூலா உக்காந்திருக்காரு.. தூண்டிவிட்ட உனக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது” என்றவாறே ஒரு கவரைத் தூக்கி அவள் முன்னால் போட, அதில் பீடித் துண்டு, காமாட்சி கணவரின் சட்டையிலிருந்து கிழிந்த சிறிய துணி இருந்தது.
“போஸ்ட்மார்ட்டத்துல என்னடா கெழவி உடம்புல மருந்து வாடை அடிக்கிதேனு பாத்தா.. நீங்க புத்திசாலிதனமா மருந்தடிக்கிற உறைய கையில போட்டு உள்ள போயிருக்கீங்க… ஊருக்குள்ள போயிருக்க கிழவி வர எட்டு மணி ஆகும்னு தெரிஞ்சு அதுக்கு முன்னாடியே கிணத்து மேட்டு பக்கத்துல நிக்கும் போது உங்க புருஷன் பீடியா குடிச்சு தள்ளிருக்காரு.. பிறகு பதட்டம் தணிஞ்சதா நீங்களே நினைச்சுகிட்டு கையில குளோவ்ஸ் எல்லாம் மாட்டிகிட்டு தாழ்பாளை நெளிச்சிப் பாத்திருக்கீங்க, நெளியலனு தெரிஞ்சதும், கீழ கிடந்த கல்லெடுத்து உடைச்சி உள்ள போயி பீரோவத் திறந்து பத்திரத்தை எடுக்கலாம்னு பாத்திருக்கீங்க.. அத எடுத்து ஆதாரத்தை அழுச்சு, மறுபடியும் கிழவிய வச்சு பத்திரத்தை எழுதலாம்னு திட்டம் போட்ருக்கீங்க.. இல்லனா புதுசா ஒன்ன எழுதி வைச்சுட்டு கிழவிய மிரட்டி கைநாட்டு வாங்கலாம்னு திட்டம் போட்டிருக்கீங்க. ஆனா, அந்த நேரம் பாத்து எதர்ச்சையா கிழவி வீட்டுக்கு வர, ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்து, சண்டை முத்தி, கிழவிய போட்டு தள்ளிருக்கீங்க… பிறகு பத்திரத்த எடுத்துட்டு போகும் போது, திருடங்க வந்துட்டு போன மாதிரி இருக்கனுங்கிறதுக்காக, கிழவி தந்தட்டியையும், மோதிரத்தையும் திருடிட்டுப் போயிருக்கீங்க.. அத கிழவி மகளுக்கு அன்புப் பரிசா குடுத்திருக்கீங்க.. அதான” –என்று இருவரையும் பார்த்தவாறு முத்துசாமி சொல்லி முடிக்க, எதிரே இருந்த காமாட்சி மற்றும் அவரது கணவரின் முகமும் வெளிறிப் போயிருந்தது.
அந்நேரம் பார்த்து அங்கு வந்த டீக்கடைகாரன் “சார் டீ.. “ என டேபிளில் மூவருக்கும் டீயை வைக்கிறான்.
ஒரு டீக்கிளாஸை எடுத்து கொண்ட முத்துசாமி, காமாட்சியைப் பார்த்து, “எடுத்துக்கோங்க..” எனக்கூற, அவள் பதட்டமாக டீக்கிளாஸை எடுத்து, அவனைப் பார்த்து கொண்டே உதட்டில் வைத்து ஒரு மிடர் பருக, சூடான டீயால் நாக்கு சுட்டுவிடுகிறது. உடனே அவள் பதற்றத்தில் டீயை வைக்கிறாள்.
“சுடுதா.. ஒரு குத்தம் பண்ணும் போதும் மட்டும், முட்டா பயலுகளுக்கு கூட மூளை எப்படியெல்லாம் வேலை செய்யுதுல்ல.. இந்த உலகத்துல, கெட்டது பண்றதுக்குதான், மனுசன் பல மடங்கு சுறுசுறுப்பா யோசிக்கிறான். நல்லது பண்ணனும்னா மட்டும் மூளை சொனங்கிப் போகுது” என்றவாறு டீயைப் பருகிக் கொண்டே, காமாட்சியின் கணவரைப் பார்த்து, “சார்.. சூடு ஆறிட போது.. டீய எடுத்து குடிங்க.. இனி அடிக்கடி, இந்த டீதான் சாப்பிடற மாதிரிதான் இருக்கும்” என முத்துசாமி புன்னகைத்தார்.