
அகிலா டவர்ஸ் குடியிருப்பு வளாகம் கலகலப்பாக இருந்தது. தரைத்தளத்தில் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து உணவை ருசித்துக் கொண்டிருந்தனர் குடியிருப்புவாசிகள். புது வருடப் பிறப்பு விழா நடத்தி, சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
உணவின் ருசி, தரம் மற்றும் அளவு பல பேருக்குப் பிடிக்கவில்லை என்பதை அவர்களின் முகக் குறிப்பில் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. பிரகாஷ் அதனைக் கூர்ந்து நோக்கவில்லை.
விழா நிகழ்ச்சிகளையும் விருந்தையும் ஒருங்கிணைத்த பிரகாஷ் பரபரப்பாகச் சுழன்று கொண்டிருந்தான். நடன நிகழ்ச்சி அனைவராலும் பாராட்டப்பட்டதும், உணவு சரியான நேரத்தில் வந்ததும் அதனைப் பரிமாறுவதிலும் அகமகிழ்ந்து போயிருந்தான் பிரகாஷ்.
ஷாமியானா எனும் துணிப்பந்தல், நாற்காலிகள், தண்ணீர் வசதி எல்லாமே பிரகாஷ்தான் ஏற்பாடு செய்திருந்தான். எல்லா சேவைகளுக்கும் பணம் கொடுத்தபின், தான் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்த ஒரு துள்ளலோடு, அகிலா டவர்ஸ் புலனக் குழுவில்,”அனைவருக்கும் நன்றி! நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக முடிந்தது, நம் பயணத்தின் வளர்ச்சியைக் குறிப்பதல்லவா! பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டக் கருத்துகளை வரவேற்கிறேன்”என்று ஒரு செய்தியை அனுப்பி வைத்தான்.
“புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தி, குடியிருப்புவாசிகளுக்கிடையில் நட்புறவை நெருக்கமாக்கியதில் மகிழ்ச்சி! எனினும், உணவுக்கான ஏற்பாடு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்”என்ற குறுஞ்செய்தி வந்தது மகேஷிடம் இருந்து.
அவ்வளவுதான், அதைத் தொடர்ந்து ஏறக்குறைய 135 பின்னூட்டக் கருத்துகள்… உணவு சரியாக அமையவில்லை என்பதைப் பற்றி மட்டுமே!
ஒரு மணி நேரத்துக்குள்ளாக அவர்கள் புலனக் குழுவில் ஒரு யுத்தமே நடந்து கொண்டு இருந்தது.
அகிலா டவர்ஸில் ஒரு முழுமையான அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்போர் நலச் சங்கம் இல்லை. ஏனென்றால், 120 யூனிட்டுகளைக் கொண்ட அந்த ஐந்து மாடிக் குடியிருப்பில் இப்போதுதான் எண்பது குடும்பங்கள் வந்துள்ளனர்.
விருப்பமுள்ளவர்கள் நிதி தரலாம் என்ற அடிப்படையில் கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட விழாக்கள் நடந்தன. விழா அமைப்பாளர்களாக பிரகாஷ், மகேஷ், கோவர்த்தன், லீலா,மற்றும் செல்வி இருந்தனர்.
ஆக, அமைப்பாளர்களில் ஒருவரான மகேஷே தன்னைக் குறை கூறியது பிரகாஷுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“ஸ்டுபிட்! நீயும் விழா அமைப்பாளர்தான் மகேஷ்!”என்று தட்டினான் கைபேசியில்.
“சொற்களில் கவனம் இருக்கட்டும், பிரகாஷ். காசு கொடுத்து, மட்டமான உணவை வாங்குனவன்தான் ஸ்டுபிட்“ மகேஷ் பதிலுக்குத் தட்டினான்.
தொடர்ந்து, காரசாரமான விவாதங்கள், வலியூட்டும் வார்த்தைகள், பிற குடியிருப்புவாசிகளின் விமர்சனங்கள்…
விழா அமைப்புக் குழுவில் லீலாதான் வயதில் பெரியவள். அதைத் தனக்கான உயர்வுத் தகுதியாகச் சொல்லி,”பிரகாஷ், மகேஷ், இனிமேல் வேறு கருத்துகளை நீங்கள் இட வேண்டாம். மாலை ஐந்து மணிக்கு ஜிம் வாசலில் சின்ன மீட்டிங். கோவர்த்தன், செல்வி நீங்களும் வரணும்.”என்று செய்தி அனுப்பி கடும் கோபச் சூழலைச் சற்று தணித்தாள்.
மாலை ஐந்து மணி. ஜிம்மை ஒட்டி இருந்த மர நிழலில் வட்ட மேசை மாநாடு. லீலா தன்னுடன் பி பிளாக் பெரியவர் சீனிவாசன் அய்யாவை அழைத்து வந்திருந்தாள்.
சின்னதாக தொண்டைச் செருமலுடன் குழு உரையாடல் ஆரம்பித்து, ஹை பிட்ச் வாக்குவாதமாகப் போய்க் கொண்டு இருந்தது.
“ஸீ, நீங்க கருத்து போடச் சொன்னதால நா போட்டேன். எவ்ரி ஒன் ஹேஸ் தெ சேம் ஃபீல். சாப்பாடு நல்லால்ல! ஸோ, எல்லாரும் கழுவி ஊத்திருக்காங்க! இதுல நா என்ன தப்பு பண்ணினேன்?”மகேஷ்.
’நீ தனியா மெசெஜ் பண்ணியிருக்கலாம். நீயும்தான ஏற்பாட்டாளர் டீம்?”பிரகாஷ்.
“நா பாத்துக்கறேன், நா பாத்துக்கறேன் அப்படின்னு சொல்லிட்டு எல்லாத்தையும் நீங்கதான ஏற்பாடு பண்ணி இருக்கீங்க, பிரகாஷ்.”கோவர்தன்.
”ஸீ, பிரகாஷ், சாப்பாடு ஆர்டர் பண்ணப்போறதைப் பத்தி எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாமே! எங்க பிளாக்ல நான்தான் ஃப்ண்ட் கலெக்ட் பண்ணினேன். இப்ப எல்லாரும் என்னத்தான கேக்கறாங்க”என்றாள் செல்வி.
“இதோ பக்கத்துல நாராயணன் மெஸ் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும். யாருக்கும் ஃபுட் பாய்சன் வராம இருக்கணும்.”
“உங்களுக்குத் தெரிஞ்சவங்களா , ப்ரகாஷ்?”
“அந்த ஃபுட் செயின் காரங்க எனக்கு வேண்டப்பட்டவங்க இல்ல. எனக்கு இதில எந்த லாபமும் இல்ல! சே! கஷ்டப்பட்டு எல்லாம் செஞ்சுட்டு, இப்படி பேச்சு வாங்கணுமா? ஷிட்!.”பிரகாஷ்.
”ஒரு வார்த்தை யார்ட்டயாவது கேட்டிருக்கலாமே?”மகேஷ்.
”ஒவ்வொரு வீடா போய்க் கேக்கணுமா? என்னால எல்லாத்துக்கும் பெர்மிஷன் வாங்கிட்டு இருக்க முடியாது”
“எல்லா ஏற்பாட்டையும் எல்லா குடியிருப்புவாசிகள்கிட்டயும் சொல்லிட்டு பெர்மிஷன் வாங்கி செய்ய முடியாது. அட்லீஸ்ட் நம்ம அஞ்சு பேருக்கும் தெரியணும் இல்ல”லீலா.
“ஏங்க, ‘பிசி நௌ! இன் அஎ கால், பிங் யூ ரைட் பேக்….’ இப்படி உங்க எல்லார் கிட்ட இருந்தும் வந்த மெஸெஜஸ் காட்டவா!”சீறினான் பிரகாஷ்.
முதன் முறையாக சீனிவாசன் அய்யா தன் வலுவான குரலில்,”சரி, எல்லாரும் ஒரு நிமிஷம் அமைதியா இருங்க”என்றார். ஆசிரியையின் தலையீட்டை எதிர்பார்க்கும் சின்னக் குழந்தைகள் போல சீனிவாசன் அய்யாவின் கருத்துக்கு அப்போது பலமான எதிர்பார்ப்பு!
“அகிலா டவர்ஸ், இந்த நகரத்தில ஒரு அபார்ட்மெண்ட்! அவ்வளவுதான்! ஒரு இருநூறு அல்லது முந்நூறு பேருக்குள்ள எத்தன கருத்து வேறுபாடு? இந்த விழாக்கள் ஒரு கொண்டாட்டம்தான்! அதை ஏற்பாடு செய்யவே இத்தனை உளமுறிவும் உறவு முறிவுகளும் தேவையா?
அப்படியென்றால், இன்னும் கடினமான வாழ்க்கைப் பிரச்சினைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்? குடிநீர், லிஃப்ட், குப்பைக் கழிவுகள், சுகாதாரம், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என நம்முடைய அகிலா டவர்ஸ்க்குள் பல பிரச்சினைகள் வரும். தவிர, வெள்ள காலங்கள், பேரிடர் காலங்கள் சமயங்களில் நாம் ‘அகிலா டவர்ஸ்’வாசிகள் எவ்வாறு சமாளிப்போம்?”
சீனிவாசன் அய்யா தருவித்த தேநீரும், காராசேவும் வாய்க்கு உணவாக, அவரது சொற்கள் செவிக்கு உணவாக, இளைஞர்களின் முகத்தில் ஒரு தெளிவு தெரிய ஆரம்பித்தது.
”பொதுவா நம்ம நகரத்துல என்ன நடக்குது? இரண்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்து விட்டால், கிராமத்துக்கு, ஊருக்குப் படையெடுக்கிறோம். ஒரு நாள் விடுமுறை என்றால், இங்கேயே இருக்குற மால்கள், தியேட்டர்கள், கடைகள் என்று போய்விடுகிறோம்.”
“பசங்களுக்காகவும், ஏன் நமக்கே ஒரு மன அமைதிக்காவும் அப்படி போறது தப்பா?” கோவர்தன்.
“கண்டிப்பா இல்ல. வேலை நாட்களில் அலுவல் பணி; விடுமுறை நாட்களில் வேறு திட்டங்கள். அருகில் இருப்பவர்களுடன் எப்போது பழகுவீர்கள்?”
“ஆமா, இப்போ இந்த விழா ஏற்பாடு பண்ணி…. என்ன ஆச்சு? வாட்ஸப் நாறுது”பிரகாஷ்.
“பிரகாஷ், நீ எல்லா ஏற்பாட்டையும் தனியா செஞ்சு இருக்க. அமேஸிங். அதுனால உனக்கு நல்ல பேர் கிடைக்கும் அப்படின்னு நினைச்ச!”
பிரகாஷ் ஆமெனத் தலையாட்ட, ”செங்குத்தா வீடுகள் கட்ட ஆரம்பிச்ச பிறகு மனசோட அகலத்தையும் நாம குறைச்சுக்கணுமா?
இப்ப இதுதான் உங்க ஊரு. இதுதான் உங்க இடம்! நீங்க எல்லோரும் பந்துக்கள்!
நம்ம குடியிருப்புக்கான எத்தனையோ நெருக்கடிகளை நீங்க எல்லோரும் சேந்துதானே சமாளிக்கணும்.!
பிரகாஷ், ஒரு நிகழ்ச்சில உணவு உபசரிப்பு மிக முக்கியமான பகுதி! அதுல கவனமா இருக்கணும்.
பொதுக் காரியங்கள் செய்யும் போது பொதுவா நாலு பேரு கிட்ட கேட்டு செஞ்சா , ஒரு கூட்டுக் கருத்தை உருவாக்க முடியும்.
இந்த மாதிரி விழாக்களை எப்படி நடத்தலாம் அப்படின்னு ஒரு திட்ட வரைவு ஏற்படுத்துங்க! இனிமே, நம்ம அகிலா டவர்ஸ்ல ஒற்றுமையா இருக்க கடும் முயற்சி செய்யணும்.”
”அய்யா சொல்றதுதான் கரெக்ட். நாம தனிப்பட்ட ஈகோவையும் குறைச்சுக்கணும்.”லீலா.
“அடுத்தவங்க சேவைகளைப் பாராட்டணும். நம்முடைய குறைகளைச் சுட்டிக் காட்டினா, அதைத் தவிர்க்க முயற்சிக்கணும். குறிப்பா ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்” என்று சொல்லியபடியே, பிரகாஷ் மற்றும் மகேஷ் கைகளை இணைத்தார்.
“இன்னும் நிறைய நாட்கள் இணைந்து பயணிக்க வேண்டும்! ஒத்துமையா இருங்க”என்றார்.