காட்டில் வசிக்காத மிருகம்
காட்டு வீதியில்
நுழையும்போதெல்லாம்
எனக்குள்ளிருந்த மிருகம்
ஒளிந்தொடி விடுகிறது
எங்கோ தொலைவில்
நகரத்தின் நான்கு சுவர்களுக்குள்
கால் மடக்கி ஒளிந்தபடி
வர மறுக்கிறது
வெளியகத்துக்குள்
பாறைகளுக்கு அச்சப்படாத
சிற்றோடையின்
துணிச்சலை
மென்காற்றின் வருடலுக்கு
உற்சாகம் கொள்ளும்
காட்டு இலையொன்றின் பூரிப்பை
கடந்து போகையில் தலைக்கேறுகிறது பெரும்போதை
உதிர்தலுக்கும் மலர்தலுக்குமாய்
கண்ணீர் வடிக்காத
காட்டின் அணைப்பில்
கொஞ்சம் மனிதனாகவும்
கொஞ்சம் கடவுளாகவும்
மாறிக் கொண்டிருக்கையில்தான்
முடிந்து விடுகிறது
காட்டு வழி
பெருங்காட்டின்
பொக்கை வாயென வீதி மென்று வெளிதுப்பும் எனக்குள்
மீண்டும் நுழைந்துகொள்கிறது
அவ்விலங்கு
ஆம்!
நான் காட்டை விரும்பாத மிருகம்
மனித மிருகம்.
*
பிரகடனம்
என் இருத்தல் உனக்கு
உவப்பாய் இல்லை
என் நகர்வு உன் கோப நரம்புகளைத்
தூண்டிவிடுகிறது
எங்கேனும் ஓரிடத்தில் நோயுற்று
முடங்கிவிட வேண்டுமென்று
கள்ளமாய்ப் பிரார்த்திக்கிறாய்
என் எல்லா வழிகளிலும்
பெரும் பாறைகளைத் தள்ளிவிட
ஆள் சேர்க்கிறாய்
பிரிய எதிரியே!
என் நரம்புகள் பசியெனும் பட்டறையில் அடிக்கப்பட்டவை
என் தேகம் கொடும் வறுமையில் வார்க்கப்பட்டது
எனக்கும் உனக்குமான
போர்க்களம்
ஓநாய்க்கும் முயலுக்குமான
ஒட்டப் பந்தயம் போல வேறுபட்டது
நான் வாழ்வதற்காகப் போராடுகிறேன்
நீ வெல்வதற்காகப் போரிடுகிறாய்.
__________
- villarasanlaw@gmail.com