ரேகா வசந்த் கவிதைகள்
மழையும் மழை நிமித்தமும்
மழையில்
நனைந்துவிட்டேன்
ஒரே ஒருமுறை!
குடை எடுத்துக்கொண்டாயா?
என்ற கேள்வியோடே
அணுகுகிறவர்களிடம்
என்னவென்று சொல்வது?
மின்னல் வெளிச்சத்தில்
என்னைக் கண்டுகொண்டேன் என்றா?
இடியின் சத்தத்தில்
இசையோடு இழைந்தேன் என்றா?
தூரலின் துணையில்
அகங்காரத்தை அழித்திருந்தேன் என்றா?
இருள் போர்த்திய மேகத்தில்
இறகைப் போல இலகுவானேன் என்றா?
காகிதக் கப்பலின் ஆசியுடன்
மறுபடி குழந்தையானேன் என்றா?
வேண்டுமென்றே
குடையை மறப்பவன்
கையில்
யாரேனும் வலிந்து
குடையைத் திணிக்கும்போது
அதை விரிக்காமல் இருக்க
கற்று வைத்திருக்கிறேன்.
*
அளவீடு
அள்ளி அள்ளிப்
பருகிக் கொண்டிருந்தேன்
ஆற்றுநீரை!
வெள்ளப்பெருக்கோடு
அளவளாவிக் கிடந்தேன்
தண்ணீர் எடுக்கக்
குடத்தோடு வந்தவன்
பிரள் மனதோடு
பித்தாய் அலைவதாய்
நினைத்துக்கொண்டான்
பின்னொரு நாளில்
நான் பாலம் கட்டி முடித்திருந்தேன்
பாலத்தில் பயணிக்க
அவன் எனக்கு
வரி கட்டிக் கொண்டிருந்தான்.
*
நகல் வாழ்க்கை
வெகு நேர்த்தியாய்
இருந்தது
அவன் வீடு
அழகாக,
சிறியதாக
போதுமானதாக
இருந்தது
நகலெடுத்துக்
கட்டினேன்
நானும்
அதேபோல்
ஒரு வீடு!
புதுவீட்டில்
தலைவாசல்
முட்டுகிறது
சமையலறை
பெரிதாய் இருந்திருக்கலாம்
மாடிப்படி கூட
வீட்டுக்கு வெளியே வைத்திருக்கலாம்
என்ன இவன்
திட்டமே இல்லாமல்
வீடு கட்டி இருக்கிறான்?
வேறொருவனைப் பார்த்து
நகலெடுத்திருக்கலாமோ?
__________
- rekhavasanth2024@gmail.com