பொறுமையின் வெற்றி!
ரோட்டோரத்தில் குவிந்திருந்த
வெண்பனி மழையைக் கையிலெடுத்து
பந்து மாதிரி உருட்டி
ஒருவர் மீது ஒருவர் வீசி
விளையாடிக் கொண்டிருந்தனர்
இரண்டு சிறுவர்கள்!
அலுவலகம் முடிந்து
வீடு திரும்பிய என் மேல்
ஒருவன் வீசியது பட்டு
மூக்குக் கண்ணாடி உடைந்தது!
நான் எதுவும் சொல்லவில்லை
மௌனியாயிருந்தேன்!
எறிந்தவன் உடல் நடுங்கியபடி நிற்க
அவனது முகம்
பயத்தைக் காட்டியது!
இப்போது
எனக்கு மட்டுமே இரண்டு வாய்ப்பு!
புன்னகைக்கலாம்
அல்லது
கோபம் கொள்ளலாம்!
*
என் வீட்டுத் தோட்டத்து
ப்ளூபெர்ரி குறுமரம்
கருநீலப் பழங்களால் நிரம்பி வழிந்தது!
சில நாட்களிலேயே
நமது ஊர் தேன்சிட்டு மாதிரி
சிறிய பறவை கூடு கட்டத் தொடங்கியது!
காலையில் அலுவலகம் செல்லும்போது தலை சாய்த்து
என்னைப் பார்க்கும்!
மாலையில் வீட்டுக்கு வரும்போது
பழங்களைக் கொத்தியபடியே
கூர்மையாய் என்னை நோக்கும்!
மரத்துக்கு அருகிலேயே
பச்சை
மஞ்சள்
கருப்பு
என மூன்று நிறங்களில்
இடுப்பளவு குப்பை டப்பாக்கள் மூடியுடன்!
வாரத்தில் இரண்டு முறை வந்து
குப்பைகளை எடுத்துச் செல்பவர்களிடம்
கூறிவிட்டேன்
‘மரத்தை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என
சாப்பாட்டுக் கழிவுகளை
கருப்பு நிற டப்பாவுக்குள் போடும்போது
‘எனக்கும் தாயேன்’ என்பதாகப் பார்க்கும்!
விடுமுறை நாட்களில்
பழைய பேப்பர்களை
பச்சை நிற குப்பைக் கூடைக்குள்
போட வரும்போது
‘கீச்…. கீச்’ என்றென்னை அழைக்கும்!
எனக்கும்
பெயர் சொல்லி அதை அழைக்க ஆசைதான்!
பெயர் தெரியாவிட்டால் என்ன!
நான் கூப்பிடும்போதெல்லாம்
கருவண்ணக் கழுத்து முடி சிலும்ப
சிறு தலை வெளி நீட்டி
அழகாக என்னைப் பார்க்கிறதே!
*
வேன் நிறைய
மளிகை மற்றும் உணவுப் பொருள்கள்!
வாரம் இருமுறை
பிராங்ஃபர்ட் சுற்றுப்புற
கிராம முதியவர்களுக்கு
வீடுகளில் டெலிவரி!
பல தினுசுகளில் பிரட்!
பருப்பு-உலர் பழங்கள்!
காய்கறிகள்-பழங்கள்!
முட்டை வகைகள்-கிழங்குகள்!
இறைச்சி மற்றும் சாஸேஜ்!
வண்டியை வீட்டருகில் நிறுத்தி
ஆன்லைனில் கேட்ட அனைத்தையும் எடுத்து
காலிங் பெல்லை அழுத்தினார்
அந்தப் புதிய வாகன ஓட்டி!
வீட்டுக்காரர் வெளியே வரவில்லை!
மைனஸ் குளிரில்
உடல் விறைக்க ஆரம்பித்தது
மீண்டும் காலிங் பெல்லை அழுத்த
கிளவுஸ் களையுமுன்
கதவைத் திறந்துகொண்டு
வெளிவந்தார்
வயது முதிர்ந்த பெண்மணி
பணம் வாங்கித் திரும்பியவரிடம்
காத்திருக்க வைத்ததற்கு மன்னிப்பு கேட்டபடி
பரிகாரமாய் வீட்டுக்குள் அழைத்தாள் அவள்
குளிருக்கு இதமாக
அருமையான பிளாக் காஃபி
சந்தோஷமாய்க் குடித்து முடித்தவர்
‘நன்றி’ சொல்லி
விடைபெற்றார்!
கோப்பையை கழுவ எடுத்தவளுக்கு
கனத்திருந்தது
அதில் முழுக்க நிறைந்திருந்த
நீண்ட தூரக் களைப்பு!
*
இரவு சாப்பாடு முடிந்து
வீட்டு முற்றத்தில்
கட்டில் போட்டு
உட்கார்ந்திருப்பார் அவர்!
அழகாக சிலுசிலுக்கும்
வேப்பமரக் காற்றசைவில்
நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறையும்!
பாத்திரங்கள் கழுவி முடித்து
வாசல் படியிலமரும் துணைவி
காலை நீட்டி கதவு நிலையில்
சாய்ந்துகொள்வாள்!
ஈரக் கை துடைத்த
முந்தானை சரியாகி
இடுப்பில் செருகப்படும்!
வெற்றிலைப் பெட்டி திறந்து
கொட்டைப் பாக்கெடுத்து
அவரிடம் நீட்டுவாள்!
என்னவென்று பார்க்காமலேயே
அனிச்சையாய் வாங்கி
வாயில் குதப்பிக்கொண்டே
செல்லமாய் சீண்டுவார் அவளை!
கல்யாணத்துக்கு முந்தைய
அவளின் உறவினர்கள்
சகட்டுமேனிக்கு
அவரின் வார்த்தைகளில் வந்து விழுவார்கள்!
பதிலம்பு தொடுத்துக்கொண்டே
வெற்றிலை எடுத்து
பக்குவமாய் சுண்ணாம்பு தடவித் தருவாள்!
தினம் தினம் இரவு
இதே நேரம் இருவருக்கும்
பழைய நினைவுகள்
மறுபிறப்பெடுக்கும்!
அதில் சந்தோஷம் ஊற்றெடுத்து
இருவரையும்
குளிப்பாட்டும்!
இரவு சந்திரன்
தேய்ந்து வளர்ந்து
தேய்ந்து வளர்ந்து
மாறாது நிலைத்திருக்க
அவர் மட்டும்
தேய்ந்து கொண்டே போனார்!
கடைசி நாள் இரவு
மாத்திரை கொடுத்தாள் அவள்!
கையில் வாங்கியவர்
முதன்முறையாக
அது என்னவென்று உற்றுப் பார்த்தார்!
____________
- gsjesu@gmail.com