
புது சினேகம்
பக்கத்து வீட்டுப் பெரியவரின் மரணம்
இன்றைய விடியலின்
இயல்பைத் தொலைக்க வைத்தது
தினமும் தன் டாபர்மேனோடு
வாக்கிங் வரும் வேளைகளில்
ஒருவருக்கொருவர்
வணக்கத்தைப் பரிமாறிக் கொண்ட
சிறுபுன்னகை சிநேகம்,
இதோ முடிவுக்கு வந்தது…
அலுவலகம் கிளம்புமுன்
தலைகாட்டிய
மரண வீட்டின் முன்வாசலில்
அவசரத்திற்கு கூட்டிப்போக
அவரில்லாத டாபர்மேன்
போவோர் வருவோரைப் பார்த்து
குரைத்துக் கொண்டிருப்பது கேட்காதபடி
கண்ணாடிப் பெட்டியினுள் அவர்…
“காரியம் முடியும் வரை
இவன் எங்க வீட்டில் இருக்கட்டுமா?”
கேள்விக்கு பதில் சொல்ல
யாரையும் எதிர்பாராமல்
கட்டவிழ்த்தபடி வெளியேறினேன்.
எதிரே ஊன்றியிருந்த
எல்லைக்கல்லை நனைத்தபடி
வாஞ்சையோடு
வாலாட்டத் தொடங்கியது
டாபர்மேன்.
*
பொசுங்காத சாதி
தகனம் செய்யுமிடத்தில்
சாம்பலாகக் காத்திருக்கிறது
கம்பீரமானதொரு பிணம்
அதற்கு முன் வரிசையாக
இன்னும் சில பிணங்கள்
காத்திருக்கும் நேரத்தில்
பொழுதுபோவதற்காக
எதாவது பேசு என்றேன்
பிணத்திடம்…
எனக்கு முன்னாலிருக்கும்
பிணங்களின் ஜாதி
என்னவென்று
விசாரித்துச் சொல் என்றது!
*
முத்த விடுதலை
கொடுக்க ஏதுமற்ற வறியவர்
முத்தமொன்றை
ஈந்துவிட்டுச் செல்கிறார்
பேசுவதற்கு வார்த்தைகளற்ற
கனத்த நொடிகளில்
முத்தத்தைப் பரிமாறுகிறார்
உன்னோடு நானிருக்கிறேனென
ஆதரவைச் சொல்வதற்கும்
முத்தத்தால் முடிகிறது
அசாதாரணத் தருணங்களில்
கைகொடுக்கும் முத்தம்தான்
பயனற்ற பொருளை
பரணில்
நூலாம்படையால் கட்டுவதென
இதழ்களுக்கிடையே
முடக்கப்படுகிறது…
கவனித்திருக்கிறாயா?
ஒவ்வொரு உரையாடலின்போதும்
விடுதலை வேண்டி
இதழ்கள் தாண்டி
எட்டியெட்டிப் பார்க்கும்
அதே முத்தத்தை.
*
வன்முறை
செங்காம்பட்டியை உடைத்து
நசுக்கிப் பொடியாக்கி
பல் துலக்கிய வன்முறைதான்
தொடர்கிறது
மாதக்கடைசியில்
பற்பசையைப் பிதுக்குவதிலும்.
- gauthamands@gmail.com