
இந்த வாரத்திற்கான பணியை
எப்போதும் போல
திங்கள் சோகம் விழுங்கியிருந்தது
திரையகத்தில் சிமிட்டும் சுட்டியிலெங்கோ
என் நினைவுகள் அலையத் தொடங்கியிருந்தன
எந்தப் பிரக்ஞையுமற்று
தட்டச்சில் நிரலாக்கம் செய்யும்
என்னைத்தான்
மேஜை தம்ளரில் இருக்கும் காப்பி
அன்போடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
*
இந்தக் கடைசி மூட்டையை
லாரியில் ஏற்றிய பிறகு
முகம் வழித்து
வியர்வையைத் துடைத்துக்கொள்கிறார்
ஒரு பெருமூச்சுக்குப் பின்
இரண்டு கைகளையும்
பின் இடுப்பில் அழுத்தியவாறு
கழுத்தை வளைத்து
அண்ணாந்து பார்த்தபடியே நிற்கிறார்
சமீபத்தில் தன் மகள் ஆசைப்பட்டிருந்த
புத்தகப் பையின் முகப்பில் இருந்த
மீன்களில் ஒன்று
மேகமாக நீந்திக் கொண்டிருக்கிறது வானில்.
*
ஆடி ஓய்ந்த
ஒரு பெருநகரத்தின்
ஞாயிறு அதிகாலையில்
தேவாலய மணியோசை
பின் மெல்ல மெல்லத் திறக்கப்படும்
அதன் கனத்த கதவுகளின் சப்தம்
கூழாங்கல் தெருவின் கற்களிடையே
உடைந்த குப்பி துண்டுகளைத்
துடைப்பத்தால் வாரும்
சீரற்ற கீச்சு ஒலி
இரை தேடும் பறவைகளின்
சிறகடிக்கும் சப்தம்
வீடற்றவரின் குறட்டை
என அனைத்தையும்
உட்கார்ந்த இடத்தில் கேட்டாகிவிட்டது
வாழ்க்கை இப்படியாக ஓசை வடிவில்
சென்றுகொண்டேதான் இருக்கிறது
நான்தான் அங்கேயே இருக்கிறேன், ‘அமைதியாக’.
*
என் சாளரத்தின்
கம்பிகளில்
அவ்வப்போது அமர்ந்து செல்கிறீர்கள்
உங்கள் உதிர்ந்த
இறகைக் கொண்டு
என்னையே
வரைந்து பழகிக்கொள்கிறேன்
ஒரு ஓவியனாக
உங்களை வரைய முற்பட்டால்
இசையாக மாறி
காற்றில் நீங்கள் கரைந்துவிடுகிறீர்கள்.
*
தனியாகக் கரையோரம்
அமர்ந்திருப்பவர்களுக்கு மட்டும்
கூடடையும் பறவை
இளஞ்சிவப்பு சூரியனின் மீது
ஒய்யாரமாய்ப் பறப்பதை
இந்த நதி பிரதிபலித்து
ஒரு ஓவியமெனப் பரிசளிக்கும்.
*
- s.gokulakrishnan92@gmail.com