
அன்பைத் தேடும் மிருகம்
தங்கப் பாத்திரத்தில் தளும்பத் தளும்ப
அதைப்போல எதையோ நிரப்பியிருப்பினும்
கயிற்றில் கோர்த்திருக்கும் மாமிசத் துண்டுகளோடு
அதைப்போல எதையோ சேர்த்திருப்பினும்
தலை சாய்க்கத்
தானாக மடி தருவதைப் போல் தந்தாலும்
கூதிர்காலக் காற்றுக்கு
இதமாய் அணைத்துக் கொண்டாலும்
என் வீட்டுப் பூனைக்கு
அன்பின் சுவை அத்தனை அத்துபடி
அன்பு நிறைந்த அலுமினியப் பாத்திரத்தைக் கூட
ஆயிரம் பாத்திரங்களுக்கு நடுவே
மோப்பம் பிடித்து உண்டுவிட்டு
அடித்து விரட்டினாலும் போகாமல்
அங்கேயே சுருண்டு படுத்துக்கொள்ளும்!
வாலாட்டி வரும் பூனைக்கு
வசியமேதும் செய்யவில்லை
என்றபோதிலும்…
என் வாசனையை மோப்பம் பிடிப்பதில்
சாமர்த்தியம் அதிகம் அதற்கு
நானோ சாமர்த்தியம் தெரியாத
உனக்காகத்தான்
என் வாழ்நாளில் பாதியை
பணயம் வைத்து
பாசத்தை ஊட்டி வளர்க்கிறேன்.
சூழ்ச்சிக் கட்டத்தில்
தந்திரமாய்க் காய்கள் நகர்த்தி
சிறை பிடிக்க எண்ணுகிற கூட்டம்
தப்பிக்க முடியாமல்
தனக்குத் தானே தண்டனை கொடுத்து
அவல நிலையில் நிற்கும் ’அவள்’கள்
விட்டு வெளியேற
ஒரு வழிதான் எனினும்
அவ்வழியெங்கும் புதைகுழி
முட்புதர்களென்ற மாயைகளால்
மிரட்டி மிரட்டியே
அவ்வழியையும் தாண்ட விடுவதில்லை
மூத்தோர் சொற்கள்
தாண்ட முடியாமல் தத்தளிக்கும் ’அவள்’களையும்
தந்திர ஆயுதத்தோடு திரியும்
அவன்களையும் இணைத்து
அரங்கேறுகிறது குடும்பமெனும் சூதாட்டம் .
- honeylx@gmail.com