சிறுகதைகள்
Trending

கற்சிற்பங்கள்

ரா.செந்தில்குமார்

காரிலிருந்து இறங்கி, மனையைப் பார்த்தேன். ஐம்பதடி அகலம், நூறு அடி நீளம். மொத்தம் ஐயாயிரத்து சொச்சம் சதுரடி. நகரின் மையத்தில் இடத்தில் லட்டு போல் வந்து மாட்டிக் கொண்ட இடம். முன்பக்கம் மரத்திலான சட்டங்களை வைத்து கதவு செய்து மாட்டியிருந்தார்கள். அது இரு பக்கமும் சரியாகப் பொருந்தாமல், மேலும் கீழுமாக இழுத்துக் கொண்டு நின்றது. ஓரத்தில் கருமை மண்டியிருந்தது. நடுவில், செங்கல் மண் கொண்டு எழுப்பிய சிறிய வீடு. மேலே சிமெண்ட் ஷீட் கொண்டு மூடியிருந்தார்கள்.

”சும்மா உள்ளே போய் பாருங்க”, என்றார் ஸ்தபதி அருணாச்சலம். காவி நிறவேட்டியும், வெள்ளை நிற முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். நெற்றியில் பட்டையாக நீரில் குழைத்து பூசிய திருநீறு. சட்டைப்பையில் பென்சிலை வைத்திருந்தார்.

“இல்லை, இருக்கட்டும். இங்கேயிருந்தே தெரியுதே.”

அருணாச்சலத்தின் மனைவி சொம்பில் நீர் கொண்டு வந்து தந்தார். சிவப்பு நைலக்ஸ் சேலையில் மெலிந்திருந்தார். முகம் முழுவதும் மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டு வைத்திருந்தார். மேலே உள்ள தண்ணீரை கொஞ்சம் சாய்த்துக் கீழே ஊற்றி விட்டு, ஒரு மடக்கு அருந்தினேன்.

“வீடு, நீங்களே கட்டியதா?”

“ஆமாமா. மேலே சிமெண்ட் பூசணும்ன்னு நெனைச்சேன். அப்படியே நின்னுடுச்சு. ரொம்ப ராசியான இடம். என்னோட எல்லா வேலையும், இங்கேருந்து பார்த்ததுதான்.”

“அது சரி. ஆனா, இதை இடிக்க எனக்கு திரும்பவும் செலவு ஆகும். பழைய வீடுகள்ன்னா, மரம் ஏதாவது தேறும். இதில் ஒன்னும் இல்லை பாருங்க.”

அவர் முகம் வாடியது. மனைவி உள்ளே சென்று கதவோரம் நின்றுகொண்டார். வீட்டுக்குள் பெண்கள் இருப்பது பேச்சுகுரல்களில் தெரிந்தது.

“பின்னாடி, முழுக்கப் புதர் மண்டிப் போய் கிடக்கே. இடமும் சமதளமா இல்லை. எப்படியும் மூன்று ரூபாய் செலவு செஞ்சு மண் அடிக்கணும். சுத்தம் செய்றது, வீடு இடிக்கிறதுன்னு அஞ்சு லட்சத்துக்கு குறையாது. அப்புறம் தான் வேலையே ஆரம்பிக்க முடியும்.”

“உள்ளதுதான் சார். ஆனா இப்படி அகலமான மனை இந்த தெருவிலேயே கிடையாது. நீங்க பார்த்து..”

“ராமநாதன்தான் சொன்னார். நீங்க ஒத்துக்கிட்டீங்கன்னு.”

“ஆமா சார். முன்னே மாதிரி வேலை இல்லை. மூணு பொண்ணுங்க எனக்கு. கல்யாணம் செய்யணும். கொஞ்சம் கடனும் ஆயிடுச்சு. இந்த இடத்துலே, என்னோட தாத்தா காலத்துலே இருந்து இருக்கோம். அவரும் ஸ்தபதி தான். கோபால்சாமி ஸ்தபதின்னா, அப்போ தஞ்சாவூர் ஜில்லா முழுக்க தெரியும். அப்படியே, வழிவழியா இந்த வேலை செய்றோம். நீங்க கொஞ்சம் அந்த நூறு ரூபாயைப் பார்க்காம, எனக்கு செஞ்சு கொடுத்தீங்கன்னா, ரொம்ப உபகாரமா இருக்கும்.”

அவர் மனைவி, கதவைத் தாண்டி, முன் வந்து நின்றார்.

“இல்லைங்க. இப்போ மார்கெட் இருக்குற நிலவரம் உங்களுக்கு தெரியும்தானே. இந்த ஊர்லே, யாரும் இப்போ இடமெல்லாம் வாங்குறதில்லை. அதுவும் இடம் சின்னதா இருந்தா உடனே மூவ் ஆகும். இவ்வளவு பெரிய இடமெல்லாம், ரொம்ப கஷ்டம். நீங்க ஆறு மாசம் முன்னாடி வந்தப்பவே, நான் அதைத்தானே சொன்னேன்.”

தயங்கினார் ஸ்தபதி. இடம் நல்ல இடம்தான். ஆனால் நொடித்துப்போய் விற்கப்படும் இடங்களுக்கு, உரிமையாளர்களின் அன்றைய தேவைதான் விலையே. ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முக்கியமான மந்திரமே, எதிராளிக்கு நம்முடைய ஆர்வத்தைக் காட்டாமல் இருப்பதுதான்.

“சரிங்க, பாருங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க சரின்னா, ராமநாதன் வந்து டாக்குமெண்ட்ஸ் வாங்கிப்பாரு. லீகல் ஒபினியன், வாங்குன உடனே நாம முடிச்சிக்கலாம்.”

ஒரு சின்னப் பெண், பாவாடை சட்டையில், வெளியே வந்து சைக்கிளை எடுத்தாள். இது என்னோட மூன்றாவது பெண் லட்சுமி. ஸ்கூல் படிக்கிறாள், என்றார் ஸ்தபதி. சிறிய உதடுகள், கூர்மையான நாசி லட்சணமாக இருந்தாள்.

“ரொம்ப சந்தோஷம். அப்போ நான் வர்றேன்.”

காரிலேற திரும்பி நடந்தேன். மனை முழுவதுமே ஆங்காங்கே சிலைகள் கிடந்தன. கோவிலில் காணப்படும் அன்னப்பறவை ஒன்று மூக்கு உடைந்து நின்றது. காமதேனு பசுவின் சிற்பம் காங்கிரிட் பெயர்ந்து கால்கள் எல்லாம் கம்பி தெரியக் கிடந்தது. மூலையில் அம்மன் சிலை ஒன்று இருந்தது. நான்கடி உயரம் இருக்கும். சாக்குப்போட்டு மூடியிருந்தாலும், மழையில் முழுவதும் கிழிந்து தொங்கியது. உடல் கருப்பு நிறத்திலும், ஆடை ஆபரணங்கள் வெள்ளை நிறமாகவும் செதுக்கியிருந்தார். வலது கையில் சூலமும், இடதுகையில் கபாலமும் இருந்தது. மேல் கையில் உடுக்கையும் , சங்குமிருந்தது. முகம் மட்டும் சாக்கில் மறைந்திருந்தது.

வீட்டுக்கு வந்த பின்பு, ராமநாதனுக்கு போன் போட்டேன். ராமநாதன் பில்டிங் இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். என்னுடைய அனைத்து வியாபாரத்திலும் அவருடைய உழைப்பு உண்டு. அதற்குண்டான ஊதியத்தை அதிகமாகவே கொடுத்து விடுவேன் என்பதால் எப்போதும் விசுவாசமானவர். இடங்களைத் தேர்ந்தெடுத்து, எந்த சிக்கலுமின்றி பதிவு செய்வது வரை ராமநாதன் வேலை. சரியான நேரத்தில், விற்பவர்களை அணுகிவிட்டால் போதும். மற்றதெல்லாம் தானாகவே நடக்கும். தவிர, காலிமனையோ, வீடோ எவ்வளவு முக்கியமான இடத்தில் இருந்தாலும், யாரிடம் இருக்கிறது என்பதில்தான் அதன் விலை தீர்மானிக்கப்படுகிறது, என்கிற உண்மையை நான் தொடக்க நாட்களிலேயே உணர்ந்து கொண்டேன்.

ஐம்பதுக்கு அறுபது என்ற அருமையான அளவில் உள்ள மனையை, அண்ணனும் தம்பியும் சண்டையிட்டுக்கொண்டு, ஆளுக்கு இருபத்தியைந்து அடி அகலம் என்று பிரித்துக் கொண்டார்கள். முதலில் அண்ணனைக் கூப்பிட்டு வந்தார் ராமநாதன். அன்றைய சந்தை ரேட்டுக்கு 10 சதவீகிதம் குறைத்து வாங்கினேன். மூன்று மாதம் கழித்து முதலில் விற்பதில்லை என்ற தம்பியும் என்னிடமே வந்தபோது, இனி எனக்கு அந்த இடம் தேவையில்லை என்றேன். வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெஞ்சவிட்டு, பிறகு அதிரடியாக பாதி விலையில் வாங்கினேன். பிறகு இரண்டையும் சேர்த்து அந்த ஒரு இடத்தை கைமாற்றியதில் மட்டும், ஒரே மாதத்தில் இருபத்தி ஐந்து லட்சம் லாபம். இருவரும் சேர்ந்து விற்றிருந்தால், அந்தப் பணம் அவர்களுக்கு கிடைத்திருக்கவேண்டிய ஒன்று. ஒருபோதும், அவர்களது மனைவிமார்கள் சேரவிடமாட்டார்கள் என்பதே எனது அனுபவம். என்னிடம் விற்றால், பணம் ஒழுங்காக கைக்கு வரும் என்று நான் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையே, இந்தத் தொழிலில் மூலதனம்.

“என்ன ராமநாதன், பார்ட்டி திரும்பவும் பிசுறுதே?”

“இல்லை. அது முடிஞ்ச மாதிரிதான். அந்தாளு கொஞ்சம் மறை கழண்ட கேசு. வீட்டுக்காரம்மா, என்கிட்டே அழுதுடுச்சு. இப்படியே இவர் பிசிறி, பிசிறிதான் இடம் விக்காமயே கிடக்கு. மூத்தபொண்ணுக்கு, முப்பது வயசாகிடுச்சு. கல்யாணம் செய்ய முடியாம கிடந்து அல்லாடுறேங்குது. ஸ்தபதிக்கு அந்த இடத்தை விக்குறதுலே இஷ்டம் இல்லாமத்தான், இவ்ளோ நாளா மூவ் ஆகாம இருக்குது. இனி, அவருக்கு வேற வழியில்லை. வந்துடுவாரு.”

குளித்து முடித்து, காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்தபதி வந்திருப்பதாக அம்மா சொன்னார். அறையில் அமர்ந்திருந்தார். உள்ளே போய் இருக்கையில் அமர்ந்தேன். கையில் புத்தகம் போல் ஒன்று வைத்திருந்தார். வீட்டு டாக்குமெண்ட்ஸ் என்று கையை நீட்டினேன்.
அவரே எழுந்து, என்னுடைய டேபிளில் அந்த வரைப்படத்தைப் பிரித்துப் பரப்பினார். அது ஒரு கோயில் கோபுரத்துக்குண்டான வரைபடம். அந்த வரைபடமே நான்கடி மேசை முழுவதும் நிரம்பியிருந்தது. பகுதி பகுதியாக வரைந்து ப்ளுபிரிண்ட் செய்திருந்தார். ஒவ்வொரு தளமும் அழகான சிற்பங்களுடன், ஸ்கேல் வைத்து வரையப்பட்டிருந்தது. அடித்தளத்திலிருந்து ஒவ்வொரு தளமாக அளவு குறிக்கப்பட்டு அடிக்கோடிடப்பட்டிருந்தது. நான் புரியாமல் பார்த்தேன்.

”என்னைத் தூங்க விடாம செய்றது இந்த படம்தான். கோயில் கட்டணும்ன்னு சொல்லி இலங்கைலே இருந்து சில தமிழர்கள் வந்து பார்த்தாங்க. பெரிய அளவுலே திட்டங்கள் தந்தாங்க. அவங்க வந்துட்டுப் போய் பத்து வருசம் ஆயிடுச்சு. ஆனா, ஒவ்வொரு நாளும், இந்தப் படம் என்னைத் தூங்க விடல. திருத்தங்கள் செஞ்சுட்டே இருக்கேன். இந்தப் படத்துலே இருக்குற மாதிரி அந்தக் கோபுரம் எழும்பிடுச்சுன்னா, உலகத்துலேயே தலைசிறந்த சிற்பங்கள் கொண்ட கோபுரமா, அது இருக்கும். அந்தக் கனவுதான் என்னை இப்படிப் படுத்துது”, என்றார்.
சரி, ராமநாதன் சொன்னதுபோல் ஆள், கொஞ்சம் லூஸ்தான் போல. ”சரிங்கய்யா, நல்லா செய்ங்க. வீட்டு டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கொண்டு வந்திருக்கீங்களா ?”

”இல்லை. உங்ககிட்டே அந்த சதுர அடிக்கு நூறு ரூபாய் சேர்த்து கொடுத்திங்கன்னா, முடிச்சுடலாம்ன்னு சொல்லத்தான் வந்தேன். ”
எரிச்சல் வந்தது. ”இந்தா பாருங்க, மாத்தி மாத்திப் பேசுனா, என்னைக்கும் வியாபாரம் முடிக்க முடியாது. எனக்கும் வேற வேலை இருக்கு. முன்பு பேசினபடி முடிச்சிக்கிறதா இருந்தா நாம பேசலாம். இல்லைன்னா, பரவாயில்லை விடுங்க.”

ஒன்றும் பேசாமல், வீராப்பாக வரைபடத்தை சுற்றி தான் கொண்டு வந்த பையில் வைத்தார். பேசாமல் நூறு ரூபாய் சேர்த்து கொடுத்து விடலாமா? திரும்பவும் இவரை விட்டுப்பிடிப்பதுதான் வழி என்று யோசித்தபோதுதான், அறை கதவைக் தள்ளிக்கொண்டு அருணாச்சலத்தின் மனைவி உள்ளே வந்தார். கூடவே அந்த சின்னப்பெண்ணும். பையிலிருந்து பத்திரங்களை உருவி மேசையில் வைத்தார்.

”நீங்க அட்வான்ஸ் கொடுத்துடுங்க சார் ”,

நான் அருணாச்சலத்தைக் கேள்வியாக பார்த்தேன். அவர் தலை குனிந்து கொண்டார். என்னிடமே போக்குக் காட்டிய அவரைக் காயப்படுத்த வேண்டுமென்கிற கீழ்மை விழித்துக் கொண்டது.

”இல்லைம்மா, எனக்கு விக்கிறவங்க சந்தோஷமா கொடுக்கணும். சாருக்கு அவ்வளோ விருப்பம் இல்லை. எனக்கு இதில் மனசு ஒப்பலை.”

”சார், நீங்க தயவு செஞ்சு அட்வான்ஸ் கொடுத்துடுங்க. அவர் கிடக்குறாரு. செலை செஞ்சு, செஞ்சு, மனுசாளையும் சிலை மாதிரி ஜடமா நினைக்குறாரு.” கண்களில் நீர் வழிந்தது. அருணாச்சலம் அடிபட்டது போல் மனைவியைப் பார்த்தார்.

உடனடியாக ஒரு லட்சத்துக்கு செக் எழுதி எழுந்து நின்று கும்பிட்டுக் கொடுத்தேன். மனைவியே முன்வந்து வாங்கிகொண்டார். பிறகு மூவரும் எழுந்து வெளியே போனார்கள். அடித்தது ஜாக்பாட். மனை கைக்கு வந்தவுடன், கொஞ்சம் சுத்தம் செய்து, பக்காவாக வேலி போட்டு விட்டுக் காத்திருந்தால் சதுர அடி இரண்டாயிரத்துக்கு குறையாமல் தள்ளி விடலாம். ஆயிரத்து நானூறு ரூபாய்க்கு முடித்தாகி விட்டது.

ராமநாதனுக்கு போன் செய்து சொன்னேன். பத்திரங்களை வாங்கிப் போனார். லீகல் ஒப்பினியன் முடிந்து, இரண்டு வாரத்தில் பத்திரப்பதிவும் முடிந்தது. பதிவு செய்யும் போது காலி செய்து விட வேண்டும் என்று சொல்லியிருந்ததால், அப்படியே காலி செய்து எல்லா பொருட்களையும் எடுத்துப் போய் விட்டார் அருணாச்சலம். பணம் வாங்க வீட்டுக்கு, அருணாச்சலத்தின் மனைவியும், பெரிய மகளுமே வந்தார்கள்.

ராமநாதனை அழைத்துக் கொண்டு மனைக்கு சென்றோம். சொன்னது போல் எல்லாவற்றையும் எடுத்து சென்றிருந்தார்கள். மனையைச் சுற்றி வந்தோம். வீட்டை இடிப்பதற்கு முன் மேலே உள்ள சீட் தேறுமென்பதால், அதற்கும் செங்கலுக்கும் ஆள் பார்க்கச் சொன்னேன்.
திரும்ப காரில் வந்து ஏறும் முன் மூலையில் பார்த்தேன். அந்த அம்மன் சிலை மட்டும் அங்கேயே இருந்தது.

“என்ன ராமநாதன், எல்லாத்தையும் காலி செஞ்சுட்டாங்கன்னு சொன்னீங்க? இதை என்ன செய்றது ?”

“சின்ன சிலையெல்லாம் கொண்டு போய்ட்டாரு. இது பெருசுங்கறதால இடமில்லை. சிலை ஊனமாகிட்டதால, எப்படியும் அவர் கொண்டு போய் ஒண்ணுத்துக்கும் ஆவப்போறதில்லை.”

“சரி, நாம வச்சு என்ன செய்றது? அவரயே ஏதாச்சும் ஏற்பாடு செஞ்சு எடுத்துட்டுப் போக சொல்லுங்க, ராமநாதன்.”

“சொல்லிடலாம் சார்.”

வீட்டுக்குப் போனவுடன் பத்திரங்களை லாக்கரில் வைத்தேன். ராமநாதன் அறையில் காத்திருந்தார். சாவகாசமாகக் குளித்தேன். காட்டன் ஜிப்பா, கைலி சகிதம் ரூமுக்குள் நுழைந்து அம்ரூத் ஸ்காட்ச் பாட்டிலை எடுத்து, இரண்டு கிளாஸில் லார்ஜ் ஊற்றினேன். ஐஸ் துண்டங்களை போட்டு ராமநாதனிடம் நீட்டினேன். இரண்டு லார்ஜ் போனவுடன், ”போதும் சார், அப்படியே கிளம்புறேன்”, என்றார். பீரோவைத் திறந்து இரண்டாயிரம் கட்டை எடுத்துக் கொடுத்தேன். கும்பிட்டு வாங்கிக் கொண்டார். அவர் போனவுடன், திரும்ப ஒரு லார்ஜ் போட்டுக் கொண்டேன். வெயிலில் அலைந்தது, நன்றாக ஏறியிருந்தது.

நடுநிசியில், அந்த மனையைப் பார்க்க வேண்டும் என்று ஏன் வந்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று, தெருமுனையில் ஒரு நாய் ஊளையிட்டது. அருணாச்சலம் பட்டு வேட்டி, பட்டுச்சட்டையுடன் வாசலில் நின்று கும்பிட்டார். ”எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. ரொம்ப சந்தோஷம்”, என்றார். நடுராத்திரியில் ஏன் பட்டுச்சட்டை? என்று யோசிக்கும்போதே, ராமநாதன் அருகில் வந்து, ”நாந்தான் அப்போவே சொன்னேனே” என்றார். புன்னகைத்து, திரும்பி மனையைப் பார்த்தேன். மாபெரும் கோபுரம் எழும்பியிருந்தது. எப்படி ஒரே இரவில் இத்தனை பெரிய கோபுரம் சாத்தியமானது என்ற திடுக்கிட்டேன். மயன் கட்டியது அல்லவா என்ற பதில் உள்ளிருந்து வந்தது. ஒவ்வொரு தளத்திலும் சிற்பங்கள் அருணாச்சலம் காண்பித்த வரைபடம் போலவே செதுக்கப்பட்டிருந்தது. பூதகணங்கள் சிரித்தபடி வரிசையாக கோபுரத்தைத் தாங்கியிருந்தனர். ஆடல் மகளிர் அபிநயம் பிடித்து சிலைகளாக நின்றனர். நான் அவர்களைக் கடக்கையில் விழிகள் அசைந்தன. ஒவ்வொரு தூணிலும் யாளி வாய் பிளந்து நின்றது.

உள்கோபுரம் தாண்டிச் செல்கையில் அருணாச்சலத்தின் மனைவி, “வாங்க, வாங்க, உள்ளே போய் பாருங்க” என்று திருமண வீடு போல் வரவேற்றார். அவரைத் தாண்டி செல்கையில் பார்வையில் இருந்த சிரிப்பு மாறி முறைத்தார். கருவறையில் திரையிடப்பட்டிருந்தது. ”இடத்து ஓனர் என்றாலும், உடனே பார்த்துடமுடியுமா? கடவுள் நினைக்கணும்”, என்றார் அகலமான குங்குமப்பொட்டு வைத்திருந்த குருக்கள். “நான் ஒன்னும் உடனே பார்க்கணும்ன்னு சொல்லலியே” என்று சொல்லும்போதே நா தழதழத்தது. எனக்கே என் மீது இரக்கம் வந்தது. ”அழ தோணுச்சுனா, அழுதுடணும்”, என்றார் மீண்டும் குருக்கள். திரை, சட்டென்று இழுக்கப்பட்டது. மனையில் முன்பிருந்த அதே அம்மன் சிலை, சிவப்பு சேலையணிந்து, கற்பூர ஆரத்தியில் ஜொலித்தது. கற்பூரத் தட்டை முகம் அருகே கொண்டு சென்றார் குருக்கள். அருணாச்சலத்தின் கடைசி மகள் லெட்சுமியின் முகமாக அது இருந்தது. கையெடுத்துக் கும்பிட்டேன். பேச்சு வர மறுத்தது. கற்பூரத் தட்டை என்னிடம் கொண்டு வந்து நீட்டியபடி ”சதுர அடிக்கு நூறு ரூபாய்”, என்றார் குருக்கள். ஏதோ பேச முயன்றபோது தொண்டை வறண்டது. இனி பேச முடியாது என்று நினைத்தபோது திடீரென்று விழிப்பு வந்தது. எழுந்து பார்த்தபோது, அவ்வளவு ஏஸியிலும் முழுவதுமாய் வேர்த்திருந்தேன்.

கடிகாரம் ஆறரை காட்டியது. எழுந்து சென்று முகம் கழுவி, ஷோபாவிடம் காபி வாங்கிக் குடித்தேன். அம்மா பூஜை அறையில் அமர்ந்து ஆயிரத்து எட்டு போற்றி படித்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா, அடுத்த வெள்ளிக்கிழமை, அனந்தநல்லூர் மாரியம்மனுக்கு கூழ் ஊத்தணும்மா.”

“ஏண்டா, திடீர்ன்னு?”

“இல்லை, கொஞ்சம் கெட்ட கனவா வருது.”

“அடுத்தவாரம் வேண்டாம். ஆடிவெள்ளிதான் விசேஷம். அப்போ செஞ்சுடலாம்.”
போனை எடுத்து ராமநாதனை அழைத்தேன்.

”ராமநாதன், வீடு இடிக்க சீக்கிரம் ஆள் பாருங்க. சர்வேயருக்கும் பணம் கட்டி அளக்க சொல்லிடலாம். வேலையை சீக்கிரம் ஆரம்பிக்கனும்.”

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button