இணைய இதழ் 117கட்டுரைகள்

மீட்சியின் பாதை – கிருஷ்ணமூர்த்தி

கட்டுரை | வாசகசாலை

எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் மையப்படுத்திய புனைவுகள் பெருவாரியாக படைப்புச் செயல்பாட்டை மையப்படுத்தியதாக அமையும். அவர்களின் படைப்பு செயலில் கிடைக்கப் பெறும் தரிசனங்களும், அதன் லௌகீக இடையூறுகளும், யதார்த்தத்திற்கும் படைப்பூக்கத்திற்கும் இடையில் அல்லாடும் அரசியல்-பண்பாட்டு சொல்லாட்சிகளும் எனும் வகைமையில் அவற்றைப் பிரிக்கலாம். அதன் வேறொரு பிரிவாக படைப்பாளன் சார்ந்த அம்சங்களை பின்புறமாக வைத்துவிட்டு அவனுடைய அப்போதைய சிக்கலை விரிவாகப் பேசும் வகையில் எழுதப்பட்டிருக்கும் சிறப்பான நாவல் சி.மோகனின் “வீடு வெளி”.

நாவலின் நாயகன் கிருஷ்ணன், தமிழ் எழுத்தாளன். ஒரு நாள் உறக்கத்திலிருந்து விழிக்கும்போது அவனுடைய கையும் காலும் இயங்க மறுக்கிறது. அதனால் ஏற்படும் சிரமங்கள் தொடக்கப் பக்கங்களில் சித்தரிக்கப்படுகிறது. நண்பர்களின் உதவியுடன் மருத்துவமனைகளை நாடி அந்த நோய் குறித்து அறிகிறான். அவனுக்கு பாலி நியூரோபதி எனும் நோய் அண்டியிருக்கிறது. வெளிப்புற உடல் பாகங்களின் செயலிழப்பு அதன் முதல் அறிகுறி. பின் அத்தன்மை உள்ளுறுப்புகளுக்கு பரவும். மருத்துவமனையில் தங்கி கண்காணிக்கப்பட்டால் மீண்டும் இயல்பு நிலைக்கு நோயாளியை குணமாக்கலாம். இதற்கு ஏழு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து அவர்தம் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். நண்பர்களின் உதவியுடன் கிருஷ்ணனும் ஏழு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகிறான். அவன் இயல்பு நிலைக்கு திரும்புவது வரை நீள்வதே நாவலின் கதை.

சிறந்த நாவல்கள் அதன் கதைகளால் நினைவு கூறப்படுவதில்லை. கதாபாத்திர சித்தரிப்புகள், அவர்களுக்கே உண்டான தத்துவார்த்த தர்க்கம், வாழ்வியல் சிடுக்குகளில் கிடைக்கும் தீர்வு, அசௌகரியமான சூழ்நிலைகளில் வெளிப்படும் இரக்கமும்/கீழ்மையும் என்று பல்வேறு காரணிகளால் மட்டுமே நினைவில் நிற்கிறது. இந்த நாவலில் இதுபோன்ற எண்ணற்ற அம்சங்கள் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கின்றன.

நாயகன் கிருஷ்ணனுடைய எழுத்துலக தகவல்களும், ஈர்ப்புகளும் சி.மோகனின் வாழ்க்கையோடு ஒன்றிப் போகின்றன. இந்த நாவல் Auto Fiction வகைமையைச் சார்ந்தது என்பதை சில பக்கங்களிலேயே வாசகர்கள் அறிந்துகொள்வர். க்ரியா பதிப்பகத்தில் பணி செய்த காலங்களில் கிடைத்த அனுபவங்கள், தமிழ் இலக்கிய முன்னோடிகளின் நினைவோடை, செய்தித்தாள்களில்/சிறுபத்திரிக்கைகளில் எழுதிய பத்திகளின் தலைப்புகள் சுய சரிதைக் கூறுகளுக்கு வலு சேர்க்கின்றன.

கிருஷ்ணனுடைய சித்தரிப்பிற்கு ஈடாக அமைந்திருப்பது அனிதா எனும் கதாபாத்திரத்தின் சித்தரிப்பு. வாசகர்களுக்கு அனிதாவே நாவலின் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கான காரணமாக அமையக்கூடும். கலை மீதான ஆர்வமும், ஆண்களின் மீதான கசப்பும் கதாபாத்திரத்தின் அடிநாதமாக அமைகிறது. அனிதா மீது அத்துமீறும் கிருஷ்ணனின் நாட்களும் அதற்கான அனிதாவின் எதிர்வினையும் மிகவும் சிக்கலான பகுதி. அனிதாவிடம் இருக்கும் ஆண்களின் மீதான கசப்பு இயற்கையாக எழும் இச்சைகளின் மீதான விமர்சனமாக மாறுகிறது. தன்னுணர்தலில் சுய விமர்சனமாகவும் கருதுகிறாள். ஆனாலும் அதைக் கையாளும் விதத்தில் தமிழ் இலக்கியத்தில் படைப்பக்கப்பட்ட பெண் கதாபாத்திரங்களில் தனித்துவமாக மிளிர்கிறாள்.

நாவலில் கிருஷ்ணன் மற்றும் அனிதா இருவருமே கதைசொல்லிகளாக இருக்கின்றனர். சி.மோகனின் வாழ்க்கையை கிருஷ்ணனின் வழியே அறிகிறோம் என்று தோன்றும்போது ஏற்படும் சிறு விலக்கத்தை அனிதா கதை சொல்லும் இடங்கள் போக்கி விடுகின்றன. தனிப்பட்ட வாழ்க்கை, புனைவிற்குள்ளான வாழ்க்கையாக அனிதாவின் கதாபாத்திரமே வழி நடத்துகிறது.

தமிழ் எழுத்தாளனின் பொருளாதாரச் சூழல் சொல்லி விளக்கத் தேவையில்லை. அதே நேரம் கலைகளின் மீதான ஆர்வமும் மனிதர்களின் மீதான நம்பிக்கையுமே சமூகத்தில் அவனுக்கான அங்கீகாரமாக அமைகிறது. கிருஷ்ணனுக்கு ஓவியம், இசை, நாடகம் , திரைப்படம் என்று கலை வகைமைகளின் மீதிருக்கும் தீவிரமான ஈடுபாடு நல்ல உரையாடல்களை எழுப்ப வல்லதாய் அமைகிறது. எழுத்தாளரின் குரலாய் அமையக்கூடிய இடங்களை , நாயகனே எழுத்தாளாராய் இருப்பதால் சிரமமின்றி வாசிக்கமுடிகிறது. பணம் படைத்த கலைஞர்களுக்கும், பணமற்ற கலைஞருக்குமான வேறுபாடு, கலையை சமூகம் எதிர்கொள்ளும் விதம், ஓவியம் மற்றும் சிற்பங்களை அணுகும் மொழி, சமூகத்தில் எழுத்தாளர்களின் மதிப்பு, ஒவ்வொரு விஷயங்களுக்கான தமிழ்நாட்டு கலைஞர்கள் மற்றும் உலகலாவிய படைப்பாளர்களின் ஒப்பீடுகள் என்று நிறைவான விவாதமாகிறது. அன்றாடத்தின் பொருளாதாரத் தேவைகளைத் தீர்க்க சமூகம் திறனை(skill) தேவையாக முன்னிறுத்துகிறது. புத்தகமாக்கலின் நுட்பங்களை நன்கு தெரிந்தவர் கிருஷ்ணன். அதன் துணையுடனும் பெரிய பொருளாதார சமநிலையை அடைய முடியாததை விரைவிலேயே உணர்கிறார். அவருடைய தர்க்கங்களில் தென்படும் தன்னிறைவான வாழ்க்கை அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒன்று என்பதை வாசிப்பில் உணர்ந்துகொள்ளலாம்.

நாவலின் போக்கில், அதன் தர்க்கத்தில் ஜி.நாகராஜன் மற்றும் கோபிகிருஷ்ணனின் வாழ்விலிருந்து சம்பவங்கள் பேசப்படுகின்றன. Clever Writing- க்கிற்கான எடுத்துக்காட்டாக அப்பகுதிகள் அமைகின்றன. ஜி.நாகராஜனின் கடைசி நிமிடங்கள் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. அப்போது கிருஷ்ணனும் அவருடன் இருப்பதால், ஜி. நாகராஜன் தமிழ் இலக்கிய முன்னோடி எனும் அறிதலும் (வாசகனாக எனக்கு) இருப்பதால் கண்ணீரின்றி அப்பகுதியைக் கடக்க முடிவதில்லை. ஆனால் ஜி. நா வை அறியாத வாசகர்கள் எனும் கேள்வி எழுந்தது. அப்போது கிருஷ்ணனுடைய தந்தையின் மரணம் விவரிக்கப்படுகிறது. கிருஷ்ணனின் தந்தை லௌகீக ஓட்டத்திலும், பொருளாதார வேட்கையில் ஓடும் எண்ணற்ற மனிதர்களுள் ஒருவர். மரணத்தைக் கண்டு அஞ்சுபவர். பொருளாதார சமநிலைக்கும், குடும்பத்தைத் தக்க நிலையில் நிலைநிறுத்த வேண்டும் எனும் வேட்கைக்காகவும் மரணத்தைத் தள்ளிப்போட நினைப்பவர். மாறாக ஜி.நாகராஜன் மரணத்தை வரவேற்கிறார். சாமான்ய மனிதனுக்கும் கலைஞனுக்குமான இடைவெளியை மரணத்தின் புள்ளியை வைத்து உரையாடியிருக்கும் பகுதிகள் நாவலின் சிறப்பான பகுதிகளில் தலையாயது.

கதையெனும் அளவில் நாயகனுடைய நோயின் காரணார்த்தங்கள், பழைய உறவின் விரிசல்கள், காதலின் தாத்பர்யம், லௌகீக அம்சங்களுடனும், குடும்பம் எனும் சிறிய அமைப்பினுள் சிக்க விரும்பாமல் அலைக்கழிக்கப்படும் மனமும் நுட்பமாகவே சித்தரிக்கப்பட்டிருகின்றன. நாயகன் நோயிலிருந்து மட்டும் மீள்வதில்லை. அவனுடைய மன்னிப்புகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. தன் அகங்காரங்கள் தவிடுபொடியாகின்றன. மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் அருகிலிருக்கும் நோயாளிகளின் கதைகளைக் கேட்கிறான். முடங்கிக் கிடக்கும் நாட்களின் மனதில் கடந்த கால நினைவுகளே ஆக்ரமிக்கின்றன. இந்த நிலையில் அருகில் இருக்கும் நோயாளிகளின் வாழ்க்கைத் தன்னுடைய வாழ்க்கையின் மீதிருக்கும் கசப்புகளின் மீது கல்லெறிகிறது. வாழ்வின் அர்த்தங்களைப் புரிய உதவுகிறது. அனிதாவுடன் வீடு திரும்புகையில் புதிய மனிதனாகிறான். நாவலில் ஊடுபாவும் உரையாடல்களின் வழியே வாசகர்களுக்கு அந்த புத்துணர்ச்சி பரவுகிறது.

தமிழ்/உலக இலக்கிய முன்னோடிகளை அறியாமல் வாசிப்பவர்களுக்கு வாசிப்பில் கிட்டக்கூடிய பேரனுபவங்களை இழக்க நேரிடும் என்பது மட்டுமே நாவலின் குறை. ஒரு நல்ல நாவலை நம்மால் ‘நல்ல நாவல்’ என்று ஒருபோதும் சொல்லிவிடமுடியாது. மனதின் கீழ்மைகளை, கடந்த கால கசப்புகளை, காரணமறியாத நம் நடத்தையின் விளக்கங்களை அவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். அப்படியான ஒரு நாவல் “வீடு வெளி”.

வீடு வெளி | சி.மோகன் | நாவல் | டிஸ்கவரி

krishik10@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button