சிறுகதைகள்

மலராத மொட்டுக்கள்

-இந்துமதி மனோகரன்

ந்தச் சிறிய வீட்டிற்கு வெளியே சிமென்ட்டால் பூசப் பட்டிருந்த முற்றம் பிள்ளைகளால் நிறைந்திருந்தது. பலர் இன்னும் பள்ளிச் சீருடையிலேயே இருந்தனர். சில பையன்கள் சேர்ந்து பரீட்சை அட்டையை மட்டையாக்கி கசக்கி உருட்டிய காகிதப் பந்தைக் கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பெண் பிள்ளைகள் தங்களுக்குள்ளேயே குசுகுசுவென பேசிச் சிரித்தபடி இருந்தனர். அந்தச் சந்தடியிலும் சம்மணமிட்டுக் குனிந்தபடி, ஆறாம் வகுப்புப் படிக்கும் கதிர்வேல் அன்றைய வீட்டுப் பாடம் செய்வதில் மும்முரமாய் இருந்தான். விமலா டீச்சர் இன்னும் வந்திருக்கவில்லை.

கதிர்வேலோடு ஒரே வகுப்பில் படிக்கும் கதிஜா அவசரமாக ஓடி வந்து அவன் முதுகுக்குப் பின்னாலிலிருந்து எட்டிப் பார்த்தாள்.

“என்னடா கதிரு எழுதிட்டு இருக்க..டீச்சர் ஏதும் கணக்குக் கொடுத்திருந்தாங்களா?”

“அதில்ல.. இன்னிக்கு கணக்கு வாத்தியார் ஒரு கணக்கு எடுத்தாருல்ல.. அதிலேயே பயிற்சி கணக்கு போட்டுட்டு இருக்கேன்.”

“அதை ஏன்டா இப்பவே போடுற. நீ போட்டா இன்னைக்கு டீச்சர் எல்லாரையும் போடச் சொல்வாங்களே. எப்பவும் இப்படியே செஞ்சு எங்களையும் மாட்டி விடுறடா..” கதிஜா விரல்களில் அவசரமாக சொடுக்கு எடுத்தபடி அவள் இடத்திற்கு ஓடி அமர்ந்து அவளும் கணக்கைச் செய்யத் தொடங்கினாள்.

அதற்குள் விமலா வந்து சேர்ந்தார். உடனே அந்த இடம் ஒரு அசாதாரண அமைதிக்கு வந்தது.

“என்னங்கடா ஒரே கூச்சல். நான் வர்ற வரைக்கும் எதாச்சும் படிச்சிட்டு இருக்க வேண்டியது தானே. வானரங்க…”என்றபடியே ஒரு மாணவியின் நோட்டை வாங்கிச் சொல்லித் தர ஆரம்பித்தாள்.

கதிர்வேல் அவள் எப்போது தன்னுடைய நோட்டை வாங்கிப் பார்ப்பாள் தான் முன்கூட்டியே முடித்து வைத்திருக்கும் கணக்குகளை அவளிடம் காண்பித்து அவள் பாராட்டை எப்போது பெறுவோம் என்று ஆவலாய்க் காத்திருந்தான்.

விமலாவிடம் கணக்குப் படம் படிக்க வந்த பிறகு தான் அவன் வாழ்வில் எவ்வளவு மாற்றங்கள். அவனது ஐந்தாவது வயதில் அவன் தாய் தவறி விட, தகப்பன் அடுத்த வருடமே வேறொரு குடும்பத்தை அமைத்துக் கொண்டார். பின் இவனை, அவனது ஆயா அச்சம்பட்டிக்குத் தன்னோடு கூட்டிக் கொண்டு வந்து விட்டாள்.

தனது ஒரே மகள் வயிற்றுப் பேரனிடம் பாசத்தைக் காண்பித்த ஆயாவிற்கு அந்த வயதில் காட்ட வேண்டிய கண்டிப்பைக் காட்டத் தெரியவில்லை. கதிர்வேல் அவன் மனம் போன போக்கில் இருக்கத் தொடங்கினான். பாதி நேரங்கள் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டுத் தன்னை விட வயதில் பெரிய பையன்களோடு சேர்ந்து ஊர் சுற்றித் திரிந்தான். அவர்களோடு கிட்டிப் புள்ள விளையாடுவது, பம்பரம் விடுவது கம்மாயில் நீந்துவது எனஅவ\ன் பொழுதுகள் கழிந்தன..

ஒரு நாள் அவனது தமிழ் வாத்தியார் பரமசிவம் கதிர்வேலின் ஆயாவைத் தேடி வீட்டிற்கே வந்து அவனைப் பற்றிக் கூறிய பின் தான், அவள் அத்தனை நாள் செய்த தவறை உணர்ந்தாள்.

“ஆத்தா இல்லாத பிள்ளைய வளக்கத் தெரியாம தறுதலையா ஆக்கிப் புட்டேன்னு ஊர்ல நாலு பேரு பேசுற மாதிரி வச்சிப்புடாத என் ஐயா..” என்று அவள் வழியும் கண்ணீரைத் முந்தானையால் துடைத்த படியே பேசியது கதிர்வேலின்மனத்தை எதோ செய்தது. பெற்ற அப்பனும்  கைவிட்டுவிட ஆதரவளித்துத் தனக்கு ஒரே ஒட்டுறவாய் இருக்கும் ஆயாவைக் கண்ணீர் விட வைக்க நேர்ந்ததை நினைத்து வெக்கமுற்றான். அவள் மனத்தை நோகடித்ததற்காக அன்று இரவு வெகுநேரம் படுக்கையில் படுத்த படி போர்வையை மூடிக் கொண்டு அழுதான்.

அந்த வாரம் அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த விமலா டீச்சரிடம் அவனை ட்யுஷன் கொண்டு சேர்த்தாள் ஆயா. அது அவன் போக்கையே மாற்றி விட்டது.

விமலா டீச்சரைப் பார்த்ததுமே அவனுக்குப் பிடித்து விட்டது. அவர் நல்ல உயரம். அந்த உயரத்திற்கேற்ற பருமன். எப்போதும் கண்ணுக்கு உறுத்தாத வெளிர் நிறங்களில் பருத்தி சேலை உடுத்துவார். அவரின் சிவந்த மேனிக்கு அந்த நிறங்கள் எடுப்பாக இருந்தன. தளர்வாகப் பின்னிய ஜடை அவரது பின் புறம் வரை நீண்டிருக்கும். அவர் அமர்ந்திருக்கும் போது எப்போதும் அந்த ஜடை முன்னால் விழுந்து அவரது மடியில் தவழ்ந்து கொண்டிருக்கும்.

அவருக்கு மென்மையான குரல். சத்தமாக பேசுகையில் பிசிறு தட்டும். அதனாலேயே கோபமாய் அவர் திட்டும் போது கூட, தலையைத் தடவிக் கொடுப்பது போல் கதிர்வேலுக்குத் தோன்றும். அருகில் அமர்ந்து சின்ன ஜிமிக்கிகள் ஆடப் பாடம் சொல்லித் தரும் போது அவரிடம் இருந்து வரும் கோகுல் சாண்டல் மணம் நாசியைத் துளைத்து சுகந்தம் தரும். அவரின் அருகாமையில் அதிக நேரம் இருக்கவே கதிர்வேல் அடிக்கடி ஏதாவது சந்தேகம் கேட்பதுண்டு.

“கேள்வி கேக்குறத நிறுத்த மாட்டியாடா. உன் ஒருத்தனுக்கே சொல்லிக் கொடுத்திட்டு இருந்தா அடுத்தவங்கள எப்படிக் கவனிக்கறது?” எனச் செல்லமாகச் சலித்துக் கொண்டு அவன் சந்தேகங்களுக்கு பதில் தருவார்.

அந்த வீட்டில் அவரும் அவரது வயதான அப்பாவும் இருந்தனர். அவர் எழுந்து உட்கார்ந்து கதிர்வேல் பார்த்ததில்லை. ஏதாவது தேவைப்படும் சமயங்களில் ‘விமலாம்மா… ’ என்று குரல் கொடுப்பார். டீச்சர் உடனே எழுந்து ஓடுவார்.

வீட்டைச் சுற்றிப் பல செடிகள் நட்டு வளர்த்தார் டீச்சர். அவர் கையால் எதை ஊன்றி வைத்தாலும் நன்கு தளைத்தது. மாலை நேரங்களில் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார். அப்போது தான் துளிர்க்கத் தொடங்கி இருக்கும் செடிகளை வாஞ்சையோடு தடவிக் கொடுப்பார். அந்த நேரங்களில் அவர் முகத்தில் ஒரு சோகம் தென்படுவது போல் இருக்கும்.

கணேசன் தான் ஒருமுறை கூறினான், “டீச்சருக்குக் கல்யாணமாகி திருபுவனத்துல அஞ்சு வருஷம் இருந்தாங்களாம். பிள்ளை இல்லைன்னு அவுங்க வீட்டுக்காரரர் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாராம். அதுக்கப்புறம் அவங்க இங்கேயே அவங்க அப்பாவோட வந்துட்டாங்க”

விமலா டீச்சர் போன்ற ஒருவரைக் கூட விலக்கிவிட்டு வேறு திருமணம் செய்ய முடியும் என்பதைக் கதிர்வேலால் நம்ப முடியவில்லை.

“சும்மா புளுகாதடா… உனக்கு யாரு சொன்னா?? பொய் சொல்லிட்டுத் திரிஞ்ச மூஞ்சிலியே அப்பிருவேன்” என்று அவனிடம் முஷ்டியை உயர்த்தினான்.

“அட.. சாமி சத்யம்ப்பு… எங்கம்மா பக்கத்து வீட்டக்கா கிட்ட சொல்லிட்டு இருந்துச்சு..”

கதிர்வேலின் அம்மாவின் படம் ஒன்றைச் சட்டமிட்டு அவன் ஆயா அவர்கள் வீட்டுச் சுவற்றில் மாட்டியிருந்தாள். வெள்ளி செவ்வாய்க்கு சிறு மல்லிகைச் சரம் ஒன்றைஅந்தப் படம்தொங்கிக் கொண்டிருக்கும் ஆணியில் சொருகி விடுவாள். அம்மா ஆயாவைப் போலவே இருந்தாள். ஆனால் சிறிய உருவமாய்.

அவனுக்கு டீச்சரே தனக்கு அம்மாவாய் இருந்திருக்கக் கூடாதா என ஏக்கமாய் இருக்கும். டீச்சருக்குப் பிறந்திருந்தால் தானும் அவரைப் போலவே சிவப்பாக அழகாக இருந்திருக்கலாம். அவர் தனக்கு தினமும் குளிப்பாட்டி சட்டை போட்டு விட்டு சோறூட்டி பள்ளிக்கு அனுப்புவதாக,மடியில் படுக்க வைத்து தலையைக் கோதியபடியே கதைகள் சொல்லித் தூங்க வைப்பதாக வித விதமாய்க் கற்பனைகள் செய்தான்.

ட்யுஷன் முடிந்து எல்லாப் பிள்ளைகளும் தத்தம் பைகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பும் போது,

“கதிரு, போறப்ப கோபால் அண்ணே கடையில ரெண்டு தேங்காச் சில்லு வாங்கிக் கொடுத்துட்டுப் போடா” என்று கைகளில் சில சில்லறைகளைத் திணிப்பார். அப்போது ஜனாதிபதி கையில் விருது வாங்கியவனைப் போல அவனது முகம் பெருமையில் மினுமினுங்கும். தான் மட்டுமே அவரின் அன்புக்குப் பாத்திரமானவன் என்ற உணர்வு தந்த துள்ளலில் சிட்டாக ஓடிச் சென்று அவர் கேட்டதை வாங்கித் தந்து விட்டு வீடு செல்வான்.

****

சித்திரை வெயிலின் உக்கிரத்தில் நகரும் உலைக்கலனாக அந்தப் பேருந்து புழுதியை வாரியிறைத்தபடி ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. வெந்து வெதும்பிய முகங்களோடு ஒரு சிலரே அந்த வெயிலில் பிரயாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

“நீ ஒன்னும் கவலைப் படாத தங்கராசு.. நம்ம வக்கீலு எல்லாத்தையும் பாத்துக்குறேன்னு சொல்லிருக்காரு. அந்தப் பயலுகளால ஒன்னும் பண்ணிட முடியாது. எதுக்கும் கொஞ்ச நாளு ஆனையூர்ல உன் மாமியார் வீட்டுல புள்ள குட்டிகள கூட்டிக்கிட்டுப் போயி இரு. நிலைமை சீரானதும் திரும்பி வந்துக்கலாம். என்ன..” என்று அந்த வயதானவர் சொல்லிக் கொண்டிருக்க, தங்கராசின் முகத்தில் சுரத்தே இல்லை.

சிறிது நேரம் அமைதியாக வந்தவன், பின் திடீரெனத் தலையில் இரு கைகளையும் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

“ஐயோ.. தப்பு பண்ணிட்டேனே. உங்க எல்லார் பேச்சையும் கேட்டு மோசம் போகப் போறேனே. நான் போய்ட்டா என் பிள்ளைங்களை யார் பாக்கிறது.” என்று அரற்றினான். பேருந்திலிருந்த அனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

“விடுப்பா… தப்பு செஞ்சவிங்களே வெள்ளையுஞ் சொள்ளையுமா திரியும் போது நீ எதுக்கப்பா கலங்குற. உனக்கு ஒன்னும் ஆகாது ராசா. கவலைப் படாத..” என்று அவனைத் தேற்ற முயன்றாள் முன் இருக்கையில் இருந்த கிழவி ஒருத்தி.

அப்போது ஓட்டுனர் சடாரென ப்ரேக் போட, பெரும் குலுக்கலோடு அந்தப் பேருந்து நின்றது. அதிலிருந்தவர்கள் சுதாரிக்கும் முன்பே சிலர் அரிவாள்களோடு பேருந்தின் இரு வழிகளிலும் ஏறினர்.

“மாமா.. இதுல எவன் அது சாட்சி சொன்னது… ஆளக் காட்டுங்க.. ”

“எல்லாம் ஒரே ஊர்க்காரனுங்க தாண்டா மாப்ளா.. ஒருத்தர் விடாம வெட்டுறா ”

சிறிது நேரத்தில் அந்தப் பேருந்து ரத்தக் களறியானது.

 

****

ண்ணை படிந்திருந்த தலையை இடது பக்கமாக ஒரு கையால் கோதியபடி ஓட்டமும் நடையுமாக டீச்சரின் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான் கதிர்வேல்.

அவனுக்கு ஆயாவின் மேல் கோபமாக வந்தது. பள்ளி முடிந்து வந்ததும் அசந்து தூங்கியவனை எழுப்பாமல் விட்டுவிட்டாள். டிஷனுக்கு நேரமாகி விட்டது. அவன் இதுவரை ஒரு நாள் கூட தாமதமாகச் சென்றதில்லை. டீச்சர் என்ன சொல்வாரோ என்ற பயந்து கொண்டே தயங்கித் தயங்கி  வீட்டினுள் சென்றான்.

அவன் உள்ளே நுழைந்ததுமே, அவனுக்காகவே காத்துக் கொண்டிருப்பவரைப் போல டீச்சர்,

“வாடா வா.. இதான் வர்ற நேரமா. உன்னைத் தான் தேடிட்டிருந்தேன்..”  என்று ஒரு மர ஸ்கேலை அழுத்திப் பிடித்தபடி அவனை அருகில் அழைத்தார்.

கதிர்வேலின் கால்கள் நடுக்கத்தில் தள்ளாடின. அதற்குள் அவரே எழுந்து அவனிடம் வந்தார்.

“வீட்டு முன்னாடி இருந்த வாழைக் கண்ட நீ தானடா ப்ளேடுல அறுத்தது.. சொல்லு” என்று பிசிறிய குரலில் கத்தினார்.

“இல்ல டீச்சர். நான் இல்ல.”

“தெரியும்டா… நீயாத்தான் இருப்ப.. உங்க ஜாதிக்காரங்க தானே பஸ்ல இருந்த அத்தன பேர வெட்டிக் கொன்டது… அந்த புத்தி உனக்கும் இருக்கும்ல. இப்ப வாழையை அறுப்பநாளைக்கு ஆளுங்க கழுத்த அறுப்ப..” என்றபடி அந்த மர ஸ்கேல் ஒடிந்து சிதறும் வரை அவனை விளாசினார்.

“இனிமே இந்தப் பக்கம் ஒன்னப் பாத்தேன்.. தொலைச்சுப் புடுவேன்.. ஓடிரு.”

காயங்களோடும வீங்கிய முகத்தோடும் கதிர்வேல் அழுது கொண்டே வெளிவருகையில் வெளியிலிருந்த வாழைக் கன்றை ஒரு சிவத்த மாடு மென்று கொண்டிருந்தது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button