சிறார் இலக்கியம்

துன்பத்தில் இன்பம் – சிறுவர் கதை

ஞா.கலையரசி

ஆறாம் வகுப்பு மாணவர்களான பாபுவும், சோமுவும் நெருங்கிய நண்பர்கள்.

தெருவில் தட்டான்களையும், தும்பிகளையும் பிடித்து விளையாடுவது அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு.

ஒரு நாள் பாபுவின் அப்பா, அந்த வழியே சைக்கிளில் வந்தார்.

“அப்பா! அப்பா” இந்த ஊசித் தட்டான், கல்லை எப்பிடித் தூக்குது பாருங்க!” என்று மகிழ்ச்சியுடன் கூவினான் பாபு..அவன் காட்டிய திசையில் ஒரு தும்பி, சிறு கல்லைத் தூக்கிக் கொண்டிருந்தது.

“இது பட்டம் மாதிரி, பறக்குது மாமா!” என்று சோமு, நூலால் கட்டிய தட்டானைக் காட்டி, உற்சாகமாகச் சொன்னான்..

“அப்படியா?’  என்று கேட்டபடியே, சைக்கிளிலிருந்து  இறங்கினார் அப்பா.

சிறிது நேரங்கழித்து, “ விளையாண்டது போதும்; வீட்டுக்குப் போலாம் வாங்க,” என்றார் அப்பா.

சைக்கிளைத் தள்ளிக் கொண்டு, அவர் நடந்தார்.  இருவரும் அவர் கூடவே நடந்தனர்..

சைக்கிளில் இருந்த இரண்டு மூட்டைகளை ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்து தூக்கி வரச் சொன்னார் அப்பா.

பைகளை முதுகில் தூக்கிக் கொண்டு, இருவரும் நடக்க முடியாமல் நடந்தனர். கொஞ்ச தூரம் போனதும் இருவரும் மூட்டைகளைக் கீழே இறக்கி வைத்தனர்.

“அப்பா! மூட்டை ரொம்ப கனமாயிருக்கு. என்னால தூக்கிக்கிட்டு, நடக்கவே முடியல. முதுகு ரொம்ப வலிக்குது,” என்றான் பாபு.

“ஆமாம் மாமா. எனக்கும் ரொம்ப வலிக்குது,” என்றான் சோமு..

“தும்பி காலுல, கல்லைக் கட்டித் தூக்க வைச்சீங்களே? அதுக்கும் இப்பிடித் தானே வலிச்சிருக்கும்?” என்றார் அப்பா.

“நாங்க என்ன பெரிய பாறாங் கல்லையா தூக்க வைச்சோம்?. சின்னக் கல் தானே?” என்றான் பாபு.

“ஒனக்கு அது சின்ன கல்.  ஊசி மாதிரி இருக்கிற தும்பிக்கு, அந்தக் கல் எவ்வளவு கனமா இருக்கும் தெரியுமா? ஒனக்கு வாயிருக்குது;  வலிக்குதுன்னு சொல்லிட்டே!  பாவம், அந்த வாயில்லாப் பூச்சி என்ன செய்யும்?

அடுத்தவங்களைக் கொடுமைப்படுத்தி, அவங்க துன்பப்படுறதைப் பார்த்து சிரிக்கிறது ரொம்ப தப்பு பாபு.

அந்தக் காலத்துல, இந்தத் தட்டான், தும்பியெல்லாம், நெறையா இருந்துச்சி. நாம இயற்கையை நாசம் செஞ்சதால, இப்ப ரொம்பவே குறைஞ்சி போயிடுச்சி.

பொழைச்சி இருக்கிற கொஞ்ச தட்டான்களையும், நீங்க புடிச்சி இறக்கையைப் பிய்ச்சி, இப்பிடி பாடாப் படுத்தினீங்கன்னா, அதுங்களும் சுத்தமா அழிஞ்சி போயிடும்..

இந்தப் பூச்சிங்க இருந்த வரைக்கும் கொசுத் தொல்லை இல்லாம நிம்மதியா இருந்தோம். ஏன்னா கொசுவும் அதோட லார்வாவும் தான் இதோட முக்கியமான உணவு.

கொசுவைத் திங்கிற இந்தத் தட்டான் பூச்சி அழிஞ்சிட்டதால, கொசு ஏராளமாப் பெருகிப் போயி,. சிக்கன் குனியா, டெங்குன்னு வந்து, அவதிப்படறோம். இப்ப கொசுவை ஒழிக்கிற வழி தெரியாமத் திண்டாடுறோம்,”. என்றார் அப்பா.

“நாங்க செஞ்சது தப்பு தான் அப்பா.  அதுக்கு வலிக்கும்னு தெரியாம இப்பிடிப் பண்ணிட்டோம். இனிமே எந்த உயிருக்கும், தீங்கு செய்ய மாட்டோம்,” என்றனர், நண்பர்கள் இருவரும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. விளையாட்டென்று நினைத்து அறியாமையில் சிறார் செய்யும் தவறுகளை மிக அழகாகச் சுட்டி அறிவுறுத்தும் கதைக்குப் பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button