
எல்லாரையும் போலதான்.
இக்கணம்
அறையின் தனிமைத் துயரில்
யாராவது வந்தால்
தேவலாம் போலிருக்கிறது.
அப்படி வந்தால்
அவரும் சலித்து
மீண்டும் தனிமை வேண்டி
போகமாட்டாரா என்றிருக்கும்.
இந்த தனியறையின் ஜன்னல் கம்பிகளின்
இடையினூடாக
எத்தனை எத்தனை பார்ப்பது?
பக்கத்திலிருக்கிற
சிறு தேவாலயத்தில் புகலிடம் கொண்டுள்ள
புறாக்களுக்கு
விஷ இரை வைத்த ஒருவரை
ஜன்னல் வழி பார்த்த நான் தடுக்கவில்லை.
மற்றும்
என்னிடம் சைகையால் சொல்லி
யாரிடமும்
சொல்ல வேண்டாமென்றதை
காப்பாற்றி வேறு கொண்டிருக்கிறேன்.
எனது அறைக்கு இடப்புறம்
ஒரு ஜன்னல் இருந்தது.
நான்கு,நான்காய் எட்டு கம்பிகள் இருந்தன.
ஒருபக்கம் கறுப்பும்
இன்னொரு பக்கம் சிகப்புமாய்
வர்ணம் பூசப்பட்டிருக்கும்.
அவ்வீட்டின் எல்லா ஜன்னல்களும்
கறுப்பு-சிவப்பு நிறம் பூசியிருக்கும்.
அந்த ஜன்னலுக்குள்
மேஜையில் உட்கார்ந்து
புத்தகம் படிக்கிற ஒரு தாத்தாவின்
பிம்பம் தெரியும்.
அதற்குமுன்
எட்டு கம்பிகளுக்கும்
கறுப்பு வர்ணம் பூசப்பட்டிருந்ததாய் சொல்வார்கள்.
கறுப்பு
கறுப்பு-சிவப்பாய் மாறியபோது
மாறியவருள் ஒருவர் போலும்.
கதவில்லாத ஜன்னல் அது.
பின்னொருநாள்
அதற்கு கதவு இட்டார்கள்.
அந்த தாத்தா படுக்கையிலிருந்தார்.
ஜன்னல் அதற்கப்புறம்
திறக்கப்படவேயில்லை.
கதவு சாத்திய ஜன்னலின்
கருப்பு,சிகப்பு வண்ணக்கம்பிகளைப்
பார்த்துக்கொண்டிருப்பதே
முன்னாள் கொள்கை பிடிப்பாளருக்கு
பொழுதுபோக்காயிருந்திருக்கலாம்.
அவரது மரணம் நிகழ்ந்ததிலிருந்து
நான்காவது நாள்
ஜன்னலைக் கொஞ்சம் அடைத்து
ஒரு A/C-யைச் செருகினார்கள்.
இப்போது
யார் இருக்கிறார்கள்
என்ன நடக்கிறதெனத் தெரியாது.
என் கண்கள் இனி
அந்தப் பக்கம் திரும்பாது .
சற்றுமுன்
குப்பைத் தொட்டியில்
நான் வீசிவந்த
ஒரு பழைய மெத்தையை
வழியில் போகிற ஒருவர்
சுற்றிமுற்றி பார்த்துவிட்டு
எடுத்துக்கொண்டார்.
வேறு எதையோ
இப்போது தேடிக்கொண்டிருக்கிறார்.
என் ஜன்னல் வழி
நான் பார்ப்பதை
அவர் பார்க்கவியலாது.
தேடுகிற கண்களுடனே
அவ்விடம் கடப்பவர்
என்ன தேடியிருப்பார்?
ஒருவேளை
இன்னொருமுறை
திரும்பி வருவாரெனில்
அவருக்கு என்ன
கிடைக்கச் செய்வது?
இப்போதைக்கு
ஏன்
இந்த ஜன்னல்
என்னை
இந்த பாடுபடுத்துகிறது.
மூச்சுமுட்டுகிறது.
சற்று கண்களை மூடி
ஆசுவாசப்பட்டு மெல்ல
என் சன்னல் வழியாக
யாரும் எட்டிப் பார்க்கிறார்களாவென,
என் சன்னலின் பக்கம் சென்று
எட்டிப்பார்த்தேன்.
இப்போதுதான்
வெளியிலிருந்து
அச்சு அசல் என் சாயலிலேயே
யாரோ என்னை
எட்டிப்பார்க்கிறார்கள்.
சன்னல் வழியே பயணம் மிகச்சிறப்பு