ஓவியாஆஆஆஆ.
சசியின் குரல் 95dBஐத் தாண்ட அவள் மேஜை மீதிருந்த போன்சாய் மர இலைகள் மெலிதாக நடுங்கின, கூடவே கண்ணாடி டம்ளரில் நிரம்பியிருந்த நீரில் சின்ன சின்ன வட்டங்கள் தோன்றின.
ஹே சசி.. ஏன் இப்படி காட்டுக்கத்தல் போடறே
சொல்லி அருகில் வந்தாள் ஓவியா. அவள் ஓடி வந்த வேகத்தில் அவள் காதிலிருந்த தங்க ஊஞ்சல்கள் அசைந்தன.
இது என்ன?
சசியின் கையில் வெள்ளை நிற Mylar Film.
ஓவியா வாங்கி பார்த்தாள்.
சையிஃப்கான் மால் டிசைன்.
அது தெரியுது இடியட். இது என்ன மால் டிசைனா அல்லது மளிகை கடை டிசைனா?
சசி.
ஓவியா குரல் உயர்த்தினாள்.
ஓவியா கொஞ்சம் சவுண்டைக் குறை. நம்ம கம்பெனி பேர் என்ன?
SOM.
Sasi, Oviya & Magdalene.
இந்தப் பேரை சஜெஸ்ட் பண்ணினது யாரு?
நாந்தான்.
இந்தப் பேருக்கு இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வந்தது?
Skidmore, Owings & Merril .
எவ்ளோ பெரிய கம்பெனி. வால்ட் டிஸ்னிக்கே டிசைன் பண்ணிக் கொடுத்தவங்க. அவங்க பேர வச்சிட்டு இப்படி டிசைன் பண்றது என்ன நியாயம் ஓவியா?
ஓக்கே கூல் சசி. என்ன எதிர்பாக்குற?
சாரி டியர். இந்த டிசைன் சயிஃபை இம்ப்ரஸ் பண்ணலை. அவர் புர்ஜ் கலிஃபா லெவலுக்கு எதிர்பாக்குறார்.
ஓவியா சிரித்தாள்.
என்ன?
தென் ஒய் டிண்ட் ஹி கன்சல்ட் மிஸ்டர் அட்ரியன் ஸ்மித்?
இடியட். உன் பிளான்ல Seismic architecture expression இல்லேன்னு அவர் ஃபீல் பண்றார்.
ஓக்கே டார்லிங். I will make necessary changes accordingly.
சீக்கிரமா முடி. நமக்கு ரொம்ப நேரமில்லை. நான் ஒன் அவர்ல வெளில கிளம்பறேன்.
இனிமேல இப்டி கத்தாதே சசி. . வோகல் கார்டு ரப்சர் ஆய்டும் .
சொல்லி ஓவியா கண்சிமிட்ட அவள் காதணியும் கூடவே ஆடியது.
விநோ கை தூக்கி சோம்பல் முறித்தாள்.
எந்த பாடுபாவி இந்த வீக்லி ரிப்போர்ட்டை கண்டுபிடிச்சான். ஹெச்ஓ-ல வாங்கி ஸ்பாம்ல போடறதுக்கு இவ்ளோ மண்டயிடி பட வேண்டிருக்கு. பசங்க மாதிரி ஒரு தம் போட்டா நல்லாருக்கும்ல.
கண்ணாடி ஜன்னல் கதவுக்கு வெளியே மஞ்சள் சரக்கொன்றை மரம் சோடியம் விளக்கு போல் ஒளிர்ந்துகொண்டிருந்தது.
ஹல்லோ டே ட்ரீமர். தங்களை மாமி அழைக்கிறார்கள்.
ரமேஷ் அருகில் வந்து சர்காஸ்டிக்காக சொல்லி சிரித்தான்.
வங்கி ஊழியர்களால் மாமி என அழைக்கப் பட்ட பிராஞ்ச் ஹெட் மார்க்கரெட் நாற்காலி முழுவதும் நிரம்பியிருந்தாள். மூக்கு கண்ணாடி நடுமண்டையில் அமர்ந்திருந்தது.
இவளைப் பார்த்ததும் கண்ணாடியை வழித்து மூக்கில் பொருத்திக் கொண்டு கடுப்பாக கேட்டாள்.
வாட் இஸ் திஸ் மேன்?
பரந்து விரிந்திருந்த அவளது மேஜையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்.
என்ன மேம்?
ஏன் அந்த ரெண்டு லோனை அப்ரூவ் பண்ணலை?
யாரோடது?
ஆசிஃப் அண்ட் கன்யாலால்.
மேம். அவங்க ரெண்டு பேரும் நம்ப ஊர்ல பெரிய பிசினெஸ்மென். அவங்களுக்கு போலி பட்டா நம்பர் கொடுத்து அக்ரிகல்ச்சர் லோன் கொடுக்கறது சரியில்ல.
எது சரியில்ல. இந்த பிராஞ்ச் ஹெட் நான் சொல்றேன். அப்ரூவ் பண்ணு.
மேம், திரும்பவும் சொல்றேன். உண்மையா விவசாயம் பண்றவங்க இந்த லோனுக்காக அப்ளை பண்ணிட்டு காத்திட்டிருக்காங்க. நீங்க பண்றது சரியில்ல.
என்ன விநோ நீ, கிளாஸ் த்ரீ மாதிரி பிஹேவ் பண்ற. யூ ஆர் எ கிளாஸ் ஒன் ஆஃபிஸர். ஞாபகம் வச்சுக்கோ.
நியாயத்தை எந்த கிளாஸ் வேணுமானும் சொல்லலாம். கட்டாயம் அவங்களுக்கு லோன் கொடுக்கணும்னு நீங்க நினைச்சா என்னை ஓவர்லுக் பண்ணி உங்க டிஸ்கிரீஷனரி பவர யூஸ் பண்ணி சாங்ஷன் பண்ணுங்க.
மாமி கண்ணாடியை நடுமண்டைக்கு ஏற்றிக்கொண்டே சொன்னார்.
சாந்தம் விநோ. என்ன சாப்பிடறே?
மறுத்து தலையசைத்தாள்.
இங்க பார். நீ சொல்ற ஆளுங்களுக்கு மட்டும் லோன் கொடுத்தா துட்டு திரும்பி வராது கண்ணா.
மேடம். உங்ககிட்ட இருக்கற நம்ப பேங்க்கோட வராக்கடன் லிஸ்ட்டை செக் பண்னிப் பாருங்க. எல்லாம் நீங்க சொல்ற பெரிய மனுஷங்கதான்.
அம்மா தாயே . இங்க டிரேட் யூனியன் மாதிரி பாலிடிக்ஸ் பேசாதே. நீயும் கொஞ்ச நாள்ல ப்ராஞ்ச் ஹெட்டாய்டுவே. அப்பத் தெரியும் மண்டக்கொடச்சல். ரிடயர்டு ஆனாலும் விடமாட்டாங்க. வசூலாகாத கடனுக்கு நாமதான் பொறுப்பேற்கணும். டெர்மினல் பெனிஃபிட் மிஞ்சுமான்னு தெரியாது. கடசியா என்ன சொல்றே?
நோ மீன்ஸ் நோ.
பெரிய அமிதாப்பச்சன் சொல்லி மார்க்கரெட் சிரித்தாள்.
மேடம் சாயங்காலம் ஒன் அவர் பர்மிஷன் வேணும்.
திரிபாதி மேஜையை ஓங்கித் தட்டினார்.
அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
சஞ்சய்.
கத்தினார்.
ஃபோனிலிருந்து சஞ்சய் நிமிர்ந்தான்.
யெஸ் திரிபாதி.
எவ்ளோ சிரியஸா பேசிட்டு இருக்கேன். எனக்கென்ன மயிருன்னு நீ ஃபோனை நோண்டிட்டு இருக்கே.
ஸாராவும், லிடியாவும் தலைகுனிந்து சிரித்தார்கள்.
மைண்ட் யுவர் வேர்ட் திரிபாதி.
ஓக்கே. ஓக்கே. ஸாரி கேள்ஸ் அண்ட் பாய்ஸ். சொல்லு சஞ்சய் நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்?
IaaS, PaaS, SaaS, and Serverless Computing-ன்னு நாலு பெரும்பாறையையும் தலைல தூக்கி வச்சுட்டு நம்ப கம்பெனி நடக்க முடியாம தள்ளாடுது. அங்க ஜெர்மன்ல இருந்துட்டு நம்பள அதட்டிக்கிட்டு இருந்தா டெய்லி மீட்டிங்குன்னு அவங்க எடுக்கற வாந்திய நாங்க விழுங்க முடியாது திரிபாதி.
திரிபாதி கர்சீப் எடுத்து நடுமண்டையை துடைத்துக் கொண்டார். அது அவரது மேனரிசம். ஏஸியில் வேர்க்காத போதும் நடுமண்டையைத் துடைக்கும் மேனரிசம்.
சாந்தக் குரலில் சொன்னார்.
எனக்கும் புரியுது. வருஷா வருஷம் நம்ப பேக்கேஜையும் ஏத்திக்கிட்டேதானே இருக்காங்க. ஆனுவல் ரவுண்ட் டேபிள் கான்பரென்ஸுக்கு ஜெர்மனுக்கு நீயும்தானே வர்றே. அங்க வச்சு இதெல்லாம் சொல்லு. எல்லோரும் ஒத்துழைங்க.
அந்த ஹாலிடே பேக்கேஜ் பத்தி எதாவது சொல்லுங்க.
இந்த பிராஜெக்டை முடிங்க. கிளையண்ட் கத்துறான். நான் பேசி ஏற்பாடு பண்ணறேன்.
கூட்டம் கலைந்தது.
என்ன சஞ்சு கடுப்பாய்ட்டியா? சாரா கேட்டாள்.
ஆமா, விநோட்டேருந்து மெசேஜ் வந்துச்சு. அத பாத்துட்டு இருந்தேன்.
என்ன விஷயம்?
பேசணுமாம்.
எங்கே? என்ன?
கார்னர் லெளஞ்ச். தெரில.
ஓக்கே. எதாவது கிஃப்ட் வாங்கிட்டு போ. சம் ஃபிளார்ஸ்.
பொக்கே.
ஸாரா தலையசைத்தாள்.
கார்னர் லெளஞ்ச் அண்ட் பார்.
It’s been a long day without you, my friend
And I’ll tell you all about it when i see you again
கலிஃபா பாடிக்கொண்டிருந்தார்.
கையில் பூங்கொத்துடன் நுழைந்த சஞ்சய் அவர்களைப் பார்த்தான்.
ஹாய்.
சசி கையசைத்துக் கூப்பிட்டாள்.
அருகில் சிகப்புத்தாமரை போல் விநோ.
ஹாய்.. ஹாய் லேட்டாய்டுச்சா?
ஜஸ்ட் டென் மினிட்ஸ். இட்ஸ் ஓக்கே.
சசி சொன்னாள்.
ஏன் அவங்க பேசமாட்டாங்களா?
விநோ அவன் கண் பார்த்துச் சிரித்தாள்.
மெனு கார்டு எடுத்துப் பார்த்தான்.
நாங்க ஆர்டர் பண்ணிட்டோம். நீங்க பண்ணிக்கோங்க. திபேத்தியன் மோமோஸ் அண்ட் இரானியன் சாய்.
மீ ஆல்ஸோ.சொல்லிச் சிரித்தான்.
பூங்கொத்தை விநோவிடம் நீட்டினான்.
தயங்கினாள்.
வாங்கிக்கோ விநோ.. சசி சொன்னாள்.
தயக்கமாய் கை நீட்டினாள்.
நீங்க சொன்னாதான் அவங்க கேப்பாங்களா?
இல்ல. அவ வேற ஒரு விஷயத்துக்காக தயங்குறா?
என்ன விஷயம் விநோ? பேசிக்கலாம். மேரேஜ் முடிஞ்சதும் தனியா போகணுமா? நோ ப்ராப்ளம். எங்க ஃபேமில ஒத்துக்குவாங்க.
வேற ஒரு ப்ராப்ளம்.
ப்ளிஸ் சசி. அவங்கள பேசச்சொல்லுங்க.
ஏதோ சொல்ல வந்த சசியை விநோ கை நீட்டித் தடுத்தாள்.
ஐம் ஸாரி சஞ்சய் . இந்த கல்யாணம் வேண்டாம்.
வ்வாட். அதிர்ந்தான்.
ஒய்.. ஒய்.
என்ன பிடிக்கலயா?
வேற ஒருத்தர பிடிச்சிருக்கு?
யார்? யார்?
சம் ஒன்.
அமைதியாயிருந்தான்.
We’ve come a long way – yeah, we came a longway
கலிஃபா தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.
கம் ஆன். சஞ்சய். சசி அவன் கை தொட்டாள்.
அடுத்த வாரம் எங்கேஜ்மெண்ட் ஸாரி வாங்கப் போறோம். அதனாலதான் அவசர அவசரமா வரச் சொன்னோம்.
நெற்றிப் புருவம் நடுவில் தேய்த்து கொண்டான்.
ஓக்கே.கைஸ். என்ன பண்ணனும்?
தெட்ஸ் குட். இவள பிடிக்கலைன்னு சொல்லிடுங்க சஞ்சய்.
அது எப்டி பொண்ணு பாக்க வந்தப்ப உடனே ஓக்கே சொல்லிட்டு இப்ப எப்டி?
அப்ப பிடிச்சுது. இப்ப பிடிக்கலைன்னு சொல்லுங்க.
அத இவங்களே சொல்லலாம்ல.
சொல்லலாம். ஆனா, மாமா ஹார்ட் பேஷண்ட்.
மாமா?
ஆமா. வீ ஆர் கஸின்ஸ்.
ஓ. நான் சொன்னா ஒண்ணும் ஆகாதா?
அந்த அளவுக்கு ஆகாது.
யோசித்தான்.
விநோவை நோக்கி கை நீட்டினான்.
ஆல் த பெஸ்ட். கைகுலுக்கினான்.
எப்ப அப்பாட்ட பேசறிங்க?
நைட் அம்மா அப்பாட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேனே.
ப்ளீஸ்..இப்பவே.
ஓக்கே…ஃபோனை எடுத்தான்.
சசி சைகையில் சொன்னாள். ஸ்பீக்கர்.
சொல்லுங்க தம்பி. அவர் குரலில் ஆர்வம் தெரிந்தது.
சஞ்சய் சொல்ல ஆரம்பித்தான்.
பேசி முடித்து கோபமாக ஃபோனை டேபிளில் விசிறினான்.
சொல்லிட்டேன்.
பேரர் பில் கொண்டுவந்தான்.
ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் நான் தர்றேன்.
சஞ்சய் கண்களில் அடிபட்ட பறவையின் வேதனை தெரிந்தது.
விநோ தலை குனிந்தாள்.
வீடு அமைதியாக இருந்தது.
அப்பா ஊஞ்சலில் அமர்ந்திருந்தார்.
அம்மா சோஃபாவில் அமர்ந்திருந்தார்.
இவர்களைப் பார்த்ததும் தொண்டையைச் செருமினார்.
வா சசி. நீ வந்தது நல்லாப் போச்சு.
என்ன மாமா?
அந்தப் பையன் சஞ்சய் இப்பத்தான் கால் பண்ணினான்.
அம்மா நிமிர்ந்து இவர்களைப் பார்த்தார்.
கல்யாணம் வேண்டாமாம். அவன் வேற பொண்ண லவ் பண்றானாம்.
அம்மா குறுக்கிட்டார்.
அப்ப ஏன் பொண்ணு பாக்க வந்தப்ப மண்டய ஆட்டி ஆட்டி சம்மதம் சொன்னான்?
நான் கேட்டேனே? அவன் அம்மா ஒத்துக்க மாட்டேனுட்டாளாம். தற்கொலை பண்ணிக்குவேன்னு சொன்னாளாம்.
இப்ப மட்டும் பண்ணிக்க மாட்டாளாமா?
அது வெறும் எமோஷனல் பிளாக்மெய்லாம். இந்த நாதாரி சொல்றான்.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். காலால் உந்தி ஊஞ்சலை மெல்ல ஆட்டினார்.
சசி நீ வந்தது நல்லதாப் போச்சு. நைட் இங்க தங்கிட்டுப் போ.
விநோவைப் பார்த்து கண்கலங்கச் சொன்னார்.
பாப்பா எதுக்கும் கவலைபடாதே.
பாப்பா தலை குனிந்து தலையசைத்தது.
சசி அவளையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தாள்.
சசி கதவை இறுகச் சாத்தி தாழிட்டாள்.
விநோ பெட்டில் தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள்.
அருகில் போய் முகவாய் தொட்டு நிமிர்த்தினாள்.
இரண்டு நீர்முத்துக்கள் உருண்டன.
துடைத்தாள்.
எழுந்து நில்.
விநோவின் கை பிடித்து நிற்க வைத்தாள்.
ஹேண்ட்பாக்கில் துழாவி அந்த சின்னஞ்சிறு சதுர பெட்டியைத் திறந்தாள்.
ஒற்றை மோதிரம்.
சசி அவள் முன் முழந்தாளிட்டு மோதிரத்தை நீட்டிச் சொன்னாள்.
வில் யூ ப்ளிஸ் மேரி மீ டியர்?
கண்களைத் துடைத்துக் கொண்டே விநோ வலது கை விரலை நீட்ட சசி மோதிரத்தை மாட்டினாள்.
சசி என்கிற சசிரேகா விநோ என்கிற விநோதினியை இறுக அணைத்து அவள் உதடுகளில் இவள் உதடுகளைப் பொருத்தினாள்.
*********