இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

மணற்குன்று பெண் – வளன்

பாஸ்டனில் இருக்கும் நார்த் எண்ட் எனக்கு விருப்பமான இடம். அதிலும் ஹேனோவர் வீதியில் இருக்கும் காஃபே விக்தோரியா என் வாழ்வின் ஒரு பகுதி என்றே சொல்லலாம். அங்கு பணி புரியும் அத்தனை அழகிகளுக்கும் என்னைத் தெரியும். எனக்கென்று ஓர் இடம் அந்தக் கடையில் ஒதுக்கியிருக்கிறார்கள். சமயங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது கடையின் பின்புறம் எனக்காக இடம் அமைத்துக் கொடுக்கும் அளவுக்கு நெருக்கமான இடம். மாதத்தில் மூன்று நாள்கள் அங்கு சென்றுவிடுவேன். எனக்கான இடத்தில் அமர்ந்து எழுதுவேன் அல்லது புத்தகம் வாசிப்பேன். இதற்கிடையில் எனது டபுள் ஷாட் எஸ்ப்ரஸோவும் சம்பூக்காவும் வந்துவிடும். சரியாக பாதி காஃபி அருந்தி முடிக்கும் போது திராமிசோ வரும். ‘திராமிசோ’ என்ற இத்தாலிய சொல்லுக்கு ‘Lift me up’ என்பது அர்த்தம். திராமிசோவை சுவைத்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும். உலகத்தின் ஆகச் சிறந்த திராமிசோ காஃபே விக்தோரியாவில்தான் கிடைக்கும். இத்தாலியில் கூட இவ்வளவு கவனமுடன் திராமிசோ செய்வார்களா என்று தெரியாது. காஃபியின் கசப்பு நாவின் சுவை நரம்புகளை நிறைத்திருக்கும் போது, திராமிசோ ஒரு ஸ்கூப். பின்னர் மீண்டும் காஃபி. மீண்டும் திராமிசோ. எல்லாம் நிறைவுற்றதும் தித்திப்பான சம்பூக்கா ஒரு ஷாட். சம்பூக்காவின் எரிக்கும் ஆல்கஹால் எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி பரிசுத்தமாக்கிவிடும்.

அன்று கூட்ட நெரிசல் மிகுந்த நாள். நார்த் எண்ட் திருவிழாக்கள் பாஸ்டன் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. வசந்த காலம் தொடங்கி கோடை முழுவதும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டேயிருக்கும். ஹேனோவர் வீதியெங்கும் மக்கள் வெள்ளம் அள்ளும். என்னைப் பார்த்ததும் சிண்டி பின்பக்கம் ஒரு சிறிய மேசையும் நாற்காலியும் எடுத்துப் போட சொன்னாள். சிண்டிதான் அன்றைய தலைமை உபசரிப்பாளர். நான் அமர்ந்ததும் என் வழக்கமான பதார்த்தங்கள் மேசையில் வந்து சேர்ந்தது. மக்கள் காஃபியை உறிஞ்சும் ஒலியும் பீங்கான் தட்டுடன் சில்வர் ஸ்பூன்கள் உராயும் ஒலியும் ஆங்கில உரையாடல்களும் இத்தாலிய உரையாடல்களும் கேட்ட வண்ணம் இருந்தது. இவைகளின் ஊடாக இத்தாலிய பாடலின் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது. இவைகளை மீறி ஒரு இளம் பெண்ணின் வாக்குவாதம் கேட்டது.

“மிஸ், இடமில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?”

“சாரி மேம், யாராவது எழுந்தால் அங்கு நீங்கள் சென்று அமர்ந்து கொள்ளலாம்.” சிண்டி பொறுப்புடன் அந்த யுவதிக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“இங்கே பாருங்கள், நான் என் ஆண்டியுடன் வந்திருக்கிறேன். எனக்காக இல்லாவிட்டாலும் இவர்களுக்காகவது எதாவது ஏற்பாடு செய்யுங்கள். என் ஆண்டி உடல் நலமற்றவள். ப்ளீஸ்” உடலை ஒட்டிய உடையுடன் பார்ப்பதற்கு அழகாக இருந்தாள். கோடைக்கான உடை என்பதால் உடலின் அங்கங்கங்கள் தராளமாக வெளியே தெரிந்து கொண்டிருந்தது. அவளுக்கு அருகில் ஒடுங்கிய தேகத்துடன் நினைவு முழுவதையும் எங்கோ வைத்து ஒரு மூதாட்டி நின்று கொண்டிருந்தாள்.

எவ்வளவு கெஞ்சியும் சிண்டி விடாப்பிடியாக தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

நான் சிண்டியை கையை உயர்த்தி அழைத்தேன். அவ்வளவு சந்தடியிலும் அவள் என்னை நோக்கினாள். நான் இரண்டு விரல்களை உயர்த்தி எனக்கு அருகில் காட்டினேன். சிண்டி புரிந்து கொண்டாள்.

“நீங்கள் ஜோசப்புடன் உட்கார்ந்துக் கொள்ள விரும்புகிறீர்களா? ஜோசப் எங்கள் ரெகுலர் கஸ்டமர். ஜெண்டில் மேன்” சிண்டி அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி என்னிடம் அவர்களை அனுப்பினாள்.

அழாக பெண் என்னை நெருங்கும் போது எனக்கு பதற்றமாக இருந்தது. அவள் பார்வையால் என்னை மதிப்பிட்டுக் கொண்டே என் அருகில் வந்தாள். நான் எழுந்து இருவரையும் வரவேற்று கரம் குலுக்கினேன். அழகி தன்னை ஸ்டெஃப்னி என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். உடனிருந்த மூதாட்டியை தன் ஆண்டி என்றும், அவள் பெயர் சூசன் என்றும் அறிமுகம் செய்து வைத்தாள்.

“ஸ்டெஃப்னி, உங்களுக்கு இந்தக் காஃபி கடையை பிடிக்குமா? நீங்கள் அவ்வளவு நேரம் வாக்குவாதம் செய்ததற்கு பதிலாக வேறு கடைக்குச் சென்றிருக்கலாம்.” என்றேன்

“எனக்காக இல்லை, எல்லாம் என் ஆண்டி சூசனுக்காக. சூசன் விரைவில் ஹாஸ்பிடல் கேருக்கு மாற்றப் போகிறார்கள். சூசனுக்கு இந்தக் கடை மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவ்வளவு போராட்டம். இன்று விட்டால் சூசன் இனிமேல் இங்கு வருவது சிரமம்தான்.” கவலையுடன் சூசனை அவள் தடவிக் கொடுத்தாள். சூசன் என்னை ஒரு அமானுஷ்ய புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் பதிலுக்கு அவளை நோக்கி சிரிக்க முனைந்தேன் ஆனால், முடியவில்லை. எனக்கு அவளைப் பார்த்தாலே பயமாக இருந்தது. சிரிக்கத் தோன்றவில்லை.

“ஹலோ சார், ஹௌ ஆர் யூ?” என்றாள் அதே கொடூர புன்னகையுடன். அவள் பல் வரிசை சீராக இல்லை.

நான் பதிலளித்துவிட்டு ஸ்டெஃப்னியை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதும் அவள் பதற்றமாகவே இருந்தாள். நான் சூசனுக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேச ஆரம்பித்தேன்.

“என் ஆண்ட் சூசனுக்கு டிமெண்ஷியா. அவள் எல்லாவற்றையும் மறந்து கொண்டே வருகிறாள். சூசன் என் அம்மாவுடன் பிறந்த இளைய சகோதரி. என் அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லை. சூசனுக்கு யாருமில்லை. சூசன் திருமணம் செய்துகொள்ளவில்லை. டிமெண்ஷியா சில வருடங்களாக மோசமாகி வருகிறது. அதனால் அம்மா சூசனை அவளுடைய விருப்பமான இடங்களுக்கு அழைத்து வரச் சொல்லியிருக்கிறாள். நானும் என் சகோதரனும் பெரும்பாடுபட்டு இதை செயல்படுத்தி வருகிறோம். இன்று நான் தனியாக மாட்டிக் கொண்டேன். இங்கே காஃபி அருந்திய பின் செயிண்ட் லெனர்ட் சர்ச்சில் சில நிமிடம் ஜெபம் செய்துவிட்டு வீடு திரும்ப வேண்டும்.”

மடமடவென பேசிய ஸ்டெஃப்னியின் உதட்டை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் அவ்வளவு அழகாக இருந்தாள். இதற்கிடையில் அவர்களுக்கும் சேர்த்து நான் திராமிசோ ஆர்டர் செய்தேன். சூசனுக்கு ஹாட் கேப்பசீனோ வந்தது.

“நீ ஹவாய் தீவிலிருந்து வருகிறாயா?” என்று சூசன் என்னிடம் கேட்டாள்.

அதுதான் டிமெண்ஷியாவின் வரமும் சாபமும். வார்த்தைகளுக்கு எந்த வடிகட்டியும் இல்லை. தோன்றுவதை பேசிவிடுவார்கள். நான் அவளின் கேள்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், ஸ்டெஃப்னி அதிர்ந்து போனாள். சூசனை கடிந்து கொண்டாள். நான் ஸ்டெஃப்னியை சமாதானப்படுத்தினேன். எங்களுக்கு அருகில் இருந்த தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. ஸ்டெஃப்னி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சூசன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சூசனை கவனித்துவிட்டு ஸ்டெஃப்னியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின்னர் ஸ்டெஃப்னியின் அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அவள் என்னிடம் சூசனை ஒப்படைத்துவிட்டு காதில் அலைபேசியை வைத்துக் கொண்டு வெளியே சென்றாள். இப்போது நானும் சூசனும் திராமிசோவை சாப்பிட ஆரம்பித்தோம்.

“நீ யார்? உன்னை எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை.” என்றாள் சூசன்.

சூசன் போன்று டிமெண்ஷியா பாதிக்கப்பட்டவர்கள் இந்த மாதிரியான இடங்களுக்கு வரக்கூடாது. இவ்வளவு சத்தங்கள் ஒன்றாக மண்டைக்குள் சென்றால் என்னாவது! ஆனால், நான் பொறுமையாக பதில் சொல்ல ஆரம்பித்தேன். எத்தனை வருடங்களாக பாஸ்டனில் இருக்கிறேன் என்பதையும், எனக்கு எவ்வளவு பாஸ்டன் பிடிக்கும் என்பதையும் சொல்லிக் கொண்டிருந்தேன்.

“நீ கேப் காட் சென்றிருக்கிறாயா?” என்றாள்

“ஓ, சென்றிருக்கிறேன். எனக்கு பிடித்தமான இடம்.”

“ப்ராவின்ஸ் டௌன் அருகில் இருக்கும் மண்ற்குன்றுகள் குறித்து உனக்குத் தெரியுமா?” என்றாள்

“தெரியும். ட்ரூரோவுக்கும் ப்ராவின்ஸ் டௌனுக்கும் இடையில் இருக்கிறது. மிகவும் அழகான இடம்.” என்றேன்

சூசன் மேல் நோக்கி வெறித்துக் கொண்டிருந்தாள். அவள் எதோ ஒன்றை காட்சியாக கண்டிருக்கக் கூடும். அவள் சூன்ய வெளியை நோக்கிக் கொண்டே என்னிடம் பேச ஆரம்பித்தாள். நான் சூசனை கவனிக்காமல் ஒரு ஸ்கூப் திராமிசோவை சுவைத்தேன். பிறகு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே சூசனுக்கு செவிமடுத்தேன்.

“அந்த மணற்குன்றுகளுக்குள் எத்தனையோ ரகசியங்கள் புதைக்கப்பட்டிருக்கிறது. 1960களில் ஹிப்பி கலாசாரம் பரவலான சமயம் நானும் ஒரு ஹிப்பியாக அந்த மணற்பாலையில் குடிசை அமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆன்மீகத் தேடல். இரவு முழுவதும் கஞ்சா புகைத்துக் கொண்டு கடற்கரையெங்கும் ஊளையிட்டுக் கொண்டிருப்போம். அப்போதுதான் நான் எலிசபெத்தை சந்தித்தேன். லீசா என்று அவளை நான் அழைத்தேன்.

எலிசபெத்தின் தேடல் வேறு வகையானது. அவளுடைய உடலை அதாவது பெண் தேகத்தை முழுவதுமாக வெறுத்தாள். சிறு வயதிலிருந்தே தான் ஒரு ஆணாக வேண்டும் என்ற ஆவல் அவளுக்குள் இருந்தது. ஒவ்வொரு முறை தூங்கச் செல்லும் முன் கடவுளிடம் சிறப்பு பிராத்தனைகள் செய்துவிட்டு தூங்குவாள். தூக்கத்தில் தன் க்ளிட்டோரிஸ் வெளியில் நீண்டு முழு வளர்ச்சி பெற்ற ஆணுறுப்பாக மாறுவதாக கனவு காண்பாள். மறுநாள் காலை எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது.

இதன் காரணமாகவே அன்னை மரியாள் சுரூபத்தைக் கண்டால் அவளுக்கு ஆத்திரமாக வரும். தன் பிராத்தனைகளின் போக்கை மாற்றி புனித யோசேப்பு, புனித அந்தோணியார் போன்ற ஆண் புனிதர்களிடம் தன் வேண்டுதலை நிறைவேற்றக் கோரி முழங்கால் படியிட்டு மெழுகுதிரி ஏந்தி நவநாள் ஜெபித்தாள். நாள்கள் ஓடியதேயன்றி எந்த ஆண் புனிதர்களும் எலிசபெத்தின் வேண்டுதல்களை நிறைவேற்றவேயில்லை. வாழ்வை வெறுத்த எலிசபெத் ஹிப்பிகளுடன் இணைந்து தன் தேடுதல்களைத் தொடர்ந்தாள். ஆனால், ஹிப்பிகளின் குழுவிலும் பாலியல் சீண்டல்கள். எனவே, குழுவிலிருந்து விலகி தனியே தன் நாள்களை மணற்பாலையில் கழித்து வந்தாள்.

எந்த வருடம் என்று தெரியவில்லை. மே மாதம் இளவேனிற்கால மாலையில் சூரியன் அஸ்தமனத்திற்கு முன்பாக எலிசபெத்தைப் பார்த்தேன்.

சூரிய ஒளியின் ஜாலத்தில் ட்ரூரோவின் மண்ற்குன்றுகள் தங்கத் துகள்களாக காட்சியளித்தது. காற்றும் காலமும் சிறுக சிறுக சேமித்த மணல். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல். காலை முழுவதும் சேமித்த வெப்பத்தை மணல் கசியவிட்டுக் கொண்டிருந்தது. சிறிய கூடாரங்களில் நாங்கள் தங்கியிருந்தோம். தூரத்தில் இருந்த சிறிய மணற்குன்றில் மறையும் சூரியனுக்கு முகம் கொடுத்து எலிசபெத் அமர்ந்திருந்தாள். தான் பெண்ணல்ல என்று தன் உடையாலும் வெட்டப்பட்ட சிகையாலும் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால், அதையெல்லாம் மீறிய பெண்மை அவள் ஏதும் செய்யாதிருந்த போதும் வெளிப்பட்டது. தூரத்திலிருந்த போதும் அவள் ஒரு பெண் என்பதை தெரிந்துக் கொண்டேன். சூரியன் மறையும் முன் சாப்பிட்டுவிடுவது எங்கள் வாடிக்கை. எனவே, சிறிய தொழுகைக்கு பிறகு மிச்சமிருந்த வறண்ட ரொட்டியும் வேகவைத்த காய்கறிகளையும் வெதுவெதுப்புமான சூப்பையும் சாப்பிட்டு முடித்தோம். ஆனால், என் கவனம் முழுவதும் மணற்குன்றின் உச்சியிலிருந்த அந்தப் பெண்ணின் மீதே இருந்தது. என் குழுவினர் குடிக்கவும் புகைக்கவும் ஆரம்பித்த சமயம், நான் அவளை நெருங்கிச் சென்றேன்.

“ஹாய், நீ இப்படி தனியாக இருப்பது நல்லதல்ல. இந்தக் குன்றுகளில் கயோட்டிகள் இருக்கின்றன. அவை உன்னை தாக்கக் கூடும்.”

என்னைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் மீண்டும் தூரத்தில் தெரிந்த கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு விருப்பமானால் எங்களுடன் தங்கிக் கொள்ளலாம். என் கூடாரம் சற்று விசாலமானது. நான் என் நண்பனுடன் தங்கியிருக்கிறேன். மூன்றாவது ஒரு ஆள் தூங்க இடம் இருக்கிறது.”

இப்போதும் அவள் எதுவும் சொல்லவில்லை. மணலின் வெம்மையில் இதயம் உருகி அவள் கண்கள் வழியே வழிந்துக் கொண்டிருந்தது. அவள் கண்களை கவனித்தேன். உப்பு பிசுக்கேறிய கண்கள், கடல் காற்றினால் அல்ல. இப்போது என்னிடம் பேச எந்த வார்த்தையும் இல்லை. அமைதியாக அவள் அருகில் அமர்ந்திருந்தேன். அவள் இப்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவளுடைய அறிமுகமே எங்களிருவருக்கும் இடையே இருந்த அடர்த்தியான மௌனத்தை அடியோடு சாய்த்தது. பேசினாள்.. பேசினாள்.. பேசிக்கொண்டே இருந்தாள். நானும் அன்று இரவு முழுவதும் அவளுடன் பேசிக் கொண்டிருந்தேன். என் கூடாரத்துக்கு செல்லவில்லை.

இரவின் இயல்பு பகலுக்கு இருப்பதில்லை. பகல் பொழுதின் முகங்கள் மாறிக் கொண்டேயிருக்கும். மென்மையாக தொடங்கும் காலை உக்கிரமாகி மெல்ல மெல்ல அடங்கும் ஆனால், இரவு ஒரே கதியில் சென்று சட்டென விடிந்துவிடுகிறது. அதே போலதான் எலிசபெத்தும். நாங்கள் இருவரும் அருகருகே மணலில் படுத்துக் கொண்டு அவ்விரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தோம். மணலின் வெப்பத்தை லீசாவின் இருப்பு குளிர்வித்தது. மணல் என்னை அவளுடன் நெருக்கமாக்கியது. மணலை கை வழியாக ஒழுகவிட்டுக்கொண்டு அவள் உள் மனதின் அத்தனை ரகசியங்களையும் என்னிடம் சொல்லிவிட்டாள். நான் அவள் உடலில் ஒட்டிய மணல் துகள் போல அவளுடன் நெருக்கமாக விரும்பினேன். காமம் என் உடலில் கொதிக்கும் மணலை போல ஓடியது.

லீசா பேசி முடித்த போது தூரத்தில் வானம் சிவக்க ஆரம்பித்தது. அண்மையில் சிட்டுக் குருவிகள் கீச்சிடத் தொடங்கின. இருவரும் உரையாடலை நிறுத்தி சிட்டுக்குருவிகளை கவனிக்க ஆரம்பித்தோம்.

எங்களுக்கு சமீபமாக இருந்த புதரிலிருந்து கிளம்பிய ஆயிரம் ஆயிரம் இப்ஸ்விச் சிட்டுக்குருவிகள் வானத்தை நிறைத்தது. இவ்வளவு ஆயிரம் சிட்டுக்குருவிகளை இரண்டே இரண்டு கண்களால் காணும் பரவசம் சொல்லில் அடங்காது. சமயங்களில் குன்றுகளை நிரவியிருந்த அத்தனை மணல் துகள்களும் சிட்டுக்குருவிகளாக மாறிவிட்டதோ என்று தோன்றும். அன்றும் எங்களுக்காக சிட்டுக்குருவிகள் விதவிதமான காட்சிகளை உருவாக்கிக் கொண்டிருந்தன.

“லீசா, உன் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால், இத்தனை சிட்டுக்குருவிகளுக்கும் உலகத்தில் வாழ ஒரு அர்த்தம் இருப்பது போல நமக்கும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.”

“சூசன் எனக்கான வாழ்வை நான் விரும்புவது போல அர்த்தப்படுத்த முடியாதென்றால் என் வாழ்வென்ன வாழ்வு. எனக்கு இந்த உடல் பிடிக்கவில்லை. நான் ஒரு ஆணாக இருக்க நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?”

“உன் ஆன்மா உன் உடலில் சிறைப்பட்டிருக்கிறது. உன்னால் அப்படி எதையும் செய்துவிட முடியாது.”

லீசா மௌனமாக பறக்கும் சிட்டுக்குருவிகளை பார்த்துக் கொண்டிருந்தாள். நான் எதுவும் சொல்லவில்லை. எலிசபெத் அப்படித்தான் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். ஆனால், எனக்கு அவள் நெருக்கம் பிடித்திருந்தது. அவள் தேகத்திலிருந்து கசிந்த சுகந்தம் பிடித்திருந்தது. அவள் ஆணாவதில் எனக்கு விருப்பமில்லை. அதே சமயம் எந்தவொரு ஆணும் அவளை அடைய விரும்புவதிலும் எனக்கு விருப்பமில்லை. அவளை என்னுடன் வைத்துக்கொண்டேன். என் கூடரத்தில் அவள் தூங்கும் போது அவள் அங்கங்களை தொட்டுப்பார்த்தேன். தன் புடைத்த மார்புகளை இறுக்கமான சட்டைகள் கொண்டு பகல் முழுவதும் கட்டிப் போட்டிருப்பாள். இரவில் எளிதாக மூச்சுவிட இறுக்கமான சட்டைகளை சற்றே களைந்திருப்பாள். பகல் முழுவதும் கொடுமையை அனுபவித்த அவள் மார்பகங்கள் சரிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். சமயங்களில் அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கினேன். அவள் கால்களுக்கு நடுவே கையை வைத்து கிறங்கிப் போனேன். ஆனால், எல்லாம் கொஞ்ச நாள்களுக்குத் தான். அவளிடம் நான் நெருங்கிப் பழகுவதை தெரிந்துக் கொண்டவள் என்னை விலக்க ஆரம்பித்தாள். இப்போதெல்லாம் அவள் சிட்டுக்குருவிகளை பார்க்க வராமல் தூரமாக நின்று பல் துலக்கிக் கொண்டிருப்பாள்.

அன்றொரு நாள் எங்கள் குழுவினர் ப்ராவின்ஸ் டௌனிலிருந்து வடக்கே வொயிட் மௌண்டன் – நியூ ஹாம்ஷர் செல்ல முடிவெடுத்தார்கள். நான் எலிசபெத்தையும் அழைத்தேன். நான் பயந்தது போலவே அவள் வரவில்லை என்று சொல்லிவிட்டாள்.

“நான் எதற்கு உன்னுடன் வர வேண்டும் சூசன்? நான் ப்ராவின்ஸ் டௌனில் ஒரு வீடெடுத்து தங்க முடிவு செய்துள்ளேன்.”

“லீசா, உன் தேடல் இந்த மணற்குன்றுகளுடன் முடிவடைந்துவிடக் கூடாது. எங்களுடன் வா. நாமெல்லாம் சேர்ந்து ஒரு புது உலகம் செய்யலாம்”

“இல்லை சூசன், என்னை வற்புறுத்தாதே. எனக்கு விருப்பமில்லை.”

“லீசா, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என்னால் நீயில்லாமல் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. நாம் இருவரும் சேர்ந்து வாழலாம். உனக்கு துணையாக நான் இருப்பேன்.”

“சூசன் எனக்கு என்னையே பிடிக்கவில்லை. இதில் நீ வேறா? எனக்கு எந்தவித உறவிலும் நம்பிக்கையில்லை.”

நான் அதன்பிறகும் எவ்வளவோ முயன்றும் எலிசபெத்தை வழிக்கு கொண்டு வர முடியவில்லை. அவள் அழகை போலவே அவள் மன வலிமையும் கொஞ்சம் அதிகம்தான். அடுத்த நாள் என் குழுவினர் நியூ ஹாம்ஷர் கிளம்பிய போது என்னால் வர இயலாது என்று சொல்லிவிட்டேன். என்னை வற்புறுத்தி அழைத்த போது மூன்று நாளில் அவர்களை வொயிட் மௌண்டனில் சந்திப்பதாக வாக்குறுதி கொடுத்தேன்.

அன்றும் வழக்கமான ஓர் இரவுக்கு மணற்பாலை தயராகிக் கொண்டிருந்தது. இயல்புக்கு மாறான இரவாக மாறப்போவதற்கான எந்தத் தடயமும் இல்லை. என்னை எலிசபெத் பொருட்படுத்தாமல் சிறு குன்றில் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளை தூரத்திலிருந்து பார்க்கும் போது தன் பிள்ளைகளை கொன்று போட துணிந்த மெதியாவை போல இருந்தாள். கவலைப்படுவதற்காகவே பிறவி எடுத்தவள். எங்கள் குழுவினர் அங்கிருந்து சென்றுவிட்டதால் ஒரு அமானுஷ்ய அமைதி நிலவியது. சரியாகச் சொல்லப் போனால் அமைதியை அமானுஷ்யமாக்கியது குன்றுகளின் நடுவே ஓடிச் சென்ற காற்று. சிட்டுக்குருவிகள் தங்கள் புதர் நோக்கி பறந்து கொண்டிருந்தது. நான் அவளருகில் நின்றேன். நான் என் குழுவினருடன் போகாதது அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. நான் அவளை என்னுடன் சற்று காலயர நடக்குமாறு கேட்க, அவளும் ஒத்துழைத்தாள்.

கடற்கரை நோக்கி நடந்துக் கொண்டிருந்த சமயம் நான் தாபத்துடன் அவளை இழுத்து உதட்டில் முத்தமிட்டேன். அவள் என்னை விலக்கி நடக்க ஆரம்பித்தாள். நான் மீண்டும் ஒரு முறை முயன்றேன். என்னை மீண்டும் விலக்கினாள். காமம் என் தேகத்தின் அடியில் கிடந்து உறுத்தும் மணல் துகளானது. அது ஓர் இன்ப உறுத்தல். என் ஆசையைத் தூக்கி எறிய விருப்பமில்லை. ஆனால், ஏதாவது செய்து அதை தணிக்கவும் எத்தனித்தேன். அது ஒரு போர். அவள் மறுக்க மறுக்க ஆசை அதிகமானது. நான் அவளை பலவந்தப்படுத்தி அவள் மீது ஏறி அமர்ந்தேன். இப்போது என்னைத் தூக்கி எறிந்து ஓட ஆரம்பித்தாள். அப்போது என்னுள் எழுந்த ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என் கையருகில் ஒரு மரக்கட்டை கிடந்தது. மணலில் பாதி புதைந்திருந்த அதை உருவி எடுத்தேன். அது கட்டையில்லை, எப்போதோ இறந்த ஏதோ ஒரு விலங்கின் எலும்பு. கையில் பிடிக்க வாட்டமாக இருந்தது. மணலில் ஓடிய அவளை பிடித்து தள்ளி, அவள் மீது ஏறி அமர்ந்து முகத்தில் எலும்பைக் கொண்டு தாக்கினேன்.

முதல் சில அடிகளில் மூர்ச்சையுற்றாள். அடுத்த சில அடிகளில் அவள் பற்கள் சில தெரித்து மணலில் விழுந்தது. அடுத்த சில அடிகளில் எழிலான முகம் கோரமானது. இரத்தம் என் மீதும் மணலெங்கும் சிந்தியது. கைகளை பரப்பி வானத்தை நோக்கிக் கிடந்தாள் எலிசபெத். இரத்தம் வழிந்த முகத்தில் மணல் ஒட்டி விகாரமாக இருந்தாள். என்ன ஒரு முட்டாள் தனமான காரியத்தை செய்துவிட்டோம் என்று முதல் முறை தோன்றியது. இப்போது எனக்கு எந்த தாப உணர்வுகளும் இல்லை. என் தேகத்திலிருந்த காம மணல் துகளை லீசாவின் ரத்தம் கழுவி விட்டது. தாபத்தை தனிக்கும் போரில் நான்தான் வெற்றி பெற்றேன். ஆனால், அது உண்மையான வெற்றியல்ல. நான் என் லீசாவை இழந்துவிட்டேன். என் உயிரின் மேலானவளை சிதைத்துவிட்டேன். அங்கிருந்து ஓடிவிடலாம் என்று தோன்றியது. எலிசபெத் மெல்ல ‘தண்ணீர் தண்ணீர்’ என்று முனகிக் கொண்டிருந்தாள். கடல் அங்கிருந்து அரை மைல் தொலைவில் இருந்தது. தண்ணீர் கொண்டு வர கடலுக்கு எதிர்புறம் ஒன்றரை மைல் தூரம் நடக்க வேண்டும். சற்றும் தாமதிக்காமல் எலிசபெத்துக்கு தண்ணீர் கொண்டு வர வேகமாக ஓடினேன். என்னுடைய கூடார சாமான்களை இப்போது மணற்குன்றுகள் தொடங்கும் இடத்தில் வைத்திருந்தேன். அங்கே ஒரு பாட்டிலில் தண்ணீரும் இருந்தது. மையிருட்டில் வேகமாக ஓடினேன். தடுமாறி பதினைந்து நிமிடத்துக்கு பிறகு என் பொருடகள் வைத்திருந்த இடத்துக்கு வந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பினேன். இப்போது மணற்பாலை பிரம்மாண்டமாக இருந்தது. என் காலடிச் சுவடுகளை காற்று மணலிட்டு நிரப்பியிருந்தது. இருந்தாலும் என் கற்பனையில் இருந்த நேர்கோட்டில் பயணித்து எலிசபெத்தை விட்டு வந்த இடத்துக்கு வந்தேன். இருபது நிமிட நடைக்கு பிறகும் எலிசபெத்தை அங்கு காணவில்லை. மீண்டுமாக நாற்புறமும் நடந்துப்பார்த்தேன். என் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. முதல்முறை அச்சம் என் உடல் முழுவதும் நிறைத்தது. எலிசபெத் தப்பித்து போலீஸுக்கு தகவல் சொல்லியிருப்பாளா? காற்று மணல் வெளிகளை எப்போதும் மாற்றிக் கொண்டிருப்பதால் நான் பாதையை தவறவிட்டுவிட்டேன் என்று தேற்றிக் கொண்டேன். அங்கிருந்த பெருங்குன்றில் ஏறி நின்று சுற்றிப்பார்த்தேன். மணலை தவிர அங்கும் எதுவுமில்லை. ‘லீசா லீசா’ என்று தொண்டை கிழிய கத்தினேன். கடல்கரை நோக்கியிருந்த சிறுகுன்றின் சரிவிலிருந்து ஒரு முனகல் ஒலி கேட்டது. தாமதிக்காமல் அங்கு ஓடினேன். ஓடும் போது அந்த இடம்தான் நான் லீசாவை விட்டு வந்த சரிவு என்பதை அடையாளம் கண்டு கொண்டேன். குன்றில் ஏறும் போது முனகல் ஒலியோடு சில உறுமல்களும் கேட்டது. எனக்கு அடிவயிற்றை கலக்கியது.. உச்சியில் ஒரு வழியாக ஏறி சரிவில் பார்த்த போது ஆறு கயோட்டிகள் முனகலுடனும் உறுமலுடனும் எலிசபெத்தின் பிணத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அவள் இரண்டு கைகளும் அவள் உடலில் இல்லை. வயிறு குதறப்பட்டு குடல் சரிந்து கிடந்தது. முகம் அடையாளம் தெரியாமல் சிதைந்திருந்தது. நான் கதறி அழுததைப் பார்த்ததும் கயோட்டிகள் உறுமிக்கொண்டு பின்வாங்கின. நான் மணலை வாரி இறைத்து அவைகளை விரட்டினேன்.”

சூசன் என்னை பார்த்து கண்ணீர் சிந்தினாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அங்கு கூடியிருந்த கூட்டம் காஃபி அருந்துவதிலும் ஒருவொருக்கொருவர் உரையாடுவதிலும் கவனமாக இருந்ததால் யாரும் எங்களை கவனிக்கவில்லை. நான் ஸ்டெஃப்னி எங்கே என்று எட்டிப் பார்த்தேன். அவள் அங்கிருப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. சூசன் மேலும் சொல்ல தொடங்கினாள்.

“நான் என் குழுவினரிடம் சொன்னபடி மூன்றாவது நாள் வொயிட் மௌண்டன் சென்றுவிட்டேன். அந்த வருடம் கோடையில் மேஸசூசட்ஸின் ப்ராவின்ஸ் டவுன் மணற்பாலையில் அடையாளம் தெரியாத பெண்ணுடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. முகம் சிதைவடைந்திருந்ததால் அது யார் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தலையில் பலமாக தாக்கப்பட்டு இறந்திருப்பதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தலையை சிதைப்பதற்கு முன் வாயை கிழித்து உடைத்ததற்கான தடயமும் கிடைத்தது. அதற்கு ஏற்றார் போல உடைக்கப்பட்ட வாயிலிருந்து சில பற்கள் உடலுக்கு வெகு சமீபமாக கண்டெடுத்தார்கள். மேலும் மணற்குன்று பெண்ணின் கைகள் இரண்டும் வெட்டப்பட்டு இருந்தது. எவ்வளவு தேடியும் கைகள் கிடைக்கவில்லை. தடவியல் நிபுணர்கள் அந்தப் பகுதி முழுவதையும் சோதனையிட்டார்கள். எதுவும் கிடைக்கவில்லை. இறந்தப் பெண்ணைப் பற்றிய கதைகள் அந்தப் பகுதி முழுவதும் பேசப்பட்டது. இரவில் மணற்பாலைகளில் அவளது ஆவியை கண்டதாக சிலர் தெரிவித்தார்கள். யார் அந்தக் கொலையை செய்திருப்பார்கள் என்பதற்கும் சில கதைகள் கூறப்பட்டன. பிரபல ஜேம்ஸ் ‘வொய்டி பல்ஜர் மீது சந்தேகங்கள் எழுந்தன. வொய்டியின் ஆட்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர் அந்தப் பெண்ணை சுறா மீன்கள் தாக்கி கரையில் விட்டுச் சென்றதாகவும். அதன்பிறகு கயோட்டிகளின் கூட்டம் ஒன்று மேற்கொண்டு உடலை சிதைத்து மணற்பாலைகளில் விட்டுச் சென்றதாக கூறினார்கள்.

மணற்குன்றுகளில் அந்த ஒரு நாளை புதைத்துவிட்டதாக நினைத்த நான் ஒவ்வொரு நாளும் லீசாவின் நினைவால் அவதியுறுகிறேன். எனக்கு எல்லாம் மறந்துவிட்டது. ஆனால், லீசாவை மறக்க முடியவில்லை. லீசா என் கண்ணில் விழுந்த ஒற்றை மணல் துகள். என்னை உறுத்திக் கொண்டேயிருக்கிறாள்.”

சூசன் மீண்டும் கண்ணீர் சிந்தினாள். இப்போது ஸ்டெஃப்னி கடைக்குள் திரும்பி வருவதைப் பார்த்தேன். கொஞ்சம் ஆசுவசம் அடைந்தேன். நான் சூசனின் கையில் டிஷு பேப்பர்களை திணித்து கண்களை துடைத்துக் கொள்ளச் சொன்னேன். அவள் டிஷு பேப்பர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஐ அம் சாரி… ஒரு முக்கியமான கால். என் பாய் ஃப்ரண்ட்.” தன் உதட்டைக் கடித்துக் கொண்டே வந்தமர்ந்தாள் ஸ்டெஃப்னி.

“ஓ ஆண்டி சூசன்… என்ன ஆனது? ஏன் உங்கள் கண்கள் கலங்கியிருக்கிறது?” சூசன் வைத்திருந்த டிஷு பேப்பரால் அவள் கண்களை துடைத்துவிட்டாள். “ஆண்டி உங்களை எதுவும் தொந்தரவு செய்தார்களா?” என்றாள். நான் ‘இல்லை’ என்று தலையாட்டினேன்.

“ஜோசப் உங்களுக்கு பெரிய நன்றி. எங்களுக்கு அமர இடம் கொடுத்தீர்கள். ஆண்டியை பத்திரமாக பார்த்துக் கொண்டீர்கள். அதனால் இன்று என்னுடைய ட்ரீட்” என்று சொல்லி க்ரடீட் கார்டை எடுத்தாள்.

“நோ ஸ்டெஃப்னி. நான் கொடுக்கிறேன். உங்களை சந்தித்ததில் சந்தோஷம். இங்கே க்ரடீட் கார்ட் வாங்க மாட்டர்கள். பணம் கொடுக்க வேண்டும். நான் எடுத்து வந்திருக்கிறேன். நோ வொரிஸ்” என்று என் சட்டைப் பையிலிருந்து சில டாலர் தாள்களை எடுத்தேன்.

“நோ நோ. நான்தான் கொடுப்பேன். இது என் ட்ரீட். ஆனால், நான் எதிரில் இருக்கும் ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டு வந்துவிடுகிறேன். அதுவரை என் ஆண்டியிடம் பேசிக் கொண்டிருங்கள். அவள் தாமதிக்கமால் மீண்டும் வெளியில் சென்றாள். மீண்டும் சூசனும் நானும். நான் இப்போது சூசனிடம் பேசியாக வேண்டும். அவள் அதே சூனிய வெளியை வெறித்துக் கொண்டிருந்தாள். நான் அவளை உலுக்கினேன். என்னைப் பார்த்தாள். மீண்டும் அதே அமானுஷ்ய புன்னகை. இப்போது என்னிடம் பயமில்லை. அவளைப் பார்த்து கேட்டேன்.

“சூசன் நீங்கள் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை?”

“எதை நம்ப முடியவில்லை?”

“நீங்கள் எலிசபெத் குறித்து கூறியவற்றை…”

“எலிசபெத்…?”

“லீசா… ட்ரூரோவின் மணற்குன்றுகள்…”

“ஓ லீசா… ஆமாம் ஆமாம்… லீசா”

இப்போது என் தலை சுற்றத் தொடங்கியது. “நீங்கள்தான் லீசாவை கொன்றீர்களா?” என்று கேட்டாள். வேறெதுவும் கதை சொல்லத் தொடங்குவார்களோ என்று பதற்றமாக இருந்தது.

“நீங்கள் ஹவாய் தீவுகளிலிருந்து வருகிறீர்களா? எனக்கு ஹவாய் செல்ல பிடிக்கும். நீண்ட நேரம் விமானத்தில் பறப்பது தவிர எனக்கு ஹவாய் செல்ல பிடிக்கும்.” சூசன் தானாகப் பேசிக் கொண்டிருந்தாள். நான் அவளின் சிந்தனையோட்டத்தில் குறுக்கிட விரும்பவில்லை.

அதற்குள் ஸ்டெஃப்னி பணத்தை சிண்டியிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள். பின் சூசனை அழைத்துக் கொண்டு என்னிடமிருந்து விடைபெற்று சென்றுவிட்டாள்.

சிண்டி பாஸ்டன் ஹெரல்ட் செய்தித்தாளை வாசித்துக் கொண்டே என்னருகில் வந்தாள். செய்தித்தாளிலிருந்து பார்வையை விலக்கமல் என்னிடம், “அந்தப் பெண் உனக்கும் சேர்த்து பணம் செலுத்திவிட்டாள்” என்றாள்.

“அவள் பெயர் ஸ்டெஃப்னி, உடனிருந்தது அவள் ஆண்டி சூசன்… பாவம் சூசனுக்கு டிமெண்டியா…” நான் சூசன் சொன்ன கதையின் அதிர்விலிருந்து மீளாமல் சிண்டியிடம் அவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்.

சிண்டி இப்போதும் செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தாள்.

“அப்படி என்ன சுவாரசியமான செய்தி?” என்றேன்.

“1974-ல் கொலை செய்யப்பட்ட பெண்ணை இப்போதுதான் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இவ்வளவு தூரம் டெக்னாலஜி வளர்ந்தும் இப்போதுதான் பெயரை கண்டுபிடித்திருக்கிறார்கள். இனி அடுத்த ஐம்பது வருடம் ஆகும் யார் கொன்றது என்பதைக் கண்டுபிடிக்க…” என்றாள் சிண்டி.

நான் பரபரப்பாக அந்தச் செய்தித்தாளை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். சிண்டி வேறொரு நபருக்கு தேவையானதை கொடுக்கச் சென்றாள். ‘ப்ராவின்ஸ் டௌன் அருகே மணற்குன்றுகளில் ஐம்பது வருடங்களுக்கு முன் பிணமாக கிடந்த பெண் அடையாளம் காணப்பட்டாள்’ என்று பெரிய எழுத்துகளில் எழுதியிருந்தது. வேகவேகமாக அந்தப் பெண்ணின் பெயரை காண்பதற்காக செய்தியை வேகமாக வாசிக்க ஆரம்பித்தேன். ‘மணற்குன்று பெண் என்றறியப்பட்ட அந்தப் பெண் சடலம் எலிசபெத் மரியா செர்ரி என்பதை எஃப்.பி.ஐ உறுதிப்படுத்தியுள்ளது’ என்றிருந்தது. நான் நிமிர்ந்து ஸ்டெஃப்னியும் சூசனும் சென்ற பாதையை நோக்கினேன். மக்கள் கூட்டம் இங்கும் அங்கும் சென்றுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இன்று உனக்கு என்ன ஆனது? ஏன் இன்னும் திராமிசோவை சாப்பிடாமல் வைத்திருக்கிறாய்?” என்று சிண்டி கேட்டாள்.

நான் எஞ்சியிருந்த என் திராமிசோவை ஸ்பூனில் அள்ளி வாயில் வைத்தேன். அதில் நறநறவென மணற்துகள்கள் நிறைந்திருப்பது போல இருந்தது.

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button