இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

நூரே சஷ்மி – ஆர்னிகா நாசர்

சிறுகதை | வாசகசாலை

ரஷீத் அகமது கால் செருப்புகளை வெளிவாசலில் உதறிவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தார். அவரது வலது கையில் ஒரு பழுப்பு நிற பொதி இருந்தது.

வரவேற்பறை மேஜையில் பொதியை வைத்து எதிரில் அமர்ந்தார்.

சமையலறையிலிருந்து ரஷீத் அகமதின் மனைவி காமிலா வெளிப்பட்டாள்.

“வாங்க ரியாஸத்தா… என்ன பார்சல் இது?”

“யூகிக்கத் தெரியலையா? ஒரு இஞ்சி டீ கொண்டு வா… பிரிச்சுக் காட்றேன்I”

பாதி புரிந்தவளாய் தேநீர் தயாரிக்கப் போனாள் காமிலா.

இரண்டாவது படுக்கையறையிலிருந்து எட்டினாள் ஆலியா. வயது 23. உயரம் 155 செமீ. முதுகலை விலங்கியல் படித்தவள். பேரழகி. தலைகேசம் புட்டம் வரை நீண்டிருந்தது.

தேநீரை உறிஞ்சியபடி பொதியை கத்தரிக்கோல் வைத்து கத்தரித்தார்.

அதிலிருந்து ஒரு அழைப்பிதழை உருவினார்.

“நம்ம மக நிக்காஹ்வுக்கான அழைப்பிதழ். இருபக்க அழைப்பு. ஆயிரம் அடிச்சிருக்கேன். ஒவ்வொரு இன்விடேஷனும் அடிக்க 25 ரூபாய் செலவு – இன்விடேஷனுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவுI”

வாங்கி அழைப்பிதழைப் பார்த்தாள் காமிலா.

நிக்காஹ் என்ற திருமண அழைப்பிதழ் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  அன்புடையீர் எங்கும் நிறைந்த ஏகவல்ல இறைவனின் திருநாமத்தாலும் கண்மணி நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆசிகளாலும், இறைநேசர்களின் துஆ பரக்கத்தாலும் நிகழும் சங்கையான ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டு ரபியுல் மாதம் ஏழாம் தேதி (10 10 2024) குரோதி தமிழ் வருட புரட்டாசி மாதம் 24 வியாழக்கிழமை அன்று காலை மணி 10.00-12: 00க்குள் முபாரக்கான வேளையில்
திருவாரூர் (மர்ஹும்) முகமது உசேன்- உம்மசல்மா ஆகியோரின் மகள் வழிப் பேரனும் (மர்ஹும்) சேகு அப்துல்லா -ஜொகரா ஆகியோரின் மகன் வழிப் பேரனும் ஜனாப் எம். எம். இர்ஷாத் – என்.ஆயிஷா ஆகியோரின் அன்பு மகனுமான s. அப்துல் ஸமது M.E (SOFTWARE ENGINEER, ACCENTURE. BENGALURU) மணாளருக்கும்முத்துப்பேட்டை (மர்ஹும்) முகமது இலியாஸ் -ஜீனத் பேகம் ஆகியவரின் மகள் வழிப் பேத்தியும் (மர்ஹும்) முகமது உஸ்மான் -தாஜுனிஸா ஆகியவரின் மகன் வழிப் பேத்தியும் ஜனாப் ஏ. எம். ரஷீத் அகமது- காமிலா தம்பதியினரின் மூன்றாவது இளைய மகளான நூரே சஷ்மி என்கிற  மணாளிக்கும்

பார்த்த நொடி அவளின் முகம் கறுத்தது.

“இன்விடேஷன் எப்படி இருக்கு காமிலா?”

“என்னுடைய அபிப்ராயம் ஒரு பக்கம் இருக்கட்டும். கல்யாணப் பெண்ணுகிட்ட காட்டுங்க. அவ அபிப்ராயம் சொல்லுவா…”

“அவகிட்ட எதுக்கு காட்டனும்? நாம பாத்தா பத்தாதா?”

“எந்த காலத்துல இருக்கீங்க? தூக்கத்துலயிருந்து எந்திரிச்சு வாங்க… நம்ம மக பாக்காம இன்விடேஷன் யார் கைக்கும் போகக்கூடாது…”

“சரி… அவளை கூப்பிடு…”

“ஆலியா… அம்மா ஆலியா…”

ஆலியா பூப்போல பதவிசாய் நடந்து வந்தாள்.

“உன் திருமண இன்விடேஷனை அத்தா அடிச்சிட்டு வந்திருக்கார்… எப்டி இருக்குன்னு பாரும்மாI”

சிரித்த முகத்துடன் “மாஷா அல்லாஹ்” கூறியபடி அழைப்பிதழை வாங்கினாள் ஆலியா. அழைப்பிதழைப் படித்த ஆலியாவின் முகம் கோபத்தால் கனன்றது.

“அத்தாI அம்மாவைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிருக்கீங்களா? அவங்களுக்கு பிறந்த பெண்ணு பேருதான் நூரே சஷ்மியா? நூரே சஷ்மி இன்விடேஷனை ஏன் என்கிட்ட தர்றீங்க?”

“என்னம்மா கிண்டல் பண்றியா? உன் உண்மையான பெயரை போடாம மறைச்சு நூரே சஷ்மி போட்டிருக்கேன்ம்மா…’

“திருட்டு கல்யாணமா நடத்தப் போறீங்க…. என் பெயரை மறைச்சு…”

“வாய்க்கு வந்தததை பேசாதே. உன் பெயரை மறைக்றது உனக்கு ஒரு பிரைவசி. பெண்களை கண்ணடி சொல்லடியிலிருந்து காப்பாத்துதுறேன்மா…”

“உங்க மூத்த ரெண்டு பெண்ணுக கல்யாணத்துல அவங்க பெயரை போட்டீங்கI”

“அப்ப நான் —————–அமைப்பில் இல்லம்மா. கொஞ்ச நாளா அந்த அமைப்பில சேர்ந்து ஆக்டிவ்வா இயங்கிக்கிட்டு வரேன்I”

“தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் இயங்கும் அமைப்பைத்தானே சொல்றீங்க?”

“ஆமா…”

“மார்க்கம் சொல்லாதத கடைப்பிடிக்கும் கூட்டத்தில் போய் சேர்ந்து விட்டீர்களா?”

“இப்பக் கூட ஒரு பெண்கள் மதரசாவில் படித்து பட்டம் பெற்ற ஆலிமாக்களின் பெயர்களை போடாமல் இன்னாரின் மகள் இன்னாரின் மனைவி என போட்டோமே.. நீ பாக்கல?”

“சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி குறுக்க புகுந்து தடுத்த மாதிரில இருக்கு உங்க செய்கை… என் பெயரை நூரே சஷ்மின்னு போட மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டீர்களா?”

“எதுக்கு கேக்கனும்? கேட்டாலும் ஒரு எதிர் கருத்தும் சொல்ல மாட்டாங்க…”

“நிக்காஹ் நாமால என் பெயர் இருக்குமா? அங்கேயும் நூரே சஷ்மிதான் போடுவீங்களா?”

“அங்க உன் பேரு தான் போடுவம்… பப்ளிக்ல மட்டும் உன் பெயரை மறைக்கிறோம்I”

“நபிகள் நாயகத்தின் ஹதீஸிலோ இறைவனின் திருக்குர்ஆனிலோ பெண்களின் பெயர்களை மறைத்து ஒளிக்க வேண்டும் என்று எங்காவது போட்டிருக்கிறதா?”

“நூருல் ஐன், நூரே சஷ்மி என்றால் கண்ணின் ஒளி பொருந்தியவள் என பொருள்…. இதில் ஒளித்து மறைத்தல் எங்கே வருகிறது?”

“அத்தாI ஆயிஷா ரலி அவர்கள் 2000 ஹதீஸ்களை அறிவித்தார். ஹதீஸ் அறிவிப்பில் அவர் பெயர்தான் இருக்கிறது. நூரே சஷ்மி என போடவில்லை. ஹதீஸ்களை அறிவிக்கும் துறையில் 71 ஆயிரம் பெண் அறிவிப்பாளர்கள் இருந்தனர். திருக்குர்ஆனை மனனம் செய்வதிலும் பாதுகாப்பதிலும் ஹப்சா ரலி அவர்களின் பங்கு மகத்தானது. இஸ்லாம் மிக மிக மென்மையானது. அதனை கடைப்பிடிக்கும் சிலர் கரடு முரடாய் இருக்கிறீர்கள்I”

“உன்னை படிக்க வைத்தது தப்பா போச்சு….”

“புகைப்படம் கூடாது என்றீர்கள். இன்று பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பேன் கார்டு, மெடிக்கல் இன்சூரன்ஸ் எல்லாவற்றிலும் புகைப்படம் தவிர்க்க முடியாத கட்டாயம். முகத்தை மூடாத ஹிஜாப்தான் எனக்கு உடன்பாடு. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பெயரும் முகமும் ஆதார உரிமைகள். பெண்களின் குரலையும் முகத்தையும் தடை செய்த தலிபான்களின் சீடர்களா நீங்கள்? பெயர் இல்லாத பெண்கள் இருட்டறை அடிமைகள்… என்னுடைய கல்வி சான்றிதழில் இன்னாரின் மூன்றாவது மகள் என்றா போட்டிருக்கு? ஆர். ஆலியா என்றுதானே போட்டிருக்குI”

“இத்னி லட்சங்கள் செலவு பண்ணி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்ற எனக்கு உன் பெயரைப் போடாமலிருக்க உரிமை இல்லையா?”

“இது ஒரு தவறான முன்னுதாரணம். பெண்ணடிமைத்தனத்துக்கு நான் கட்டியம் கூறுவதாகி விடும். ஆணாதிக்கவாதிகள் நம் மார்க்கத்தை திரித்து கடைப்பிடிக்க ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன்I”

“இறுதியா என்னதான் சொல்ல வர்ற?”

“இன்விடேஷனில் என் பெயர் நான் பெற்ற பட்டங்களுடன் அச்சிடப்பட வேண்டும். முடியாது என்றால் இந்த கல்யாணத்தை நிறுத்துங்கள். . மீறி ஏதாவது செய்தீர்கள் என்றால் நிக்காஹ் நாமாவில் கையெழுத்து இடாது சத்தியாகிரகம் செய்வேன்I”

“ 25 ஆயிரம் செலவு பண்ணி இன்விடேஷன் அடிச்சிட்டேனே…”

“தூக்கி குப்பைல போடுங்க… என் பெயரை மறைச்சு நூரே சஷ்மி போட்டது சரி என மாப்பிள்ளை வீட்டார் கூறினால் எனக்கு அந்த மாப்பிள்ளையே தேவையில்லை … கடந்த 10 வருடங்களாக முஸ்லிம் தந்தைமார்கள் மகள்களை மகன்கள் அளவுக்கு படிக்க வைக்கின்றனர். மகள்களுக்கு திருமணமும் 22 அல்லது 23க்கு மேல் தான் பண்ணி வைக்கின்றனர். பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் இப்பொழுதில் நெருப்பைத் தூக்கி கொட்டாதீர்கள்I”

காமிலா வாய் திறந்தாள்.

“ஏக இறைவனை வழிபடும் இஸ்லாமியர்களில் இத்தனை பிரிவுகளா? நம் மகள் எழுப்பும் உரிமைக்குரல் எனக்கும் உடன்பாடானதே. மார்க்கத்துடன் இயைந்து இஸ்லாமிய பெண்கள் எதையும் சாதிக்கலாம். இன்விடேஷனை மாற்றி அடியுங்கள்I”

“என்ன.. அம்மாவும் மகளும் கூட்டு சேர்ந்திட்டீங்களா?”

மகன் உள்ளே பிரவேசித்தான்.

“அத்தா.. நானும் பெண்கள் பக்கம்… தங்கச்சி பெயர் படிப்பு இல்லாம இன்விடேஷனை ஒருநாளும் அனுமதிக்க மாட்டேன்I”

இரு அக்காக்கள் வீட்டுக்குள் நுழைந்தனர்.

“ஏன்த்தா.. உங்களுக்கு புத்திகித்தி கெட்டு போச்சா? பெண்கள் என்றால் உங்களுக்கு கிள்ளுக்கீரையா? பெண்கள் நாங்கள் உங்களின் உடைமைகள் அல்ல. சம உரிமை பெற்ற உயிர்கள்….”

ரஷீத் அகமதின் கைபேசி சிணுங்கியது.

எடுத்தார். எதிர்முனையில் மாப்பிள்ளை அப்துல் சமது.

“அஸ்ஸலாமு அலைக்கும் மாமா. நீங்க இன்விடேஷன் அடித்த பிரஸிலிருந்து இன்விடேஷன் மாடல் ஒன்றை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தார்கள். அதென்ன நூரே சஷ்மி? மணப்பெண் ஒரு பெயரிலியா? மணப்பெண் பெயரையும் பட்டத்தையும் சேர்த்து புது அழைப்பிதழ் தயார் பண்ணுங்கள்.. இது அறிவு சார்ந்த இஸ்லாமின் கட்டளைI”

“சரி அப்படியே செய்கிறேன் மாப்பிள்ளைI”

 வீட்டில் அனைவரும்“நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்I” என குரல் உயர்த்தினார்.

பெண்ணுரிமை பேசும் இஸ்லாம் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டது.

vakithanasser@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button