
பாய்மரப் பயணம்
நாளைய விதை நெற்களை
மனதிற்கொண்டு
இன்றைய நெல்மணிகளை
மண்ணில் பூட்டிய
மாமனிதர்களை
வணங்கிய என் பிறப்பு
ஒற்றை நெடிய வரலாற்றை
ஒன்றிரண்டு கவிதைகளில்
படித்துப் பார்த்துவிட்டு
உச்சுக் கொட்டுகிற
என் பயணம்
பன்னாட்டு வீதிகளை
அலங்கரித்துக் கிடந்த
கண்ணாடிக் குவளைகளை
பச்சை வயல்களில்
பதித்துப் பார்ப்பதிலும்
கோட்டை மதில்களில்
கொஞ்சிக் கிடந்த
குஞ்சுக் குருவிகளை
குறுகிய பள்ளத்தாக்கில்
கருகிய கதிரொளியில்
பறந்து தேடுவதிலும்
விழாக் காலத்து
வானத்தில் வானவில்
தன்னை அடையாளம்
காட்டும் வேளையில்
எதிர்த்திசையில்
வியர்வை வரைவதிலும்
போய் வந்த அலையினில்
கால் பதித்து
வந்து போன அலையில்
வைத்த விழி
நகர்த்தாததிலும்
ஒதுங்கிக் கிடந்த
முத்துக்களினூடே
பாடம் செய்துவிட்ட
முட்டைகள் ஈணப்போவதாக
குஞ்சுகளின் கூட்டுக்கு
வலை பின்னுவதிலும்
புல்விரித்துப் பூ வளர்த்த
பூகோளப் பாதையில்
மல்லாந்து கிடைக்கும்
மரங்களில் பாய்ந்து
உறைந்த பார்வையிலும்
தொடர்கிறது.
***
ஓடை ரசிகன்
வானம் பொழியட்டுமென
நிலா காத்திருந்தது
நீலவானத்தில்
நீள மின்னல்
கொடியைப் படரவிட்டு
மழை நிலவுக்குத்
தூது சொன்னது
வெள்ளைப் பூக்கள்
அணிந்த நிலா ஒளி வீசுகின்றது
ஒளி வாங்கிய ஓடை
ரசிகனாகின்றது
காட்சி மாற்றத்தில்
ரசிகன் ஓடையாகிறான்!
*********