
கூடுபின்ன
எளிதாக
இருக்கவில்லை
ஆயிரம் நரம்புகளின்
வலி பொறுத்து
அலகு குத்தி
கிளையமர்ந்தேன்
பசி மறுத்துக்
கடும் புயலையும்
கோடையையும்
சூறாவளியும்
சேர்த்து அசைத்துப் பார்த்தது மனம்
நம்பிக்கையின்
ஆணிவேரை மட்டும்
மரத்தின் அடியில் புதைத்தேன்
புரிந்து கொண்டது மரம்
உந்தியெழுந்து
பறக்கத் துடிக்கும்
என் தருணத்தை.
***
தாமிர உருளி
அம்மாவின் அம்மா
தந்தது
வம்பு பிடித்து
அண்ணிக்குத் தராமல்
எடுத்து வந்தேன்
சீராக நூறு
தருகையில்
கொசுறாக
என்றாலும்
தர மனமில்லை
அம்மாவுக்கு
மூலிகை இலைகளை
பறித்து நிரப்பி
வெதுவெதுப்பாய்
நீர் சேர்த்து
நாள் முழுதும்
பருகுகையில்
இருவரையும்
நினைத்துக்கொள்கிறேன்
போகும்போதெல்லாம்
வேண்டாம்னா கொண்டு வந்துடு என்று
சொல்பவளோடு
எத்தனை சண்டை போட?
கொல்லையில் சிரித்துப் பூத்திருக்கிறது துளசி
வணங்கித்தான்
பறிக்க வேணும்
அம்மை சொன்னதுதான்
இதுவும்.
***
வழிவழியாய்
விரும்பா சீதனமாய்
அவள் கைகளில்
கிடைத்ததுதான்
துருவேறிய ஆணியில்
தொங்கும்
அந்தப் பறை
கொஞ்சம் கசங்கிய
தாள்களும் சில்லரையும்
அவ்வப்போது கிடைக்கும்
திருவிழாவும்
திடீரென வரும்
கலாச்சார நிகழ்வும் கூட
இருப்பை
நிறைவு செய்வதற்கில்லை
கூசாத ஒளிக்குப்
பழக்கப்பட்டிருக்கும்
இருண்மையில்
இவள் இரவுக்கு
குளிர் வெயிலில்லை
ஒப்பனைக்குத் தயாராகும்
வாழ்வுக்குள் கரைந்து
ஒத்திகையை முணுமுணுக்க
விடியலைப் பார்த்து வாய் கொப்புளிக்கும்போது மட்டும்
சற்றே நாணுகிறது
நிலம்.
***
வாழ்ந்து தீர்க்கக்
காரணங்களைத்
தேடும்போதெல்லாம்
மறக்காமல்
என்னைத்
தொலைத்துவிடுவது
சௌகர்யமாய் இருக்கிறது
நித்திரையில்
வண்ணப்புள்ளிகள்
கொண்ட இறக்கைகளோடு
பிடித்த வனத்திற்கு
பறந்து
பின் கூடடைந்து விடுகிறேன்
சுதந்திரத்தின் பத்திரம் மற்றும் கவனத்துடன்
விடியல் தொடங்குமுன்
உயிரிழைகளை
சட்டை உரிப்பது
வழக்கமாகிவிட்டது
புனர்ஜென்மத்திலாவது
நானொரு வண்ணத்திப்பறவையாக வேண்டும்
அப்படித்தான் நம்புகிறேன் என்னை
*****