சிறுத்தைப் புலி ஒன்று
எதையோ கவ்வி ஓடுகிறது
அணிற்பிள்ளையொன்று
மரத்தின் மீதேறி ஓடி விளையாடுகிறது
ஒன்று என் மனதாகவும்
இன்னொன்று
என் கண்களாகவும் பாவிக்கிறேன்
அன்றைய பகல் பொழுது
இதமான சூட்டில் வேகிறது
ஒரு தோசை போல்
அதை விழுங்கி விட்டு
மாலையில்
இளைப்பாறுகிறேன்
இரவின் வெதுவெதுப்பில்
என் கனவில் வருவது
யாராக இருக்கக் கூடும்?
அருகிலேயே காத்திருக்கிறது
வளர்ப்புப் பூனை.
அழகு என்னும்
பிரபஞ்ச இயற்பியலை
தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
பூக்கள் பூக்கவும்
உதிரவுமான உயிரியலில்
என் இதயம் நெய்தது
கவிதைதான்
நிறங்களின்
வேதியியல் தந்ததோ
இன்னுமொரு அழகிய பரிமாணம்
தொடரும் தாவரவியலில்
புதிராய் தோன்றின யாவும்
யாவும் தோன்ற…
யாவரும் கற்க…
நானும் கற்றேன்
புவியியல் பாடமெனும்
பிரபஞ்சத்தின்
சிறு செவ்வியல் அசைவை.