இணைய இதழ் 97கட்டுரைகள்

”அந்நியனும் பரதேசியுமாய் சஞ்சரித்தேன்…” விவிலியத்தின் மொழி – மோனிகா மாறன்

கட்டுரை | மோனிகா மாறன்

அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது.

  • புனித விவிலியம்

பைபிளை அதன் கவித்துவமான மொழிநடைக்காகவே அதிகம் நேசிக்கிறேன். ஓர் அந்நிய நிலத்தில் பரதேசியாய் சஞ்சரித்தல் என்பது மானுட குலத்துக்கான துயர் அல்லவா? அதை விட அதனை வெளிப்படுத்தும் வார்த்தைகள் என்னை அதிகம் துளைப்பவை. எப்பொழுதுமே வாசிப்பவை எனக்கு காட்சிப் படிமங்களாக மனதில் விரியும். சிறு வயதில் இப்படி பல வார்த்தைகள் என்னை ஈர்த்துள்ளன. நானும் அது போல பரதேசியாய் அநாதியாய் திக்கற்று பிச்சியாய் திரிந்த காலங்கள் உண்டு என்பதால் இவ்வசனத்தின் மீது எனக்கு ஈர்ப்பு அதிகம்.

இங்கு நான் குறிப்பிடுபவை பைபிள் பற்றிய மத நம்பிக்கைகள்; பக்தி சார்ந்தவை அல்ல. அதன் இலக்கியத் தன்மை பற்றியதே. நவீன இலக்கிய வாசகர் எப்படி தமிழில் திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களை ஓரளவேனும் வாசித்திருக்க வேண்டுமோ அதே போல பைபிளை வாசித்து அறிந்திருப்பதும் தேவை. இன்று ‘சோர்பா எனும் கிரேக்கன்’ போன்ற பல புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன. பிற மொழிகள் பண்பாடுகள் பற்றிய வாசிப்புகள் அதிகரிந்துள்ளன. அந்த வரிசையில் இரண்டாயிரம் ஆண்டுகளாக உருவாகி வந்த ஒரு முக்கிய சமயத்தின் மக்களின் வாழ்வியலை, நம்பிக்கைகளை, பாலை நில வாழ்வை அறிந்து கொள்ள பைபிள் ஒரு சிறந்த புத்தகம். எபிரேய, எகிப்திய நிலங்கள், அவர்களின் போர் முறைகள், வழிபாடுகள், உணவுகள், தாவரங்கள், விலங்குகள் என எல்லாவற்றையும் பற்றிய பதிவுகள் பைபிளில் உண்டு. அவற்றைவாசிக்கையில் மேய்ப்பர்களாய் வனாந்திர வெளிகளில் வாழ்ந்த தொல் பழங்குடி மக்களின் வாழ்வியலை அறியலாம்.

பைபிளின் பழைய தமிழ் மொழி எனக்கு அத்தனை ஈர்ப்பானது. கேதுரு மரங்கள், ஒலிவ மரக்கன்றுகள், லீலி புஷ்பங்கள், வாற்கோதுமை, காட்டத்தி மரங்கள் என்று பைபிளில் வரும் மரங்களை மனதில் கண்டிருக்கிறேன். ‘வானத்திலிருந்து தூய வெண்ணிற பனித்துளியைப் போல பொழிந்த மன்னா’ என்பது எனக்கு ஆச்சரியமான உவமையாகவே பலகாலம் இருந்திருக்கிறது. அவாந்தர வெளிகள்,வனாந்திரங்கள் என்பவை எல்லாம் பைபிளின் மணிப்பிரவாளத் தமிழ் நடை.

ஈராயிரம் ஆண்டுகளில் நம் பண்பாடுகள் மாறி வந்திருக்கலாம். நம் இன்றைய மதிப்பீடுகள் அவற்றையெல்லாம் தவறு என்று சொல்லலாம். ஆனால், அந்த ஆதிகுடிகளிடமிருந்தே மானுடகுலம் தோன்றி வளர்ந்தது என்பதை மனதில் கொண்டே பைபிளை வாசிக்க வேண்டும். தந்தை- மகள், சகோதரன்-சகோதரி, மருமகள்-மாமனார், அண்ணன்-மனைவி, தம்பி மனைவி என்றெல்லாம் பலதரப்பட்ட மண உறவுகள் இக்கதைகளில் உண்டு. அவையெல்லாம் சூழலுக்கேற்ப நடந்தவை. பழைய ஏற்பாட்டில் நான் சிரித்து படித்த கதை ராகேல் லேயாள் என்ற யாக்கோபின் மனைவியர் பற்றியது. அக்கால முறைப்படி பல மனைவிகளும் மறுமனையாட்டிகளும் ஆண்களுக்கு உண்டு. இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொண்டு தம் வேலைக்காரிகளை போட்டி போட்டு கொண்டு யாக்கோபுக்கு மனைவிகளாகத் தந்து அவர்கள் மூலம் பிள்ளைகள் பெற்றுக் கொள்வார்கள். எப்படியாயினும் வாரிசு பெறுவது அன்று முக்கியமானது. ஆனாலும் யாக்கோபுக்கு நல்ல அதிர்ஷ்டம் தான்.

அதே போல நிறைய இடங்களில் துக்கத்தில் தன் வஸ்திரத்தை கிழித்துக் கொண்டான் என்று வரும். பாலை நில மக்களுக்கு உடைகள் என்பவை எத்தனை முக்கியமானவை என்பது இதன் மூலம் தெரிகிறது. புழுதிப் புயல்கள் நிகழும் வெம்மை நிறைந்த வனாந்திரங்களில் அவர்கள் தலையையும் உடலையும் முழுமையாக மறைத்தல் அவசியமானது. நம் தென்னிந்திய தட்பவெப்பத்தில் உடைகள் மிகக்குறைவாகவே பயன்பட்டன. நம் கோவில் சிற்பங்களில் இதனைக் காணலாம். இதுதான் அவர்களுக்கும் நம் மண்ணிற்கும் உள்ள வேறுபாடு.

டேவிட்டை குறிப்பிடுகையில் தேவாலயங்களில் பலரும் சங்கீதக்காரன் என்றே சொல்வார்கள். எனக்கு, ஆஹா.. சங்கீதம் மட்டுமே பாடிக்கொண்டிருக்கும் அற்புதமான வாழ்வு பெற்றவன் தாவீது என்று தோன்றும். ஆமாம் ஒரு சங்கீதக்காரனாய் வாழ்ந்து திரிவது என்பது எத்தனை அழகு. சங்கீதக்காரன் என்பது இதமான வார்த்தை.

‘என் கன்மலையும் கோட்டையுமாய் இருக்கிறீர். உன்னதமானவரே, நதிகள் எழும்பின‘

‘பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது.பரவதங்களின் உயரங்கள் அவருடையவை, சமுத்திரம் அவருடையது. வெட்டாந்தரையையும் அவரே உண்டாக்கினார்.’

போன்ற வரிகள் எல்லாம் அவன் கவிஞர்ளுக்கெல்லாம் கவிஞன் என்பதை உணர்த்தும் வரிகள். அதே போன்று ஜோப் எனும் யோபுவின் வசனங்கள் அத்தனை நிஜமான வலிகளை உணர்த்துபவை.

நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்தில் இருந்து வந்தேன். நின்வாணியாய் அவ்விடத்திற்கு திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார் என்பன போன்ற யோபுவின் வரிகள் பட்டிணத்தாரின் பாடல்களைப் போல பற்றற்று வாழ்வதைச் சொல்பவை. ஏசாயா என்னும் தீர்க்கதரிசி என்றே பெயர் பெற்றவன் ஐசாயா.

‘கைவிடப்பட்டு மனம் தொந்தரவான ஸ்திரீயைப் போலவும் இளம் பிராயத்தில் விவாகம் செய்து தள்ளப்பட்ட மனைவியைப் போலவும் இருக்கிற உன்னை கர்த்தர் அழைத்தார்’ என்பன போன்ற மனதை தீண்டும் வார்த்தைகள் ஏசாயாவினுடையவை.

இயேசு கிறிஸ்துவை பல இடங்களில் மனுக்குமாரன் என்றே நான் எழுதியிருக்கிறேன். இறைவன் மனுஷகுமாரனாய் மண்ணில் தோன்றுவதை எண்ணுகையிலேயே மனம் மகிழும்.

‘அற்ப விசுவாசிகளே

அப்பாலே போ சாத்தானே

பலங்கொண்டு திடமனதாயிரு

ஏலி ஏலி லாமா சபக்தானி

என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்பவையெல்லாம் நான் ரசிக்கும் கிறிஸ்துவின் சொற்றொடர்கள். ஆகாயத்துப் பறவைகளை கவனித்துப் பாருங்கள். காட்டுப் புஷ்பங்களை கவனியுங்கள் கற்பாறையின் மேல் கட்டின வீடு என அவரது உவமைகள் கவித்துவமானவை.

கைவிடப்பட்டவர்களையும் திருடரையும் விபச்சாரிகளையும் பாவிகளையும் எளியவர்களையும் நேசித்ததாலாயே அவர் மானுட குலத்தின் ரட்சகர் என்பதை இயேசுவின் வார்த்தைகளிலேயே நாம் உணரலாம். அதனால்தான் கோகுலத்தின் கிருஷ்ணணனைப் போலவே குழந்தைகளும் பெண்களும் அவரை எப்பொழுதும் சூழ்ந்திருந்தனர். இறைவனை முதலில் உணர்பவை குழந்தைகளைப் போன்ற தூய உள்ளங்களே.

கன்மலைகள், கற்சாடிகள், திராட்சரசம், ஸ்திரீயானவள், சேஷ்டபுத்திரன், புற ஜாதிகள், நீதிமான், யோவான் ஸ்னாநகன், ‘ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்’ என்பவை போல பல சமஸ்கிருதம் கலந்த வார்த்தைகள் எனக்கு பிடித்தமானவை. புதிய மொழி பெயர்ப்பு வந்துவிட்டாலும் இவையெல்லாம் திருக்குறள் போல மனதில் தங்கிவிட்ட வரிகள். அவற்றிற்கு உரை எழுதி விளக்கம் தரலாம். அவ்வளவுதான். அந்த விவிலிய மொழி நடையே அதன் அழகு.

சாலமோனின் உன்னதப்பாட்டை சொல்லாத கவிஞர்கள் எவருமில்லை என்றே எண்ணுகிறேன். சாலமோனின் வரிகளை தமிழில் கம்பனுடன் ஒப்பிடலாம். இயற்கையை பெண்களை அழகியலோடு வர்ணித்தவர்கள்.

நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.

முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.

காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.

இவை உன்னத சங்கீதத்தின் சில அழகான காதல் வரிகள். இன்னமும் தீவிர காதல் கவிதைகள் வேண்டுமெனில் பைபிளில் உன்னதப் பாட்டின் 8 அதிகாரங்களையும் வாசியுங்கள். அத்தனை அழகானவை. உலகின் சமய நூல்களில் சாலமோனின் வரிகளுக்கு இணையானவை என்று சிலவற்றை மட்டுமே சொல்லலாம்.

பைபிளின் ஆரம்ப கால தமிழ் மொழி நடை அதற்கு ஓர் காவியத்தின் இடத்தையே தருகிறது.

விரியன் பாம்புக் குட்டிகளே, மாயக்காரரே, சாமுவேலே சாமுவேலே என்று விளிக்கும் அழகான சொற்றொடர்களும் என் ப்ரியமே என் ரூபவதி, என் நேசரே, உன்னதமானவரே என் தேவனே கர்த்தாவே என்று அன்பு மொழிகளும் நிறைந்த பைபிளின் வாசிப்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அழைத்துச் செல்லும். புதிய வாசகர்களும் எழுத்தாளர்களும் தம் மொழி நடை இன்னும் வளம்பெற பைபிளை வாசிக்கலாம்.

maranmoni@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button