சர்வாதிகாரி மற்றும் கவிதை – போர்ச்சுகீஸ் மொழியில்: ஜோவோ செர்குவேரா – ஆங்கிலத்தில்: கிறிஸ் மிங்கே – தமிழில்: ஏ.நஸ்புள்ளாஹ்
மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

சர்வாதிகாரி தேசத்தின் நிலை குறித்து கவலைப்பட்டான்.
மக்கள் நிம்மதியற்று இருக்கிறார்கள், வாழ்க்கையின் மகிழ்ச்சியை இழந்துவிட்டார்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வதந்திகள் வந்தன. ஏன் இப்படி நடந்தது என்று சர்வாதிகாரிக்குப் புரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் மக்களை நன்றாகவே கவனித்துக் கொண்டான், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து தந்தான், அவர்களின் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்தான்.
“ஏன்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். “என்ன நடந்தது?”
அவனுக்கு பதில் தெரியவில்லை. ஆனால், அது மிகவும் தீவிரமானதாக இருக்கும் என்று அவன் உறுதியாக நம்பினான். அவனது எதிரிகள் அனைவரும் சிறையில் இருந்தார்கள் காரணம் அவனது காலத்தில் சுதந்திரமில்லை என்று கூறினார்கள். “இது முட்டாள்தனம்,” என சர்வாதிகாரி நினைத்தான், அவனது நாட்டில் சுதந்திரம் உண்டு; எல்லோரும் சாலைகளில் பயணிக்கலாம், கால்பந்து விளையாட்டுகள் அல்லது குடும்ப உல்லாசப் பயணங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம். பிரச்சனைகளை உருவாக்கியவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள குடிமக்கள் மற்ற நாடுகளில் உள்ளவர்களை விட மிக சுதந்திரமாக இருந்தனர், ஏனெனில் சுதந்திரத்தை அனுபவிக்க ஒருவர் நாட்டை பாதுகாக்க வேண்டும்.
அவன் தனது ஆலோசகர்களைச் சந்திக்க முடிவு செய்தான்.
“எனது மக்கள் ஏன் மன ரீதியாகச் சோர்வடைந்துள்ளனர் என்பதை அறிய விரும்புகிறேன். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனக்கு இந்த நிலை சம்பந்தமான அறிக்கைகளைச் சமர்ப்பிக்க ஒரு வாரம் அவகாசம் தருகிறேன்”
ஆலோசகர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“மேதகு சனாதிபதி அவர்களே காரணங்கள் சிக்கலானவை….” அவர்களில் ஒருவன் கூறினான்.
“இது எங்கள் எதிரிகளின் திட்டம்” என்று மற்றொருவன் கூறினான்
“மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள், அவர்கள் எதிலும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரியவில்லை…” என்றான் மூன்றாவது ஆலோசகன்.
“வாயை மூடு!” என்று சர்வாதிகாரி கத்தினான். “எனக்கு உறுதியான ஆதாரம் வேண்டும். மேலும், ஒரு வாரத்திற்குள் உங்களால் உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களை சிறைக்கு அனுப்புவேன். இந்துடன் இந்த சந்திப்பு முடிகிறது.”
ஒரு வாரம் கழித்து சர்வாதிகாரி மூன்று ஆலோசகர்களையும் சந்தித்தான். அவர்களின் சிறிய கண்கள் பிதுங்கிப் பெரியதாகி கீழே உருண்டு விழுவதைப் போல இருந்தனர். சர்வாதிகாரி அவர்களை உட்கார வைத்து விசாரிக்க ஆரம்பித்தான்.
“நீங்கள் சொல்லுங்கள்,” அவன் அவர்களில் ஒருவனை நோக்கி விரலைக் காட்டினான்.
ஆலோசகன் கண்களை மூடிக்கொண்டு, கடினமாக விழுங்கி, இறுதியாகப் பேசினான்.
“மேதகு. ஜனாதிபதி… நான் பிரச்சனையை ஆய்வு செய்ததில், புவி வெப்பமடைவதால் மக்கள் மனச்சோர்வடைந்துள்ளனர் என்ற முடிவுக்கு வந்தேன்.”
“முட்டாள். காவலர்களே, அவனைக் கைது செய்யுங்கள்” என்று சர்வாதிகாரி கத்தினான். அவன் இரண்டாவது ஆலோசகனை நோக்கி விரலைக் காட்டினான். “நீ இப்போது சொல்.”
அவன் கண்களை மூடிக்கொண்டு பேசுவதற்கு முன் ஒரு பிரார்த்தனையை முணுமுணுத்தது போல் தோன்றியது.
“மேதகு. ஜனாதிபதி… நான் குடிமக்களிடம் விசாரித்ததில், உங்கள் உடல்நிலை குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள் என்ற முடிவுக்கு வந்தேன்”.
சர்வாதிகாரி அவனைத் கண்டித்தான். “ஆனால், நோய்வாய்ப்படப் போவது நீதான். காவலர்களே, அவனைக் கைது செய்யுங்கள்”.
முதல் இரண்டு ஆலோசகர்கள் கைது செய்யப்பட்டதைப் பார்த்த பிறகு, மூன்றாவது ஆலோசகன் தனது விதியை தேற்றிக்கொண்டான் சர்வாதிகாரியுடன் பகிர்ந்து கொள்வதற்காக அவன் தனது முரண்பாடான கருத்துக்களைத் தேர்வு செய்து குறைந்தபட்சமாய் சர்வதிகாரி கேலி செய்யாதவாறு முன் வைத்தான்
“மேதகு சனாதிபதி அவர்களே, காரணம் கவிதை…”
சர்வாதிகாரி இதை எதிர்பார்க்கவில்லை. அவனது கண்கள் விரிந்தன.
“என்ன?”
“ஆம், மேதகு. ஜனாதிபதி, மக்கள் அதிகமாக கவிதைகளைப் படித்து மனச்சோர்வடைந்துள்ளனர்.”
சர்வாதிகாரி முகம் சுளித்தான்
“கவிதை மக்களை சோர்வடையச் செய்கிறதா? கவிஞர்கள் காதல், சந்தோசம், வாழ்க்கையின் மகிழ்ச்சியைப் பற்றி பாடுகிறார்கள் என்றல்லவா நான் நினைத்தேன்?”
“சில கவிஞர்கள், ஆம், ஆனால் எங்களுடையவர்களின் கவிதைகள் மனச்சோர்வூட்டும் வசனங்களை மட்டுமே உருவாக்குகின்றன. இந்தக் கவிதையைக் கேளுங்கள்:
எனக்கு வாழ்க்கையில் சிறிதும் மகிழ்ச்சி இல்லை
இன்னும் கல்லறையில் சிறியதாய் பயங்கரம்
நான் பிரியும் நேரத்தை எதிர் பார்த்து வாழ்கிறேன்
ஒருவரைக் காப்பாற்ற நான் இறந்திருப்பேன்.
“இது உண்மையில் பயங்கரமானது இந்தக் கவிதை என்னை மனச்சோர்வடையச் செய்கிறது.”
ஆலோசகன் தனது உள்ளக்கிடங்கைத் திறந்தான். நெற்றியில் வியர்வைத் துளி ஒன்று வழிந்தது.
“பார்த்தீர்களா? இதுவே மக்கள் மகிழ்ச்சியின்மைக்கு உண்மையான காரணம்.”
“அடடா, கவிஞர்களிடம் ஏதோ தவறு இருப்பதாக எனக்குத் தோற்றுகிறது இவர்கள் என்ன மாதிரியான மனிதர்கள்.. வசனங்களை உருவாக்கி நேரத்தை வீணடிக்கிறார்கள்?”
“அவர்கள் பலவீனமானவர்கள், அவர்களால் வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியாது. உங்களைப் போன்ற உண்மையான மனிதரை ஜனாதிபதியை கேலி செய்பவர்கள். ஜனதிபதி அவர்களே, இவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுங்கள். கவிஞர்கள் தங்கள் கைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். கவிதைகள் முடிவில்லா நச்சரிப்புகளாக மாறிவிட்டன”
“நீங்கள் சொல்வது சரிதான், கவிஞர்கள் சமுதாயத்தை சீரழிக்கும் அவலங்கள்.”
“வாழ்க்கை அர்த்தமற்றது என்பதை நிரூபிக்க அவர்களில் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு ஆட்சியாளர் கட்டியெழுப்புகிற அனைத்தையும், கவிஞர்கள் இடித்துத் தள்ளுகிறார்கள். அவர்களுக்கு ஒரு பேனா மற்றும் ஒரு தாள் மட்டுமே தேவை”.
“எனக்கு இத்தகைய எதிரிகள் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.”
“கவிதை இந்த அரசாங்கத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது ஜனாதிபதி அவர்களே. மற்ற எதிரிகள் தங்கள் மனதில் நினைப்பதை நாம் யூகிக்கக்கூடியவர்கள் நாம் அவர்களை கட்டுப்படுத்த முடியும். கவிஞர்கள் அப்படி இல்லை. அவர்கள் தங்கள் திட்டங்களை மறைக்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது.”
“கவிதை ஒரு ஆயுதம்!” ஜனாதிபதி அறிவித்தான்.
“நான் ஒரு விடயம் சொல்ல விரும்புகிறேன் …”
“இனிமேல் கவிதை எழுதுவதற்குத் தடை. கவிஞர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள்.
மறுநாள், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களில் புத்தகங்கள் என கவிதைகளை வெளியிட்ட அனைத்து கவிஞர்களும் கைது செய்யப்பட்டனர். இனிமேல், கவிதை எழுதுவது அல்லது பேசுவது சட்டவிரோதமானது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. புத்தகங்களை வைத்திருப்பது பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டு. மக்கள் முன்னிலையில் அனைத்து கவிதைகளையும் ஒன்று திரட்டி, டிரம்ஸ் ஒலியுடன், புத்தகங்கள் ஒரு கிடங்கில் போட்டு எரிக்கப்பட்டன. காற்றில், வசனங்கள் புகையாக எழுந்தன.
“இது உங்கள் சொந்த நலனுக்காக” என்று ஒரு காவலன் நெருப்பைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம் கூறினான்.
சர்வாதிகாரி சில பொதுவான நடவடிக்கைகளை செய்தான் அதனால் மக்களின் மனநிலையில் சில முன்னேற்றங்களைக் கவனித்தான். ஒரு டீனேஜ் பெண் புன்னகைப்பதையும், ஒரு ஜோடி காதலிப்பதையும், ஒரு பைத்தியக்காரன் தெருவில் மகிழ்சியாக நடனமாடுவதையும் அவன் பார்த்தான்.
“இதற்கு சிறிது நேரம் ஆகலாம், ஆனால், சில மாதங்களில் அவர்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்,” என்று அவன் தனக்குத்தானே கூறினான். கவிதையை ஒழித்ததே அவனது வாழ்க்கையின் சிறந்த முடிவு.
இந்த நேரத்தில், புதிதாக வந்த ஒரு தூதரின் கௌரவ விருந்தில், அவன் இராஜதந்திரியின் மனைவி ஜூலியானாவைச் சந்தித்தான் அவள் ஒரு அமெரிக்க நடிகை, பச்சை நிறக் கண்கள் மற்றும் அடர்த்தியான உதடுகள், உயரமான மற்றும் நேர்த்தியான சிவப்பு முடி கொண்டவள். அவள் தோலுக்கு இறுக்கமான இளஞ்சிவப்பு உடை மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்திருந்தாள். அவள் நடக்கும்போது, அவளது இடுப்பு அலையலையாய் நெளிந்தது, ஆனாலும் அவளுடைய மார்பகங்கள் இறுக்கமாக இருந்தன. சர்வாதிகாரி அவளைப் போன்ற ஒரு பெண்ணைக் கண்டதில்லை. அவள் குரல் சுற்றியுள்ள எல்லா சத்தத்தையும் அடக்கியது. அவள் கையின் ஸ்பரிசம் அவனை வருடியதில் மெல் உணர்வை ஏற்படுத்தியது. அன்று மாலை அவன் கண்களால் அவளைப் பின்தொடர்ந்து அவளுடன் நெருக்கமாக இருக்க முயன்றான். ஆனால், அவனால் அவளிடம் பேச முடியவில்லை. அவனது இதயம் அவனது தொண்டையில் ஒரு கட்டியை ஏற்படுத்தியது. மேலும் அவனது வாய் சிறை அறை போல பேச முடியாமல் மூடிக்கிடந்தது.
இரவு முழுவதும் அவளைக் கனவு கண்டான்.
மறுநாள், அந்தக் கடைசி ஆலோசகனை அழைத்தான்.
“எனக்கு இராஜதந்திரியின் மனைவி வேண்டும்,” என்று அவன் கூறினான்.
“சிவப்பு தலை.” என்றான்
அவன் மீண்டும் சிக்கலில் இருப்பதை ஆலோசகன் உணர்ந்தான்.
“மேதகு ஜனாதிபதி, இந்த பெண் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவள். ராஜதந்திரியின் மனைவியைக் கடத்த முடியாது. அப்படிக் கடத்தினால் ஒரு போர் வெடிக்கும்.”
சர்வாதிகாரி ஜன்னலை நோக்கிச் சென்று மேகங்களைப் பார்த்தான். மந்திரம் போல அவன் குரல் வந்தது.
“அதனால் என்ன?”
“மேதகு. ஜனாதிபதி அவர்களே,” ஆலோசகன் தெளிவுபடுத்தினான், “அந்த நாடு நம்மை விட வலிமையானது.”
சர்வாதிகாரி சில நொடிகள் கன்னத்தைச் சொறிந்தான்.
“அவள் விருப்பத்துடன் என்னிடம் வந்தால்? எந்த பிரச்சனையும் இருக்காது, சரியா ஆலோசகரே?”
ஆலோசகன் தோளைக் குலுக்கினான்.
“சரி என்று நினைக்கிறேன்…”
சர்வாதிகாரி ஆலோசகனிடம் திரும்பி புன்னகைத்தான். “அப்படியானால், அது எளிதாக இருக்கும். அவள் எப்படி என்னை எதிர்க்க முடியும்?”
ஆலோசகன் ஒரு கட்டாய புன்னகையை வெளிப்படுத்தினான்.
“ஆம், அவளால் எப்படி முடியும்?”
அதே நாளில், சர்வாதிகாரி ஒரு வாரத்திற்குள் ஒரு விருந்துக்கான அழைப்பை இராஜதந்திரிக்கு அனுப்பினான். ஆனால், அவனை கண்ணாடியில் பார்த்தபோது, ஜூலியானாவின் கணவருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. அவனது கன்னம் அவனது அழகை இன்னும் அழகுபடுத்துவதாக பல பெண்கள் கூறினார்கள், ஆனால், அவனது வாழ்க்கையில் முதல்முறையாக, அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவன் தனது தையல்காரனை அழைத்தான், அவனுக்கு ஒரு புதிய உடையைத் தைக்கவும், முடியை வெட்டுவதற்கு ஒரு நபரும் என தனது உடல் முழுவதும் ஒரு புதிய வாசனை என ஏற்படுத்தினான் .
ஜூலியானா ஒரு கருப்பு உடை மற்றும் பாதுகாப்பான தோல் காலணிகளில் விருந்துக்கு வந்தாள். அவள் கூந்தல் தீப்பற்றி எரிவது போல இருக்க, அவள் கண்கள் மின்மினிப் பூச்சிகளைப் போல மின்னியது போலவும் இருந்தது. அவளைப் பார்த்ததும் சர்வாதிகாரிக்கு இதயம் படபடத்துத் துடித்தது. பிறந்த குழந்தையின் தோலில் உதட்டை வைப்பதைப் போல அவள் கையை மெதுவாக முத்தமிட்டான். ஆலோசகன் அவளது கணவனை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றான் சர்வாதிகாரியை ஜூலியானாவுடன் சுதந்திரமாகப் பேச விட்டுவிட்டான். இம்முறை அவனுக்கு தைரியம் குறையவில்லை. அவன் அவளை கடல் போன்ற ஒரு பால்கனியில் உட்கார அழைத்தான். மேலும் அவளுக்கு ஷாம்பெயின் வழங்கினான். அவனுக்கு அன்றைய இரவு சூடாக இருந்தது, நட்சத்திரங்கள் வானத்தில் பிரகாசித்தன, நிலவொளி அங்கு தண்ணீரை ஒளிரச் செய்தது. சர்வாதிகாரி ஜூலியானாவிடம் தனக்கு பிடித்த பாடல்களைப் பற்றியும், நாட்டினதும் அரசாங்கத்தினதும் இன்னும் குடிமக்களின் நல்வாழ்வு, மக்களின் எதிர்காலம் என பேசினான்
எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது, அப்போது அவள் எதிர்பாராத ஒன்றைச் சொன்னாள்.
நீங்கள் உண்மையிலேயே மக்களின் நன்மையை விரும்பினால், உங்கள் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.”
சர்வாதிகாரி மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தான்.
“மன்னிக்கவும். ஆனால், எனது நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அவன் சொன்னான். “சமூகத்திற்கு ஆபத்தானவர்களை நான் சிறையில் வைத்திருக்கிறேன். அது என் கடமை!”
ஜூலியானா ஒரு ரோஜாவைப் போல் நின்றாள். ஒரு காற்று அவள் தலைமுடியை அசைத்தது.
“அந்த மக்களை விடுவிப்பதாக நீங்கள் உறுதியளிக்கவில்லை என்றால், நான் உங்களுடன் மேலும் பேசமாட்டேன்.”
சர்வாதிகாரி எழுந்து ஷாம்பெயினை தரையில் ஊற்றினான்.
“சரி, நான் சத்தியம் செய்கிறேன். அது உங்கள் விருப்பமாக இருந்தால், அவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள்”.
விருந்தின் முடிவில், சர்வாதிகாரி ஒரு வால் நட்சத்திரத்தைப் பார்த்தான் எல்லாம் நன்றாக நடக்கும் என்பதற்கான அறிகுறி. எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் தனது கைதிகளை விடுவிப்பதில் என்ன விஷயம்? விரைவில் அவர்களை மீண்டும் கைது செய்வான். இப்போதைக்கு அந்த தேவதையை மகிழ்விப்பதுதான் முக்கியம். அவள் கேட்டால் அவன் கவிஞர்களையும் விடுவிப்பான்.
சில நாட்களுக்குப் பிறகு, சர்வாதிகாரி அவளைக் கவர்ந்திழுக்க அடுத்த கட்டத்தைத் திட்டமிட்டான் புதிய கட்சியா? அவளுக்கு பூக்களை அனுப்பலாமா? இராணுவ அணிவகுப்பு? என நினைக்கும் போது அவன் தனது உளவாளிகளிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான்.
இராஜதந்திரியின் மனைவி விமானத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
சர்வாதிகாரிக்கு நம்பவே முடியவில்லை. ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும். இந்த பெண் எப்படி சொல்லாமல் அவனை விட்டுச் சென்றிருப்பாள்? அவன் அவளை கிட்டத்தட்ட மயக்கிவிட்டான்.
போனை எடுத்து இராஜதந்திரியை அழைத்தான்.
“மேதகு. தூதரே, உங்கள் மனைவி வெளியேறிவிட்டார் என்று எனக்குத் தகவல் கிடைத்தது”.
“ஆம்,” இராஜதந்திரி கூறினான், “அவளுக்கு ஒரு வால் நட்சத்திரம் வேண்டுமாம்.”
சர்வாதிகாரி வெட்கத்துடன் கைபேசியைக் கைவிட்டு சிறிது நேரம் சுவரைப் பார்த்தான். அன்றைய தினம் அவன் தனது அனைத்து நிகழ்வுகளையும் ரத்துசெய்து தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்தான்.
அடுத்த நாட்களில், சர்வாதிகாரி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டான், அவன் தனது அந்தப்புரத்தில் தன்னை சிறைப்படுத்திக்கொண்டபோது மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று கட்டளையிட்டான். உணவு வேளையின் போது அவன் சிறிது சாப்பிட்டான். மேலும் அதிகமாக மது அருந்தினான். நித்திரையில் அவன் தூக்கமில்லாத இரவுகளை எதிர்கொண்டான். கனவு காணும் போது, ஜூலியானா மற்ற மனிதர்களின் கைகளில் இருப்பதாக அவனுக்குத் தோன்றினாள். படிப்படியாக, அவன் எடை இழக்கத் தொடங்கினான், அவனது தோலின் அழகு சுருங்கியது. மேலும் அவனது கண்கள் நிரந்தர கருப்பு வட்டங்களை உருவாக்கியது. அவன் கண்ணில் ரத்தக்கறை வீங்கி, கன்னத்தில் இருந்த தழும்பு கருத்தது. அனைத்து வாசனை திரவியங்களையும் தூக்கி எறிந்தான். அரண்மனை முழுவதும் பேயாக அலைந்து திரிந்த அவன் பலமணிநேரம் பால்கனியில் கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஏதாவது தேவையா என்று யாராவது கேட்டால், அவன் பதிலளிக்கவில்லை. ஆனால், சில சமயங்களில் தனக்குத்தானே பேசிக் கொண்டான். இறுதியாக, அவன் நாட்டை ஆளும் ஆர்வத்தை இழந்தான். அன்று ஆலோசகன் அவனுக்கான முடிவுகளை எடுத்தான்.
மறு நாள் காலையில், சர்வாதிகாரியின் கதவு உடைத்து திறக்கப்பட்டது மேலும் அவனை நோக்கி துப்பாக்கிகளை ஏந்திய ஒரு குழு வீரர்கள் அவனை முற்றுகையிட்டனர். அவர்களுக்குப் பின்னால், டெயில்கோட் அணிந்து, ஆலோசகன் நின்று கொண்டிருந்தான்.
“உங்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நான் இப்போது ஜனாதிபதி. ஆடையை அணிந்து கொண்டு தயாராகுங்கள்”.
சர்வாதிகாரி எதிர்ப்புத் தெரிவிக்காமல் தோள்களைக் குலுக்கி கீழ்ப்படிந்தான். அவன் தனது வழமையான சூட்ஸ் மற்றும் சாக்ஸ் இல்லாமல் தனது புதிய காலணிகளை அணிந்தான். சாதாரண கைதியைப் போல அவனைக் கைதிகள் கட்டி இழுத்துச் சென்றனர். இரண்டு மணி நேரம் கழித்து அவன் கொல்லப்பட்டான்.
மக்கள் வீதிகளில் இறங்கி பட்டாசுகளைக் கொளுத்தினர். எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.
அடுத்த நாள், புதிய சர்வாதிகாரி அரண்மனைக்குள் குடியேறியபோது, மேசை டிராயரில் மரகதத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தங்கப் பெட்டியைக் கண்டுபிடித்தான். அதில் முக்கியமான ஆவணங்கள் இருக்கும் என்று அவன் நம்பினான். ஆனால், பெட்டியைத் திறந்ததும், அவனுக்கு நறுமணத்துடன் வாசனை வந்தது. கையால் எழுதப்பட்ட பல தாள்களும் இருந்தன. அவன் அதை முதலில் படிக்க ஆரம்பித்தான்.
ஜூலியானா, என் வாழ்வின் ஒளி
என் இதயத்தை உடைத்தாய்
ஐயோ, நான் தொலைந்துவிட்டேன் …
********
********
ஜோவோ செர்குவேரா
ஜோவோ செர்குவேரா ஓபோர்டோ பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். எட்டு நூல்களின் ஆசிரியர். அவரது நாவல்களுக்காக அமெரிக்க புத்தக விருது 2013, பெவர்லி ஹில்ஸ் புத்தக விருது 2014 மற்றும் குளோபல் மின்புத்தக விருது 2014 ஆகியவற்றை வென்றவர். அவரது நாவலான ‘ஜீசஸ் அண்ட் மாக்டலீன்’ 2020ஆம் ஆண்டின் இண்டி ரீடர் விருதைப் பெற்றது. தி அடிரோண்டாக் ரிவ்யூ, ராகசின், பெர்ஃப்ராய்ஸ், கிளீவர் இதழ், பிரைட் லைட்ஸ் ஃபிலிம், மாடர்ன் டைம்ஸ் இதழ், டாட் சக் ரிவ்யூ, ஃபோலியேட் ஓக் லிட்டரரி இதழ், ஹைபர்டெக்ஸ்ட் இதழ், டான்ஸ் மேக்கப்ரே, ரேபிட் ரிவர் இதழ், தற்கால இந்திய இலக்கிய விமர்சனம் ஆகியவற்றில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.
கிறிஸ் மிங்கே
பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ் மிங்கே கடந்த 15 ஆண்டுகளாக போர்ச்சுகலில் வசித்து வருகிறார். அவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் நவீன மொழிகளில் பட்டம் பெற்றுள்ளார், மேலும் வெளிநாட்டு கலாச்சாரங்கள் மீதான அவரது காதல், குறிப்பாக தனது சொந்த நாட்டில், அவரது தொடர்ச்சியான மொழிபெயர்ப்பு மற்றும் பத்திரிகை முயற்சிகளில் ஈடுபட வழிவகுத்தது. தனது சொந்த மொழிபெயர்ப்பு நிறுவனம் மற்றும் பல வெளியீடுகளில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகப் பணியாற்றிய கிறிஸ், ஜோனோ செர்குவேராவின் விருது பெற்ற ‘தி ட்ராஜெடி ஆஃப் ஃபிடல் காஸ்ட்ரோ’ மூலம் இலக்கிய மொழிபெயர்ப்பு உலகில் நுழைந்தார்.
*******