இணைய இதழ்இணைய இதழ் 92சிறுகதைகள்

மரண ஓலம் – எஸ்.உதயபாலா

சிறுகதை | வாசகசாலை

கைகளை விரித்து ஓலமிட்டுக்கொண்டிருந்த அந்த ஆலமரத்திற்கு இப்படியான சூழல் முன் எப்போதும் வாய்த்திருக்கவில்லை. ஆகவே, இப்போது கிடைக்கப்போகும் உயிரை முழுக்க உறிஞ்சி தன்னை பல வருடங்களுக்குப் பேய் மரம் என்று நிலை நிறுத்திக்கொள்ளவே அம்மரம் ஆசைப்படும் என நினைக்கிறேன்! மேலும், அம்மரம் காற்றில் தள்ளாடுவதைப் பார்த்தால் அகோரப் பசிக்கானதைப் போன்றுதான் எனக்குள் தோன்றியது. மேலும், வானையே முட்டி விடுவதைப் போன்றதொரு நல்ல உயரமும் கூட.

இரவு பாய் விரிக்கும் வேலையில் பல கால்களை இந்த மண்ணில் ஊன்றிய ராட்சத தன்மை கொண்டதொரு தருவாகவே கிழக்கிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியக்கூடும். ஆகையால் என்னவோ இந்த ஆலமரம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, ஆற்றின் கரையோரத்தில் கொளுத்துக் கிளைவிட்டு, விழுதுகள் ஊன்றி நீள் தனிமையிலேயேதான் நின்று கொண்டிருந்தது.

மென் பறவைகள் கூட இம்மரத்தில் தங்குவதில்லை. கிளைகளில் ஆந்தைகளும், கழுகுகளும், விழுதுகளில் பல்லிகளும், பூச்சிகளுமே அதிகமாகத் தென்படும். மரத்தடியில் சில பாம்புகளே விழுதுகளாகவும், விழுதுகளே பாம்புகளாகவும் கிடக்கும்.

“ஏன் செங்கனன் இவ்விடத்தினைத் தேர்வு செய்தானோ?” என உண்மையிலேயே மரத்தைச் சுற்றிய சூழல்களே கூட எண்ணி நொந்திருக்கும். அப்படியான ஒரு அச்சத்தை தன்னகத்தே கொண்டு வானை நிரப்பியிருந்தது அந்த ஆலமரம்.

விரக்தியின் முடுக்குதலில் கல்லும் முள்ளும் தெரியாது சூரியன் அஸ்தமித்து செம்மை பரப்பும் அந்த வேளையிலே அந்த மரம் வந்தடைந்தான் செங்கனன்.

தூரத்தில் இருந்து அழைப்பு தந்த அந்த ஆலமரத்தை அருகினில் பார்த்ததும் திடீரென மரண பயத்தைக் கிளப்பினாலும், அந்த சூழல் தனக்காகவே உருவாகியிருந்த ஆச்சரியமூட்டும் மரமாகத்தான் அதைக் கருதித் தேரினான்.

“இங்கேயே இருந்து விட்டால் கூட யாராலயும் கண்டு பிடித்திட முடியாது. அத்தோடு, இறந்து விட்டால்… யாருக்குத் தெரியப் போகிறது? தேடியலையட்டும்..! என்னைக் காணும் போது என் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் துக்கம் மேலிட, அருவருப்பும் உண்டாகித் திரும்பி ஓடட்டும்..!

இப்பிணம் நான் இல்லை என்ற அசட்டு நம்பிக்கையில் அப்பாவித்தனத்தோடு காத்திருப்பார்கள்! மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு இப்பிணம் நானேதான் என்ற முடிவு நிச்சயமாக அவர்களின் வாழ்வில் மறக்கவே முடியாததாக இருக்கும் என்பதையும் அறிவேன். அவர்கள் உயிரோடு தினம் தினம் மாண்டு துன்புறட்டும்!” என்று நினைத்தவனாய் மனதைக் கெட்டிப் படுத்திக்கொண்டு கையோடு எடுத்துவந்த கயிற்றை நோக்கினான் செங்கனன்.

“நிச்சயமாக இந்த கயிற்றைத் திரித்தவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், என் கழுத்தை நெறிக்கத்தான் அவன் இவ்வளவு திடமாகத் திரித்திருக்கிறான். என் மரணத்தில் கூட அவனுக்கு சம்பாத்தியம் உண்டு என்பதில் மகிழ்ச்சியே!” எனச் சொல்லி மரணத்திற்கு உடன்பட்டு உவகை பூக்கிறான் செங்கன்னன்.

இப்போது கூட தான் வந்த வழியை ஒரு முறை ஏறிடுகிறான். தன் மகன் வருகிறானோ என்ற கற்பனையிலோ என்னவோ!

எப்படி வருவான் மகன்? இல்லை மனைவியோ, மகளோதான் எப்படி வருவார்கள் இந்த ஆலமரத்தடிக்கு? இங்கே வருவது கூட ஒரு தற்கொலைக்குச் சமம் என்பது பிறந்த குழந்தைக்கூட தெரியும். அவர்கள் வாழப் பிறந்தவர்கள், எப்படி இங்கே வருவார்கள்? “நல்லா வாழட்டும்..!” என சப்தமாகக் கத்தினான்.

மரணத்தை நெருங்கையில் கோபம் இல்லாமல்தான் போகும்போல! ஆனால், இந்த நிலை தொடர்ந்தால் நம் மன இறுக்கம் கலைந்து மரண வாசல் அடைபட்டு விடுமோ என்ற அச்சத்தில் ஒரு கிளையில் கயிற்றை வீசி சுருக்குப் போட்டு கல்லை அடுக்கித் தலையை உள் நுழைக்கத் தயாரானான் செங்கன்னன்.

கடைசியாக ஒருமுறை தன்னை ஈன்ற தன் அப்பனாத்தாளை நினைத்து கண்ணீர் மல்கினான். தன்னுடன் பிறந்து வளர்ந்த அண்ணந்தங்கச்சிகளை நினைத்து கண்ணீர் சிந்தினான். தன் மனைவியின் விரல்களை முதன் முதலாகத் தீண்டிய நினைவுகளையெல்லாம் நினைத்துத் தேம்பினான், தன் மகன் பிறந்தபோது அவனைத் தன் கையில் ஏந்திய நினைவுகளை அசைபோட்டு கத்தினான். மிரண்டன ஆந்தைகளும் கழுகுகளும். சரட்டென ஓடியது ஒற்றைச் சாரைப் பாம்பு.

மனம் மழுங்கியதில் கயிறு கழுத்தை இறுக்கியது. கால்கள் கற்களைத் தட்டிவிட்டு துடிதுடித்தது. ரத்த ஓட்டத்தின் வேகத்தில் பார்வை முழுக்க ரத்தக்கசிவாகவே தெரிந்திருக்கும் செங்கனனுக்கு. அவனின் ரணத்தை ஆலமரம் தம் இலைகள் ஒவ்வொன்றிற்கும் மெல்ல பரிமாறிக்கொண்டிருந்தது.

“மனைவி அப்படி என்ன பேசிவிட்டாள்? சம்பாதிக்கின்ற எல்லாவற்றையும் குடித்தே அழிப்பது மட்டுமின்றி, உடம்பையும் கெடுத்துக் கொள்வதை எந்தப் பொண்டாட்டிதான் ஏற்றுக்கொள்வாள்? எந்த மகன்தான் திட்டாமல் இருப்பான்? நிச்சயமாக தன் மனைவியும், மகனும் இப்போதும் நியாயம் கேட்பவர்களாகவே முன்னிற்கிறார்கள். வேறு யாரும் மனைவியாக வாக்கப்பட்டிருந்தால் சோற்றில் விசம் வைத்திருப்பார்கள், வேறு யாரும் மகனாகப் பிறந்திருந்தால் அப்பன் என்று கூட பாராமல் மேலே கைவைத்திருப்பான். ஆனால், என் மனைவியும், பிள்ளையும் ரொம்பவே நல்லவர்கள். நான் ஊறு விளைவித்தாலும் அன்பான கட்டுப்பாட்டையே விதித்தார்கள். இந்த சண்டாளப் பாவிக்கு அது பொறுக்கவில்லையே..!

அய்யோ… கடவுளே..!

அந்த நாசமாப் போன கடவுள் இருக்கும்போதே வந்ததில்லை… இனியா வரப்போகிறான்?”

என செங்கனன் மரணத்தின் பிடியில் அகப்பட்டவனாய் மாட்டி வதையுற்றான்.

மரம் பாதி உயிரை உறிஞ்சிவிட்டது. “இன்னும் ஒருசில நொடிகளில் நாம் வெறும் சக்கையாக இந்த மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கப்போகிறோம். நம் பூதவுடலை இங்கிருக்கும் பாம்புகள் சுற்றி வளைக்கலாம் இனி. கழுகுகள் கொத்தி தின்னலாம். மனித பார்வைகளுக்கு எட்டினால், ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்று நமது உயிரற்ற உடலை அறுக்கலாம், உயிர்ப்பற்ற நம் மண்டையினை உடைக்கலாம். இன்னும் சில நொடிகளில் எந்தவொரு நினைப்புமின்றி அடங்கப்போகிறோம்!

நான் கடைசியாக ஒருமுறை சுவாசித்ததின் எச்சத்தை இந்த ஆலமரம் தன் இலைகளில் சேமித்து என் மகனுக்கு ஒன்றும், என் மனைவிக்கு ஒன்றுமாகக் கடுதாசி எழுதட்டும்!” என்ற செங்கனனின் எச்ச ரண நினைவில் இறுதியாக அவனின் ஒற்றை விரல் அசைந்து மரணிக்கிறது.

தயவு செய்து இப்போது அந்த ஆலமரத்தின் நிலையை யாரும் நினைத்துப் பார்க்க வேண்டாம். செங்கனனையும் நினைக்க வேண்டாம். இனி எந்தவொரு ஆலமரமும் செங்கனனின் மரணத்தை உங்களுக்கு நியாபகப்படுத்தினால் நான் பொறுப்பில்லை.

********

udhayabala.ub@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button