இணைய இதழ்இணைய இதழ் 72சிறுகதைகள்

மரணப்படுக்கை – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்

சிறுகதை | வாசகசாலை

ப்பசிக் கூதலும் இருளும் கொஞ்சம் கொஞ்சமாய் சன்னல் வழி நுழைந்து என் உயிரை உறிஞ்சிக் கொண்டிருந்தது. திட உணவுகள் தொண்டையிலிறங்கி வாரங்களாகிப்போனது. நீராகரம்தான் வலித்தும் வலிந்தும் இறங்கிக் கொண்டுள்ளது. அதுவும் இரண்டு நாட்களாய் உதட்டில் இடும் மிடறுகளை உடல் தயங்கித் தயங்கித்தான் உள்ளே அனுமதித்து வருகிறது. என்னைப் படுக்கவைத்திருக்கும் கோரைப்பாயின் அழுத்தம், உடுத்தியிருக்கும் வெள்ளைச் சீலையைத் தாண்டி, அடங்கிப் போன என் உடலை ரணப்படுத்திக் கொண்டிருந்தது

தீப்பெட்டியாலை வேலையை முடித்து இடத்தை ஒதுக்கிவிட்டுத் தெருப் பெண்கள் ஒருசிலர் வருவதும் போவதுமாயும், இன்னும் சிலர் இங்கேயே அமர்ந்து வெறும் வாயில் என்கதை பாதியும் அவர்கள் கதை பாதியுமாய் பேசித் தீர்த்துக் கொண்டிருந்தனர். கிடைக்குமிடங்களிலெல்லாம் பேசிப் பேசித் தீர்த்தும் சொக்கன்குளக் கதைகள் இன்னும் தீராமல் மிச்சமிருந்தது. அவ்வப்போது அறையின் மஞ்சள் நிறக் குண்டு பல்பு வெளிச்சத்தை மறைத்தபடி இருண்ட முகமாய்க் குனிந்து என்னை முறை வைத்து அழைத்து நலம் விசாரிப்பவர்களை, குரல் அடையாளம் காட்டியபோதும் அவர்களுக்கு வாய் திறந்து பதிலளிக்கும் தெம்பில்லாமல் கண்ணசைவும் அனத்தலுமாய் மட்டும் அவர்களோடு அளவளாவிக் கொண்டேன்

சுற்றியமர்ந்திருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு கைத்தாங்கலாய் வந்து தலைமேட்டில் அமர்ந்தாள் என் பால்ய சிநேகிதி நாகு. சொக்கங்குளத்தில் என்னைப் போலவே பார்வை பார்ப்பதில் பேர்போனவள். பேறுகாலம் தொடங்கி, சாவுக்களை பார்வை வரை கை தேர்ந்தவர்கள் இருவருமே. எங்களுக்குள்ளானதொரு போட்டி, எங்களிருவருக்குள் முதலில் யார் பார்வை பார்த்து, யார் போய்ச் சேர்வதென்பது. கிட்டத்தட்ட நான் வென்று விட்டேன். பாவம் எனக்குப்பின் நாகுவுக்குப் பார்வை பார்க்க சொக்கன்குளத்தில் யாரிருக்கிறார்கள்

சுருங்கிப் போன கைகளின் நடுக்கத்தை கட்டுப்படுத்தி என் நெற்றியின் இருபுறத்தையும் நிதானமாய்த் தடவிப்பார்த்து, காது மடல்களை மென்மையாய்த் தொட்டுப்பார்த்தவள், எனக்கானதானதொரு புன்னகையை வருத்தங்காட்டாமல் உதட்டோரமாய் உதிர்த்து விட்டு, “கணவதி! களை வந்துருச்சுய்யாரவைக்குத் தாங்காதுஆராருக்கு சேதி சொல்லணுமோ சொல்லி விட்டுருங்க…” திடமின்றிக் கிடந்த என் கைகளை அழுந்தப் பற்றி, “பார்வதி! எதும் கொறையில்லயில? எதையும் நெனைக்காம, பிள்ளைக நல்லாருக்கட்டும்னு நெனச்சுட்டு நிம்மதியா போ! கொஞ்ச நாள்ல நாங்களும் வரத்தான போறோம்…! வந்து பாக்கோம்..! என்ன!” சத்தத்தை உயர்த்தி ஒவ்வோர் வார்த்தையாய், சைகையோடு பேசி என்னிடம் கடைசியாய் விடைபெற்று விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் நாகு

வெளியேறுகையில் மெதுவாக, “வேண்டியாள்லாம் பக்கத்துலயே இருந்துக்கங்கய்யா! சாகப்போற நேரத்துல வாய்க்கு ருசியாத் திங்கக் கேக்கப் போறாளா! பட்டும் பவுனுமா உடுத்தக் கேக்கப் போறாளா! ஒத்தையா வந்து ஒத்தையாப் போனாலும், இருக்குந்தண்டியும் கூட இருந்து பாத்துக்கிட்டவுங்களோ, அவளால கூட வச்சுப் பாத்துக்க முடியாதவுகளோ! கடைசியாக் கொண்டாந்து அவ கண்ணுல காட்டி அந்தக் கட்டைய சந்தோசமா வழியனுப்பி விடுங்கடா!” கவலையாய்க் கேட்டுக்கொண்டிருந்த மகன் கணபதியிடம் ஆதங்கமாய்ப் பேசிக் கொண்டிருந்தவளிடம் உடனிருந்த என் அண்ணன்கள் பெரியசாமியோ சின்னசாமியோ, “அதுக்காகத் தான நாகு இப்பிடி பெரியாளு சின்னாளுன்னு பாக்காம தாய்புள்ளக் காரங்க எல்லாம் கூட நின்னுக்கிட்டிருக்கோம்சொக்கங்குளம் கோட்டை வீட்டுக்காரி உசுற அப்பிடிக் காண்பாரில்லாமப் போக விட்ருவோமா? அதுக்கு மேல வேறென்ன கொற இருந்துறப் போவுது இவளுக்கு?! நீ பாத்து பத்திரமாப் படியெறங்கு…!” என்றவாறு, “கணவதி! போய் வீட்ல எறக்கி விட்டு வந்துருதியா!?. “ எனக் கேட்க, அவனும் தலையசைத்து விட்டு நாகுவை வண்டியிலேற்றிக் கொண்டு கிளம்பினான்

பிள்ளைக்கு ஊரெல்லாம் பெரிய மனுசப் பேர்தான் என்றாலும் தாய்மாமன்களுக்கு மறுபேச்சுப் பேசிடாத தலையாட்டிப் பொம்மை. பொம்பள ஒத்தயாக் கெடந்து வளத்த பிள்ள தெறமைசாலியா இருந்து என்ன பிரயோசனம்உத்தது உள்ளத வாயத் தொறந்து பேசுற தைரியசாலியால்ல வளக்காம விட்டுட்டேன்!’

நாகு வெளியேறியதும் அமர்ந்திருந்த கூட்டத்தில் அடையாளங்காண முடியாத ஓரிரு விசும்பல்கள். எனக்கு மரணிக்கப்போவதை எண்ணி எந்தக் கலக்கமுமில்லை. குறைந்தபட்சம் இதுபோன்ற ஆயிரம் மரணங்களையாவது பார்த்தவளை அவ்வளவு எளிதாய்ப் பயமுறுத்தி விடுமா இந்த மரணம்? கிட்டத்தட்ட நான் கணித்திருந்ததைத்தான் நாகும் உறுதிப்படுத்தி விட்டுப் போகிறாள். மரணப்படுக்கையிலிருப்பவளுக்கு நாகு சொல்வதற்குள் உடலின் ரணங்கள் சொல்லி விடாதா மரணிக்கப்போகும் செய்தியை!? 

அசைக்க மாட்டாமல் அவ்வப்போது சீலையும் பாயையும் நனைத்துக் கொண்டிருந்த போதும், பொழுதனைக்கும் ஈரத்தை மாற்றமாட்டாமல் போட்டதும் கூடத் தேவலைதான். ஆயுள் முழுக்க அனிச்சையாய் நடந்துகொண்டிருந்த உடலின் அத்யாவசிய அன்றாடங்கள் கூட கிராக்கி பண்ணிக்கொண்டிருந்தன. நாசிவழி நுழையும் சுவாசம் சித்ரவதைப்படுத்தித் தொண்டையைத் தாண்டி இன்னதெனத் தெரியாத உடலின் பிறபாகங்களுக்குப் பயணப்பட்டுவிட்டு மீண்டும் நாசி திரும்புமுன் உடலின் ரணப்படாத பாகங்களை இன்னதென்று அடையாளம் சொல்ல முடியவில்லை. இடுப்புக்குக் கீழேயான உடலின் செயல்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்ள கால்களையோ, பாதத்தையோ அசைக்க முயன்று தோற்றுப் போய், பெருமுயற்சியின் பலனாய் கட்டைவிரலை மட்டுமாவது அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மரணத்தினும் கொடுமை மரணித்தல்

அண்ணன்களும் ரொம்பத் தான் தவங்கிப் போய்விட்டனர். பெரியசாமியண்ணனுக்கு முன்பிருந்த கம்பீரம் சுத்தமாய்ப் போய்விட்டது. ஆனால், வீம்பும் வீராப்பும் துளியும் குறையவில்லை. பெரியவனுக்கு மூப்பு; சின்னவனுக்கு சர்க்கரை. இருந்தும் குடும்பத்தின் அநேக முடிவுகள், இல்லை, இல்லை; இன்றுவரை எல்லா முடிவுகளுமே அண்ணன்கள் விருப்பப்படிதான் செல்லும். என் கல்யாணம், கணவதி கல்யாணம், அண்ணம்பிள்ளைக கல்யாண வரிசையில் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தைக்கு வந்துவிட்ட கணவதி மகள் பிரபாவதி கல்யாணம் வரை

பேத்தி பிரபாவதிக்கு பட்டணம் போய் மருத்துவம் படிக்க ஆசை. கெட்டிக்காரப்பிள்ளை; எங்கம்மை முகச்சாடை; அயத்தும் கூட யாரையும் ஒரு எச்சுப் பேச்சுப் பேசிடாத குணம். அவ பண்ணின புண்ணியமோ பாவமோ பொதுவாக ஆரம்பக் கல்வியோடு நின்று போகும் கோட்டை வீட்டுப் பெண்களுக்கிடையில் அவள்மட்டும்தான் இந்தாண்டோடு பன்னிரண்டாவதை முடித்திருக்கிறாள். பெரியசாமியும் சின்னச்சாமியும் அதற்கு அனுமதித்ததே அபூர்வம்

அந்த நேரத்தில் தான் சொக்கங்குளத்திற்கு மேல்நிலைப்பள்ளி வந்த புதிது. சுற்றியிருக்கும் தெக்கஞ்சேரி, கீழமடம், பனங்காடு போன்ற ஊர்களுக்கும் சேர்த்துத்தான் அந்தப் பள்ளி. ஆனாலும், சொக்கங்குளத்துப் பெண்பிள்ளைகளைப் பிறசாதி இளவட்டங்களிடமிருந்து காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று அந்த மற்ற ஊர்களின் பிள்ளைகளை ஓரிரு ஆண்டுகளாய் பள்ளியில் சேர விடாமல் பிரச்சனை செய்த அண்ணன்களும் மற்ற பெரியோர்களும் அதன்பின் அதிகாரிகளின் தலையீட்டால் வழியில்லாமல் அவர்களை வார இறுதியில் மட்டும் பள்ளிக்கு வர அனுமதித்தனர். அந்தக் கட்டுப்பாட்டை தொடர்ச்சியாய்க் கடைபிடிப்பதைக் கண்காணிக்க வேண்டியே சொக்கங்குளத்தில் கட்டாயமாய் வீட்டிற்கொரு பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கும் முடிவெடுத்தனர்

அப்படிப்பட்ட வீட்டிலிருந்து கொண்டு பிரபாவதி பட்டணம் போய் படிக்க ஆசைப்படுவதெல்லாம் சாத்தியமாகுமா? சொல்லப் போனால் கணவதிக்கு பிள்ளையைப் படிக்க வைத்துவிட வேண்டுமென்ற எண்ணம் இல்லாமலில்லை. ஆனால், மாமன்மார்களிடம் எப்படிக் கேட்க முடியும்..? சொக்கங்குளத்தின் யாரோவொரு வீட்டிலிருப்பவன் தன் பெண் பிள்ளையைப் படிக்க அனுப்ப முடிவெடுத்தால்கூட கோட்டைவீட்டு வேட்டி துண்டுகள் துடிதுடித்துப் போய் அதை முறியடித்துவிட்டு வந்தால்தான் நிம்மதி கொள்ளும். அப்படியிருக்க தன் சொந்த வீட்டில், அதுவும் தன்நிழலிலேயே தாங்கள் தூக்கி வளர்ந்த கணபதியையா அனுமதித்துவிடுவார்கள்? அவர்கள் அனுமதிப்பது இருக்கட்டும்; கணபதி தைரியமாய் தாய்மாமன்கள் கண்களைப் பார்த்து அவர்களுக்கு விருப்பமில்லாததைப் பற்றிப் பேச வேண்டுமே

எனது கடைசிநிமிட ஆசையைப் பற்றியும் நிம்மதியாய் என்னை வழியனுப்பி வைப்பதைப் பற்றியும் நாகு பேசி விட்டுப் போனாளே! அப்படியொரு நிம்மதியோடு என்னால் மரணித்து விட முடியுமா இன்று? சரியோ தவறோ என்றோ அறியாப் பருவத்தில் நான் செய்த செயல் இப்படி மூன்றாம் தலைமுறையாய் வீட்டிலுள்ள பெண்பிள்ளைகளை வதக்கியெடுப்பதை யோசித்துக் கொண்டே கண்மூடினால் என் கட்டை வேகுமா!? 

பஞ்சம் பிழைக்க கிழக்கிலிருந்து வந்த கூட்டத்தை ஊருக்கு வெளியே சுடுகாட்டுக்கு அருகேயிருந்த புறம்போக்கில் குடியமர்த்தி, சொக்கங்குளக் குடும்பங்களுக்கு வேண்டிய வேலைகளைச் செய்துகொடுக்க பணித்திருந்தனர். அதுவரை மயானக்கரையோடு வெட்டியான் குடும்பம் மட்டும் இருந்துவந்த தகணஞ்சேரி, அதன்பின் தெக்கஞ்சேரியானது. பண்ணை வேலை, ஊரின் கழிவகற்றிச் சுத்தம் செய்தல், முடி திருத்துதல், இழவுக் காரியம் செய்தல், அசலூர்களுக்கு சேதி கொண்டு போவது என சொக்கங்குளத்தின் எல்லாத் தேவைகளும் தெக்கஞ்சேரியினரால் எளிதாகப் போனது

அந்தவகையில் கோட்டை வீட்டுக்குக் குடியான சித்தனும் அவன் குடும்பமும் அங்குதான் குடியமர்ந்தனர். இது அது என்றில்லாமல் எந்த வேலையானாலும் கனகச்சிதமாய் செய்து முடிக்கும் வேலைக்காரன். ஒரு வேளை சாப்பாடும் இரவுக்கு ஒரு வேளை தானியமும் போதும்நான்கு பேரின் வேலையை ஒற்றையாளாய் நின்று செய்து முடிப்பான். வீட்டு வேலை வயல் வேலை மட்டுமல்லாது, வயல்களில் காவலுக்கும் சித்தன் கெட்டிக்காரன். வயல்களில் அத்துமீறி அலையும் பன்றிகளை யார் உதவியுமின்றித் தனியொருவனாய் பிடித்துவிடுவான். கிட்டத்தட்ட நூறு கிலோ மதிக்கத்தக்க பன்றியை ஒற்றை ஆளாய் தூக்கி நடக்கும் ஆறடி ஆஜானுபாகு சித்தன். அவன் சுமந்து போகும் பன்றி அன்று தெக்கஞ்சேரிக்கே கறிவிருந்தாகும். சித்தனின் சுறுசுறுப்பும் வேலைத்திறனும், சுருட்டை முடியும் கருந்தோலுடலும் என் வயதோடு மனதையும் மயக்கி அவன்மீது துளிர்த்த காதல், வேலிக்காடு, கிணற்றுப் படிக்கட்டு, வாரச்சந்தை என மலர்ந்து வளர்ந்தது. அவனோடு பழகிய அந்த இரண்டாண்டுகளில் அவனது கள்ளங்கபடமற்ற அன்பில் அண்ணன்களின் கட்டுப்பாடு மறந்தே போனது. சொக்கங்குளம் கோட்டைவீட்டுப் பார்வதி தெக்கஞ்சேரியின் சித்தனுடன் காதல் வயப்பட்டு அலைவதை அண்ணன்கள் காணாவிட்டாலென்ன, காணாததையும் கண்டதுபோல் புறம்பேசிக் கோட்டைவீடு வரை சித்தனுக்காக சேதி சாட்டியது சொக்கங்குளத்தின் கிணத்தடியும் திண்ணைகளும்

மறுநாள் காலையில் கோட்டை வீட்டில் சித்தனுக்குத் திருட்டுப் பட்டம். ஊரே வேடிக்கை பார்க்க இதே தெரு வழியே சித்தனையும் அவன் அப்பாவையும் அம்மணமாக்கித் தார்க்குச்சியால் அடித்து இழுத்துச் சென்று நொண்டிக் கருப்பு கோயில் மரத்தில் ரத்தமும் சதையுமாய்க் கட்டிவைக்க, பரிதாபமாய் இறந்து போனார் சித்தனின் அப்பா. திருடித் தின்ற பாவத்திற்கு நொண்டிக் கருப்பே உயிரைக் குடித்துவிட்டதாய்க் கதை வேறு. ரத்தமும் சதையுமான பிணத்தைச் சுமந்தபடி அம்மணமாய் நடந்துபோன சித்தனை ஒட்டுமொத்த சொக்கன்குளமும் வேடிக்கை பார்த்தது. அதன்பின் தெக்கஞ்சேரி மடமே கதியென்றிருந்த சித்தனின் வேலைத் திறனையறிந்த சிலர் அண்ணனிடம் பேசி அன்றிலிருந்து அவனை அவர்கள் வீட்டுக் குடியாக்கிக் கொண்டனர். அவனும் பிழைக்க வழியின்றிக் கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டு நடைபிணமாய் இதே ஊரில் திரிந்தான். சித்தன் அப்பா இறந்து சரியாய் ஏழாம் நாள் மேட்டுப்பட்டி பருத்தி வியாபாரி கந்தையாவுடன் என் திருமணம்

என் தலைவிதி அண்ணன்களால் அடித்து எழுதப்பட்டு விட்டபோதும், பருவம்தாண்டிப் பெய்த மழையில் பட்டமரமொன்று தளிர்த்ததுபோல் வேண்டாவெறுப்பாய் முடிந்த திருமண வாழ்வில், என் கடந்தகாலத்தைத் தானும் மறந்து என்னை ஏற்றுக்கொண்டதோடில்லாமல் என்னையும் மறக்க வைத்து என்னை மீண்டும் சிரிக்கவைத்தவர் என் கணவர். என்னால் சித்தன் பட்ட துயரை எண்ணி உள்ளூரப் புழுங்கிக் கொண்டிருந்தாலும் அதில் துளியும் பங்கெடுத்துக் கொள்ளத் துணியாத எனது பாவங்கள் எலும்புருக்கியாய் உருவெடுத்துத் திருமணமான இரண்டே ஆண்டுகளில் அவரைக் காவு வாங்கியது

காதலும் கூடாமல் கல்யாணமும் நிலைக்காமல், பால்குடி மறவாப் பிள்ளையும் கையுமாய்த் தாலியறுத்து நின்றவளை அண்ணன்கள் மீண்டும் சொக்கங்குளம் அழைத்து வந்தபோதுதான், சித்தன் பாவம் கோட்டை வீட்டின் மற்ற பெண்களையும் விட்டு வைக்காததையறிந்தேன். அந்த வீட்டால் நான் இழந்ததையெல்லாம் எண்ணிப் புழுங்கிக் கொண்டிருந்த சமயம், என்னால் காரணமேயில்லாமல் அந்த வீட்டிலிருக்கும் பெண்கள் அடைந்த பாதிப்பு என்னைக் குற்றவுணர்வுக்குள்ளாக்கியது. மதினிமார்கள் உட்பட வீட்டின் எந்தப் பெண்ணுக்கும் வீட்டைவிட்டு வெளியேற அனுமதியில்லை. படித்துக் கொண்டிருந்த அண்ணன் மகள்களுக்குப் படிக்க அனுமதியில்லை. அடுப்படியும் கொல்லையும் தாண்டி எந்த உரிமையும் அவர்களுக்கில்லை. இன்னும் இப்படி எத்தனையோ…! இது வாழாமல் மூளியான என்மீதும் பாரபட்சமேயில்லாமல் பாய்ந்தது. ஆத்திர அவசரத்திற்குப் பார்வை பார்க்க வேண்டுவோர் கூட அண்ணன்களிடம் அனுமதி பெற்றுத்தான் அழைத்துப் போவார்கள். இந்த நடைமுறைகளெல்லாம் கிட்டத்தட்ட இன்னும் அப்படியே வழக்கத்திலிருந்து வரும் நிலையில், அதையெல்லாம் மீறிக் கணபதியால் தன் மகளை ஆசை பட்ட படிப்பைப் படிக்க வைக்க முடியுமென்ற நம்பிக்கை எப்படி வரும் எனக்கு!

விட்டத்திலிருந்த சிலந்திவலையொன்றில் சிக்கிய சிறுபூச்சியொன்று சத்தமேயில்லாமல் வெகுநேரமாய்த் தன்னை அங்கிருந்து விடுவித்துக் கொள்ளும் முயற்சியிலிருக்கிறது. சுவரோரமாயிரக்கும் பூச்சியைக் காணமுடிந்த அளவு, அருகில் அழுது கொண்டிருக்கும் பிரபாவதியின் அழுகுரலைக் கேட்க முடியவில்லை. போராடி அசைத்துக் கொண்டிருந்த கட்டைவிரல் கூட இப்போது அசைவதாக உணர முடியவில்லை. நாசியும் அடைத்துக்கொண்டதன் விளைவு, வாய்வழி நுழையும் சுவாசம், சுவற்றிலெறிந்த பந்தாய், தொண்டையைக் கடந்த மறுநொடி திரும்பியது. ஒட்டுமொத்த உடலில் இமையும் தொண்டைக் குழியும் தவிர மிச்ச நாடிகள் மொத்தமும் அடங்கிப் போயிருந்ததைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களை விலக்கிக் கொண்டு உள்நுழைந்த கணபதி, கைத்தாங்கலாய் அழைத்து வந்த கருத்த உருவத்தின் கலங்கிய கண்கள் என்னைப் பரிதாபமாய் அடையாளங் காணமுயன்றது

அண்ணன்கள் முகம்சிவக்க முறைப்பதைக் கண்டுகொள்ளாமல், அழுது கொண்டிருக்கும் மகள் பிரபாவதியை ஒரு கையிலும், சட்டையோ மேல் துண்டோ அணியாத நடுங்கும் உடலைத் தாங்கும் தாங்கு குச்சியுடன், பாதி உதிர்ந்தும் மீதி நரைத்தும், என்னைப் போன்ற பற்களில்லா வாயை மூட முயன்று தோற்று, முகத்திலும் மார்பிலும் தழும்புகளோடும் கோட்டை வீட்டு நடுபத்திவரை வந்து நிற்கும் தெக்கஞ்சேரியைச் சேர்ந்த எனது காதலன் சித்தனின் தோளில் ஒரு கையுமாய், நான் அண்ணாந்து பார்க்குமளவு உயர்ந்து நிற்கும் என் பிள்ளையைப் பெரும் நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் பார்த்தபடி கண்களை மூடினேன்.

********

rajeshrsafety@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. மரணப்படுக்கை
    மனித வாழ்வு உணர்வுகளாலும் உறவுகளாலும் பின்னப்பட்ட இழைகளின் சேர்மானம். வாழ்வுதோறும் ஏதோ ஓர் இழை யாரொருவர் வாழ்விலும் அறுப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கலாம். இழைகளைச் சீர்ப்படுத்தாத வரையில், வாழ்வில் மோட்சமில்லை. இதைதான் கதையின் மையப்புள்ளி, மூதாட்டி பார்வதியின் வாயிலாக, அழகிய கதைமொழியிலும், இயல்பான நாட்டார் பேசுமொழியிலும் அங்குல அங்குலமாய் நகர்த்தியுள்ளார் ராஜேஷ் ராதாகிருஷ்ணன். குளத்து அடியாழத்தில் பாசிகள் அடர்ந்து அமிழ்ந்திருக்கும் பாறைக்கல்லாய் குற்றவுணர்வு, மரணிக்கும் தருணத்திலும் ஆன்மாவையைப் பிரியவொட்டாது அழுத்தியிருக்கும் எனும் நிதர்சனத்தை அப்பட்டமாய் தீட்டியிருக்கிறார். கதையின் களம் பெண்ணடிமை மற்றும் தீரா குற்ற உணர்வின் வெளிப்பாடாய் இருந்தாலும், கதையின் முதல்பாகம், கதையின் கருவைக் காட்டாது, பார்வதி மற்றும் நாகுவின் மரணம் அறியும் வித்தகத்தை சுவைப்படவும் புதியதாகவும் சொல்லியுள்ளது. வாசகன் புதிய அனுபவத்தைப் பெறும் தருவாயில், அவனுக்கான வெளியைக் கண்டறியும் கணங்களில், கதை இரண்டாம் கட்டத்திற்குத் தடம் மாறுகிறது. இதை இரு சிறுகதைகளை ஓர்மையுடன் எழுதியிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எழுத்தாளர் கையாளும் மொழி அபாரம், மிக சூட்சுமமாக விஷயத்தை அணுகியுள்ளார். வாழ்த்துகள் ராஜேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button