இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

மருங்கிற் புக்கலரே – பானுமதி ந

சிறுகதை | வாசகசாலை

அருண் பார்த்திருந்த வாடகை வீடு சற்று அமைதியான நகர்ப்புறத்தில் இருந்தது. அங்கிருந்தும், நகரிலிருந்தும் அவர்கள் பணி செய்யும் இடம் சம தூரத்தில் இருப்பதாகச் சொன்னான். மணிமேகலைக்கு அதில் பெரிதாக ஒரு கருத்தில்லை. எப்படியும், அவர்கள் அலுவலக ஊர்தி இந்த ஊரையும் தாண்டி பத்து கி.மீட்டர்கள் செல்கிறது. எனவே, நகர அவலங்களை இங்கே குறைவாக எதிர்பார்க்கலாம் என்பது ஒன்றே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் அங்கே வரும் போது இருள் கவியத் தொடங்கிவிட்டது. இரவிற்கே உரிய நிறம், வாசம் மனதை நிறைத்தது. அவள் ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டே அவனைப் பார்த்தாள். அவன் கவனம் வேறெதிலோ இருந்தது. இதை, இந்த இரண்டும் கெட்டான் பொழுதை நிச்சயமாக நாளை வரைய வேண்டும். ஒளியில் விளையாடி, ஈய நிறக்கலவையில் இருளைக் கொண்டு வந்து விடலாம், ஆனால், வாசம்? அதை எப்படி?

ஆஹா, குருக்கத்தி பூவின் வாசம் காற்றில் பரவுகிறது. அந்தக் கொடியை மலரோடும், சற்றுத் தள்ளி நாசிகளைக் காட்டியும் மணத்தைக் கொண்டு வந்து ஓவியத்தை வரைய வேண்டும். அவளுக்கு அப்போதே அருணை அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அவன் மும்முரமாக தன் பொருட்களைத் தன் அறையில் அடுக்கிக் கொண்டிருந்தான். எல்லாவற்றிற்கும் பரபரப்பு, எதையோ பிடிக்கப் போகும் அவசரம். அவன் எதனாலும் ஈர்க்கப்படுவதில்லை. ஒரு நாள் அவள் ஒரு தூக்கணாங்குருவிக் கூட்டை சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு அவள் குழந்தையைப் போல் நடந்து கொள்வதாகப் பட்டது. அது அவன் நண்பனின் பண்ணைத் தோட்டம். அவர்களின் குடும்பமும் வந்திருந்தார்கள். அங்குதான் கேட்பாரற்ற ஒரு மூலையில் அடர்ந்திருந்த மரத்தின் அடியில் அந்தக் கூடு விழுந்திருந்தது. முதலில் பதறிப் போனாள். அதில் முட்டைகளோ, குஞ்சுகளோ இல்லை. பயனற்றவை என்று வீசப்பட்ட குச்சிகள், குப்பைகள், தழைகள் கொண்டு என்ன ஒரு கட்டிடம்! எந்தவொரு அறைப்பிரிவும் தேவையற்றதாக இல்லை. உள் நுழைய, உணவுண்ண, ஊட்ட, கூடிக் களிக்க, முட்டையைப் பாதுகாக்க என்று அற்புதம். அருணின் நண்பனும், மனைவியும் அவளது ஆச்சர்யங்களைக் கேலியாகப் பரிகசித்தார்கள். அவள் அந்தக் கூட்டைத் தான் எடுத்துச் செல்ல விரும்பியதும், ‘செலவில்லாத பெண்டாட்டிடா உனக்கு’ என்று சிரித்தாள் அந்தப் பெண். மணிமேகலை வாயைத் திறக்கும் முன்னரே, அருண் அவசரமாக் கிளம்பி விட்டான்.

“ஏன், அவருக்குத் தெரியாதா?”

“அவனுக்கு மட்டும் தெரியும். எல்லாத்தையும், எல்லாரிடமும் சொல்ல வேண்டாம்.”

அருண் அப்படித்தான். மேகலைக்கு இப்போதே அந்தக் குருக்கத்திக் கொடியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவள் மாடிப்படியில் இறங்கத் தொடங்குகையில், அருண் அறையிலிருந்தே குரல் கொடுத்தான்.

“இப்ப போகாதே, காலைல பாத்துக்கலாம்”

“சீக்ரமா வந்துட்றேன்.”

“புது இடம், இருட்டு. ஓனர் தோட்ட வெளக்கெல்லாம் அணச்சுட்டாரு.’”

“செல் ஃப்ளாஷ் இருக்கே”

“உன்ன மட்டுமே நெனக்காத. அவங்க யாரோ என்னவோன்னு பயப்பட மாட்டாங்களா?”

அவள் அதற்கு மேல் விவாதிக்கவில்லை. புது இடம்! அவனை நான் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை? ஏன் தடுக்கிறான்? ஓனர் கேட்டால் அவள் பதில் சொல்லப் போகிறாள், இவனுக்கு என்ன போயிற்று? அவள் தன் அறைக்குத் திரும்பி பெட்டிகளைப் பிரித்து பொருட்களை அடுக்க ஆரம்பித்தாள்.

அருண் தன் வேலைகளை முடித்து, அறையைச் சுத்தம் செய்து, குளித்துவிட்டு வந்தாகி விட்டது. மேகலையின் அறை ஒரே களேபரம். அவள் கைகளில் ஒரு ஓவியம் இருந்தது- அதில் நீலக்கடல் பெருவெளி, அதை முத்தமிடும் தொடு வானம் சற்று வெளிர் நீலத்தில். கரு வண்ணம் தூக்கலாகத் தெரியும் ஒற்றைப் படகு, அதன் துடுப்புகள் செந்நிறத்தில், சங்கு வளையல் அணிந்த ஒரு கரம் மட்டும், அந்தப் பெண்ணின் பார்வை அந்தக் கடலின் தொலைவில், அதன் வசீகரத்தில், அதன் பேரிருப்பில் ஆழ்ந்துள்ளதைப் போன்று வானிலிருந்து அவள் விழிகள் கீழ் நோக்கிக் கொண்டிருக்கின்றன.

அருண் பலமுறை கேலி செய்த ஓவியம் அது. அவன் முழுப் பெண்ணையும் அந்தப் படகுக்குள் எதிர் பார்க்கிறான். அவன் இதை தர்க்க அபத்தம் என்றே சொன்னான். உலகப் பார்வையை, பரந்து விரிந்த ஒன்றை, எல்லைகளுக்குள் அடங்காத ஒன்றை, அந்தப் படகோட்டி கொண்டிருக்கிறாள் என்பதெல்லாம் அவனுக்குப் புரியவேயில்லை.

“சரி, ட்ரான்சுக்கு போயாச்சா? உனக்குப் பசிக்கலையா? நா டிஃபன் வாங்கிண்டு வரேன், என்ன வேணும் சொல்லு.’”

“எதுவும் சரி. காசு இப்ப வேணுமா?’”

“இல்ல, வந்து வாங்கிக்கறேன்”

அருணோடு வாழ வந்தது சரிதானா? அவன் ஏன் இவ்வளவு தொலைவில் வீடு பார்த்திருக்கிறான்? அலுவலகம் சமதொலைவில் இருக்கலாம், ஆனால், மற்றவை? அவன் கணவனைப் போல நடந்து கொள்ளப் பார்க்கிறானா? ஓனரிடம் என்ன சொல்லியிருக்கிறானோ? என் வழி, உன் வழி தனித்தனி என்று பேசியதெல்லாம் மறந்து விட்டதோ? ஆண் என்னும் எண்ணம், சமுதாயம் என்னும் சிந்தனை, கௌரவம் என்ற மனபோதை, எனக்கே எனக்கென்ற பிடிமானம் எது அவனைப் பிடித்து ஆட்டுகிறது?

எதுவாக இருந்தால் உனக்கென்ன என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். யாரும் யாரையும் மாற்ற முயற்சிக்கக் கூடாதென்றுதானே இந்தக் கூட்டு வாழ்க்கை. முடிகிறவரை சேர்ந்திருப்பது, என்பதுதானே அவர்களைப் பிணைத்திருக்கிறது. அருண் அதை மீறினால், அவள் அவனை விட்டு விலகுவாள், அதுதான் சரியும் கூட. அவனுக்குமே அந்த உரிமை உண்டே? அப்படியிருக்கையில் அருணின் நடத்தையைப் பற்றி அவளுக்குக் கவலை ஏன்? ஒரு வகையில் அவனை அவள் இறுக்கப் பார்க்கிறாள் என்பதுதானே இதற்கு அர்த்தம்? தன்னைப் போலவே அவனும் இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்? ஏமாற்றப்பட்டோமோ என்ற சுய இரக்கம் ஏன் வருகிறது? அருணும் கூட இப்படி நினைக்கலாமில்லையா?

இது சமாதானமா, சமாளிப்பா என்ற திடுக்கிடும் கேள்வி அவளுக்குள்ளே எழுந்த போது அவள் விடையறியாது தவித்தாள்.

ஐந்தாறு தினங்களுக்குப் பிறகு வீட்டு சொந்தக்காரர் தன் மனைவியுடன் வந்தார். அவர் நடுத்தர வயதுக்காரர்; மெல்லிய ப்ரேமுடனான மூக்குக் கண்ணாடி அணிந்து எட்டு முழ வேட்டி கட்டி, சந்தனக் கலரில் ஜிப்பா அணிந்திருந்தார். அவர் மனைவிக்கும் கிட்டத்தட்ட அவரின் வயதிருக்கும். அழுத்தமான கத்திரிப்பூ நிறத்தில் சரிகை வேலைப்பாடுடன் கூடிய பட்டுப் புடவையும். அதற்கேற்றாற் போல் ப்ளவுசும், மூன்று மூன்று வளையல்களும், பெரிய தொங்கு சங்கிலியும், கழுத்தைப் பிடிக்கும் அட்டிகையும், பளீரிடும் தோடுகளும், இரு மோதிரங்களும், காலில் கொலுசும், மெட்டியுமாக வந்திருந்தார்.

“நீ புடவையே கட்ட மாட்டியா, எப்பப் பார்த்தாலும் ஜீன்ஸ்லதான் இருக்க.”

அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள்.

“புடவ கட்டிண்டா ஐ.டில சம்பளத்தைக் கொறைச்சுடுவான்னு உங்களுக்கெல்லாம் பயம்” என்றாள் அந்த அம்மா.

“அம்மா, ட்ரெஸ் அவங்கவங்க விருப்பம்.” தன்னுள் ஏறும் சினத்தை அடக்கியவளாக அவள் சொன்னாள்.

“அழகா இருக்க, உன்ன விட பத்து வயசு கூட இருக்கும் எனக்கு, வீட்லயாவது புடவ கட்டிக்கணும். அது நம்ம கலாசாரம்”

“அம்மா, நாம வேற ஏதாவது பேசலாமா?”

அந்த அம்மாளின் முகம் விழுந்து போயிற்று. அங்கிருந்த குட்டி மேஜையின் மேல் அவர் கொண்டு வந்திருந்த பொங்கல், வடை, பூ, பழம் எல்லாவற்றையும் வைத்துவிட்டு விருட்டென்று இறங்கிப் போனார்.

அருண் தலையைப் பிடித்துக் கொண்டான். “அப்ப வரேன் சார், வசதியா இருக்கான்னு கேட்டுட்டுப் போலாம்னு வந்தோம்.” என்றவர் கீழிருந்து வந்த மனைவியின் குரலுக்கு பதில் சொல்லிக் கொண்டே ஓடினார்.

அவன் முறைத்தான்; மேகலை அடக்க மாட்டாமல் சிரித்தாள். அருணுக்கு அவளை ஏதாவது சொல்லி ஏச வேண்டும் போலிருந்தது; ஆனால், என்ன செய்வது? “நா சீக்ரமா ஆஃபிஸ் போகணும்” என்று சொல்லிக் கொண்டே இறங்கிப் போனான்.

மணிமேகலை இன்று அலுவலகம் போகப்போவதில்லை. அவளுக்குத் தன் மீதே கோபம் வந்தது. ஏன் ஒரு ஆணுடன் சேர்ந்திருக்கிறேன்? உணவு, உடை, உறக்கம், இருப்பிடம் போல செக்ஸ் தேவையாக இருக்கிறதே? அது தன் வசத்தில் இருக்கவில்லையே, அதற்கு காவும் கொடுக்க வேண்டியிருக்கிறதே? செந்தீ நாக்குகளால் அது வசீகரமாக தொட்டுப் பார்க்கச் சொல்கிறதே, அமுதம் என்று மயக்கி விஷக் கிணற்றில் விழச் செய்கிறதே. அவளுக்கு வேலை, வருமானம், ஓவியம் என்னும் கலை, இளமை, எல்லாம் இருக்கிறது. அவள் நினைத்தால் தனியாக வாழலாம். அவள் அப்படி இருந்து பார்த்தவள்தானே. அது முடியவில்லையே. நீல கண்டனின் கழுத்தில் தங்கிய விஷமாய், அது துப்புவதற்குமில்லை, விழுங்குவதற்குமில்லை என்ற பிறகுதானே அருணுடன் வாசம்.

ஐயோ மணி, உன் வாழ்க்கைக்கான ஒப்புதலை நீ வெளியே சமுதாயத்தில் தேடுகிறாய். அப்படியென்றால் நீ அனைத்திலுமே தோற்று விட்டாய், உன்னையே உனக்கு மறைத்துக் கொண்டு விட்டாய். அமைதியாக இரு, உன்னை நீ ஏற்றுக் கொள். அதில் வேஷங்கள் இல்லை.

மாதவி லதாக் கொடியிலிருந்து வாசனை வந்தது. அவள் கீழிறங்கிச் சென்று அந்தப் பூக்கிளையை வளைக்கையில் “இந்தாம்மா, பூவெல்லாம் பறிக்காதே” என்று ஓனர் அம்மா சொன்னார். அவள் கொடியை விட்டு விலகி நின்று காற்றை உள்ளிழுத்தாள்.

“ஹாய், மணி, நீ சொல்லாம இங்க வந்துட்டல்ல, நான் எப்படி தேடிப் பிடிச்சேன் பாத்தியா?”

“ரேகா, டியர், எப்படி இருக்க, எங்க இருக்க, வேல இருக்கா வழக்கம் போல போயிடுச்சா?”

“முதல்ல சோறு போட்றீ, அப்றம் கேளு.’

“வாடி வெளில போயி சாப்பிடலாம்.”

ரேகாவிற்கு வேலை இல்லை இப்போது. பரணி விட்டு விட்டுப் போய் விட்டான். வீட்டிற்குக் கொடுத்திருந்த அட்வான்சில், ரேகாவின் பங்கையும் அவன் பெற்றுக் கொண்டு போய்விட்டான். அவள் வீட்டையும் காலி செய்தாக வேண்டியதாயிற்று. வேலை கிடைக்கும் வரை அவள் மணிமேகலையுடன் தங்கியிருப்பதற்காக வந்திருக்கிறாள்.

“மணி, பரணி இப்படி செய்வான்னு எதிர்பாக்கல. சரி, என்ன போச்சு போன்னு இருக்கலாம்னா, எங்க இருக்கறது, எப்படிச் சாப்ட்றது, ஒரு வேளதான் ஒரு மாசமா சாப்ட்றேன், ஆனா, பேங்க்ல பணம் கரஞ்சுண்டே வரது. எனக்கு உன்ன விட்டா ஆருமில்ல”

“நீ என்னோட இருக்கலாம்டி, ஆனா, அந்த அம்மா என்ன சொல்லுவாங்களோ, அருண் எப்படி எடுத்துப்பானோ? சரி, ஒரு கை பாக்க வேண்டியதுதான்.”

அருணுக்கு ரேகாவைப் பார்த்ததும் வியப்பும், பயமும் ஒருங்கே எழுந்தன. ‘இவள் எதற்கு இங்கு வந்திருக்கிறாள்?’ ரேகா, அவன் கையைப் பற்றி வலுவாகக் குலுக்கி இலேசாக அணைத்துக் கொண்ட போது, ‘ஐயோ, கீழிருந்து யாரும் வராதிருக்க வேண்டுமே’ என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. இவளை யார் என்று அவர்களுக்குச் சொல்வது, எத்தனை நாட்கள் இருக்கப் போகிறாள்… கேள்விகள்… கேள்விகள்

“எப்படி இருக்க ரேகா?”

“வேலயில்லாம இருக்கேன்; அப்ள செஞ்சுண்டிருக்கேன், ஒரு மாசத்துக்குள்ள கிடைக்கும்னு நம்பறேன்.”

“ஒரு மாசமா? அது வரைக்கும் என்ன செய்வ, எங்க தங்குவ?”

“அருண், இங்கதான் இருக்க முடியும், அது உனக்கும் தெரியும்.”

“அது சரி. ஆனா, ஓனருக்கு என்ன சொல்றது. செலவ எப்படி சமாளிக்கறது?”

“நான் பாத்துக்கறேன் ரண்டையுமே. இவ என் ஃப்ரென்ட், வேல தேடி வந்திருக்கா, கிடைக்கற வரைக்கும் இங்கதான் இருப்பான்னு சொல்லிட்றேன்.”

“கிழிஞ்சது போ. அவங்க தண்ணீக்கட்டணத்துலேந்து எல்லாத்தையும் ஏத்துவாங்க. என் ரூமுல இடமில்ல, பாத்துக்க. உன் ரூம நீ வச்சிருக்கற அழகுக்கு அவளுக்கு நிக்கக் கூட இடமிருக்காது.”

“கூல், கூல் அருண். நான் ரூமை சரி பண்ணிடுவேன். அதோட குளிக்கவும், தூங்கவும் மட்டும்தானே இங்க இருப்பேன். மத்தபடி வேலைக்காக கம்பெனி கம்பெனியாப் போறதுக்குத்தானே நேரம் இருக்கும்.” என்றாள் ரேகா.

ஒரு ஞாயிறன்று ஓனர் மாடியேறி வந்தார். இரு பெண்களையும் கண்களால், அள்ளிக் கொண்டே, “இது யாரு, புதுப் பொண்ணு” என்றார்.

“என் ஃப்ரென்ட் சார். வேல தேடி வந்திருக்கா.”

“அப்படியாம்மா சீக்ரமா வேல கிடைக்கட்டும். நாங்கூட அருணோட மச்சினியோன்னு நெனச்சேன்.”

“மனைவின்னு உறவிருந்தாத்தானே சார் மச்சினின்னு உறவு வரும்”

அவர் அதிர்ந்தார். “உன்ன சேத்துண்டிருக்காரா?”

“இல்ல, நாங்க ஒத்தர ஒத்தர் சேத்துண்டிருக்கோம்.”

அவர் நாசி துடித்தது. “என்ன இது அருண், மணிமேகலை உங்க ஒய்ஃப் இல்லையா? ஆறு மாசம் முன்னாடி கல்யாணம் நடந்ததுன்னீங்க, அவங்க என்னடான்னா, சேந்து வாழறதாச் சொல்றாங்க. இதுல இன்னொரு பொண்ணு வேற! இப்படியாப்பட்ட ஃபேமிலி வேணாம்ப்பா. ஆனா, இப்ப காலி பண்ணச் சொன்னா, என் ஒய்ஃபுக்கு காரணம் சொல்லியாகணும். உண்ம தெரிஞ்சுதுன்னா பேயாட்டம் ஆடுவா. நீங்க ஒரு பொய்யைச் சொல்லி, அதான் சுலபமா உங்களுக்கு வருமே, காலி பண்ணிட்டுப் போயிடுங்க ஒரு மாசத்துல. அது வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசிங்க.”

“உன்ன மாறி ஒரு முட்டாளப் பாத்ததில்ல. உன் ஸ்டேடஸ்ல என்ன பெரும உனக்கு? அத அவர்கிட்ட சொல்றதால நாம சராசரியில்லன்னு நிரூபிக்கப் பாத்தியா? அதுக்கு உனக்கு மெடல் கொடுக்கப் போறாங்களா? சட்..உன்னோட வாழ வந்தேனே.. என்ன, என்ன கஷ்டங்கள் இன்னும் தரப் போறியோ?”

மணிமேகலை மௌனமாக இருந்தாள். ஒரு மாதம் இன்னமும் இருக்கிறதே, பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவளுக்கு.

அருண் அவளுடன் பேசுவதில்லை. உடல் தவித்தாலும், உள்ளம் இணங்கவில்லை. ஒரு நாள் அருண் அரைத்தூக்கத்தில் இருந்த போது மணிமேகலையின் அறையிலிருந்து ஓசைகள் கேட்டன. தான் எழுந்து நடந்து அங்கே போவதாக ஒரு தோற்ற மயக்கம், இல்லை, உண்மையில்  போவதாகத்தான் தோன்றியது. சிந்திய குறை வெளிச்சத்தில், நாகங்கள் என இரு உடல்கள் பிணைந்திருப்பது கற்பனையா, உண்மையா? இல்லை, அப்படியெல்லாமில்லை; சின்ன அறை. சிறிய கட்டில். இருவர் படுத்திருந்தால் அப்படித்தான் தோன்றும். ‘முட்டாள், அருண், இது நல்ல காரணம். விட்டு விட்டுப் போ. நீ கனகாவிடமே போவதற்கு இதையே ஊதிப் பெரிதாக்கு.’ மனக்குரங்கு ஆர்ப்பரித்தது.

சுடச்சுட கேள்வி கேட்டு விட்டு, வெளியேறி கனகாவுடன் வேறிடத்தில் வாழ வேண்டியதுதான். இவள் எப்படியோ போகட்டும்.

“அம்மா, குருக்கத்திப் பூவே, உன் வாசனைல மயங்கி மயங்கி சுற்றிச்சுற்றி வந்தேனே! உனக்கு ஒண்ணு தெரியுமா- இந்தக் குருக்கத்தி இருக்கே, அதோட விதையில இரண்டு விதையிலை இருக்கும். நீ…ச்சே..”

மணிமேகலை அமைதியாகச் சொன்னாள் “உனக்கு இயற்கை என்னிக்குமே புரியாது; அப்படியே புரிஞ்சாலும் நீ தப்பாத்தான் புரிஞ்சுப்பே.”

-bnataraj58@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button