இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

கரடியும் எருமையும் – இ.லீ.யுவேந்திரன்

சிறுகதை | வாசகசாலை

இங்கு சந்தை என்றால் பலருக்கு நினைவில் வருவது, சத்தம், இரைச்சல், மணம், விலை, பொருள். சிலர் தேவையானதை வாங்கிச் செல்வர்; பலர் வெறுமனே வேடிக்கை பார்க்க வந்து, கையில் இருப்பதை வேதனையுடன் இழப்பர். இப்படியொரு இடத்தில்தான் எனது வாழ்வாதாரம். மாலை மணி 4 தொடங்கி நள்ளிரவு மணி 1 வரை விடாமல் வியாபாரம். சில நாட்களில் சில இடங்களில் வருவாய் கூரையைப் பிளந்து கொண்டு கொட்டும் ஆனால், பல நாள் பல இடங்களில் சில்லறைகள்தான் மிஞ்சும். இரவுச் சந்தையில் நான் விற்றுக் கொண்டிருந்த கரடி, எருது மற்றும் இதர பொம்மைகளை பார்க்கும் போதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் நின்று விளையாடிய களம் நினைவுக்கு வரும்.

          அப்போது சந்தையில்தான் இருந்தேன். அதும் வேறு சந்தை. பங்குச்சந்தை. அங்கு எனக்கென ஓர் இடத்தை உருவாக்கியிருந்தேன். விலைகளை கணித்து நிர்ணயம் செய்து இலாபம் ஈட்டுவதெல்லாம் எனக்கு கை வந்த கலை. என்னை நாடி வந்த வாடிக்கையாளர் பட்டாளத்தை வைத்து ஒரு சாம்ராஜ்ஜியத்தையே கட்டி எழுப்பியிருந்தேன்.

          என் கணிப்புகளின் துல்லியம் பற்றியே என்னிடம் அதிகம் கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் என் பதில் ஒன்றுதான் வாசிப்பு. தினமும் “தி எட்ச்”, “ஃபோர்ப்ஸ்” போன்ற இதழ்களை வாசிப்பது என் பழக்கம் அதுதான் என் வழக்கம். தொழிலில் கொடி கட்டிப் பறந்த எனக்கு என் பலவீனம் எதுவென்று நன்கு தெரியும். அது எனக்கு மட்டும் தெரிந்தவரை எந்தச் சிக்கலும் இல்லை ஆனால், அது இன்னொருவனுக்கு தெரிந்த பின்தான் அது சிக்கலாக உருவெடுத்தது. என் பலவீனத்தை தன் பலமாக்கிக் கொண்டான் என் நண்பன் பரமா.

            சந்தையில் எருதுகளை வைத்து சிறப்பாக வருவாய் ஈட்டலாம். சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், சில்லறையாக விற்றாலும், மொத்தமாக வாங்கினாலும் இலாபம் உறுதி. ஆனால், கரடிகள் அப்படியல்ல. வாரன் பஃப்பேட், மைக்கல் புர்ரி, போன்ற ஒரு சிலரால் மட்டுமே கரடியுடன் விளையாடி விண்ணளவு உயர முடிந்தது. கரடிகளை எளிமையாக கையாள முடிந்ததால் இவர் போன்றோரை ஜாம்பவான் என்றாலும் மிகையாகாது. இதுதான் பங்குச் சந்தையின் போக்கு. இங்குள்ளவர்கள் எருதுகளையும் கரடிகளையும் அதனதன் இயல்பு உருவங்களில் பார்க்கமாட்டார்கள். இருண்டும் இந்தப் பங்குச்சந்தையின் வியாபார குறியீடுகள்.

          அனைத்து கதைகளை போல என் கதைக்கும் திருப்புமுனையாக அமைந்தது அந்த ஒரு நாள். அலுவலகத்தில் என்னைக் காண வந்தான் என் கல்லூரி நண்பன் பரமா. பொதுவாக பேசிக்கொண்டு இருக்கையில் பேச்சு குறிப்பாக வேலையை நோக்கி திரும்பியது.

“நான் கூட ஸ்டோக் கன்சல்டன்ஸிதான் பன்றேன்…. கேட்டுப் பாரு ஐயாவுக்கும் மார்க்கெட்ல பேரு இருக்கு…… அதான் ஒரு புது ஐடியா இருக்கு… நீயும் இங்கே பழம் தின்னு கொட்டை போட்டு இருக்கயே.. என்கூட பாட்னரா வரயான்னு கேட்டு பாக்கலாம்னு வந்தேன்… மத்த எல்லாத்தையும் விட நீதான் இந்தத் திட்டத்தை ரொம்ப சரியா புரிஞ்சிக்க கூடியவன். அதான் நேரா உன்னையே பாக்க வந்துட்டேன்….” என்று புரிந்தும் புரியாதபடி இழுத்துக் கொண்டிருந்தான்.

            மேலும் கேட்ட போது ஒரு வழியாக கூறினான். “நம்ப ஏன் ‘பேர் மார்க்கேட்ல’ பணம் பன்ன கூடாது”.

எனக்கு அது சரியாக வருமா எனத் தெரியவில்லை. பங்குச் சந்தையில் மிகவும் ஆபத்தான முயற்சி கரடியில் முதலீடு செய்வதுதான், அதாவது பங்குச் சந்தையின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி, அது வீழ்ச்சி அடையும் போது அதிலிருந்து இலாபம் ஈட்டுவது. இதற்கு பல யுக்திகள் உள்ளது. ஒரு சிலர் இதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். ஆனால், பொதுவாக இந்த முதலீடு அனைத்தும் ஆய்வுக்காகவும், தரவுகளுக்காகவும் நீண்ட காலங்கள் எடுக்கும். எனவே கண்டிப்பாக மறுத்து விட்டேன்.

          பரமா விடாப்பிடியாக என்னை மூளைச்சலவை செய்ய முயன்றான். “நம்ப எல்லாம் இதுல எவ்வளவு பாத்து இருப்போம், வாரன் பஃப்பேட் மாதிரி ஆக வேண்டுமா இல்லையா?”

வாரன் பஃப்பேட்டை என்னுடைய மானசீக குருவாக ஏற்றுக் கொண்டதை நன்கு அறிந்த அவன், அவருடைய சில கூற்றுகளை கூறி என்னை வழிக்கு வர வைத்தான். வாரன் பஃப்பேட்டாக நானும் வரவேண்டும்தானே!

          பரமாவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். ஆரம்பத்தில் சிறியதாக முதலீடுகளைச் செய்து கணிசமான இலாபங்கள் வந்தன. ஆனால், மெல்ல மெல்ல அந்தக் கரடி என் தலைக்கு மேல் ஏறி அமர்ந்ததை உணரவில்லை. தப்பான கணிப்புகளையும் கணக்குகளையும் சரி என நம்பி செந்த செலவிலமிருக்கும் பணத்தையெல்லாம் மீண்டும் மீண்டும் முதலீடுகள் செய்தேன். இம்முறை நான் என்னை நம்பியதைக் காட்டிலும், பரமாவை முழுமையாக நம்பி அவனின் கணிப்பிற்கு ஏற்ப அசைந்தேன்.

 அதற்கு பின் என் வாழ்வில் நடந்ததை அழிக்கவே நினைக்கிறேன். பெரும் தவறு, பறிபோனது பணம் என்றால் பரவாயில்லை; போனது வாடிக்கையாளர் என் மேல் வைத்த நம்பிக்கை, பரமா செய்திகள் ஏதும் இல்லாமல் மாயமானான். வாங்கிய கடன்களை என்னிடம் எஞ்சிய அனைத்தையும் விற்று கட்டி முடித்தேன். ஆனால், மலேசியாவில் பங்கு சந்தையில் வரும் வருவாய்க்கு வரி இல்லாததால், கடன்களை அடைத்த பிறகும் என்னிடம் ஒரு சில ஆயிரங்கள் இருந்தன. அதை வைத்து இப்போது இந்த இரவுச் சந்தையில் பொம்மைகளை விற்று வருகிறேன். இங்குள்ள கரடிகள் கரடிகளாகவும் எருதுகள் எருதுகளாகவும் மட்டுமே இருக்கின்றன.

           இப்போது இப்படி இருக்கிறேன் ஆனால், இப்படியே இருக்கப் போவதில்லை, ஒரு நாள் மீண்டும் அந்தப் பங்குச்சந்தைக்கு வருவேன் என்ற வேட்கையுடன் என்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

          மீண்டும் இந்தக் கரடிகளையும் எருதுகளையும் வியாபார குறியீடுகளாக மாற்றி என் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும்.

          அதுக்காக நீங்கதான் இந்த கரடி பொம்மையை வாங்கி எனக்கு உதவி செய்யனும்…

-elyuvengta@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button