இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

கழுத்தைக் கவ்வும் கடவாய் பற்கள் – கிருஷ்ணப்ரசாத்

சிறுகதை | வாசகசாலை

அவன் அவளைப் பற்றிச் சொல்லும்போது எப்படியெல்லாம் வளைகிறான்?

“பிஸி” என சொல்வதற்கு நெடுங்காலமாக எனக்கொரு பந்தா காம்ப்ளக்ஸ் இருந்து வந்திருக்கிறது. எனக்கு நிறைய வேலைப்பளு இருந்தாலும் கூட யாரிடமும், “பிஸி” என்று எனக்குச் சொல்ல வராது. ஏதாவது ஃபோபியாவாக இருக்கலாம். அப்படிச் சொல்வது ஒரு வெட்டி பகட்டுத்தனம் என்று மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

யாருடைய மனதையும் யாரும் உணர முடியாது. புரிந்து கொள்ளலாம். மேக்னா என்னை அப்படிப் புரிந்து கொள்ள வேண்டும். எனது கண்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளது கழுத்தை பார்த்துக் கொண்டு இருந்தேன். பெசன்ட் நகர் கடற்கரையில் அந்திவானம் ஆறுமணியளவில். 

மனித நாகரீகம் பல காட்டுமிராண்டி அறியா மானுட பைத்தியக்காரத் தனங்களை அடியோடு வேரறுத்திருக்கிறது. பலநூறு வருடங்களாக தனித்துவம் தேடும் மனிதம் ஏன் இன்னும் தலைமையை விட்டு வைத்திருக்கிறது? 

தலைமைக்கு ஏங்கும் பண்பும் தலைவனை எதிர்பார்க்கும் மனநிலையயும் மனித சுதந்திரத்திற்கு எதிரானது. மனித விடுதலையின் கழுத்தை நெறிக்கும் மூடத்தனம். ஒரு தலைவன் என்றுமே மக்கள் விடுதலையைப் பெற்றுத் தரமாட்டான். எவ்வளவு நூறு வருடங்களுக்குப் பின்னர் இந்த விழிப்புணர்வு தனது முழுமையை பெறப் போகிறது?

கமலக்கண்ணனிடம் இதையெல்லாம் சொல்லிய போது அவன் பார்வை வேறொரு பக்கம் திசைதிரும்பியது. இது டீக்கடையில். கழுத்தில் ஒட்டு ப்ளாஸ்த்திரி போட்டிருந்தான். 

“உண்மை அது கெடயாது” 

என்னுடைய ஃபோபியா வாதத்திற்கு எதிர்வாதம் வைத்தான். முன்முடிவிற்கு பேர்போன ஆள் என்பதால் வாதம் வளர்ந்துகொண்டே போகுமென அவன் ஆரம்பித்த தலைப்பிற்கே திரும்ப வந்தேன். 

“பொண்ணு கிடைக்கணும்னா ஒன்னு அழகு இருக்கணும், அறிவிருக்கணும், திறமை இருக்கணும், குணம் இருக்கணும் இல்லனா பணமாவாது இருக்கணும். எதுவுமே இல்லன்னா லவ் பண்ற திறமையாவது இருக்கணும். எதுவுமே இல்லாத தத்தி நீ” 

எனது கதையைக் கேட்காமல் கவனத்தை திசை மாற்றிய கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு அவனை தனிப்பட்ட தாக்குதல் செய்து கொண்டிருந்தேன்.

“புரியல”

எந்த விதமான துணைதேடும் படலமும் வாழ்வில் முயற்சிக்காமல் பெற்றோர்களின் அரவணைப்பில் வேலை, புதுவீடு, ஐம்பதாயிரம் ருபாய் ஹானர் ஃபோன், எக்கோஸ்போர்ட் கார் எல்லாம் ரெடிகேஷ் போட்டு வாங்கிக்கொண்டு துறவி தத்துவம் பேசிக்கொண்டு இருப்பவனுக்கு ஏகப்பட்ட தோல்விகள். எதுவுமே உருப்படியான காதல் இல்லை. எல்லாமே இவனுடைய வெட்கங்கெட்ட நடத்தையால் நேர்ந்தது. 

“மேக்னாவும் ஈவ்லினும் எப்படி பழக்கம்?”

போனவாரம்தான் அவர்கள் இருவரையும் டெண்டர் கோக்கனட் ரெஸ்டாரண்ட்டில் பார்த்தேன். “

“அவளை ஏற்கனவே தெரியுமா?” – என மேக்னாவிடம் கமல் கேட்டதாக சொன்னான். 

“இன்ஸ்ட்டா ஃப்ரெண்ட்ஸ்” என்றாளாம் மேக்னா. 

புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், நானும் மேக்னாவும் கமிட் செய்து இப்போது ஒரு மாதம்தான் ஆகிறது. சரியாகச் சொன்னால் ஒரு மாதம் கூட முடியவில்லை. 

‘எங்கிருந்து எனது வாழ்க்கைக்குள் திடீரென இப்போ ஈவ்லின் வந்தாள்?’ 

மனது அடித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே பள்ளிக்கூட நாட்களில் இரண்டு வருடம் ஈவ்லினுடன் ஒரு பதின்பருவ காதல் இருந்தது. 

‘அவளிடம் சொல்லியிருக்கலாமே? ஏன் மறைத்தோம்? இதெல்லாம் ஒரு விஷயமாகிவிடுமா? அவள் புரிந்துகொண்டால் அவள் நமக்கான மேக்னா. இல்லையென்றால் போய்ட்டுப் போறா! நமக்கானவ இல்லனு நெனச்சுக்கலாம்’

“இரண்டு பேரையும் ஒரே இடத்துல பாத்த உடனே ஒரு பாட்டு வருமே? டக்குனு ஞாபகம்… ஒன்னு நினைக்கும் போது வந்து சிக்காது…”

“கடல் உப்பால உருவாச்சு… உடல் தப்பால உருவாச்சு” 

கமல். அவனுடைய வரலாறு, ஜாதகம், கோள்கள் அத்தனையும் எனக்குத் தெரியும். அவனுடைய செயல்கள் மெச்சிக் கொள்ளும்படி இருந்திருந்தால் மேற்சொன்ன வார்த்தையை என்னால் சிரித்துக் கொண்டாடி மகிழ்ந்திருக்க முடியும். ஆனால், என்னுடைய சிலந்தி வலையில் அவன் மாட்டிக்கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் ஈவ்லினுடனான அவனுடைய நட்பு. கழுத்தில் இவ்வளவு பெரிய கட்டுக்கு அவசியமேயில்லை. காணாமல் போயிருப்பான் இந்நேரம். என்னால் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அது மட்டும் நிச்சயம். 

“ஈவ்லினை நினச்சா எனக்கு சிலசமயம் பயமாவும் ஒருநேரத்துக்கு வருத்தமாவும் இருக்கு” 

ஈவ்லினைப் பற்றி ஒரு முக்கியமான புறணியை பேசுவதற்காகத்தான் அன்று டீ கடைக்கு அவனை வரச்சொன்னேன். இதுபோன்ற மிகமிகத் துல்லியமான தேவை எனக்கு இருந்தால் மட்டுமே இவனை நான் சந்திப்பேன். மற்றபடி நான் வாழ்வில் என்றைக்குமே முகத்தில் முழிக்கவே கூடாது என்று நினைக்கும் மனிதர்களில் இவனும் ஒருவன். கமலக்கண்ணன். கல்லூரி நண்பன். வாழ்வில் இருந்து தொலைந்துபோக வேண்டும் என்று தினமும் நான் வேண்டும் ஒரு உறவு. அத்துக்கொண்டு போகவேண்டும் என்று நினைக்கும் ஒரே உறவு. என்னுடைய முதுகை கவ்விக்கொண்டிருக்கும் வேதாளம். விடுகதை கேட்கும் திறனும் இல்லை. புறணி பேச தண்டத்திற்கு அலையுமொரு பேய். 

‘நமக்கான பதில்கள் நம்மிடமே தான் இருக்கின்றன’ – வாட்ஸாப்பில் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்காள் ஈவ்லின். என்னுடைய பள்ளிக்கூடத்தோழி. நல்லவள். கல்லூரியில் என்னைச் சந்திக்க வரும்போது கமலுடன் பழக்கம். நட்பாக ஆரம்பித்த உறவு, ஒரு தலை காதலாக மாறி, ஈவ்லின் என்னிடம் சொல்லி, கமலிடம் நான் பேசி, அதற்கு அவன் ஒரு நாடகமாடி, “இனி அவளை தொல்லை பண்ணமாட்டேன்” என என்னிடம் சத்தியம் செய்துகொடுத்து, பின்னர் இருவரும் சந்திக்காமல் இருந்து, பின்னர் பேசாமல் இருந்து, பின்னர் எனக்கு தெரியாமல் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவர்கள் என்னிடம் சொல்வதற்கு முன் நான் தெரிந்துகொண்டு, அவள் எது சொன்னாலும் நான் கேட்பேன். செய்துவிடுவேன். மாற்றுயோசனையோ தயக்கமோ எனக்கு இருந்ததில்லை. தெளிவான முடிவெடுக்கக்கூடிய பெண். தற்போதிந்த தத்தியுடன் அவள் சுற்றிக்கொண்டிருப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 

‘சரி அவளாச்சு.. அவள் தேர்வாச்சு. நம்ம என்ன செய்யமுடியும்?’ 

தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக லெமன் சோடாவை குடித்துமுடித்தேன். 

“இதே மாதிரி இன்னொன்னு கொண்டா ச்சேட்டா”

அவனை நினைத்தாலே எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. பத்து நாள் கழுவாத ப்ளாஸ்டிக் தண்ணி பாட்டிலில் இருந்து ஒரு மீன் தொட்டி நாற்றம் குடலை குமட்டுவதை விட பத்து இருபது மடங்கு. அப்படியொரு அருவருப்பான ஆள். 

வேலைப்பளு மன அழுத்தம் வேறு தலையை ஆட்கொண்டிருந்த நேரம். ஏதோ அந்த ஐந்து நிமிட டீக்கடை தான் மனதைப் பிசைந்து கொண்டிருக்கும் உணர்வை சமன்படுத்திவிடும். பள்ளிக்கூட காலங்களில் நான் அவளைக் காதலித்ததும் அவள் என்னை காதலித்ததும் உண்மைதான். ஆனால், அது எந்தளவிற்கு அழுத்தமான காதல் என்று எங்கள் இருவருக்கும் தெளிவில்லை. இரண்டு வருட காதலாக இருந்தாலும் பள்ளிக்கூடம் படிக்கும் போதே ஃபேர்வெல் சமயத்தில் இருவரும் பேசிப் பிரிந்துகொண்டோம். அதற்கு பிறகு நட்பாக எங்கள் உறவு தொடர்ந்தாலும் அவளால் என்னை நண்பனாக பார்க்கவோ பழகவோ முடியவில்லை என்று இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டாள். “இது என்னடா வம்பாப்போச்சு” என, “உங்கிட்ட எனக்கிருந்தது ஒரு க்ரஷ் தான். நம்ம பண்ணது லவ்வே கிடையாது. அது வயசுக் கோளாறு. இப்ப உன் மேல எனக்கு எதுவும் தோணல” என்று சொல்லிப் புரியவைத்தேன். “உனக்கு லவ் இல்லனா நா மட்டும் ஒன் சைடு லவ் பண்ணி என்ன ஆவப்போது? விடு” என்று சொல்லிவிட்டு பிரிந்தவள் மறுபடியும் கல்லூரி இரண்டாம் ஆண்டுதான் என்னைச் சந்திக்க வந்தாள். அப்போதுதான் இந்த வேலைக்காகாதவனை சந்தித்தாள்.

சந்தித்ததும் இருவருக்கும் நட்பு அரும்பியது. நியாயமாக நான் மகிழ்ந்திருக்க வேண்டும். ‘எப்படியோ சாவுங்கள்.. இது எங்கே போய் முடியப் போகிறது?’ என்று முன்முடிவுடன்தான் இருந்தேன். நினைத்த மாதிரியே இரண்டே மாதங்களில் என்னிடம் அவள் விஷயத்தைச் சொன்னாள். 

“அவனையா?” 

“ஏன் என்ன?”

“யோசிச்சுதான் பேசுறியா?” 

“ஒரு நாள் முன்னாடியே ப்ரொபோஸ் பண்ணிட்டான். நான்தான் யோசிக்க டைம் எடுத்துக்கிட்டேன். இன்னைக்கு ஓகே சொல்லிட்டேன். இப்ப உன்கிட்ட சொல்றேன்” 

“அதெல்லாம் சரிதான். எங்கிட்ட எதுக்கு சொல்ற” என்று கேட்டுவிட்டேன். கோபித்துக்கொண்டாள். இவர்கள் ஆடும் நாடகத்திற்கு எல்லாம் உணர்வு ரீதியான முதலீட்டை கொடுக்க வராது எனக்கு. ஃபோனை வைத்துவிட்டு, “சாவுங்க” என்று சபித்தேன். 

இருந்தாலும் எனக்கு ஈவ்லின் மேல் ஒரு வருத்தம் இருந்தது. அவள் எடுத்த முடிவுகளிலேயே மோசமான முடிவு என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். ‘நல்லா இருந்தா சரி. ஆனா, இந்த நாய் எப்படி நல்லா இருக்க வச்சிக்கும்’” என்று நினைத்து முடிக்குமுன் கமல் அடித்தான். விவால்டியின் வின்ட்டர் இசை. எடுக்கவில்லை.

‘ஒரு மாசம் தாங்காது இந்த வயசுக்கோளாறு. அவன் வேஸ்ட்டு. இந்த பொண்ண எப்படி அழிக்கிறானு மட்டும் பாக்கப்போறேன்’ 

மனசு கேட்காமல் அவளுக்கு ஃபோன் செய்து, “உண்மையாவே சொல்லிட்டியா? நல்லா யோசிச்சியா?” 

“உன் ஃப்ரெண்டு தானே? நீயே இப்படி கேக்குற? சந்தோஷப்படுவேன்னு பாத்தா? அதெல்லாம் நல்லா யோசிச்சிதான் முடிவெடுத்தேன்” 

நான் ஏதோ பேசுவேன் எனக் காத்திருந்தவள், “நீ…” என்று ஏதோ சொல்ல வந்தவளை இடைமறித்து, “சரி ஓகே” என்றுமட்டும் சொல்லி ஃபோனை வைத்துவிட்டேன். லைம் சோடாவை அவசர அவசரமாக முடித்தேன். மனமே இல்லை. 

பள்ளிகாலத்தில் என்னுடனேதான் சுற்றிக் கொண்டிருப்பாள். ஒரு நாள், தெரியாமல் அவளை மக்கென நான் திட்டியதும் திடீரென ஒரு சண்டையைப் போட்டுவிட்டு, “இனி என்னை வாழ்க்கையில் சந்திக்க போவதேயில்லை” என்று நட்பை முறித்துக்கொண்டாள். பல மாத நினைவுகளை அடுக்கியபடி நான் செய்த தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி, அந்த தவறுகளில் அவளை நான் நிர்ணயித்து வைத்திருந்த மதிப்பீடுகளை தொடர்புபடுத்தி, அவளே சண்டைபோட்டு கொண்டாள். கேள்விகளையும் அவளே கேட்டுக்கொண்டு பதில்களையும் அவளே சொல்லிக்கொண்டு, அவளே என்னைத் திட்டுவது போல வாக்குவாதத்தை நிகழ்த்தி, அவளே பிரிந்தும் சென்று விட்டாள். இப்போது அந்த கடைசி சண்டையை நினைத்துப்பார்க்கும் போது, எதுவுமே பேசாமல் சாவகாசமாக, ஒரு கடும் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மூன்றாம் மனிதனைப் போல அந்த சண்டையை ரசித்திருக்கிறேன்.

உண்மையில் நான்தான் மக்கு. அப்போதே அவள் நட்பை துண்டித்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவளாவது அவள் முடிவாவது என்று நினைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்திருக்க வேண்டும். கிளம்பும்போது டீ கடைக்கு வந்திருந்தவள். இப்போது இதை எழுதும் போதுதான் ஒருவிஷயம் புரிகிறது. இனிமேல் நான் வசிக்கும் இடத்திற்க்கு பல மைல் தொலைவில் அமைந்திருக்கக் கூடிய டீக்கடைக்குதான் சென்று டீ குடிக்க வேண்டும். தனியாகதான் வந்திருந்தாள். எந்த துணையும் இல்லை. அவள் என்னைப் பார்த்த பார்வையிலேயே தெரிந்துவிட்டது அவளுக்கு என் மீது காதலோ, காமமோ, கல்யாண எண்ணங்களோ துளியும் இல்லை என்பது. 

பின்னர் ஏன் அவள் இத்தனை காலம் கழித்து என்னை பின் தொடர வேண்டும்? என்னை நெருக்கமாக அணுக, என்னுடைய அந்தரங்கங்களை தெரிந்துகொள்ள கமலுடன் நெருக்கமாக பழகுகிறாளா? மேக்னாவுடன் ஏன் இப்போது நட்பாக இருக்கவேண்டும்? அவள் ஏன் என்னை மறந்துவிட்டு அடுத்தக்கட்ட நகர்விற்கு செல்லவில்லை? இடைப்பட்ட ஒரு வருடத்தில் அவள் நிறைய நண்பர்களை சந்தித்திருக்கக்கூடுமே? ஏன் அவளுடைய காலம் அப்படியே நிற்கிறது? இப்போது திடீரென என் வாழ்விற்குள் வந்து எனது அந்தரங்கங்களை எனது நண்பன் வழியாக எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறாளா? எனக்கு அப்படியென்ன அந்தரங்கம் இருந்துவிடப் போகிறது? அவளுடைய கல்லூரி எது? அவளுடைய தற்போதைய பின்னணி என்ன? நான் வேண்டுமா? அவளுடைய திட்டம்தான் என்ன? என்னை ஒரு இத்துப்போன டீக்கடையில் கண்டுபிடித்துவிட்டாள். என்னுடைய செல்ஃபோன் நம்பரை வாங்கிவிட்டாள். அதுவும் என்னைக் கேட்காமல் எனது நண்பனிடம் இருந்து. என்னிடம் கேட்டால் நானே கொடுத்திருப்பேனே? எதையோ மறைக்கிறாள் என்று மட்டும் புரிந்தது. 

ஆனால், என்னால் அவள் மீது சந்தேகம்தான் பட முடிந்தது. தீர்மானமாக அவளது மனம் ஏதோ குரூரமாக எண்ணுவது போலத் தோன்றவில்லை. நாம் ஏதாவது குரூரமான செயலை செய்திருந்தால்தானே நமக்கு அதேபோன்றதொரு விளைவு கிடைக்கும் என்று உளவியல் சிந்தனைகளில் மனம் தவித்தது. ஏற்கனவே இருத்தலியல் கவலைகளை அலசிக்கொண்டிருக்கும் மனதிற்கு இது கூடுதல் சுமை. சுமையை புகையாக ஊதிக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு பெண். எல்லா வேலையும் விட்டுவிட்டு. ஒரு பழைய காதலி. ஒரு எக்ஸ். எந்தவித நோக்கமும் இல்லாமல் நம்மைச் சந்திக்க வருவது ஒருவித மரணபயத்தை எனக்கு கொடுத்தது. அவளுக்கு நம்மிடம் ஏதோ தொடர்பில் இருக்கவேண்டும் என்று தோன்றியிருக்கலாம். அவளுக்கு ஏதோ ஒருவித ஆறுதலை நான் கொடுப்பேன் என்ற நம்பிக்கையில் என்னைப் பார்க்க வந்திருக்கலாம். மறுபடியும் ஓரிரு வாரங்களில் இந்த உறவு விடைபெற்று கொள்ளலாம் என்றும் மனம் சிந்தித்தது. படபடவென்று ஏதோ பதட்டத்தை நிரந்தரமாகத் தேடிக்கொண்டிருந்தது. 

அது எனக்கு ஒருவித சுதந்திர உணர்வை கொடுத்தது. ஈவ்லினின் சிரிப்பில் அக்கறையும் அன்பும் மட்டுமே தெரிந்தன. மூக்கிலோ, கண்களிலோ, காதுகளிலோ, அவளது கூந்தலிலோ அவளுடைய மக்குத்தனம் எங்காவது மிச்சமிருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன் மிகுந்த நம்பிக்கையுடன். எங்கேயும் தென்படவில்லை. அப்படியொன்று இருந்த சுவடே இல்லை. அவளிடம் நான் பார்த்த மக்குத்தனம் என்னுடையது என்பதை உணர்ந்துகொண்டேன். ‘அந்த கடைசி சண்டையில் வாக்குவாதம் ஏன் விதண்டாவாதமாக மாறவில்லை என்று புரிகிறதா? காரணம் உனது அமைதி!’ என்றது மனது. “ந’தான் அப்போது அந்த இடத்தில் இல்லவே இல்லையே.. உனக்கு என்ன தெரியும்?’ என்று மனம் கேட்ட உண்மையைத் தட்டிக்கழித்தேன். அவ்வளவுதான் எனது அறிவு. ஆனால், ஈவ்லினுக்கு அந்த வயதில் அவளுக்கு கிட்டிய அறிவு இன்று வரை எனக்கு கிடைக்கவில்லை என்றுதான் தோன்றியிருக்கும் கமல் என்பவனைத் தேர்ந்தெடுக்கும் வரை. 

“இது நிரந்தரமா இருக்காது. கல்யாணம் வரைக்குமெல்லாம் போவாது. கொஞ்சநாள்தான். நீவேணா பாரு” என்று சொல்லிவிட்டேன் திடீரென. “ஏன் வந்த?” என்று கேட்கவில்லை. “என்ன சாப்பிடுற?” கேட்கவில்லை. இதுகள் இரண்டும் சண்டை போட்டுக்கொண்டேதான் இருக்கப்போகிறது பிரியும்வரை. இவளுக்கு நிறைய சோகம்தான் மிஞ்சும். நினைத்துப் பார்க்கக்கூட இதுகளுக்குள் நினைவுகள் மிஞ்சாது. இது காதலே இல்லை. சோகம். சோகங்கள் சேரச்சேர அதுகளின் உளைச்சல் தீவிரமடையும். உளைச்சல் தீவிரமடைந்தால் அவர்களுக்குள் காமமும் காதலும் சாத்தியமே இல்லை என்று மனம் கண்டபடி அத்துக்கொண்டு ஓடியது. அவளிடம் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் வாழ்க்கை. இதற்கும் நமக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.

 பின் ஏன் அவள் நம்மிடம் சொல்லவேண்டும்? எனத் தோன்றியது. கடமைக்கு சொல்லியிருக்கலாம். நட்பு ரீதியில் சொல்லியிருக்கலாம். “சரி” என்று மட்டும் சொல்லி கிளம்பிவிட்டாள். என்ன நினைத்தாளோ? ‘எனக்கு ரெண்டு மணி வரைக்கும் தூக்கம் வரல’ என்று வாட்சப் செய்தேன். மனதில் தோன்றியதை சொல்லிவிடலாம். நடப்பது நடக்கட்டும். ஃபோன் செய்தாள். பயங்கர வேலைப்பளு. இடையில் இவளுடைய முடிவால் ஏற்பட்ட திடீர் உளைச்சல் என மாறி மாறி தலைவலித்தது. “சொல்லு என்ன விஷயம்? ரெண்டற மணி!” என்றாள். இந்த நேரத்தில் நான் ஃபோன் செய்தது எதற்கு என்று அவளுக்குத் தெரியாதா? 

எனக்குத் தெரிகிறது. சொல்லவேண்டிய விஷயத்தை அவளிடம் சொல்லாமல் நாடகத்தனமாக சிந்தித்துக்கொண்டு, “இப்ப யூட்யூப் என்ன பண்ணுதுன்னா ஷார்ட்ஸ் பண்ணுது. ஒருத்தன் ஒரே மாசம்தான் ஷார்ட்ஸ் போட்டான். ஒரே மாசத்துல ஒன் மில்லியன். தமிழ் பையன். ஒண்ணுமே புரிய மாட்டேங்குது ஈவ்லின்” என்றேன். பச்சை ஈகோத்தனம் பைத்தியக்காரத்தனமாக மாறினால் இப்படிப்பட்ட உளறல்தான் உரையாடல்களாக இருக்கும். “எனக்கு புரியல. நான் எதுக்காக வேலை செய்றேன்னே எனக்குப் புரியல?” என்றேன். “அதெல்லாம் ஏதும் யோசிக்காத. க்ராக் பண்ணிடுவ” என்றாள். என் மீதே எரிச்சல் வந்தது. “மத்தவன் பிரச்சனைய இவ்ளோ தெளிவா டீல் பண்ற? உனக்கு உன் வாழ்க்கைல இருக்க பிரச்சன தெரியலயா?” என்று கேட்டுவிட்டேன். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு ஃபோனை கட் செய்து விட்டாள். மறுபடியும் அழைத்தேன். அவள் அதை எடுக்கவில்லை. வாட்ஸாப்பில் வாய்ஸ் மெசேஜ் போட்டேன். பதிலில்லை. மேக்னாவிடம் இதையெல்லாம் புலம்பாமல் அர்த்தராத்திரியில் இவளிடம் ஏன் இதையெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறேன். 

“என்ன சொல்றான். இனிமே யூட்யூப்ல ஷார்ட்ஸ்தான் போகும்னு சொல்றான். எனக்குப் புரியல. இப்படித்தான் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நம்ம டிக்டாக் பண்ணிருக்கலாம். ஈவ்லின லவ் பண்ணித் தொலைச்சிருக்கலாம். நம்ம பண்ணல. ஏன் பண்ணல டிக் டாக்? ஏன்னா எனக்கு அவள லவ் பண்ண பிடிக்கல. அந்த பார்மெட் நமக்கு செட் ஆகல நம்ம பண்ணல. அவள ஃப்ரெண்டா பாக்க முடியுது. லவ் பண்ண முடியல. ஏன்? அதுவொரு மொக்கையான பார்மெட்.. ஆனா, இப்ப யுட்யூப்ல அதே விஷயத்த பண்ண வைக்கிறான். வலுக்கட்டாயமாக்குறான். ஒரே நாள்ல அவ மேல எப்படி லவ் வரும்?” 

அழைப்பை எடுக்காத, வாய்ஸிற்கு பதில் வராத மூன்று மணி வரை தூக்கம் வராத மனது முக்கால் தூக்கத்தில் போட்டு பாடாய் படுத்தியது. எப்படியோ ஒரு வழியாகத் தூக்கம் வந்தது. காலை பதினோரு மணிக்கு எழுந்தேன். யூட்யூப் திறந்தேன். ஐந்து மணிநேரம் பேசி போட்ட, “செருப்புக்கு சாக்ஸ் அவசியமா?” என்னும் புதிய வீடியோ ஒரே நாளில் ஒரு மில்லியன் அடித்திருந்தது, நம்ப முடியவில்லை. முதுகில் குத்தியவர்கள் இதயம் போட்டு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்கள். இது எதுவும் கொடுக்காத மகிழ்ச்சியை எனக்கு கமலின் மெசேஜ் கொடுத்தது. என்னால் கொண்டாடாமல் இருக்கமுடியவில்லை. 

ஃபேஸ்புக் மேசென்ஜெரில் அனுப்பியிருந்தான்.

“I feel low about myself. புரியல. அவ்ளோ கஷ்டப்பட்டு நம்மள நாம காட்டிக்கணும்ணு இருக்கு. ஈவ்லினுக்கு ரெண்டுநாள் முன்னாடி ப்ரொப்போஸ் பண்ணிருந்தேன். உடனே வேணாம்னு சொல்லிட்டா. எனக்கு அவ மேல இருந்த நம்பிக்க போச்சு. என்ன மயித்துக்கு அவ இவ்வளவு நாள் க்ளோசா பழகுனா? எப்படி இருக்காளுங்க? நீ அவக்கூட ஸ்கூல்ல சண்டைபோட்டு பிரேக்கப் பண்ணது கரெக்ட்தான் மச்சான். எனக்குப் புரியாம போச்சு. நல்லவேள வேணாம்னு சொல்லிட்டா. இவளயெல்லாம் வச்சிட்டு யாரு அழுவுறது? உங்கிட்ட கத்துக்கணும்” 

பெசன்ட் நகர் மணலில் மையிட்ட கண்கள் சாட்சியாக அத்தனையும் அவளிடம் கொட்டியபடி அமர்ந்திருந்தேன். கீழ்வானத்தை அஸ்தமனமிடும் கதிரவனின் பின்புலத்தோடு மார்புக்கும் உதடுகளுக்கும் இடையே மின்னும் கழுத்தைக் கவ்வத் துடித்தன கடவாய் பற்கள். 

-vrk241@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button