சிறுகதைகள்
Trending

மதி – சி.வீ.காயத்ரி

சி.வீ.காயத்ரி

“யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்?”

“யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது?”

“எது சரி? எது தவறு?”

“இங்கு அனைவரும் அவரவருக்கு பிடித்ததைத்தான் செய்கின்றார்களா? ஆனந்தமாக இருக்கின்றார்களா?
நாம் அப்பா அம்மா சொல்ற வட்டத்துக்குள்ளயேதான் இருக்கணுமா? என்னோட படிப்ப நான் தானே தேர்ந்தெடுத்தேன், என்னோட வாழ்க்கைத்துணைய தேர்ந்தெடுக்குற உரிமை எனக்கிலையா?
எதுக்கு இவ்வளவு கட்டுப்பாடு? எப்பவும் அடிக்காத அப்பா என்ன ஏன் இப்ப இந்த விஷயத்துக்கு அடிச்சாரு?
Independent’ஆ liberal’ஆ இருக்கணும்னு சொல்லி வளர்த்துட்டு இப்போ எதுக்கு இப்படி பண்றாங்க?”

இப்படி பல கேள்விகள் என் என்ண ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

ராமேஸ்வரம் இரயில் நிலையத்தில் நான் செல்லவிருந்த இரயில் தயார் நிலையில் இருந்தது. கையிலும் பெரிதாக எதுவும் கொண்டு வரவில்லை. ஒரு சிறிய பை, கைபேசி, இதோடு கொஞ்சம் பணம் மட்டும் எடுத்துக் கொண்டு இரயில் நிலையம் அடைந்திருக்கிறேன். இதோ நான் போக வேண்டிய இரயில் கிளம்ப ஆரம்பித்துவிட்டது. வேகமாக நான் நெருங்கியதும் வாசலில் இருந்த ஒருவர் கை கொடுத்து உதவினார்.

முதலில் TTR ஐ பார்த்து அவரிடம் டிக்கெட் வாங்க வேண்டும் என்று அவரைத் தேடிக்கொண்டு இருந்தேன்.

உள்ளே நிறைய மனிதர்கள், அனைவரின் பார்வையும் என் மேல்தான் இருந்தது. அதில் பாட்டு பாடிக் கொண்டு ஆனந்தமாக ஒரு பட்டாளமும் இருந்தது. ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் உல்லாசப் பயணம் போய் கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அனைவரும் பாட்டு பாடி கொண்டு இருக்க அந்த பட்டாளத்தில் இருந்த ஒருவர் மட்டும் என்னை கவனித்தபடி இருந்தார்.

சிறிது நேரத்தில் என்னை நோக்கி வந்த அவர் என்னைப் பார்த்துக் கேட்டார், “ரொம்ப அவசர அவசரமா வண்டி ஏறுனீங்க, பதட்டமாவே இருந்தீங்க. ஏதும் problem’ஆ?” என்று அவர் கேட்க, “இல்லங்க, அவசரமா டிரெயின் ஏறிட்டேன். இன்னும் டிக்கெட் எடுக்கலை அதான் என்ன பண்றதுனு தெரில. TTR ஐ தேடிட்டு இருக்கேன்.” என்று சொன்னதும் அவர் எனக்கு உதவி செய்வதாக சொல்லும் போது அருகில் இருந்த அவர் நண்பர்கள் அவரை கேலி செய்தார்கள். “அவன் பொண்ணுங்களுக்கு நல்லாவே help பண்ணுவான்.” என்று சொல்லி ஒருவர் சிரித்தார், அப்போது ஒரு பெண்ணின் குரல் கேட்டது. “டேய்! சும்மா இருடா. அவங்களே already ஏதோ problem ல இருக்காங்க.” என்று சொல்லியபடியே அவர் என்னை பார்த்து சொன்னார், “நீங்க சும்மா போங்க. He is really a nice person to help.”

இவர்கள் பேசும் போது சற்று என் பிரச்சனைகள் மறந்து இயல்பு நிலைக்குத் திரும்பினேன். மேலும், அவர் அவரைப் பற்றிக் கூற ஆரம்பித்தார், தான் கண்ணன் என்றும், தனது தந்தையின் business’ஐ பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். “நாங்க எல்லாம் சேர்ந்து இப்போ all India trip போய்ட்டு இருக்கோம்” என்றும் கூறினார்.

நான் என்னைப் பற்றிக் கூற ஆரம்பித்தேன். “நான் மதி, Graphic designer. ஊருல படிச்சிட்டு சென்னைல ஒரு private company ல வேலை செஞ்சிட்டு இருந்தேன். இப்போ டெல்லியில் ஒரு வேலைல சேரப் போறேன்.” என்று நான் கூற…

அதற்கு கண்ணன் என்னை பார்த்து, “superங்க. நல்லது. ஆனா ஏதோ problem சொன்னீங்க. என்ன problem? என்னால முடிஞ்சா நான் help பண்றேன் சொல்லுங்க.” என்றார்.

நான், “எனக்கு help எல்லாம் வேண்டாம். எனக்கு கொஞ்சம் நல்லா earn பண்ணி அதுக்கு அப்பறமா ஒரு business பண்ணனும்னு விருப்பம். Settle ஆன அப்பறம் பிடிச்ச பையனா பார்த்து love பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்கேன். அதுக்கு வீட்டுல பொம்பளை புள்ளையா லட்சணமா இருனு எதுக்குமே விடல. ஊருக்கு வந்தப்போ யாருனே தெரியாத ஒருத்தர் photo காட்டி இவரைத்தான் உனக்கு மாப்பிள்ளையா பாத்து இருக்கோம், வேலைய விட்டுடு. அவங்க வீட்டுல பொண்ணு வேலைக்கு போகக் கூடாதுனு சொல்லுறாங்க, நல்ல பணக்கார குடும்பம்னு சொல்லி ரொம்ப force பண்ணாங்க. Situation ரொம்ப worst ஆகவும் வீட்ட விட்டு வந்துட்டேன். இப்போ டெல்லில ஒரு வேலை apply பண்ணிருந்தேன் அங்க எனக்கு வேலையும் கிடைச்சிடுச்சி. அதான் அங்கேயே போய்டலாம்னு கிளம்பிட்டேன்.” என்று நான் கூற..

கண்ணன் என்னைப் பார்த்து, “Amazing! இவ்வளவு Bold ஆ இருக்கீங்க. பொண்ணுனா உங்களை மாதிரி இருக்கணும். பிடிச்சது செய்ங்க. கல்யாணம், It will spoil women Self-respect. Marriage பண்ணாதீங்க, try to be in Livin”. என்று கூறினார்..

நான் சற்று ஆச்சரியத்துடன், “livin ஆ?, அந்த மாதிரி idea இப்போ இல்லை. Future’ல தெரியல”. என்று பேசிக்கொண்டு இருக்கும்போது TTR உள்ளே வர அவரை நோக்கி நடந்தோம். அவர் டிக்கெட் கொடுத்து விட்டு அமர்வதற்கு ஏதும் இடம் உள்ளதா என்று பார்த்து சொல்வதாகக் கூறினார்.

“Seat confirm ஆகுற வரை அடுத்த அடுத்த compartment க்கு அப்படியே நடந்து போய்ட்டு வரலாம்னு இருக்கேன். Are you coming with me?” நான் கண்ணனிடம் கேட்க அவரும் ஒப்புக்கொண்டார்.

நாங்கள் பேசிக் கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.

நிறைய மனிதர்கள், சிலர் தூங்கிக் கொண்டு இருந்தார்கள், சிலர் அலைபேசியில் முகம் புதைந்து இருந்தார்கள், சிலர் வாசலில் நின்றபடியும், ஒரு அம்மா தன் குழந்தைக்கு தொட்டில் கட்டி ஆட்டி விட்டபடி இருந்தார். அந்த இடம் முழுக்க எண்ணற்ற மனிதர்கள், எண்ணற்ற உணர்வுகள், பார்க்க அழகாகத்தான் இருந்தது.

ஒரு compartment முழுக்க அரசியல் அமைப்புகளைச் சார்ந்த மனிதர்கள் பயணம் செய்து கொண்டு இருந்தார்கள். நானும் கண்ணனும் அங்கு அனைத்தையும் கவனித்தபடியே பேசிக் கொண்டு நடந்து சென்றோம். அப்போது கண்ணனுக்கு அலைபேசி ஒலிக்க, அதை எடுத்துக் கொண்டு சற்று ஓரமாக சென்று பேசிக் கொண்டு இருந்தார். அவர் வரும் வரை அங்கு நடந்த அரசியல் பேச்சுக்களை கேட்டுக் கொண்டு இருந்தேன்.

நான் வரவும் அவர்கள் என்னை பற்றிக் கேட்டார்கள், கூறினேன். பின் அவர்களிடம் அவர்களைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், அவர்களின் பயணங்கள், வாழ்க்கைமுறை, சந்தித்த இன்னல்கள், அவர்களது இலக்கு என்று அனைத்தும் பகிர்ந்தார்கள். அவர்கள் பேச்சு சமூகம் மீது மிகவும் அக்கறை கொண்டதாக இருந்தது. கேட்க அருமையாக இருந்தது. அவர்கள் பேசுவது போல நடந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டு இருந்தேன். எண்ணற்ற அமைப்புகள், எண்ணற்ற கொள்கைகள் என்று நிறைய பேச்சுகளை ஒரே இடத்தில் கேட்டேன்.

கண்ணனும் அலைபேசியில் பேசி முடித்துவிட்டு என் அருகில் வந்து அமர்ந்தார். அப்போது அங்கு இருந்தவர்கள் எங்களை காதலர்களா என்று கேட்டார்கள். “இவரு என்னோட friend. அதுவும் இரயில் ஏறியதுக்கு அப்பறம்தான்” என்று கூறினேன்.

சிறிது நேரம் அவர்கள் பேசிய பெண்ணியம், பொதுவுடைமை போன்றவற்றைப் பற்றியும், தலைசிறந்த தலைவர்களான அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், லெனின் போன்றோர் பற்றியும் பேசிக் கொண்டு இருந்தார்கள். அது அறிவு சார்ந்த இடமாக இருந்தது. நிறைய புது விடயங்கள் எனக்குக் கிடைத்தது. பின் அவர்களிடம் விடைபெற்று மறுபடி நானும் கண்ணனும் நடக்க ஆரம்பித்தோம்.

கண்ணன் அதிகம் பேசாமல் இருந்தாலும் நிறைய காது கொடுத்து கேட்கிறார். என்னிடம் அவர்களை பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டபோது, “நல்ல சிந்தனைகள், நல்ல அறிவு, நிறைய பேரை தெரிஞ்சு வச்சிருக்காங்க. அவங்க நினைச்சா நெறைய செய்யலாம் பேசுற எல்லாமே சரியா செயல்படுத்தினா ரொம்ப நல்லாத்தான் இருக்கும். ஆமா நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று நான் கேட்க..

கண்ணன் தொடர்ந்தார், “முதல்ல வாங்க போங்கன்னு பேச வேண்டாம். Just talk casually. வாபோ’னு பேசினா நல்லா இருக்கும்.” நான் அதற்கு ஆமோத்திப்பது போல தலையசைக்க அவர் தொடர்ந்தார். “எனக்கும் politics’ல கொஞ்சம் interest இருக்கு. ஆனா எனக்கு என்ன பண்ணனும்னு தெரியல. But வாய்ப்பு கிடைச்சா ஏதாவது பண்ணனும். அதுக்கு நான் முதல தெளிவாகணும்னு நினைக்குறேன். மனுசங்க பத்தி நிறைய தெரியனும். மனுசங்க பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கண்ணன் கேட்க..

நான் தொடர்ந்தேன், “பொதுவா மனுசங்க சுயநலமானவங்க. அதுதான் அவங்க இயல்பு. அந்த சுயநலத்தைத் தாண்டி மத்தவங்களைப் பத்தி யோசிக்கிறவங்க தனியா தெரியுறாங்க.”

அமைதியாக நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தார் கண்ணன். அப்பொழுது எனக்கு என் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் எனது அலைபேசியை switch off செய்து வைத்து விட்டேன்.

கண்ணன் கேட்டார், “பேசலையா?” என்று, நான் அமைதியாக இல்லை என்று தலையாட்டினேன்.

நாங்கள் மதிய உணவை அங்கு வாங்கி சாப்பிட்டபடி பேசிக் கொண்டு இருந்தோம். கண்ணன் என்னைப் பார்த்து, “வீட்டுல கல்யாணம் பேசுனதால வீட்ட விட்டு வெளில வந்தீங்க. நீங்க யாரையும் love பண்றீங்களா?” என்று கேட்டார்.

“காதல்ல பெருசா இப்போ வரை interest வரல. College படிக்கும்போது ஒரு பையன் என்னை விரும்பினான், ஆனா, அவனும் fraud. Use பண்ணிக்குற motive மட்டும் தான் நிறைய பேருக்கு இருக்கு. So ரொம்ப careful’ஆ choose பண்ணனும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். பின் ஒரு ஆர்வத்தில், “உங்களுக்கு love இருக்கா?” என்று நான் கேட்க அதற்கு கண்ணன், “சில காதல் இருக்கு, ஆனா கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை. எனக்குப் பிடிச்ச பொண்ணுகிட்ட இதை சொல்லிட்டு அவளுக்கும் பிடிச்சி இருந்தா ஒரு short term relationship ல இருப்பேன்.” என்று கண்ணன் கூறியதை நான் கேள்விகளுடன் பார்த்தேன்!

பேசிக்கொண்டு இருக்கும் போது, சட்டென்று நான் எதிர்பார்க்காத ஒரு YouTube பிரபலத்தைப் பார்த்தேன். அவரின் பேச்சு, கருத்து எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் கண்ணனையும் அழைத்துக் கொண்டு போய் பேசினேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரது fan என்று அவரிடம் கூறினேன். சிறிது நேரம் பேசிவிட்டு நடக்க ஆரம்பித்தோம். இரவாகி விட்டது

உணவெடுத்து கொண்டு TTR ஐ தேடிச் சென்றோம். அவர் எனக்கு ஒரு இடமும் கொடுத்தார் படுப்பதற்கு.

இரவு நிம்மதியான தூக்கம். மறுநாள் நாங்கள் போக வேண்டிய இடம் வந்துவிடும். அசதி சிறிது அதிகமாக இருந்ததால் காலை 11 மணிக்குத் தான் எழுந்தேன். எழுந்து refresh ஆகி வரும்போது கண்ணன் என்னைப் பார்த்து விட்டு வந்தார், “என்ன மதி இப்போ தான் எழுந்தீங்களா? அதுக்குள்ள fresh ஆகிட்டீங்க, காலை 8 மணி வந்து பாத்தேன் நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. அதான் எழுப்பல. இன்னைக்க என்ன plan? நேத்து மாதிரியே ஒரு walk போகலாமா சாப்பிட்டு முடிச்சுட்டு?” என்றார். நான் சரி போலாம் என்றேன்.

நாங்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது கண்ணன் என்னிடம் சொன்னார், “டெல்லி போனதும் என்ன மறந்துட்டு போய்டாதிங்க. Be in touch”,

“கண்டிப்பா, உங்க number?”. கண்ணன் தன் Visiting Card ஐ கொடுத்தார்.. இன்று கண்ணனின் நண்பர்கள் சிலரும் எங்களோடு வந்தார்கள்.

நேற்றைய தினம் போலவே இன்றும் ரெயிலில் மக்கள் நடமாட்டம் அழகாகத்தான் இருக்கிறது. நாங்கள் தாண்டி சென்ற இடங்களை மறுபடி பார்த்தோம், குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருமே நேற்றை விட இன்று அதிக ஆனந்தமாகத்தான் இருந்தார்கள், என்னையும் கண்ணனையும் போன்று சிலர் பயணங்களில் புதிய நண்பர்கள் ஆகி இருக்கிறார்கள், குழந்தைகள் ஒன்றாக ஓடி ஆடி விளையாடி கொண்டு இருந்தார்கள். இன்று இந்த இரயில் பயணத்தை முடித்து வெளியில் வேறொரு பயணத்துக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்வது போலத் தான் எனக்குத் தெரிந்தது.

அரசியல் பயணம் போக இருக்கும் சிலர் நேற்று இரவு நன்றாக குடித்துவிட்டு அங்கு நிறைய bottle’களைப் போட்டு வைத்து இருந்தார்கள். அதைப்க் பார்த்து கொண்டே நடந்தோம். அப்போது நேற்று எங்களோடு சில உயர் கருத்துகளைப் பகிர்ந்த ஒருவர் கூறினார், “இதை எல்லாம் கடந்து போமா இங்க எல்லா இடத்துலையும் ரெண்டு விதமான மக்கள் இருப்பாங்க. இது அரசியலுக்கும் பொருந்தும். இங்க நாம ஒற்றுமை, பொதுவுடமை இப்படி என்ன பேசினாலும் இங்கேயும் சுயநலவாதிகள் அதிகம். குடிக்கிறது அவங்க உடம்புக்கு கெடுதல் அது ஆணோ பெண்ணோ. அவங்க விருப்பம். இங்க நிறைய நல்ல மனிதர்களும் இருக்காங்க. நாமதான் தேட னும். பணம், புகழ் இதுக்கு எல்லாம் ஆசைப்படாதாவங்களா இருப்பாங்க. அவங்கள நிறைய பேருக்கு தெரியாது. சிலர் பேர் பெயர் புகழுக்காக அதிகமா பேசுவாங்க. ஆனா செயலுல இருக்காது. நீ நிறைய படிமா, நல்ல வேலை தேடிக்கோ, நிறைய சம்பாதி, நிறைய சாதிக்கணும், நிறைய பெண்களுக்கு எடுத்துக்காட்டா வா. சந்தோசமா போய்ட்டு வாமா.” நான், “சரிங்க தோழர்” என்று அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

பின் எனக்கு பிடித்த பிரபலத்தை ஒரு முறை பார்த்து விட்டு வருவோம் என்று அவர் அருகில் சென்றோம். அவர் எங்களை அதே சிரிப்பு மாறாமல் வரவேற்றார். கண்ணனும் அவர் நண்பர்களும் யாரையோ சந்தித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றார்கள். நான் மட்டும் பிரபலம் அருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தேன். பிரபலம் தொடர்ந்தார், “நேத்து முழுக்க அரசியல் பேசினோம். Today shall we talk like friends? எனக்கும் நிறைய friends வச்சிக்கணும் ஜாலியா ஊரை சுத்தனும்னு நிறைய ஆசைகள் இருக்கு. ஆனா என்னால சாதாரணமா இருக்க முடியல பிரபலமாக இருக்கிறது இந்த மாதிரி பிரச்சனை தருது. Will you be my friend Mathi?” அவர் கேட்டதற்கு “நண்பர்களா இருக்குறதுல என்ன இருக்கு. இருப்போம்!” என்று கூறினேன்.

பிரபலம் தொடர்ந்தார், “You are so sweet.(என் தோளை அழுத்தியபடியே கூறினார்) நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. டெல்லி இறங்கினதும் நாம ஒரு நாள் வெளில போய்ட்டு வரலாமா?” என்று கேட்டார்..

அவர் பேச்சு சற்று வெறுப்பை தந்தது, “உங்களுக்கு மனைவி இருக்காங்களா? அவங்க கிட்ட இதை சொல்லிட்டு வருவீங்களா? இல்லை உங்க மனைவியைக் கூட கூப்டு வாங்களேன் சேர்ந்து போய்ட்டு வரலாம்.” என்று நான் கேட்க அவர் தொடர்ந்தார், “ஐயோ! நீங்க வேற, வேற பிரச்சனையே வேண்டாம். என்னோட பெண் தோழிகளைப் பார்த்தாலே அவளுக்கு ஆகாது. நாம மட்டும் ஒரு ட்ரிப் போவோம். அது தான் நல்லா இருக்கும்.” என்று அவர் சொல்ல..

நான் தொடர்ந்தேன்..

“சரி. நீங்க இப்படி அவங்களுக்குத் தெரியாம போறீங்க. இதையே அவங்க பண்ணா என்ன சார் பண்ணுவீங்க?” என்று நான் கேட்க அவர் தொடர்ந்தார், “இந்த சார் எல்லாம் வேண்டாம், பேர் சொல்லியே கூப்பிடுங்க. நாம முற்போக்கான ஆட்கள். அவ அப்படி இல்லை. என்னங்க உங்களை சுதந்திரமான பொண்ணுனு நினைச்சா இப்படி கேக்குறீங்க”.

நான் சற்று அழுத்தமாக, “முற்போக்கான பொண்ணா இருக்கணும்னா நீங்க கூப்ட இடத்துக்கு வரனும், எந்த கட்டுப்பாடும் இல்லாம பழகனும், இதுக்கு மட்டும் உங்களுக்கு முற்போக்கான பொண்ணு வேணும். ஆனா நீங்க கல்யாணம் பண்ண உங்களுக்கு அடங்கி இருக்குற உங்கள மட்டும் நினைக்கிற ஒருத்தி வேணும். அதானே? உங்களுக்கே கொஞ்சம் கேவலமா இல்லை. பெண்ணிய கருத்துக்கள் பேசினா மட்டும் போதுமா? ஓ, நீங்க பெண்களை இம்ப்ரெஸ் பண்ண தான் இதை எல்லாம் பேசுறீங்களா? ஆண்கள் பெண்ணியம் பேசுறப்ப கொஞ்சம் யோசிக்க தான் செய்யணும் போல. ஓகே சார்… வரேன். உங்க வாழ்க்கைய நல்லபடியா தொடருங்க. இதுக்கு மேல ஏதாவது பேசுனீங்க அசிங்கம் ஆகிடும்! Good bye!”

அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்க முன் வந்தார், நான் திரும்பிப் பார்க்காமல் என் இடத்திற்கு சென்றேன். சிறிது நேரம் கழித்து கண்ணனும் அவர் நண்பர்களும் என்னைத் தேடி அந்த இடத்திற்கு வந்தார்கள். கண்ணன் என்னைப் பார்த்துக் கேட்டார், “என்ன ஆச்சு? வந்துட்டீங்க? உங்களைத் தேடிட்டு இருந்தோம்”.

நான் எதுவும் பேசவில்லை.

கண்ணன் மிகவும் அழுத்திக் கேட்டார், “ஏதும் பிரச்சனையா?” என்று..

“எனக்கு என்ன பிரச்சனை வர போகுது. சுதந்திரமா வளர்ந்த பொண்ணு நான். எதையும் சமாளிக்க முடியும்.

முற்போக்கு, பிற்போக்கு இதைத் தாண்டி யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்க இதையெல்லாம் அடையாளம் காண்பதே பெரும் சவாலா இருக்கும் போல. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு கண்ணன். எவ்வளவு சவால் வந்தாலும் நான் நிறைய நல்ல மனிதர்களை சந்திப்பேன்‌. அடுத்தடுத்து மூவ் ஆவேன்….”

நாட்டின் தலைநகர் என்னை வரவேற்கக் காத்திருந்தது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button